Written by S NAGARAJAN
Date: 2 November 2015
Post No:2293
Time uploaded in London :– 5-13 am
(Thanks for the pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
ஹிந்து தத்துவ விளக்கம்
காலம் என்னும் மர்மம்! – 3
ச.நாகராஜன்
8
தேவர் உலக கால அளவுகள்
தேவர் உலகில் உத்தராயணம் அதாவது 6 மாதம் ஒரு பகலாகவும், தக்ஷிணாயனம், அதாவது இன்னொரு 6 மாதம் இரவாகவும் ஆகிறது. அதாவது மனித மாதங்கள் பன்னிரெண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகிறது.
பிரம்மாவின் ஆயுள்
அதிகமான ஆயுளுடன் இருப்பவர் பிரம்மா.
தேவர் கால அளவில் தேவர்களின் ஒரு நாள் என்பது மனிதர்களி 360 நாள் என்று பார்த்தோம்.
12,000 தேவ வருடங்கள் ஒரு சதுர் யுகம் எனப்படுகிறது.
ஒரு சதுர் யுகத்தில் கிருத யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம் என நான்கு யுகங்கள் உள்ளன.
கிருத யுகம் 4000 தேவ வருடங்களையும் திரேதா யுகம் 3000 தேவ வருடங்களையும் த்வாபர யுகம் 2000 தேவ வருடங்களையும் கலியுகம் 1000 தேவ வருடங்களையும் கொண்டிருக்கிறது.
இந்த வருடங்கள் யுகத்தின் சரியான காலமாகும்.
என்றாலும் யுக ஆரம்பத்திற்கு முன் ‘சந்தி’ என்ற காலமும் யுகத்திற்குப் பின் ‘சந்தி அம்சம்’ என ஒரு கால அளவும் உள்ளது.
இதன் படி கிருத யுகத்திற்கு சந்தி அளவு 400 தேவ வருடமும் சந்தி அம்சம் 400 தேவ வருடமும் ஆகிறது.
இதே போல திரேதா யுகத்திற்கு சந்தி அளவு 300 தேவ வருடமும் சந்தி அம்சம் 300 தேவ வருடமும் ஆகிறது.
ஆக, திரேதா யுகத்தின் மொத்த வருடம் 3600. இதே போல த்வாபர யுகத்தின் மொத்த வருடம் 2400. கலி யுகத்தின் மொத்த வருடம் 1200.
ஆக சதுர் யுகங்களின் – நான்கு யுகங்களின் மொத்த காலம் 12000 தேவ வருடம். அதாவது 43,20,000 மனித வருடம்.
கலியுகம், 1200 x 360 = 4,32,000 மனித வருடம்.
த்வாபர யுகம் கலி யுகத்தைப் போல இரு மடங்கு. அதாவது 8,64,000 மனித வருடம்.
திரேதா யுகம் 12,96,000 மனித வருடம். கிருத யுகம் 17,28,000 மனித வருடம்.
ஆக மொத்தம் ஒரு சதுர் யுகத்தின் கால அளவு 43,20,000 மனித வருடம்.
இது போன்ற ஆயிரம் சதுர் யுகங்கள் – அதாவது 432 கோடி மனித வருடமே பிரம்மாவிற்கு ஒரு பகலாகும்.
இந்த பிரம்மாவின் ஒரு பகலே ‘கல்ப’ம் எனப்படுகிறது.
பிரம்மாவின் இரவுக்கு இன்னொரு இன்னொரு 432 கோடி மனித வருடம்.
ஆக, பிரம்மாவின் ஒரு பகலும் இரவும் சேர்ந்தால் 864 கோடி மனித வருடங்களுக்குச் சமமாகும்.
பிரம்மாவின் ஆயுள் 100 வருடமாகும். அவருக்கும் ஒரு முடிவு. உண்டு. அவர் ஆயுளுக்கும் எல்லை இப்படி இருக்கிறது என்பது தெளிவு.
பிரம்மாவின் முழு ஆயுளைக் கணக்கிட்டால் 31.54 x 10 to the power 13 மனித வருடங்களாகிறது!
இதே போன்ற பிரம்மாக்கள் ஏராளமானோர் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பர்.
இது தான் காலத்தின் எல்லையற்ற எல்லை!
மனக் கற்பனைக்கு அப்பாற்பட்ட உண்மை!!
மனித ஆயுளை இப்போது ஒப்பிட்டுப் பாருங்கள். எத்தனை சிறிது! ‘காய கல்பம்’ என ஆயுளை நீடிக்க வைக்கும் வித்தையைச் சொல்கிறார்கள்.
ஒரு கல்பம் அளவு – பிரம்மாவின் ஒரு நாள் அளவு – அதாவது 432 கோடி மனித வருடம் வாழ்கின்ற சித்தராகவே நீங்கள் இருந்தாலும் எல்லயற்ற கால வெள்ளத்தில் நீங்கள் ஒரு சிறு துளி தான்!
ஆயுள் ‘குறைவாக’ உள்ள மற்ற தேவர்களும் இருக்கிறார்கள்.
