சாணக்யன் சொன்ன பெண்மணி கதை (Post No.4512)

WRITTEN by London Swaminathan 

 

Date: 18 DECEMBER 2017 

 

Time uploaded in London-  18-34

 

 

Post No. 4512

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பெண்களைத் தவறான எண்ணதுடன் நெருங்கும் ஆண்களுக்கு, பெண்கள் பலவகைகளில் பதில் சொல்லுவர். சில நேரங்களில், அவர்கள் குறிப்பால் உணர்த்துவர். இன்னும் சில நேரங்களில் நேரடியாகவே சொல்லுவர். இதெல்லாம் பழங்கால இந்தியாவில்.இப்போதெல்லாம் இதற்குத் தேவையே இல்லை; முதலில் எச்சரிப்பர்; அத்துமீறினால் காலில் போட்டிருப்பதைக் கையில் எடுத்துக் காட்டுவர்; தேவையானல் போலீஸாரையும் அழைப்பர். அந்தக் காலத்திலோ ஆண்களுக்கு முன் நிற்கவே கூசிய பெண்கள் பேசா மடந்தைகளாக இருந்தனர். இருந்த போதிலும் அழகாக எண்ண

த்தைத் தெரிவித்தனர். இதை விளக்க சாணக்ய நீதியின் ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டுகிறேன்.

 

சாணக்கிய நீதி நூலின் 17 ஆவது அத்தியாயத்தில் கடைசி ஸ்லோகம் இதோ:

 

அதஹ பஸ்யஸி பாலே பதிதம் தவ கிம் புவி

ரே ரே மூர்க்க ந ஜானாஸி கதம் தாருண்ய மௌக்திகம்

பொருள்:

ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைப் பார்த்த ஒரு இளைஞன், அவளை வசப்படுத்த எண்ணினான். நடுத்தர வயது என்று அவள் ‘முகத்தில் எழுதி ஒட்டியிருந்தபோதிலும்’, புன்னகைத்த முகத்துடன் அவளை அழைத்தான்.

 

” ஓ இளம் பெண்ணரசியே, எதையோ தேடுகிறாய் போலும்? எதைக் குனிந்து பார்த்துக்கொண்டு தேடுகிறீர்கள்?” என்றான்

அவளுக்கு இவன் எண்ணம் புரிந்தது. உடனே நேரடியாகவே பதில் சொல்லிவிட்டாள்.

“ஆமாம், அன்பரே! என்னுடைய இளமை என்னும் முத்து உதிர்ந்துவிட்டது அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்”- என்றாள்.

 

இளைஞனுக்குப் புரிந்தது; ஏமாற்றத்துடன் திரும்பினான்.

 

xxxx

இதே போல பிராக்ருத மொழியில் உள்ள காதா சப்த சதியில் ஒரு ஸ்லோகம் உள்ளது. புது மணத் தம்பதிகள் புகுந்த வீட்டில் குடியேறினர். அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பம். எல்லோரும் சேர்ந்து வாழ்ந்தனர். புதுக் கணவன் வணிகம் காரணமாக வெளியூர் செல்ல நேரிட்டது.

 

 

 

 

புதுமணப் பெண்ணை, புகுந்த வீட்டில் கொழுந்தன் ஒருவிதமான பார்வையில் பார்த்தான். அதை எப்படி கண்டிப்பது அல்லது நிறுத்துவது என்று தவியாகத் தவித்தாள்.  அதைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கஷ்  டப்பட்டாள். கணவனிடம் சொன்னாலோ குடும்ப உறவுகள் பாதிக்கப்படுமே என்று அஞ்சினாள்.

