
WRITTEN BY S NAGARAJAN
Post No.7624
Date uploaded in London – 27 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
பாக்யா, 2020 பிப்ரவரி 16ஆம் தேதியிட்ட இதழில், ‘அறிவியல் துளிகள்’ தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இருபத்தி ஆறாம் கட்டுரை -அத்தியாயம் 442
ஒன்பது ஆண்டுகள் இந்தக் கட்டுரையுடன் முடிந்து விட்ட நிலையில் அடுத்த இதழில் அறிவியல் துளிகள் தொடர் பத்தாம் ஆண்டை ஆரம்பிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளின் ‘டாப் டென்’ கண்டுபிடிப்புகள்!
ச.நாகராஜன்
2020ஆம் ஆண்டு தோன்றி விட்டது. கடந்த பத்து ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் அறிவியல் உலகை உற்று நோக்கினால் லட்சக் கணக்கில் அறிவியல் கட்டுரைகள் பல நூறு கண்டுபிடிப்புகளைப் பற்றி உலகெங்கும் உள்ள நாடுகளில் வெளியாகியுள்ளன. இவற்றில் ‘டாப் டென்’ – தலையாய பத்தைத் தேர்ந்தெடுப்பது சற்று சிரமமான விஷயம் தான்.
இருப்பினும் நமக்கு முன்னால் வரும் பத்து கண்டுபிடிப்புகள் இதோ:
1) மனித குலத்தின் தோற்றம் : தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் படிமங்கள் ஒரு புதிய உண்மையை அறிவிக்கின்றன. அதாவது மனிதன் 3,35,000 இலிருந்து 2,36,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கிறான் என்பதே அந்தக் கண்டுபிடிப்பு! ரைஸிங் ஸ்டார் கேவ் என்னும் குகையில் கண்டுபிடிக்கப்பட்டது இது. இதே போல மூன்று கண்டுபிடிப்புகள் 2010, 2013, 2019 ஆகிய ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மனித குல வரலாற்றில் பிரமிக்க வைக்கும் ஒரு செய்தியைத் தந்திருக்கிறது!
2) பிரபஞ்ச தோற்றத்தின் ஆதாரம் :
2015 செப்டம்பரில் லிகோ மற்றும் வர்கோ ( LIGO and VIRGO) ஆகிய இரு நவீன சாதனங்கள் புவி ஈர்ப்பு அலைகளைக் கண்டுபிடித்தன. பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனே ப்ளாக் ஹோல் என்று ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்பட்டு வந்தார். 2017இல் ஈவண்ட் ஹொரைஸன் டெலஸ்கோப் என்ற பிரம்மாண்டமான ஒரு டெலஸ்கோப் உலகெங்குமுள்ள பல்வேறு ரேடியோ டெலஸ்கோப்புகளை இணைத்தது. இது ப்ளாக் ஹோலைப் படம் பிடித்தது; 2019இல் அந்தப் படம் உலகெங்கும் வெளியிடப்பட்டது. ஆக ஐன்ஸ்டீன் சொன்னது சரி தான்!
3) உலகின் அதி வெப்பமான வருடம்
விஞ்ஞானிகள் 1912ஆம் ஆண்டிலேயே,” உலகில் இப்போது 2,000,000,000 டன்கள் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இப்படி இவை எரிக்கப்படும்போது 7,000,000,000 டன்கள் கார்பன் டை ஆக்ஸைட் வளிமண்டலத்தில் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. காற்று இப்படி அசுத்தமாகிக் கொண்டே போனால் உலகின் வெப்ப நிலை கூடுதலாகி மனிதன் வாழ முடியாத நிலை ஏற்படும்” என்று எச்சரித்தனர்.
இது உண்மையாகி விட்டது. கடந்த நூற்றாண்டுகளில் அதிகமான வெப்பமுடைய ஐந்து வருடங்களாக 2014 முதல் 2018 முடிய உள்ள வருடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு உலகின் வெப்பமான ஆண்டாகத் திகழ்கிறது. ஃபாஸில் ஃப்யூயல் எனப்படும் பெட்ரோலையும் டீஸலையும் உடனடியாகப் பயன்பாட்டிலிருந்து நிறுத்த வேண்டும்.

4) மரபணு எடிட் செய்யப்பட்ட குழந்தைகள்
2018ஆம் ஆண்டில் சீன ஆராய்ச்சியாளரான ஹே ஜியான்குயி தாங்கள் மனித மரபணுவை எடிட் செய்து அதை ஒரு பெண்ணின் கருப்பையில் பதிய வைத்து இரு பெண் குழந்தைகளை உருவாக்கியதாக அறிவித்தார். உலகெங்குமுள்ள விஞ்ஞானிகள் இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால் சீனாவோ இந்தப் பெண்கள் ஹெச். ஐ. விக்கு கடும் எதிர்ப்பு சக்தியைத் தங்கள் உடலில் கொண்டுள்ளனர் என்றது. ஆனால் மற்ற விரும்பத்தகாத விளைவுகள் பற்றி ஒரு அறிவிப்புமில்லை. வேண்டாத இந்தக் கண்டு பிடிப்புக்கு உலகமே எதிர்ப்பைப் பதிவு செய்து விட்டது.
5) கோடிக் கணக்கில் உலகங்கள்
கோடிக் கணக்கில் உலகங்கள் இருக்கின்றன என்பதை அதிகாரபூர்வமாக அறிவியல் உலகம் கூறுகிறது. விண்வெளி டெலஸ்கோப்புகள் ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கும் உலகங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை.
2018இல் ஏவப்பட்ட டெஸ் (TESS) என்னும் விண்வெளி டெலஸ்கோப் ஏராளமான உலகங்களைப் “பார்த்து” விட்டது. தனது பணிக்காலத்திற்குள் இன்னும் ஒரு 20000 உலகங்களை அது “பார்த்துச் சொல்லும்” என்று விஞ்ஞானிகள் பிரமிப்புடன் கூறுகின்றனர்!

