கடைசியில் என்ன சொன்னார்கள்?! (Post No.3443)

Written by S NAGARAJAN

 

Date: 13 December 2016

 

Time uploaded in London:- 6-48 am

 

Post No.3443

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 கடைசியில் என்ன சொன்னார்கள்?!

by ச.நாகராஜன்

 

“எல்லோரும் ஓர் நாள் இறக்கத்தான் வேண்டும். ஆனால் அப்படிச் சொல்லி ஞாபகப்படுத்துவதைக் கேட்க சிலரே விருப்பப்படுகிறார்கள்”. – லெமனி ஸ்னிக்கெட்

 

 

 

  பிரபல விஞ்ஞானிகள், யோகிகள், மேதைகள், மகான்கள், சீர்திருத்தவாதிகள் தங்களின் கடைசி நிமிடத்தில் என்ன சொன்னார்கள்?

 

 

பிரபல பத்திரிகையாளரான எம்.வி.காமத் பத்ம பூஷண் விருது பெற்றவர். இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா என்ற பிரபல வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் 55 மேதைகளின் இறுதி நேரத்தை ஆராய்ந்து பிலாஸபி ஆஃப் லைஃப் அண்ட் டெத் (Philosophy of Life and Death) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

 

 

மரணத்தை பிரபல மேதைகள் எப்படி எதிர் கொண்டார்கள் என்பதை ஆராய்ந்த அவர் வாழ்க்கையை நன்கு ஒருங்கிணைந்து வாழ்ந்தவர்கள் தைரியத்துடனும் அமைதியுடனும் இறக்கிறார்கள். என்று தன் ஆய்வு முடிவை அறிவிக்கிறார்.

 

 

வில்லிய்ம் பி.ப்ராம்ஸ் (William B,Brahms)  என்ற அமெரிக்கர் நூலகப் பணியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அதற்கென நியூ ஜெர்ஸியில் நூலகத்தில் பல்லாண்டுகளாகப் பணியாற்றி வருபவர். அவர் தகவல் தொகுப்பாளரும் கூட.

 

 

1992ஆம் ஆண்டு அவர் ஒரு நாள் நூலகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். முதன் முதலில் யார் எதைக் கண்டு பிடித்தார்கள் என்பதைப் பற்றி பல நூல்கள் இருக்கும் போது பிரபலமானவர்கள் இறக்கும் போது என்ன சொன்னார்கள் என்பதைப் பற்றி ஒரு தகவலும் சரியான முறையில் இல்லையே என்று நினைத்தார். உடனே அதைத் தானே ஆராயப் புகுந்தார். ஆயிரக்கணக்க்கான நூல்கள், பத்திரிகைக் கட்டுரைகளைச் சேகரித்துப் படித்தார்.

 

 

தன் ஆராய்ச்சியின் முடிவாக 3500 பேர்கள் தாங்கள் இறக்கும் போது என்ன சொன்னார்கள் என்பதைத் தொகுத்து ‘லாஸ்ட் வோர்ட்ஸ் ஆஃப் நோடபிள் பீப்பிள்’ (Last words of Notable People)  என்ற நூலை அவர் எழுதியுள்ளார். அதிகாரபூர்வமான தகவல்களை சரி பார்த்து ஆய்வு செய்த நூலாக இது அமைகிறது.

 

மஹாத்மா காந்திஜி இறக்கும் தருணத்தில் ஹே! ராம் என்று கூறியவாறே உயிர் துறந்தார் என்பதையும் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் இறக்கும் கடைசி நிமிடத்தில் தனது தாய் மொழியான ஜெர்மானிய மொழியில் ஏதோ கூற அதை ஜெர்மானிய மொழி அறியாத நர்ஸினால் புரிந்து  கொள்ள முடியவில்லை என்பதையும் அனைவரும் அறிவர்.

 

 

   இன்னும் பல பிரபலங்கள் தங்கள் கடைசி நிமிடத்தில் என்ன சொன்னார்கள்?

 

சில தகவல்களைப் பார்ப்போம்.

 

பிரபல விஞ்ஞானியான சர் ஐஸக் நியூட்டன் கூறியது:

 

 “என்னை உலகம் எப்படிப் பார்க்குமோ எனக்குத் தெரியாது.ஆனால் எனக்கு என்னை கடற்கரையில் விளையாடும் ஒரு பையனைப் போலவே எண்ணத் தோன்றுகிறது. உண்மை என்னும் பெருங்கடல் என் முன்னே கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் போது, சாதாரணமாகக் கிடைப்பதை விட ஒரு அருமையான கூழாங்கல் அல்லது கிளிஞ்சலைக் கண்டு பிடிப்பதில் என்னை ஈடுபடுத்தியவன் போலத் தோன்றுகிறது

 

என்று இவ்வாறு எளிமையுடன் கூறி அவர் இறந்தார்.

 

சார்லஸ் டார்வின், “நான் இறப்பதற்குப் பயப்படவில்லை” என்று கூறி விட்டு மரணமடைந்தார்.

 

 

1988இல் லாஸ் ஏஞ்சல்ஸில் மரணமடைந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ரிச்சர்ட் ஃபெய்ன்மேன், “இந்த மரணம் எனக்கு போரடிக்கும் ஒன்றாக இருக்கிறது” என்றார்.

