கடற் கொள்ளையர் பற்றிக் கம்பன் தகவல் (Post No.5521)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 9 October 2018

 

Time uploaded in London –7-39 am (British Summer Time)

 

Post No. 5521

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கடற் கொள்ளையர்கள் பற்றி சங்க இலக்கியத்திலும் கம்ப ராமாயணத்திலும் வரும் தகவல்கள் தமிழர்களின் கடல் ஆதிக்கத்தைக் காட்டுகிறது. கம்பனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசனும் கடலில் கப்பலுடைந்த காட்சி பற்றிப் பேசுகிறான். அதற்கும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ரிக் வேதத்தில் கடலில் கப்பல் உடைந்து தத்தளித்த ஒருவனை அஸ்வினி தேவர்கள் காப்பாற்றிய செய்தி பல ரிஷி முனிவர்களால் பாராட்டப் படுகிறது. சிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரீகத்தில் கப்பல் திசை காணும் பறவை உட்கார்ந்து இருக்கும் முத்திரை கிடைத்துள்ளது. இந்தோநேஷியாவில் போரோபுதூர் சிற்பங்களில் தமிழ்க் கப்பல் காட்சி தருகிறது.

சாதவஹனர் நாணயங்களில் கப்பல் படம் பொறிக்கப்பட்டுள்ளது. அராபியக் கடல்களில் அட்டூழியம் செய்த யவன (ரோமானிய) கடற் கொள்ளையர்களை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பிடித்து வந்து, தலையை மொட்டை அடித்து, எண்ணையைத் தலையில் ஊற்றித் தண்டித்த காட்சி சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கடம்பர் என்னும் கடற் கொள்ளையர்களை அழித்து அவர்களுடைய காவல் மரத்தை வெட்டி வீழ்த்தியது சூரபன்மனின் காவல் மரத்தை முருகன் அறுத்தைப் போன்றது என்றும் சங்கநூலான பதிற்றுப்பத்து பாடும்.

 

கம்பனோ போகிற போக்கில் ஒரு பாடலில் கடற் கொள்ளையர்களை உவமையாகப் பயன்படுத்துவது, அந்தக் காலத்தில் கடல் பயணம் எவ்வளவு நிகழ்ந்தது, என்ன என்ன பேரிடர்களை  அவர்கள் சந்த்தித்தனர் என்று காட்டுகிறது.

 

இதோ கம்ப  ராமாயண யுத்த காண்டப் பாடல்:-

 

மீயவர் யாவரும் விளிய வெங்கரி

சேயிருங் குருதியில் திரிவ சோர்வு இல

நாயகர் ஆள் எலாம் அவிய அம்பிகள்

பாயொடும் வேலையில் திரியும் பண்பு என

–படைத் தலைவர் வதைப் படலம்

பொருள்

யானை மீது இருந்த அனைவரும், வில்லால் தாக்குண்டு இறந்தனர். அப்பொழுது யானைகள் மட்டும் கொடிகளுடன் ரத்த வெள்ளத்தில் அங்கும் இங்கும் திரிந்தன; வெளியேற வழியில்லாமல் திகைத்தன; இது எப்படி இருந்தது என்றால் மாலுமிகள் உள்பட அனைவரும் கடற் கொள்ளையர்கள் தாக்குதலில் இறந்து போனபின்னர் பாய்மரத்துடன் கடலில் திரியும் கப்பல்கள் போலக் காட்சி தந்தன.

 

என்ன அருமையான ‘கடல்- கப்பல்’ காட்சியை கம்பன் நம் கண் முன் நிறுத்துகிறான் பாருங்கள்.

 

ஒரு விஷயத்தை உவமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், அது எல்லோருக்கும் ஸர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதை உவமையாகப் பயன்படுத்த முடியும். அந்தக் காலத்தில் வங்கக் கடலில் நடந்த கடல் தாக்குதல் இது. அதையும் சமாளித்து ராஜ ராஜ சோழனும் ராஜேந்திரனும் மாநக்கவாரம், மாயிருடிங்கம், மாபூப்பாளம்,சாவகம், புட்பகம்,சிங்களம் எனப் பல தீவுகளை வென்றனன்.

வாழ்க தமிழ்!!  வளர்க தமிழன் பெருமை!!

 

–subham–