மூன்று புகழ்பெற்ற பிரிவுபசார உரைகள்

namaskar

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.- 1028; தேதி 8 மே 2014

உலக இலக்கியங்களில் வேறு எங்கும் இல்லாத அற்புதமான பிரிவுபசார உரைகள் சம்ஸ்கிருத இலக்கியங்களில் உள்ளன. உலகில் ஒரு இனத்தின் பெயரில் இல்லாத பழைய மொழி சம்ஸ்கிருதம்.. ஆகவே, அதிலுள்ள விஷயங்களும் உலகத்திற்கே சொந்தம்.

ராமாயணத்தில் ராமனுக்கு கௌசல்யா அளித்த பிரிவுபசாரச் சொற்பொழிவும், சகுந்தலைக்கு வளர்ப்புத் தந்தையான கண்வ மகரிஷி வழங்கிய பிரிவுபசார புத்திமதியும், வேதக் கல்வியை முடித்து வீடு திரும்பும் மாணவருக்கு மகரிஷிகள் வழங்கிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவும் ஆழமான பொருள் பொதிந்தவை. இந்த முத்தான– சத்தான சொற்பொழிவுகளில் உள்ள விஷயங்கள் எக்காலத்துக்கும் பொருந்தும். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் மற்றவர்கள் நாகரீக முதிர்ச்சியடையும் முன்னரே நாம் எந்த அளவுக்கு அறிவில் முதிர்ச்சி பெற்றிருந்தோம் என்பதையும் இவை காட்டும். ஏனெனில் இந்த மூன்று உரைகளும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை. அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியவை.
முதலில் தைத்திரீய உபநிஷத்தில் வரும் ஆசிரியர் பிரிவுபசார உரை. இது ஒருபட்டமளிப்பு விழா உரை போன்றது:

“உண்மையே பேசு; கடமையைச் செய்.
வேதங்களைப் புறக்கனிக்காமல் தொடந்து படி;
ஆசியருடன் வாழ்ந்த காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
(வீட்டிற்குச் சென்று) –திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வாழ்க.
உண்மயிலிருந்தும் தர்மத்திலிருந்தும் கொஞ்சமும் பிறழாதே
சமூகம் பயன்பெற ஏதேனும் (தொழில்) செய்.
சாதனைகள் புரிக. கற்றதை மறந்துவிடாதே; திரும்பத் திரும்ப நினைவு கூறு.
கடவுளையும் முன்னோர்களையும் நினைவில் வை.

girl is paying respect to her dad.

தந்தை தாய், ஆசிரியர் கடவுள்
தாயை மதித்திடு. கடவுளாக வணங்கு.
தந்தையை மதித்திடு. கடவுளாக வணங்கு.
உனது குருவையும் கடவுளாக வணங்கு.
விருந்தினரை உபசரி. உன்னைப் பரிசோதிக்க கடவுளே வந்திருப்பதாக எண்ணு.
நல்லது, கெட்டது எது என்று பகுத்தறி. கெட்டதை உதறு.
எப்போதும் நல்லதே செய்.

உன் ஆசிரியர் இடத்தில் எது எது நல்லதோ அதைப் பின்பற்று; மற்றதை மற.
இதுநாள் வரை நீ வாழ்ந்த உன் குருவை விடப் பெரிய ஆட்களைச் சந்திக்கப் போகிறாய்.
அவர்களுக்கு உரிய மரியாதை செய். (Taittiriya Upanishad 1-11)

இந்த அற்புதமான உரைக்குப் பின் குருவுக்கு சிஷ்யன் குருதட்சிணை வழங்குவான். ஏகலைவன், தனது கட்டை விரலையே காணிக்கையாகச் செலுத்தினான். அர்ஜுனனோவெனில் குருவின் எதிரியான பஞ்சாப் அரசனையே தேர்ச் சக்கரத்தில் கட்டி இழுத்து வந்து குருவின் காலடியில் சமர்ப்பித்தான். குருவுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காத மாணவர்கள்!

3000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த உரை இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

Shakuntala-Raja-Ravi-Varma

கண்வ மகரிஷி பேருரை

உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன்–அவனுடைய ஏழு நூல்களையும் பயிலாதவர்கள் பாரத கலாசாரம் பற்றிப் பேசும் தகுதியை இழந்துவிடுவர். எப்படி ஒருவர் சங்க இலக்கியம் படிக்காமல் இந்தியப் பண்பாடு பற்றிப் பேசமுடியாதோ அப்படி காளிதாசன். அவன் எழுதிய நாடகங்களில் உலகமே போற்றி வியந்த நாடக நூல் சாகுந்தலம். அதில் சகுந்தலை என்னும் அழகி உலகம் அறியாத அப்பாவிப் பெண். காட்டிலுள்ள முல்லைக் கொடியும் மரம் செடி கொடிகளும் ஆஸ்ரமத்தில் வளரும் கிளிகளும் மான்களும் அவளுடைய சகோதர சகோதரிகள். பறவைகள் சாப்பிடாவிட்டால் சாப்பிடமாட்டாத பருவ மங்கை. அவரைப் பறவைகள் (சகுன) வளர்த்ததால் அவளுக்கு சகுந்தலை என்று பெயர். இதோ அவள் கணவன் வீட்டுக்குப் (அரசனின் அரண்மனை) போவதற்கு முன், வளர்ப்புத் தந்தை கண்வர் சொன்னது:

