கடவுளை வீட்டுக்கு அழைப்பது எப்படி?

Bali-Acintya-God-Mayan-Stele-Richard Cassaro

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1367; தேதி அக்டோபர் 24, 2014.

பல் வேறு மதங்களில் பல்வேறு விதங்களில் கடவுளை அழைக்கிறார்கள். இந்துக்கள் மட்டும் ஒரு விநோதமான வழக்கத்தைக் கடைப் பிடிக்கி றார்கள். இந்த அதிசயமான வழக்கத்தை வேறு எங்கும் காண முடிவதில்லை. இதற்குப் பெயர் “ஆவாஹனம்” என்று பெயர். அது மட்டுமல்ல. பூஜை அல்லது பிரார்த்தனை முடிந்தவுடன் கடவுளுக்கு “குட் பை” சொல்லி, போய்விட்டு வாருங்கள் என்று வழியனுப்பியும் வைக்கி றார்கள்.

இதில் இன்னும் ஒரு அதிசயம் என்னவென்றால், கடவுளை இருதயத்தில், ஹோம குண்டத்தில், நீர் நிரம்பிய கலசத்தில், களி மண் சிலைகளில், மஞ்சள் பொடியினானால் செய்யப்பட்ட விரல் அளவு பருமனுள்ள பிள்ளையாரில், தர்ப்பைப் புல்லில் என்று எல்லாவற்றிலும் கடவுளை அழைத்து, ஸ்தாபித்துவிட்டு, பூஜை முடிந்தவுடன் உங்கள் இருப்பிடத்துக்கே திரும்பிப் போவீர்களாக என்றும் கைகூப்பி வேண்டிக் கொள்கிறார்கள் (யதா ஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி)— இதோ சில எடுத்துக் காட்டுகள்:-

வீட்டுக்கு விருந்துக்கு யாரையாவது அழைக்கும் போது என்ன செய்கிறோம்? அந்த நாள் வரை சேர்ந்திருந்த தூசு, தும்பட்டைகளைப் பெருக்கி சுத்தம் செய்கிறோம். ஒட்டடை முதலியவற்றை சுத்தம் செய்கிறோம். வீட்டை மெழுகி கோலம் போட்டோ வர்ணம் தீட்டியோ அலங்காரம் செய்கிறோம். வழக்கத்தை விட சுத்தமாக வைத்து “டைனிங் டேபிள்” அல்லது மெழுகிய தரையில் இலை போட்டு சாப்பாடு பரிமாறுகிறோம்.

இது போல இந்துக்கள் உடலைச் சுத்தம் செய்துவிட்டு (குளித்துவிட்டு), மனதையும் சுத்தம் செய்ய சில மந்திரங்களைச் சொல்லுவர். பின்னர் கடவுள் அல்லது இஷ்ட தேவதை பெயரைச் சொல்லி “ஆவாஹயாமி” என்று அழைப்பர். பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யவேண்டிய சந்தியா வந்தனத்தில் இப்படி (சூரிய) தேவனை சக்தி வடிவில் — காயத்ரீம் ஆவாஹயாமி சாவித்ரீம் ஆவாஹயாமி, சரஸ்வதீம் ஆவாஹயாமி —- என்று மந்திரம் சொல்லி அழைப்பர். அப்படிச் செய்யும் போது இரு கரங்களின் உள்ளங்கைகளும் இருதயத்தை நோக்கி இருக்குமாறு வைத்துக் கொண்டு உள்ளே வருமாறு — இருதய கமலத்தில் வீற்றிருக்கு மாறு — அழைக்கிறார்கள். 108 அல்லது 1008 தடவை காயத்ரீ மந்திரத்தை ஜபித்துவிட்டு “அம்மா தாயே, மேரு மலை மீதுள்ள உனது இருப்பிடத்துக்கே திரும்பிப் போய்விடு” என்று அனுப்பிவைப்பர் (உத்தமே சிகரே தேவி —- கச்ச தேவி யதா சுகம்).

red carpet

Rituals are steps to reach God!

கோவிலகளிலும், வீடுகளிலும் ஹோமம், யாகம் செய்யும்போது அங்கே வரும், குருக்கள் அல்லது புரோகிதர்களும் இப்படி ஆவாஹனம் செய்து கடவுளை அந்த இடத்தில் ஸ்தாபித்துப் பின்னர் பூஜை செய்வர். முடிந்தவுடன் யதா ஸ்தானம் பிரதிஷ்டாபயாமி என்று சொல்லி அவருடைய இடத்துக்கு கடவுளை அனுப்பி விடுவர். தன் முன்னால் உள்ள பொருள்களில் கடவுளை ஆவிர்பவிக்க உரிய முத்திரைகள், சைகைகளைப் பயன்படுத்துவர்.

இதை விடச் சுவையான விஷயம் அமாவாசை, மாதப் பிறப்புகளில் இறந்து போனோருக்காக நீரும் எள்ளும் தெளித்துத் தர்ப்பணம், திதி செய்யும் போது, இறந்து போனோரையும் இப்படி அழைத்து தர்ப்பைப் புல்லில் (கூர்ச்சம்) அவர்களை அமரவைத்து, மந்திரம் சொல்லி பூஜித்து பின்னர் வழியனுப்பி வைக்கிறார்கள்!

