கடலில் தோன்றும் மர்மத் தீ-1

Picture shows Fire Tornado on land. It lasted for 40 minutes in Alice Springs, Australia.

(கடலில் தோன்றும் மர்மத் தீயை வடமுகாக்கனி, வடவா, படபா என்று வடமொழி நூல்களும் மடங்கல், ஊழித் தீ என்று சங்கத் தமிழ் நூல்களும் கூறுகின்றன. இந்த இரண்டு பகுதிகள் அடங்கிய கட்டுரைத் தொடரில் அது பற்றிய வியப்பான செய்திகளைத் தருகிறேன்- லண்டன் சுவாமிநாதன்)

கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்

உடலில் ஒளிந்த சிவம் ஒளி செய்வது எக்காலம்?—பத்திரகிரியார் பாடல்

 

“Siva’s fiery wrath must still burn in you

Like Fire smouldering deep in the ocean’s depths

Were it not so, how can you burn lovers like me,

When mere ashes is all that is left of you?” –Sakuntala of Kalidasa III-3

 

லண்டனில் இருந்து வெளியாகும் மெட்ரோ பத்திரிக்கையில் (செப்.18, 2012) ஒரு அதிசயப் படம் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அலீஸ் ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்தில் ஒரு சூறாவளி தீயைக் கக்கிக்கொண்டு சீறிபாய்ந்து வந்ததை ஒருவர் படம் எடுத்திருக்கிறார். நீர்க்கம்பம் ஏற்படுவதைப் பலர் கடலில் பார்த்திருக்கின்றனர். ஆனால் தீக் கம்பம் ஏற்படுவது இயற்கையில் அபூர்வமாகத்தான் நிகழும். சாதாரணமாக இரண்டே நிமிடம் நீடிக்கும் இந்த இயற்கை அற்புதம் ஆஸ்திரேலியாவில் 40 நிமிடங்களுக்கு நீடித்தது.

1923ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட கிரேட் காண்டோ பூகம்பத்தின் போது இப்படிப்பட்ட தீக்கம்பம் தோன்றி 15 நிமிடங்களுக்குள் 38,000 பேரைக் கொன்றது. இயற்கையின் சீற்றத்தைத் தடுக்க எவரால் முடியும்?

1977ஆம் ஆண்டில் ஆந்திரத்தில் ஏற்பட்ட புயலில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்தனர். சுனாமி போல ராட்சத அலைகள் புகுந்ததில் ஆந்திரக் கடலோரமாக இருந்த பல கிராமங்கள் சுவடே இல்லாமல் அழிந்தன. அப்போது கடலில் பெரும் தீயைக் கண்ட மக்கள் அதை விவரித்தபோது விஞ்ஞானிகளும் வானிலை நிபுணர்களும் இது சாத்தியமில்லை என்று கூறினர். ஆனால் இப்போது உலகம் முழுதும் செய்திப் பறிமாற்றம் அதிகரித்துள்ளதால் நாமே ஒப்பிட்டுப் பார்த்து ஊகித்தறிய முடிகிறது.

இதோ 1977ம் ஆண்டு மதுரை தினமணியில் வெளியான செய்தி:

மலை அலையில் கண்ட பெருந் தீ!

பிழைத்தோர் கூறும் அதிசயத் தகவல்கள்!!

விஜயவாடா, நவ.29:- ஆந்திரப் பிரதேசத்தில் புயலின் விளைவாக திவி தாலுகாவில் மலை போன்ற அலைகள் கிளம்பியது நினைவிருக்கலாம். இந்த தாலுகாவில் மத்திய நிபுணர் குழு ஒன்று சுற்றுப் பயணம் செய்தபோது, வெள்ளத்தில் உயிர்தப்பிய பல மீனவர்களும், கிராம வாசிகளும் நிபுணர்களைச் சந்தித்து மலை மலையாக அலை கிளம்பிய சமயம் தீ ஏற்பட்டதாகவும், காது செவிடுபடும்படியான பெருத்த சப்தம் ஏற்பட்டதாகவும் அது வெடிச் சப்தம் போல இருந்ததாகவும் கூறினர். இது நிபுணர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது.

அலைகளில் இருந்து நெருப்பு ஜ்வாலை கிளம்பியதாகவும் அலைகள் மீது இந்த நெருப்பு தோன்றிய பின்னர்தான் அந்த பேரலைகள் தணிந்ததாகவும் கிராமவாசிகள் கூறினர்.

உஷ்ணமண்டலப் பகுதிகளில் புயல் வீசும்போது அதன்விளைவாக வெளியிடப்படும் சக்தி 200 ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பதால் ஏற்படும் சக்திக்குச் சமம் என்று குறிப்புகளில் காணப்படுவதாக மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சகத்தைச் சேர்ந்தவரும், மத்தியக் குழுவில் இடம்பெற்றவருமான என்.ஆர்.கிருஷ்ணன் கூறினார்.

ஆகவே மனிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் ஆந்திராவைப் புயல் தாக்கியபோது உண்டான சக்தியால் தண்ணீர் ஆக்சிஜன், ஹைட்ரஜன் என்ற மூலகங்களாகச் சிதைந்து அதன் மூலம் நெருப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கிருஷ்ணன் கூறினார். இது கடல் ஆய்வு நிபுணர்கள் ஆய்வு செய்யவேண்டிய விஷயம் என்றும் அவர் சொன்னார்.

