வேதத்தில் கடலும் கப்பலும்!!

Olympias under Oar,

Research Paper No.1804; Date: 16th April 2015

Written by London swaminathan

Uploaded from London at  20–15

வேதங்களில் சொல்லப்பட்ட எல்லா விஷயங்களின் பட்டியலைப் பார்ப்பவருக்கு வியப்பு மேலிடும். உலகில் இவ்வளவு விஷயங்களை வேறு எந்தப் பழைய நூலிலும் காண முடியாது. சொல்லப் போனால், நூல் என்பதே சம்ஸ்கிருதம் தவிர வேறு எங்கும் அப்போது கிடையாது. கி.மு 1700 ஆம் ஆண்டு என்று இப்போது தேதி குறிக்கப்படும் ரிக் வேத காலத்துக்கு சுமார் ஆயிரம் வருடம் கழித்துத்தான் கிரேக்க மொழியில் நூல் வந்தது. கிட்டத்தட்ட அதை ஒட்டித்தான் பைபிளும் எழுதப்பட்டது. மற்ற மொழிகளில் லத்தீன் மொழியில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் புத்தகங்கள் வந்தன. தமிழில் தொல்காப்பியம் கி.மு. முதல் நூற்றாண்டில் வந்தது என்பர். ஆக ரிக் வேதத்துக்குப் பக்கத்தில் வைத்து ஒப்பிடக் கூடிய நூல்கள் இல்லை. சுமேரிய, எகிப்திய மொழிகளில் சுவரிலும், பேப்பரிலும், களிமண் பலகையிலும் இதற்கு முன் எழுதப்பட்ட விஷயங்கள் இருந்தாலும் அவைகள் நூல் என்ற இலக்கணத்துக்குள் அடங்குமா என்பது கேள்விக்குறியாகத் தொக்கி நிற்கும்.சீன மொழியிலும் உண்டு ஆனால் நூல்கள் இல்லை.

காலத்தைப் பற்றிக் கவலைப் படாமல் விஷயங்களுக்கு வருவோம். முன்னர் பல கட்டுரைகளில் நான் குறிப்பிட்ட டெசிமல் சிஸ்டம் (தசாம்ச முறை) — மிகப் பெரிய எண்கள்— மொழிகள் பற்றிய உவமைகள் — முப்பதுக்கும் மேலான பெண் தெய்வங்கள் — யாப்பிலக்கணத்துக்கும் முப்பதுக்கும் மேலான நதிகளுக்கும் பெண்களின் பெயர்களைச் சூட்டி அவர்களை உச்சாணிக் கொம்புக்கு ஏற்றியது — கிரேக்க மொழியில் நூல் எழுதத் துவங்குவதற்கு முன்னரே ஜனகர் கூட்டிய உலக தத்துவ மஹாநாட்டில் கார்கி வாசக்னவி என்ற பெண்மணி கலந்து கொண்டு மிகப்பெரிய அறிஞரைக் கேள்வி கேட்டது — ரிக்வேத முடிவில் உலக அமைதிப் பாடலை வைத்து அதை அழகாக முடிப்பது — உலகிற்கு 1,2,3 என்ற எண்களைக் கற்பித்தது —- இவைகளை எல்லாம் பார்ப்பவருக்கு உலகின் மிக மிக நாகரீக முதிர்ச்சி பெற்ற நாடு இந்தியாதான் என்பது தெரிகிறது, புரிகிறது. இதை, இந்துக்களை மட்டம் தட்டுவதற்காக முதலில் வேதம் படிக்க வந்த மாக்ஸ்முல்லர், வில்லியம் ஜோன்ஸ் போன்றோரும் கூட சொல்லிவைத்தனர்.

ship1

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சில “அறிஞர்கள்” (??????) வேதத்தில் சொல்லப்படும் சமுத்ரம் கடலே அல்ல, அது வெறும் குளம், வேதத்தில் சொல்லும் நூறு துடுப்புக் கப்பல், கப்பலே அல்ல–இப்படியெல்லாம் பிதற்றி வந்தனர். இதற்கு அவர்கள் கூறியதெல்லாம் எதிர்மறைச் சான்றுகள். அதாவது கடல் பற்றி அதைச் சொல்லவில்லை, இதைச் சொல்லவில்லை, உப்பு பற்றியே சொல்லவில்லை என்றெல்லாம் சொல்லி எதைச் சொல்ல வில்லையோ அதை ஆதாரமாகக் காட்டுவது. இதை உலகில் அறிஞர்கள் ஏற்பதில்லை. சங்கத் தமிழில் உள்ள முப்பதாயிரம் வரிகளில் தமிழர்கள் மலஜலம் கழித்த பாடலே இல்லை. ஆகவே தமிழர்கள் சாப்பிட்டார்களே தவிர, என்றும் மலஜலம் கழித்ததே இல்லை என்று அசட்டுப் பிசட்டு என்று எழுதி டாக்டர் பட்டம் பெறுவதற்கு சமம் இது. இப்படிதான் வெள்ளைத்தோல் அறிஞர்கள் தத்துப் பித்து என்று உளறி வைத்துள்ளனர். உண்மையில் தமிழர்களும் வடக்கே இருந்தவர்களும் போய்த்தான் உலகம் முழுதும் மொழி அறிவையும் நாகரீகத்தையும் பரப்பினர்.

