கண்ணன் கூறும் 26 தெய்வீக குணங்கள்

hiding krishna

Post No 727; Dated 30th November,2013

by london swaminathan

பகவத் கீதையில், ஞானிகளின் குணங்களை மூன்றே ஸ்லோகங்களில் (16– ஸ்லோகம் 1 முதல் 3) கண்ணன் பட்டியல் போட்டுத் தந்து விடுகிறான். பல ‘ஆனந்தா’-க்களையும், ‘சுவாமிஜி’-க்களையும் தரிசிப்போர் இதை ‘செக் லிஸ்டாகப்’ (Check List) பயன் படுத்தலாம். இந்த உரை கல்லில் அந்த சாமியார்களை உரசிப் பாருங்கள். அவர்கள் பத்தரை மாத்துத் தங்கமா, பம்மாத்துப் பேர்வழிகளா என்று விளங்கி விடும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 26 குணங்கள் இருந்தால் ‘சாமி’; இல்லாவிடில் வெறும் ‘ஆசாமி’!!!

இதோ கிருஷ்ண பரமாத்மா கொடுக்கும் பட்டியல்:

1.அச்சமின்மை (அபயம்)
2.மனத் தூய்மை (சத்வ சம்சுத்தி:)
3.ஞானத்திலும் யோகத்திலும் நிலைபெறுதல் (ஞான யோக வ்யவஸ்திதி)
4.தானம் (தேவையானோருக்கு பொருளுதவி)
5.ஐம்புலனடக்கம் (தம:)
6. வேள்வி செய்தல் (யஜ்ஞ:, இது ஞான வேள்வியாகவும் இருக்கலாம்)
7.சாத்திரங்களை ஓதுதல் (ஸ்வாத்யாய:, இது தேவாரம் திவ்வியப் பிரபந்தம் முதலியனவாகவும் இருக்கலாம்)
8.தவம் (தப:)
9.நேர்மை (ஆர்ஜவம்)
10. உயிர்களுக்கு மனம்,மொழி,மெய்யால் தீங்கு செய்யாமை (அஹிம்சை)
11.உண்மை (சத்யம்)
12.சினமின்மை (அக்ரோத:)
13.துறவு (த்யாகம்)
14.அமைதி (சாந்தி)
15.கோள் சொல்லாமை (அபைசுனம், No Gossip Policy)
16.உயிர்களிடத்தில் அன்பு (பூதேஷு தயா)
17.பிறர் பொருள் நயவாமை ( அலோலுப்த்வம்)
18.மிருதுதன்மை (மார்தவம், அடாவடிப்போக்கு இன்மை)
19.நாணம் (ஹ்ரீ:, தீய செயல்களுக்கும் தன்னைப் புகழ்வதற்கும் வெட்கம்)
20.மன உறுதி (அசாபலம்)
21.தைரியம், துணிவு (தேஜ:)
22. பிறர் குற்றம் பொறுத்தல் (க்ஷமா)
23. மனம் தளராமை, செயலில் பிடிப்பு (த்ருதி/ திட உறுதி)
24.சுத்தம் (சௌசம்)
25.வஞ்சனை இன்மை (அத்ரோஹ:)
26. செருக்கின்மை ( ந அதிமானிதா )

flute krishna

இந்த மூன்று ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்வது நல்லது. நாள்தோறும் இறைவனிடம் இந்த 26 குணங்களையும் அருளும்படி பிரார்த்திக்கலாம். இதோ மூன்று ஸ்லோகங்கள்:

அபயம் ஸத்வஸம்சுத்திர் ஜ்ஞான யோக வ்யவஸ்திதி:
தானம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ் தப ஆர்ஜவம் (16-1)

அஹிம்ஸா ஸத்யம க்ரோதஸ் த்யாக: சாந்தி ரபைசுனம்
தயா பூதேஷ் வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீ ரசாபலம் (16-2)

தேஜ: க்ஷமா த்ருதி: சௌச மத்ரோஹோ நாதிமானிதா
பவந்தி ஸம்பதம் தைவீ மபிஜாதஸ்ய பாரத (16-3)

எனது முந்தைய கீதைக் கட்டுரைகள்:
Read also my earlier posts:

1).One Minute Bhagavad Gita
2). Bhagavad Gita through a Story
3).Bhagavad Gita in Tabular Columns
4). 45 commentaries on Bhagavad Gita
5). G for Ganga….. Gayatri…… Gita…. Govinda…
6).A to Z of Bhgavad Gita (Part 1 and Part 2)