பிரபல விஞ்ஞானியும் அமெரிக்க ராஜ தந்திரியுமான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் தனது 84ஆம் வயதில் இறந்தார். மரணத் தறுவாயில் அவர் அருகில் இருந்த மகள் அவரை படுக்கையில் சற்று ஒருக்களித்துப் படுக்குமாறு கூறினார். அதற்கு அவர்,  “இறக்கும் ஒரு மனிதனுக்கு எதையும் சுலபமாகச் செய்ய முடியாது” என்று பதில் கூறினார். அதைச் சொல்லும் போதே அவர் உயிர் பிரிந்தது.

தாமஸ் ஃபேனட் டெ லாக்னி என்பவர் ஒரு பிரபலமான கணித மேதை. அவர் இறக்கும் போது அவரிடம் 12ன் ஸ்குயர் (12ஐ 12ஆல் பெருக்கு வரும் எண்) என்ன என்று கேட்கப்பட்டது. 144 என்று பதில் கூறியவாறே அவர் மரணமடைந்தார்.

 

 

பாப் மார்லி என்ற இசைக் கலைஞர், “பணம் வாழ்க்கையை வாங்க முடியாது” என்று கூறி விட்டு இறந்தார்.

மேரி ஆண்டாய்னெட் என்பவர் பிரான்ஸின் மஹாராணி. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவரை கில்லடீனுக்குக் கொண்டு சென்ற போது கில்லடீனை இயக்குபவரின் காலைத் தவறுதலாக அவர் மிதித்து விட்டார். உடனே அவர், “என்னை மன்னிக்கவும். வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை” என்று கூறியவாறே கில்லடீன் வைக்கப்பட்ட மேடை மீது ஏறி அதில் தன் தலையை வைத்தார்.

 

 

ஷெர்லாக் ஹோம்ஸைப் படைத்த எழுத்தாளரான சர் ஆர்தர் கானன் டாயில் 71ஆம் வயதில் தனது தோட்டத்தில் மரணம்டைந்தார். அருகில் இருந்த தன் மனைவியைப் பார்த்து “யூ ஆர் வொண்டர்புல்” என்று கூறியவர் தனது மார்பைப் பிடித்துக் கொண்டார். இறந்தார்.

 

 

பிரபல கவிஞரான டி.எஸ். எலியட் இறக்கும் போது ஒரே ஒரு வார்த்தையைத் தான் முணுமுணுத்தார் – வாலெரி என்று.

வாலெரி என்பது அவர் மனைவியின் பெயர்

எல்லோரையும் தியேட்டர்களில் நாற்காலியின் விளிம்பில் அமர வைத்த சஸ்பென்ஸ் மன்னன் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக், “எவருக்கும் எப்போது முடிவு வரும் என்பது தெரிவதில்லை. கத்தோலிக்கர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றாலும் கூட, மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பதை அறிய செத்துத் தான் பார்க்க வேண்டும்”என்று கூறி விட்டு இறந்தார்.

 

 

  ஜோ டி மக்கியோ என்ற பேஸ் பால் விளையாட்டு வீரர் இறக்கும் போது, “கடைசி கடைசியாக நான் மர்லின் மன்ரோவைப் பார்க்கப் போகிறேன்” என்று கூறி விட்டு இறந்தார்.

 

3500க்கும் மேற்பட்ட பிரப்லங்களின் இறுதி வார்த்தைகளைப் படிப்பது வாழ்க்கையைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் சிறப்பாக அறிந்து கொள்ள முடிகிறது என்று படித்தவர்கள் கூறும் போது அவற்றைத் தெரிந்து கொள்ள ஆவல் கொள்வது இயல்பு தானே!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

பிரபல விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிஸனுக்கு பல விசித்திரமான நம்பிக்கைகள் உண்டு. யார் என்ன சொன்னாலும் தான் நம்பியதை அவர் கடைசி வரை விடவே இல்லை.

 

இப்படிப்பட்ட நம்பிக்கைகளில் ஒன்று ஆவிகளைப் பற்றியது.

ஆவிகளுடன் நிச்சயமாக மனிதர்கள் பேச முடியும் என்று அவர் நம்பினார்.

 

1920ஆம் ஆண்டு அமெரிககன் மாகஸைன் என்ற பத்திரிகையைச் சேர்ந்த ஒரு நிருபருக்கு அவர் பேட்டி அளித்த போது  தான் ஒரு ‘ஆவி போனை’க் கண்டு பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். அதாவது அந்த போனின்  மூலமாக இறந்த எந்த ஒருவருக்கும் டய்ல் செய்து யார் வேண்டுமானாலும் பேசலாம்.

இதைக் கேட்ட நிருபர் அசந்து போனார்.

 

ஆனால் அந்த போனைக் காட்டுமாறு பலரும் தொடர்ந்து அவரை நச்சரித்தவண்ணம் இருந்தனர். இது பல ஆண்டுகள் தொடர்ந்தது. பின்னர் ஒரு நாள் அப்படிப்பட்ட போனைக் காண்பிக்க முடியாத நிலையில் எடிஸ்ன் தான் அப்படி சொன்னது ஒரு ஜோக் தான் என்று சொல்லிச் சமாளித்தார்.

இறந்தவருக்கு டயல் செய்து பேசும் போனை அவரைத் தவிர வேறு யாரும் கற்பனையும் செய்ததில்லை; உருவாக்க முயன்றதுமில்லை!

 

*******