முந்தைய கட்டுரைகளில் பல எடுத்துக் காட்டுகள் கொடுத்துள்ளேன். பாரத மக்கள் உலகம் முழுதும் சென்றனரே தவிர, பாரதத்துக்குள் நாம் குடியேறவில்லை. இதை அறியாத அரை வேக்காடுகள் உளறிக்கொட்டி கிளறி மூடின. தமிழர்கள் வடமேற்கில் இருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் உளற, ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்தனர் என்று மாக்ஸ்முல்லர் உளற, இந்தியர்கள் குழம்பிப் போய்விட்டனர்! இந்தக் குழம்பிய குட்டையில், திராவிடங்கள் மீன் பிடிக்கப் பார்த்தன. இப்பொழுது அவர்களுக்கு எல்லாம் சங்கத் தமிழ் இலக்கியம் செமை அடி கொடுத்து வருகிறது. புற நானூற்றில் எந்தப் பாட்டை எடுத்தாலும் அதிலுள்ள நம்பிக்கை ஏற்கனவே சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. திருக்குறளில் எந்த அதிகாரத்தை எடுத்தாலும் அது ஏற்கனவே வடக்கே உள்ளது. யாரும் யாரையும் ‘’காப்பி’’ அடிக்கவில்லை. இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை. ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒரே மாதிரித்தானே சிந்திப்பர்!

பழங்கால உலக மொழிகள் எல்லாம் தமிழ், சம்ஸ்கிருத மொழிகளில் இருந்து வந்தவையே என்று முந்தைய கட்டுரைகளில் பல எடுத்துக் காட்டுகளைக் கொடுத்தேன். இது கப்பல் தொடர்பான கட்டுரை என்பதால் இன்னும் ஒரு பொருத்தமான உதாரணத்தைப் பார்ப்போம். கப்பல் என்ற தமிழ் சொல்லில் இருந்து ஷிப் என்ற ஆங்கிலச் சொல் வந்தது:- கப் (பல்)= ஸ்கிப்= ஷிப்; இதே போல நாவ் என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து நேவி என்ற ஆங்கிலச் சொல் வந்தது: நாவ்=நேவி=நேவல்.

ஆக இந்திய மூல மொழி இரண்டு கிளையாகப் பிரிந்து தமிழ் சம்ஸ்கிருதம் என மலர்ந்து, வளர்ந்து உலக மொழிகளைத் தோற்றுவித்தன.

கப்பல், கடல் பற்றிய குறிப்புகளைப் பார்க்கையில், வேத காலத்தில் மிகப் பெரிய கடல் வாணிபம் நடந்ததும் தெரிகிறது. ஆங்கிலக் கட்டுரையில் எல்லா குறிப்புகளையும் கொடுத்துள்ளேன். இங்கு முக்கிய குறிப்புகளை மட்டும் தருகிறேன்:–

1.வேதத்தில் வரும் நாவ் (படகு, கப்பல்) என்ற சொல்தான் இன்று உலகம் முழுவதும் கடற்படை (நேவி) என்ற சொல்லில் பயன் படுத்தப்படுகிறது. (RV 1-97-8)

2.வேதத்தில் குறைந்தது எட்டு முறை குறிக்கப்படும் விஷயம், நடுக் கடலில் தத்தளித்த பூஜ்யு என்பவரை அஸ்வினி தேவர்கள் காப்பாற்றிய செய்தியாகும். அவருடைய கப்பல் நூறு துடுப்புகள் உடைய கப்பல்.   RV 1-116-5; 1-117-14

3.பிராமணர்களைத் தொல்லைபடுத்துவதால் அழியும் நாடு கடலில் உடையும் கப்பலைப் போன்று அழிகிறது என்று அதர்வ வேதம் கூறும் (AV 5-19-8)

ship35

4.சமுத்ரம் (பெருங்கடல்) என்ற சொல் நிறைய இடங்களில் வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