“தெய்வீக நிர்வாகத்தில்” அவரவர்க்கு உரிய பணியைச் செய்யும் இந்திரன், அக்னி, சூரியன், வருணன் ஆகிய தேவர்களின் ஆயுள் மனிதரின் கால அளவை விட மிகப் பெரியது. என்றாலும் பிரம்மாவின் ஆயுளுடன் ஒப்பிடும் போது அது மிகக் குறைவே!
SUN TEMPLE, KONARK, ORISSA
9
ஆன்மீக உயர் நிலையை எட்டி மேலே சொன்ன தேவ நிலையை மனிதர்கள் அடையலாம்.
கடோபநிஷத்தில் – யமன் – இறப்பிறகு அதிபதி – இதை விளக்குகிறார்.
தவத்தின் மூலம் பிரம்ம நிலையை எய்துதற்கு முடியும். என்றாலும் அவன் இந்த நிலைக்கு மட்டுமே வர முடிந்தது என விவரிக்கிறான்.
பிரம்ம நிலையை எய்துவதே மனிதனின் இலட்சியம்.
தைத்ரியோபநிஷத் பேரின்ப நிலைகளை வரிசையாகக் குறிப்பிடும் போது (இன்பமான, லட்சிய) மனித இன்பம், கந்தர்வர், பிதிர், தேவர், இந்திரன், பிரஹஸ்பதி, பிரஜாபதி, பிரம்மா எனக் குறிப்பிடுகிறது.
ஆயுளும் இதே வரிசையில் கூடுகிறது.
சில ரிஷிகள் – முனிவர்கள் – ஒரு கல்ப காலம் ஆயுளை உடையவர்களாக இருக்கின்றனர். மற்ற சிலரோ ஒரு மன்வந்தரமே ஆயுள் உடையவர்களாக இருக்கின்றனர்.
பெரும் தவ சிரேஷ்டர்கள் பிரம்மாவின் ஆயுள் எல்லையையும் தாண்டி வாழ்கின்றனர்!
மன்வந்தரம் என்பது கல்பத்தில் ஒரு பகுதி. 14 மன்வந்தரம் கொண்டது ஒரு கல்பம். ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு உண்டு.
நாம் இப்போது இருக்கும் கல்பத்தின் பெயர் ஸ்வேத வராஹ கல்பம்.
நாம் இப்போது இருக்கும் மன்வந்தரத்தின் பெயர் வைவஸ்வத மன்வந்தரம். வைவஸ்வத மனு என்பவரின் பெயரைக் கொண்டது இது!
அதாவது ஒரு மன்வந்தரம் சுமார் 31 கோடி மனித வருடங்களைக் கொண்டது. ((துல்லியமாக வேண்டுமெனில் கல்பத்தை 14ஆல் வகுத்துச் சரியாகவும் கணக்கிட்டுக் கொள்ளலாம்)
ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இந்திரன், அக்னி, சில ரிஷிகள் மாறலாம். ஆனால் அவர்களின் பணிகள் புதிய பெயரிலேயே நடந்து கொண்டே தான் இருக்கும்.
சப்த ரிஷிகளின் பெயர்கள் பல்வேறு விதமாகக் கூறப்படுவதால் குழப்பம் அடைவதாகப் பலரும் சொல்வர்.
அனைத்துப் பெயர்களும் சரியே! எந்த மன்வந்தரத்து சப்த ரிஷிகள் என்று கேட்டால் குழப்பம் நீங்கி விடும்!
நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கும் துல்லியமான கால அளவுகளைப் போல உலகின் வேறு எந்த மதமும், நாகரிகமும் வகுத்து வைத்திருக்கவில்லை.
அதனால் தான் காஸ்மாஸ் தொடரை தொலைக்காட்சி சீரியலாக தயாரித்த பிரபல விஞ்ஞானி கார்ல் சகன் உலகின் எந்த மதம் அல்லது நாகரிகம் எல்லையற்ற கால அளவைச் சரியாகச் சொல்லி இருக்கிறது என ஆராய ஆரம்பித்தார்.
ஹிந்து மதத்தின் இந்த கால அளவுகளைக் கண்டு அவர் பிரமித்தார். உடனே இந்தியாவிற்கு வந்து சிதம்பரம் சென்றார்.
அவர், தன் தொடரில் நடராஜரை முதலில் காட்டியது இதனால் தான்!
நமது அறிவுத் திறனுக்கும் மூளை ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட காலம் பற்றிய சரியான விவரணம் தருவது –
ஹிந்து மதமே!
- தொடரும்
குறிப்பு: காலம் பற்றிய இந்த தொடர் எழுதப்பட்ட நாள் 14-7-1996. பழைய கைப்பிரதிகளை கிழிக்க முற்பட்ட போது இது என் கையில் அகப்பட்டது. ஆஹா, எதற்கும் ஒரு காலம் வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இதை முழுத் தொடராக்குகிறேன்.
You must be logged in to post a comment.