1864ல் மச்சிலிப்படிணத்தைப் புயல் தாக்கியபோதும் இதேபோல அலைகளினூடே நெருப்பு தோன்றியதாக கிழக்கிந்தியக் கம்பெனி ரிகார்டுகளில் காணப்படுகிறது என மாநில அதிகாரி ஒருவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஆங்கிலப் பத்திரிக்கைகளில் ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. 3-12- 1977 தினமணியில் வந்த செய்தி இதோ:-

கடலில் தோன்றிய மர்மத் தீ என்ன?

மின்சார நிகழ்ச்சியாக இருக்கலாம் என நிபுணர் கருத்து

புதுடில்லி, டிச.2:- ஆந்திராவில் புயல் தாக்கியபோது தரை மீது உருண்டுவந்த அலைகளின் மேல் தோன்றிய தீயைப் போல, வேறு நாடுகளிலும் தெரிந்தது உண்டு என தெரியவருகிறது. ஆனால் மத்திய அதிகாரி ஒருவர் கூறியது போல ஆக்சிஜன் ,ஹைட்ரஜன் என்று பிரிய வாய்ப்பு இல்லை என்று வானிலை நிபுணர்கள் கூறினார்கள்.

கடல் தீ என்பது மின்சாரத்தால் உண்டாகும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம். ‘அட்லாண்டிக் கடல் புயல்கள்’—என்ற ஆங்கில நூலில், கோர்டண்டன் மற்றும் பானர் மில்லர் எழுதிய நூலில், இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் உள்ளது.

பெருங்காற்றால் உந்தப்பட்டுப் பேரலைகள் கடற்கரையைத் தாக்கும்போது அலைகளின் மேல் பரப்பில் லட்சக் கணக்கான மின்மினிப் பூச்சிகள் போன்ற நீல நிறப் பொறிகள் தென்படும் என்றும் 1935ல் அமெரிக்காவில் ப்ளொரிடா மநிலத்தில் கீவெஸ்ட் கடலோரத்தைப் புயல் தாக்கியபோது மிகப் பரவலாக கடல் தீ காணப்பட்டது என்றும் அவர்கள் எழுதியுள்ளனர்.

இதோ 28-11-1977 தினமணி, மதுரைப் பரப்பில் வந்த மற்றுமொரு செய்தி.

அந்த எமன் அலை!

விஜயவாட, நவ.26:- சென்னையை பயமுறுத்திவிட்டு கடந்த 19ம் தேதியன்று ஆந்திராவைப் புயல் தாக்கியபோது, கிருஷ்ணா மாவட்ட திவி தாலுகாவை விழுங்க முற்பட்ட ராட்சதக் கடல் அலையின் அளவுபற்றி இப்பொழுது தெரியவரும் மதிப்பீட்டைப் பார்க்கும்போது அங்கு கிட்டத்டட்ட ஒரு பிரளயமே ஏற்பட்டதாகத் தோன்றுகிறது.

கடலில் இருந்து 27 ஆயிரம் கோடி கன அடி நீர் அப்படியே சுவர் போல மாபெரும் அலையாகக் கிளம்பியது. 50 மைல் நீளமும் 10 மைல் அகலமும் 19 அடி உயரமும் இருந்த இந்த அலை மணிக்கு 120 மைல் வேகத்தில் கரையைத் தாக்கியது

இந்த அலை தாக்கியபோது சுமார் 500 சதுர கிலோமீட்டர் பிராந்தியத்தில் 80 நிமிடத்துக்குள் கிட்டத்தட்ட 10,000 பேர் மடிந்தனர். ஒரு லட்சத்துக்கும் மேலான கால நடைகள் இறந்தன. சுமார் 150 கிராமங்களும் குக் கிராமங்களும் சுவடே இல்லாமல் அழிந்தன.

கடலில் இருந்து பத்து மைல் தூரத்துக்கு உள்ளே வந்து இரண்டு பக்கங்களிலும் இருந்த அனைத்தையும் இந்த அலை பந்தாடிவிட்டது.. எருமைகள், காளை மாடுகள் ஆகியவற்றின் சடலங்கள் 20 அடி உயரத்தில் இருந்த மரக் கிளைகள் மீது தொங்கிக் கொண்டிருந்தன. இதிலிருந்து அலைகளின் கோர தாண்டவத்தை அறிய முடிகிறது”.

இந்த தினமணிச் செய்திகளைப் படிக்கும்போது குதிரை முகம் கொண்ட வடமுகாக்னி என்னும் ஊழித்தீயும் இரண்டு தமிழ் சங்கங்கள் இருந்த தென் மதுரை, கபாட புரம் ஆகிய நகரங்களைக் அழித்த கடற்கோளும் நம் மனக் கண்முன் தோன்றுகின்றன.

கட்டுரையின் இரண்டாம் பகுதியில் ஊழித் தீ பற்றி தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் கூறுவது என்ன? இந்துமதத்தில் இது பற்றிய நம்பிக்கை என்ன? என்பதைக் காண்போம்.

தொடரும்…………………..