5.கடல் செல்வங்கள் பற்றிய குறிப்புகளும் உள (RV 1-47-6; 7-6-7; 9-97-44)

6.முத்தும் பலவகைக் கடற்பயன்களும் குறிப்பிடப்படுகின்றன (RV 1-48-3, 1-56-2; 4-55-6)

7.தொலை தூரப் பிரதேசங்களுக்கு வாணிபத்தின் பொருட்டுச் சென்ற குறிப்புகளும் உள. இன்றும் தமிழர்கள் பயன்படுத்தும் வணிகம் சென்ற சொல்லே ரிக்வேதத்தில் இருந்து வந்த சொல்லே! (1-56-2; 4-55-6; RV 1-48-3)

8.வருணனும் வசிட்டனும் நடுக்கடலுக்கு கப்பலில் சென்றதை ஒரு பாடலில் காண்கிறோம் (RV 7-8-3)

9.சரஸ்வதி நதி கடல் வரை வருவதை ஒரு துதியும் இந்தியாவின் இருபுறம் உள்ள கடல்களை இன்னொரு துதியும் குறிப்பிடுகின்றன RV 10-136-5

10.மிகப்பெரிய இயற்கை அதிசயம் பல்லாயிரம் நதிகள் நீரைக் கொண்டுவந்து கொட்டினாலும் கடல் நிறைவதில்லை; எல்லை மீறுவதும்இல்லை என்று வேதம் துதி பாடுகிறது. சங்க இலக்கியத்தில் பரணரும் அதைப் பாடியுள்ளார் (RV 5-16-7)

  1. ரிக்வேதம் ஒரு மத நூல் என்றபோதிலும் 15 வகையான மீன்களின் பெயர்கள் அதில் உள்ளன.

12.ரிக் வேதத்திலும் தமிழின் பழைய நூல் தொல்காப்பியத்திலும் வருணன், கடல்வாழ் மக்களின் தெய்வம் என்று கூறப்படுகிறது.

13.தென் மாவட்டங்களில் கடலோரமாக வாழும் பரதவர்களுக்கும், ரிக் வேதத்தில் மிகவும் புகழோங்கிய பரதகுலத்துக்கும் தொடர்பு உண்டா என்றும் ஆராய வேண்டும்

14.வருணனை மேற்கு திசையின் அதிபனாக பிற்கால நூல்கள் வருணிக்கின்றன. மேற்கு திசையில் துவாரகா துறைமுகத்தில் இருந்து கிருஷ்ணர் நடத்திய கடற்படைத் தாக்குதல்களை “இந்து தெய்வங்களின் கடற்படைத் தாக்குதல் என்ற கட்டுரையில் கொடுத்துள்ளேன்

ship2

15.இந்துக்களுக்குக் கடல் என்பதே தெரியாது என்று சொன்னவர்களின் வாயில் அடிக்கும் வகையில் கடலுக்கு அடியில் மூழ்கிய துவாரகா கண்டுபிடிக்கப்பட்டது. தெற்கே ராமர் கட்டிய பாலம் ‘’நாசா’’ எடுத்த புகைப் படத்தில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணர் 125 ஆண்டுகள் வாழ்ந்து ஒரு வேடனால் கொல்லப்பட்ட அன்று, பெரிய சுனாமி தாக்குதல் ஏற்பட்டு துவாரகை கடலில் மூழ்கியதை விஷ்ணு புராணம் கூறுகிறது. அதே கி.மு3102-ஐ ஒட்டிதான் துவாரகை மூழ்கியதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆக இந்துமத நூல்கள் சொன்னதை கடல் அகழ்வாராய்ச்சிகளும் நிரூபித்துவிட்டன.

16.உலகம் முழுதும் உள்ள கடல்கள் இந்து ரிஷிகளின் பெயர்களில் உள்ளன: காஸ்பின் கடல்=காஸ்யப ரிஷி, ஏட்ரியாடிக் கடல் = அத்ரி மகரிஷி, ஏஜியன் கடல் = அகஸ்திய மஹரிஷி, பிளாக் ஸீ/ கருங்கடல்= வருணனின் நிறம் கருப்பு என்று வேதம் வருணிக்கிறது.

கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.ஆங்கிலக் கட்டுரையில் மேல் விவரம் காண்க.

(கப்பல் படங்களுக்கும் கட்டுரைக்கும் நேரடித் தொடர்பு இல்லை)