நாய்க் காசு
Article No.1756; Date:- 29 March, 2015
Written by London Swaminathan
Uploaded at London time 15-00 (GMT 14-00)
From today clocks go one hour forward in the UK.
பழமொழிக் கதை!
ஆதாரம்: விவேக சிந்தாமணி, சென்னை சி.வி. சாமிநாத அய்யர் நடத்திய மாதப் பத்திரிக்கை, மே மாதம்- 1900—ஆம் ஆண்டு
லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்து வெளியான பழைய பத்திரிக்கைகளைப் புரட்டிப் பார்த்ததில் சில சுவையான கதைகள் கிடைத்தன. எனது சொந்த நடையில் சுருக்கமாக ஒன்றைச் சொல்லுகிறேன்
ஒரு ஊரில் ஒரு அம்மையார் தனிமையில் வாழ்ந்தார். கணவரும் இல்லை- குழந்தைகளும் கிடையாது. ஆனால் அன்பாக ஒரு நாயை வளர்த்து வந்தார். பல வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுப்பார். முதலில் நாய்க்கு உணவு படைத்துவிட்டு தானும் சாப்பிடுவார்.
பிச்சை எடுக்கும் நாய் படம்
ஒரு நாள், அந்த நாய் மிகவும் அதி காலையில் எழுந்து பசிக்கிறது, அம்மா! சோறு போடுங்கள் என்றது. அவள் வீட்டிலோ அரிசியோ தானியமோ இல்லை. நாய் சொன்னது, அம்மா! அடுத்த வீட்டு அம்மணியிடம் அரிசி கடன் வாங்குங்கள். நான் சாப்பிட்ட உடனே போய் பிச்சை வாங்கி வருகிறேன். அந்த அரிசியை அவரிடம் இன்றே கொடுத்து விடலாம்.
அவளும் அப்படியே செய்தாள். நாயும் சொன்னபடியே சாப்பிட்டு விட்டு வாயில் பிச்சைப் பாத்திரத்தைக் கவ்விக் கொண்டு வீடு வீடாகச் சென்றது. எல்லோருக்கும் ஒரே அதிசயம். வழக்கமாகப் போடும் பிச்சையைவிட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாகவே பிச்சை இட்டனர். அது எடை தாங்காமல், பக்கத்திலுள்ள செட்டியார் கடையில் கொடுத்தவுடன் அவர் அதற்கான பணம் கொடுத்தார். நாய் மீண்டும் ஒரு ரவுண்டு போனது.
பக்கத்தில் வாரச் சந்தை (மார்க்கெட்) கூடி இருந்தது. ஒரே கூட்டம். நாயும் பிச்சைப் பாத்திரத்துடன் சென்றவுடன் மக்கள் எல்லோரும் அதிசயமாக அதைப் பார்த்துவிட்டு, காசை அள்ளி வீசினார்கள். நாய் அதைத் தூக்க முடியாமல் சுமந்து சென்றது. சந்தையில் ஒரு ஓரத்தில் மக்கள் கூட்டமாக நின்று ராமாயண கதாகாலேட்சபம் ஒன்றை ரசித்துக் கொண்டிருந்தனர். அன்று அவர் சொன்ன கதை — சீதாப் பிராட்டியிடம் அனுமன் மோதிரம் கொடுத்துவிட்டு அவள் கொடுத்த சூளாமணியை வாங்கிச் செல்லும் கட்டம். இது போன்ற தருணத்தில் எல்லோரும் பாகவதருக்கு மோதிர, நகைகள் வாங்கித் தருவர். அது முடியாதவர், அவர் தட்டில் காசு போடுவர்.
கும்பிடு போடும் நாய்
இதை எல்லாம் வேடிக்கை பார்த்த நாய் , கதை கேட்ட உற்சாகத்தில், தனது பிச்சைப் பாத்திரத்தில் இருந்த பணம், தானியம், எல்லா வற்றையும் ராமாயண பாகவதர் தட்டில் கொட்டியது. எல்லோரும் கைதட்டி ஆரவாரித்து நாயின் பக்தியைப் பாராட்டினர்.
இதற்குள் எஜமானி அம்மா வீட்டில் பலரும் நாயின் புகழைப் பாடிக் கொண்டிருந்தனர். அடீ! இனிமேல் உனக்கு ஒரு குறையும் இராது. உனது நாய் ஒரு வருஷத்துக்கான பத்தைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அடியே! இனிமேல் உன் நாயையே பிச்சைக்கு அனுப்பு. நீ பணக்காரி ஆகிவிடுவாய்.
இப்படி எல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது நாய் வாலைக் குழைத்துக் கொண்டு ஆவலுடன் வந்தது. அவளும் மிக ஆசையோடு நாயை வரவேற்று உபசார மொழிகள் கூறி என்ன இது? பிச்சைப் பாத்திரம் காலியாக இருக்கிறது? என்று கோபத்தோடு கேட்டாள். நாய், தான் கதை கேட்ட விஷயத்தையும் எல்லோரைப் போலத் தானும் பாகவதருக்கே எல்லாவற்றையும் தானம் கொடுத்ததாகவும் பெருமையாகச் சொன்னது.
அவளுக்கிருந்த கோபம் பெரிதாக வெடித்தது. நாயைக் கண்டபடி திட்டி, கதை கேட்ட நாயைச் செருப்பால அடி – என்று சொல்லி நாலு அடிபோட்டாள். நாய் வெளியே ஓடிப் போய்விட்டது.
இதுதான் தமிழில் “கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி” – என்ற பழமொழிக்குக் காரணமாம்!
நாய் படங்கள்
You must be logged in to post a comment.