Date: 19 DECEMBER 2017
Time uploaded in London- 6-37 am
WRITTEN BY S NAGARAJAN
Post No. 4515
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
அனுபவத்தின் மதிப்பு!
கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின் புலம்பலும், அப்பரின் அறைகூவலும்!
ச.நாகராஜன்
1
அனுபவத்தைப் போன்ற சிறந்த ஆசான் கிடையாது என்பது முதுமொழி.
நிறையப் படித்தவனை விட அனுபவத்தால் தன் அறிவைப் பகிர்ந்து கொள்பவனுக்கு சமுதாயத்தில் ஒரு தனி மதிப்பு உண்டு.
காஞ்சி பெரியவாள் கண்ணதாசனைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியதாக கவிஞரிடம் சொன்ன போது ஓடோடி வந்து அவரைத் தரிசித்தார்.
அவரிடம் பெரியவாள் பல விஷயங்களைப் பேசினார்.அப்போது அவர் கூறிய ஒரு முக்கிய விஷயம்: “என்னைப் போன்றவர்கள் ஒரு விஷயத்தைச் சொல்வதை விட உங்களைப் போன்றவர்கள் அனுபவத்துடன் அதைக் குழைத்துச் சொன்னால் அது பெரிதும் வரவேற்கப்பட்டு நலம் பயக்கும்” என்றார் பெரியவாள்.
கண்ணதாசனின் இந்தச் சந்திப்பு பற்றித் தனியே படித்தால் பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
கண்ணதாசன் தன் அனுபவத்தை அப்படியே உலக மக்களுடன் ‘சத்திய சோதனை’ வழியில் பகிர்ந்து கொண்டார்.
திராவிடப் பிசாசுகளின் கூட்டத்தில் தவறி விழுந்தவர் – பன்றிகளின் கூட்டத்தில் தவறி விழுந்த புள்ளி மான் போல விழுந்தவர் – பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மீண்டார்.
அர்த்தமுள்ள இந்து மதத்தைக் கண்டார்.
அவர் பிறந்த தேதி : 24-6-1927.
மறைந்த தேதி : 17-10-1981
ஆக, அவர் வாழ்ந்த காலம் ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே!
இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர்!
திராவிடப் பிசாசுகளின் ‘சங்காத்தம்’ அவர் ஆயுளின் மீது ‘கை வைத்து விட்டது’.
1976ஆம் ஆண்டு ஜூன் மாத ‘கண்ணதாசன்’ இலக்கிய மாத இதழில் அவர் தனது ஐம்பதாம் ஆண்டை இப்படி வரவேற்கிறார்:
50
இறந்த நாள் அனைத்தும் எண்ணி
இனிவரும் நாளை எண்ண
பிறந்த நாள் காணு கின்றோம்
பிழை இலை: ஆயின் வாழ்வில்
சிறந்த நாள் கணக்குப் பார்த்துத்
தேர்ந்து கொண் டாடல் வேண்டும்
பறந்த நாள் இனிவ ராது
பாக்கி நாள் நன்னா ளாக!
50
ஐம்புலன் ரசித்த வாழ்வு
அறம்மறம் நிறைந்த வாழ்வு
ஐம்பொறி துடித்த வாழ்வு
ஆயிரம் படித்த வாழ்வு
ஐம்பதை நெருங்கும் போது
அகம்புறம் கணக்குப் பார்த்து
பைம்புகழ் இனியும் காண
பரமனே அருள்வா னாக!
50
ஆண்டுகள் ஐம்ப தாகும்
ஆரம்பம் திருநா ளாகும்
ஆண்டுகள் அறுபதா னால்
அந்தியில் நன்னா ளாகும்
ஈண்டுயான் ஐம்ப தாண்டை
இனிதுற வரவேற் கின்றேன்
நீண்டநாள் வாழ ஆசை
நிமலன் என் நினைக்கின் றானோ!
நீண்ட நாள் வாழ ஆசைப் பட்டார் கவிஞர்! ஆனால் நிமலனோ அவருக்கு இன்னும் ஒரு நான்கு ஆண்டுகள் மட்டுமே கொடுத்தான்!
பின்னாளில் அவர் மிகவும் வருந்திப் பாடினார் இப்படி:
சேராத கூட்டத்தில் என்னை மறந்து நான்
சேர்ந்தேன் அந்த நாளே
செறிவான புத்தியை தவறான பாதையில்
செலுத்தினேன் அந்த நாளே
பாராத பூமியைப் பார்க்கிறேன் இப்போது
பார்த்தனைக் காத்த நாதா
பதிநினது கதை புகல உடல் நிலையை நீ கொஞ்சம்
பார்த்தருள் கிருஷ்ண காந்தா!