கடவுள் எங்கும் இருக்கையில் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? இது ஒரு –மேல் மாடிக்குச் செல்லும் படிக்கட்டு — போன்றது. எப்போதும் கடவுள் நம்முள்ளே இருப்பதாக நாம் எண்ணுவோமானால் —அந்தப் பக்குவம் வந்துவிட்டால் நாமும் ஆதிசங்கரர், விவேகானந்தர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போல கடவுள் “பித்துப் பிடித்து” அலைவோம். தினசரி கடைமைகளைச் செய்யமுடியாது தவிப்போம். ஆகவே அந்த பக்குவம் ஏற்பட முதலில் கடவுளைக் குறிப்பிட்ட நேரம் மட்டும் அழைக்கவும், அப்படி அழைக்கும்போது சொல், செயல், சிந்தனை ஆகிய மூன்றும் சுத்தமாக இருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தவும், வரும் இடம் இருதய தாமரையானாலும், வீட்டிலுள்ள வெறும் தரையானாலும் அதை சுத்தமாக வைக்கவும் பயிற்சி தருகின்றனர்.

இவ்வாறு பழகப் பழக, உடலையும், உள்ளத்தையும் எப்போதுமே சுத்தமாக வைக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும். காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் போன்ற முற்றும் துறந்த முனிவர்களும், அவருடைய குருமாரான ஆதி சங்கரரும் கூட இந்தச் சடங்கு சம்பிரதாயங்களைக் கடைப் பிடித்ததற்குக் காரணம் —- உயர் நிலைஅயை அடையும் மாடிப் படிக்கட்டு —- என்றும் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதால்தான். அத்வைத தத்துவ சிகரத்தை எட்டியவர்களுக்குக் இந்தச் சடங்குகள் அவசியமே இல்லை. ஆயினும் தன்னைப் பின்பற்றுவோரும், படிப் படியாக முன்னேறி வரவேண்டும் என்று காலாகாலமாக இந்த எளிய வழிகளை, சுவையான சம்பிரதாயங்களை நமக்கு விட்டுச் சென்றனர்.

king

மனதின் அபார சக்தி

நாமும் கடவுளை வீட்டுக்கு அழைப்போம், இருதயம் என்னும் வீட்டுக்கு அழைப்போம். எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை மிகச் சுருக்கமாக நினைவு படுத்தி கட்டுரையை முடிக்கிறேன்:–

பூசலார் என்ற ஒருவர் திருவாரூரில் பிறந்தார். சிவ பெருமானுக்குக் கோவில் கட்ட ஆசை. அனால அவரோ பரம ஏழை — விரலுக்கு ஏத்த வீக்கம், ஏழைக்கேற்ற எள்ளுருண்டை — என்னும் பழமொழிகளுக்கு இணங்க, தன் சக்திக்குட்பட்ட கோவிலைக் கட்டினார். எங்கே?

மனதுக்குள் ஒரு கோவிலைக் கட்டினார். அதுவும் முறையாக— நல்ல நாள் பார்த்து மனதுக்குள்ளேயே அடிக்கல் நாட்டு விழா நடத்தி — செங்கற்களை அடுக்கினார். கோவிலைக் கட்டியும் முடித்தார். பஞ்சாங்கத்தைப் பார்த்து நல்ல முகூர்த்த நாளைத் தேர்ந்தெடுத்து சிவனுக்கும் சொல்லிவிட்டார். என்ன அதிசயம்? சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்யங்களை நடுநடுங்கச் செய்த பல்லவ மன்னனும் காஞ்சீபுரத்தில் உலகம் வியக்கும் கைலாசநாதர் ஆலயத்தை நிர்மாணித்து— பெரியோர் சொற்படி —அதே நாளில் கும்பாபிஷேகத்துக்கு நாள் நிர்ணயித்தார். சிவ எருமான் அவர் கனவில் வந்து, மன்னர் மன்னவா, அந்த நாளில் நான் வேறு ஒரு இடத்துக்குப் போக ஒத்துக் கொண்டுவிட்டேன். திருநின்றவூரில் எனது அன்பன் பூசலார் கட்டிய கோவில் கும்பாபிஷேகத்துக்குப் போகிறேன். ஆகவே வெறு ஒரு நாளைத் தெரிவு செய்” – என்றார் பிறவா யாக்கைப் பெரியோன்.

மன்னனுக்கோ மஹா வியப்பு! அட! எனக்குத் தெரியாமல் ஒரு கோவிலா? என்று எண்ணி திருநின்றவூருக்குச் சென்று கோவிலைத் தேடினார். கற்கோவில் எதுவும் இல்லை. ஆனால் பூசலாரைத் தேடிக்கண்டுபிடித்து விசாரித்தபோது அது கற்கோவில் அல்ல – வெறும் சொற்கோவில் – மனக்கோவில் என்பது விளங்கிற்று.

இப்போது மன்னனை விட பூசலாருக்கு அதிக வியப்பு! என் மனதில் எழுப்பிய கோவிலை சிவபெருமானே அங்கீகரித்துவிட்டாரே என்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பெரிய புராணக் கதை —- பிராய்ட், யங் — போன்ற மேலை நாட்டு மனவியல் தத்துவ வித்தகர்களும் அறியாத அளவுக்கு நாம் உள்ளத்தின் ஆற்றலை அறிந்து வைத்திருந்தோம். மனிதின் அபூர்வ ஆற்றலை விளக்க இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு உலகில் இல்லை. நாம் எண்ணூம் எண்ணம் எல்லாம் ஆற்றல் மிக்க ஆயுதங்கள். அதைக் கொண்டு ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். மனதினாலேயே ஸ்ரீ ராமர் பறக்க விட்ட புஷ்பக விமானம் பற்றி இப்பொழுது விஞ்ஞானமும் ஒப்புக் கொள்வதை முன்னர் வேறொரு கட்டுரையில் கண்டோம்.

“எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்”

– சுப்பிரமணிய பாரதி.

—-சுபம்—-