6) டைனோஸரின் நிறம் என்ன?
1100 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோஸர்களின் நிறம் என்ன? 2017இல் ஒரு டைனோஸரின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டு ஆராயப்பட்டது. அதன் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. மனித குல பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தை ஆராய்வதற்கு இந்தக் கண்டுபிடிப்பு பெருமளவில் உதவுமாம்!
7) கிலோகிராம் பற்றிய துல்லியமான விளக்கம்
1000 கிராம் கொண்டது ஒரு கிலோ கிராம். இதைத் துல்லியமாக அளக்க வழியைக் கண்டுபிடித்து விட்டனர் விஞ்ஞானிகள். இது உலகெங்கும் மே, 2019 முதல் அமுலுக்கு வந்து விட்டது. இதே போல மின்சக்தி அளவீடான ஆம்பியர், உஷ்ணநிலை அளவீடான கெல்வின் ஆகியவையும் இனி துல்லியமாக அளக்கப்படும் முறையை விஞ்ஞானிகள் தெரிவித்து விட்டனர். இதனால் ஏற்படும் முதல் பயன் வியாதிகளுக்காகத் தயாரிக்கப்படும் மாத்திரைகள் இனி சரியான அளவில் துல்லியமாக உரிய உள்ளீடுகளுடன் தயாரிக்கப்படும்.
8) பழங்கால மனித மரபணுக்களின் தொகுப்பு
5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்கள் பல்வேறு விதத்தில் மாசுபடுத்தப்பட்டு இருந்திருக்கக் கூடும். இப்போது பழங்கால மரபணுக்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து முறையாக ஒரு தொகுப்பைச் செய்து விட்டனர். இந்த மரபணுக் களஞ்சியம் ஒரு அரிய அறிவியல் தொகுப்பாகத் திகழும்.

9) எபோலா வைரஸுக்கு தடுப்பூசி
கடந்த பத்தாண்டுகளில் அபாயகரமான வைரஸாக இருந்தது எபோலா. முதல் கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின் இரண்டரை ஆண்டுகளுக்குள் இதனால் 28,600 பாதிக்கப்பட்டனர். அதில் 11,325 பேர் இறந்து விட்டனர். இந்த அபாயகரமான வைரஸுக்கு ஒரு புது தடுப்பூசி (Vaccine) கண்டுபிடிக்கப்பட்டு விட்டது!

10) கடவுள் துகளின் கண்டுபிடிப்பு
கடவுள் துகள் என்று பரபரப்புடன் கூறப்பட்ட துகள் பற்றிய் ஆராய்ச்சி சி.இ.ஆர். என் சோதனைச் சாலையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஹிக்ஸ் போஸான் என்ற துகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகமே அதைக் கொண்டாடியது.
2013இல் இதற்காக இரு அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆய்வின் தொடர்ச்சி இன்னும் பல மர்மங்களை விளக்கும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
லட்சக்கணக்கான ஆய்வுப் பேப்பர்களில் வெற்றிகரமான முதல் பத்தைக் கண்டோம். இன்னும் இதே போல சுவையான கண்டுபிடிப்புகள் நூற்றுக் கணக்கில் உள்ளன.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஹென்றி ஜார்ஜ் பெர்னார்ட் டான்ஜிக் (George Bernard Dantzig தோற்றம் 8-11-1914 மறைவு 13-5-2005) பிரபலமான அமெரிக்க கணித மேதை மற்றும் விஞ்ஞானி.
1939ஆம் வருடம் அவர் பெர்க்லியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் வகுப்பறைக்குச் சற்று தாமதமாகச் சென்றார். அங்கு கரும்பலகையில் புள்ளியியல் சம்பந்தமான இரு பிரச்சினைகள் எழுதப்பட்டிருந்தன. அது ஹோம் ஒர்க்கிற்காகத் தரப்பட்டது என்று எண்ணிய டான்ஜிக் அதை சில நாட்களிலேயே முடித்து புரபஸர் ஜெர்ஸி நெய்மெனிடம் (Jerzy Neyman) தந்தார்.
அசந்து போன புரபஸர், “அந்த இரண்டும் யாராலும் தீர்வு காண முடியாத பிரச்சினைகள் என்றல்லவா எழுதி வைத்தேன். அதற்கு தீர்வு கண்டு விட்டாயே” என டான்ஜிக்கைப் பாராட்டினார். பின்னால் ஆய்வுக்கான பட்டத்தைப் பெற தான் எந்த ப்ராஜக்டை எடுத்து ஆராய்வது என்று திகைத்திருந்த டான்ஜிக்கை, நீ ஏன் ஒரு ப்ராஜக்டை புதிதாக எடுத்து ஆராய வேண்டும். ஏற்கனவே தீர்த்திருக்கும் இரண்டு பிரச்சினைகளில் ஒன்றை எழுதிக் கொடு. அதையே ஆய்வுக் கட்டுரையாக எடுத்துக் கொண்டு உனக்கு டிகிரியைத் தந்து விடுகிறென் என்றார் புரபஸர் ஜெர்ஸி நெய்மேன்.
இந்த சம்பவம் பாஸிடிவ் எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டப்படும் சம்பவமாக அறிஞர் உலகில் இன்றளவில் பெரிதாகப் பேசப்படும் ஒன்று.
****