“என் அன்பு மகளே. உன் கணவன் வீட்டுக்குச் செல்லப் போகிறாய். அங்கே:-
உன்னை விட வயதில் மூத்த பெரியோருடன் கவனமாகப் பழகி, அவர்களுக்குச் சேவை செய். அரசனின் சக மனைவிகள் இடத்தில் நட்போடு வாழ். கணவன் உனக்கு ஏதேனும் கஷ்டம் கொடுத்தாலும் கோபத்தில் எதையும் சொல்லிவிடாதே. நீ யார் யாருக்குச் சேவை செய்கிறாயோ அவர்களுக்கு எல்லா மரியாதைகளும் கொடு. செல்வத்திலும் சுக போகங்களிலும் வாழப் போகும் நீ அகந்தையும் தலைக்கனமும் ஏறாமல் பார்த்துக்கொள். அப்படி வாழ்ந்தால்தான் பெண்கள் இல்லத்தரசி என்ற பெயர் எடுப்பர். இதற்கு மாறாக நடப்பவர்கள் குலத்தைக் கெடுக்கவந்த கோடாரி என்று பெயர் எடுப்பர்.” (சாகுந்தலம், காட்சி 4)

இதையெல்லாம் சொல்லி முடித்த பின், வயதில் மூத்த ஞானத்தில் முதிர்ந்த மகரிஷி கண்வர், தன் மனைவி இருக்கும் திசையைப் பார்த்து, “அன்பே நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்கிறார். அவள் உடனே, “ஒரு மணப் பெண்ணுக்கு இது அருமையான புத்திமதி. அன்பு மகளே, எப்போதும் இதை நினைவில் வைத்துக்கொள்” என்கிறார்.

காளிதாசன் உலக மகா கவிஞன் மட்டுமல்ல. பெரிய சைகாலஜிஸ்ட்= உளவியல் நிபுணன். ஒரு பெண்ணின் வாயால் இது எல்லாம் சரி என்று சொன்னால்தான் மற்றொரு பெண் நம்புவாள். இல்லை என்றால் இந்த ஆண்களுக்கு என்ன தெரியப் போகிறது என்று நினைத்து விடுவார்கள். அது மட்டுமல்ல. பெண்கள் என்றாலேயே அம்மாவின் கருத்தே முதலில் நிற்கும். அவளுக்கு அதிகாரம் அதிகம். அந்த முறையிலும் மனைவி கருத்தைக் கேட்கிறார் மகரிஷி கண்வர். இதற்குப் பின், பல சுவையான கட்டங்கள் வருகின்றன. கட்டுரைக்குத் தொடர்பில்லாத விஷயம் என்பதால் அடுத்த பேருரையைப் பார்ப்போம்.

ram sita

ராமனுக்கு கௌசல்யா வழங்கும் பிரிவுபசாரம்

“ராமா, காட்டுக்குப் போகாதே என்று சொன்னாலும் நீ கேட்கப் போவதில்லை. போ. ஆனால் சீக்கிரம் திரும்பி வா. எந்த தருமத்தை இத்தனை காலம் காத்தாயோ அதுவே உன்னை ரட்சிக்கும். நாள் தவறாமல் கோவிலுக்குப் போய் கும்பிட்டாயே அந்த தெய்வங்கள் உன்னைப் பாதுகாக்கும். நல்லோர் சென்ற பாதையிலேயே செல்வாயாக விஸ்வாமித்ர மஹரிஷி கொடுத்த ஆயுதங்கள் உன்னைப் பாதுகாக்கும். நீ அப்பாவுக்குக் காட்டிய பணிவும், கீழ்ப்படிதலும் அம்மாவுக்குக் கொடுத்த மரியாதையும் உன்னை நீடுழி வாழ வைக்கும். சந்தோஷமாக இரு. கடவுளை தியானித்து மகிழ்ச்சியாக இரு. காட்டில் விஷ ஜந்துக்களும் கொடிய மிருகங்களும் உலாவும். அவைகளிடமிருந்து ஒரு தீங்கும் வராமல் இருக்க என் ஆசீர்வாதங்கள். ராக்ஷசர்களும் பிசாசுகளும் உலவும் இடம் இருண்ட கானகம். ஜாக்கிரதையாக இரு.
(அயோத்யா காண்டம், அத்தியாயம் 25,வால்மீகி ராமாயணம்)

இதன் பிறகு கௌசல்யா உலகிலுள்ள எல்லா இந்து தெய்வங்களின் பெயரையும் வரிசையாக சொல்லி வாழ்த்துகிறாள். பருவங்கள், நாட்கள், மாதங்கள், பறவைகள், மிருகங்கள், தாவரங்கள் என்று எல்லா பெயர்களையும் சொல்லி வேண்டுகிறாள்.

காளிதாசனின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு. இதற்குச் சங்க இலக்கியத்தில் காணப்படும் 200க்கும் அதிகமான அவனது உவமைகளே சான்று என்று ஏற்கனவே பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். இத்துடன் கௌசல்யாவின் பிரிவுபசாரத்தை ஒப்பிடுகையில் வால்மீகி ராமாயணம், காளிதாசனுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதப் பட்டிருக்கவேண்டும். அவ்வளவு பழைய ‘ஸ்டைலில்’ எழுதி இருக்கிறார் வால்மீகி.

abivadayae

இந்த மூன்று பேருரைகளும், இந்தியர்களை என்றும் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யும். ஏனெனில் மூன்றும் சத்தியத்தை அடிப்படையாக உடையவை!

contact swami_48@yahoo.com