கண்ணனை நினைந்து மனமுருகிப் பாடிய கவிஞரின் பாடலை அழியாமல் காக்கிறான் கிருஷ்ணகாந்தன். அவரது புகழுடல் நிற்கப் பொய்யுடல் போய் விட்டது கால வெள்ளத்தில்!
என் வாழ்வைப் பார்க்காதே; என் பாடலைப் பார்த்து அதன் படி நட என்பது அவரே கூறிய அன்புரை.
ஆக, வனவாசத்தில் அவர் பார்த்த பிசாசுகளை நாம் படித்துப் புரிந்து கொள்ளலாம். அவர் மனவாசத்தில் கண்ட சத்தியத்தில் அவர் வாழ்வு புனரமைக்கப்பட்டதையும் தெரிந்து கொள்ளலாம்.
அனுபவம் பேசியதால், அருந்தமிழில் அதைக் குழைத்துக் கொடுத்ததால் அதை நாம் படிக்க வேண்டியது இன்றியமையாததாகிறது.
ஆக கண்ணதாசனை முழுமையாகப் படித்தால் அனுபவத்தின் அடிப்படையிலான அற்புத உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம்; இனி, காலத்தில் சற்றுப் பின்னோக்கிப் போனால் நம் முன் வருவது இன்னொரு அனுபவஸ்தர். அருணகிரிநாதர்!
2
வாழ்வின் முற்பகுதியில் பெண்களின் மையலில் மனதையும் உடலையும் இழந்தவர் அருணகிரிநாதர். ஆனால் அனுபவம் தந்த பாடத்தால் மனம் வருந்தி, திருந்தி வேலனின் அருளை வேண்டினார்.
‘சும்மா இரு சொல் அற’ என்றவுடன் “அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலனே” என மயங்கிப் பின் தெளிவு பெற்றார்.
முருகனின் புகழைப் புதிய தமிழ் நடையில், புத்தமுதமாகக் கொட்டினார்.
ஆனால் தன் அனுபவங்களை ஆங்காங்கே கொட்டத் தவறவில்லை.
வேசியரின் விளையாட்டுக்களைப் பிட்டுப் பிட்டு வைத்து விட்டார்.
குலமகளிரின் புகழையும் கொண்டாடிப் பாடினார்.
நமக்குக் கிடைத்திருக்கும் ஏறத்தாழ 1311 பாடல்களில் எங்கு தொட்டாலும் அவர் தன்னிரக்கப்பட்டு புலம்பும் புலம்பலைப் பார்க்கிறோம்:
“கொள்ளை யாசைக் காரிகள் பாதக
வல்ல மாயக் காரிகள் சூறைகள்
கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் விழியாலே
கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்
வெல்லும் மோகக் காரிகள் சூதுசொல்
கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு மவர்போலே
உள்ள நோவைத் தேயுற வாடியர்
அல்லை நேரொப் பாமன தோஷிகள்
உள்வி ரோதக்காரிகள் மாயையி லுழல்நாயேன்
உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு
கையு நீபத் தார் முக மாறுமுன்
உள்ள ஞானப் போதமு நீதர வருவாயே
(சிதம்பரத்தில் அருளிய பாடல் இது)
மதனச் சொற் காரக் காரிகள் பவளக் கொப்பாடச் சீறிகள்
மருளப் பட்டாடைக் காரிகளழகாக
மவுனச் சுட்டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக்காரிகள்
வகைமுத்துச் சாரச் சூடிகள் விலைமாதர்
குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்
குசலைக்கொட் சூலைக் காலிகள் மயல்மேலாய்க்
கொளுவிக் கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை
குமுதப் பொற் பாதச் சேவையி லருள்வாயே!
(சீர்காழியில் அருளிய பாடல் இது)
இப்படித் தோட்ட தொட்ட இடம் எல்லாம் தனது பழைய வாழ்வை நினைத்து வருந்தி முருகனின் அருள் நிரந்தரம் வேண்டி “உய்யவே அருள் தாராய்” என அவர் பாடும் பாடல்களைப் பார்க்கிறோம்.
திருப்புகழ் தரும் செய்தியைத் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.
இனி, இதே போல வாழ்வின் முற்பகுதியில் சேரக் கூடாதோருடன் சேர்ந்து சீரழிந்து பின்னர் சிவபிரானின் அருளால் தெளிவு பெற்ற அப்பரைப் பார்ப்போம்.
3
சமணர் தம் கூட்டத்தில் சேர்ந்து தன் இளமைக் காலத்தை வீணாக்கியதை நினைத்து பல இடங்களில் நாவுக்கரசர் தம்மை நொந்து கொள்கிறார்.
“பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்
சேல் உலாம் பழன வேலித் திருக் கொண்டீச்சுரத்து உளானே”
என்று இப்படி, ‘குறிக்கோள் இலாது கெட்டேனே’ என்று மனம் வருந்திப் பாடுகிறார்.
“பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர்தங்கள்
மொழிவழி ஓடி முடிவேன் முடியாமைக் காத்துக் கொண்டாய்”
என்றும்,
“மனை துறந்த வல் அமணர் தங்கள் பொய்யும்
மாண்பு உரைக்கும் மனக் குண்டர் தங்கள் பொய்யும்
சினை பொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்
மெய் என்று கருதாதே போத நெஞ்சே”
என்றும் அமணர் தம் சேர்க்கை பற்றிப் பாடுகிறார் அப்பர்.
“துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர்
சொல் கேட்டு துவர் வாய்க் கொண்டு
என்னாகத் திரிதந்து ஈங்கு இருகை
ஏற்றிட உண்ட ஏழையேன் நான்
பொன் ஆகத்து அடியேனைப் புகப்
பெய்து பொருட்படுத்த ஆரூரரை
என் ஆகத்து இருத்தாதே ஏதன்
போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே”
என்று வருந்துகின்றவர்,
சிவபெருமானின் அருளைப் பெற
வம்மின், வம்மின், பணிமின், பணிமின். தொழுமின், தொழுமின் என்று பல முறையும் பற்பல பாடல்களில் கூறுகிறார்.
தன் அனுபவத்தைக் கூறி நம்மை நல் வழிப்படுத்த அவர் பாடி அறைகூவல் விடுக்கும் பாங்கு நம்மை நெகிழ வைக்கிறது.
அப்பரின் அனுபவ வாக்கால், அதில் இருக்கும் சத்திய ஒளியால், அவர் அதில் குழைத்துத் தரும் சிவபக்தியால் சிவனின் அருளைப் பெற முயல்கிறோம்.
4
இங்கு நாம் பார்க்கும் மூவரிடமும் அனுபவம் பேசுகிறது. அதை உண்மையில் குழைத்துத் தரும் போது நாம் சற்று பிரமித்து உண்மையை உணரத் தலைப்படுகிறோம்.
கண்ணதாசன் திராவிட மாயையில் சிக்கிச் சீரழிந்தார். சீரழிக்கப்பட்டார்.
‘தமிழா, ஜாக்கிரதை மோசம் போய் விடுவாய்; அவர்களை கனவிலும் நினைக்காதே’ என்று நமக்கு விழிப்புணர்ச்சி ஊட்டுகிறார்.
அவர்களின் கள்ள விளையாட்டை எல்லாம் தனது கவிதையிலும், கட்டுரையிலும், கதையிலும் கூறி நம்மை எச்சரித்தார்.
கண்ணதாசனின் கதறல் அர்த்தமுள்ள கதறலாக மிளிர்ந்தது.
அருணகிரிநாதர் தன் அனுபவத்தைக் கூறி வேசையரைத் திட்டித் தன் இழிந்த வாழ்க்கையையும் சுட்டிக் காட்டி நம்மை எச்சரித்துக் காக்கிறார்.
அவரது புலம்பல் பொருள் பொதிந்த புலம்பல் ஆயிற்று.
அடுத்து அப்பர் பிரான் தன் வாழ்வின் முக்கியமான இளமைக் காலத்தில் கூடாதோருடன் சேர்ந்து கூத்தடித்தேனே என்று வருந்திக் கூறி, எழுமின், வம்மின், சிவனைத் தொழுமின் என்று அறைகூவல் விடுக்கும் போது அவரது சொல்லெல்லாம் பொருள் பொதிந்த அருள் சொல்லாக ஒளிர்கிறது.
அவரது அறைகூவல் அர்த்தமுள்ள ‘சிவன்கூவலாக’ மிளிர்கிறது.
கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின் புலம்பலும், அப்பரின் அறைகூவலும் அனுபவத்தின் விளைவு.
அதைப் பற்றி, காஞ்சிப் பெரியவர் கூறியது சத்திய வாக்கு.
சாதாரணமாக சாசுவத உண்மைகளை எவ்வளவு பெரியவர் கூறினாலும், அதற்கான மதிப்பை விட, அதை அனுபவப்பட்டோர் தம் அனுபவத்துடன் குழைத்துக் கொடுத்தால் அதன் மதிப்பே தனி தான்.
இது தான் உண்மை. அன்றும் என்றும்.
அப்பரின் காலமானாலும் சரி, அருணகிரிநாதரின் காலமானாலும் சரி, கவியரசு கண்ணதாசனின் காலமானாலும் சரி அதுவே உண்மை!
அவர்களின் அனுபவத்தால் நமது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம், இல்லையா!
****