 

நல்ல வேளையாக அந்த வீட்டுச் சுவரில் ஒரு ராமாயண ஓவியம் இருந்தது. இந்தக் காலத்தில் நாம் காலண்டர் அல்லது ஓவியங்களை கண்ணாடி போட்டுச் சுவரில் மாட்டிவைக்கிறோம்; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லார் வீட்டுச் சுவரிலும் தெய்வத்தின் படங்கள் வரையப்பட்டிருந்ததை சங்கத் தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. அது போல இந்த வீட்டில் ராமனும் லெட்சுமணனும் சீதையும் காட்டில் செல்லும் காட்சி வரையப்பட்டிருந்தது.

 

லெட்சுமணன், அண்ணன் மனைவியான சீதையின்  முகத்தைக் கூடப் பார்க்க மாட்டான்.அவள் காலில் அணிந்திருந்த மெட்டி மட்டுமே அவனுக்குத் தெரியும். அந்தப் படத்தைக் காட்டி அவள் லெட்சுமணனின் பெருமையை கதை சொல்லுவது போலச் சொல்லுகிறாள். இலட்சுமணன் போல அண்ணியை நீயும் தாயாக மதிக்க வேண்டும் என்று சொல்லாமற் சொன்னாள்.

 

இதைச் சொல்லும் பிராக்ருத மொழி ஸ்லோகத்தை மு.கு.ஜகந்நாத ராஜா அழகாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது சாலிவாஹநன் என்ற மன்னன் எழுதியது:

கோதுறு மனமுடைக் கொழுந்தனை நோக்கி

மாதவள் தினமும் போதனை செய்தாள்

இராமனுடன் செலும் இலக்குவன் சரிதம்

சுவரில் வரைந்த சுடரோவியத்தே

–சாலிவாஹனன் (ஹாலன்) 1-35, காதா சப்த சதி

 

கோது= குற்றம்

 

எங்கள் மதுரையில் அந்தக் காலத்தில் கணவன் பெயரைக்கூட பெண்கள் சொல்ல மாட்டார்கள். கணவன் பெயர் சொக்கன் , சுந்தரம், சுந்தரேஸ்வரன் என்றிருந்தால், ‘அதான் இந்த ஊர்க்கடவுள் பெயர்’ என்பார்கள். ராமன், கிருஷ்ணன் என்றிருந்தால் சுவற்றில் மாட்டி இருக்கும் படத்தைக் காண்பிப்பாள் அல்லது சுற்றி வளைத்து ஏதேனும் ஒரு வகையில் விளங்க வைத்துவிடுவாள்.

பெண்கள் கெட்டிக்காரிகள்!

 

–சுபம்—

 

தீர்கதமஸ் பற்றிய சுவையான கதைகள் (Post No.4455)

Written by London Swaminathan 

 

Date: 3 DECEMBER 2017 

 

Time uploaded in London-  13-25

 

 

Post No. 4455

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தீர்கதமஸ் ஒரு ரிக்வேத கால ரிஷி. கண் பார்வையற்றவர். குருட்டுக் கவிஞர்களில் புகழ் பெற்றவர் இலியட், ஆடிஸி காவியங்களை எழுதிய கிரேக்க மஹாகவி ஹோமர். ஆனால் ஹோமருக்கும் முன்னால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தீர்கதமஸ் ஹோமர் முதலிய அந்தகக் கவிகளைப் பந்தாடிவிட்டார். தீர்கதமஸின் கவிதைகள் ரிக் வேதத்தின் — உலகின் பழமையான நூலின் — முதல் மண்டலத்தில் உள. அவர் ‘கண்டுபிடித்த’ மிக நீண்ட கவி ரிக் வேதப் பாடல் எண் 1-164.  ரிஷிகள் மந்திரங்களை இயற்றுவதில்லை கவிகளைப் புனைவதில்லை. அவர்கள் வானத்தில் மிதக்கும் ஒலிகளைக் கிரஹித்து நமக்கு வழங்குவதால் அவர்களை ‘மந்த்ர த்ருஷ்டா’ என்பார்கள். அதாவது மந்திரத்தைப் பார்த்தவர்கள்; ஞானக் கண்களல் கண்டுபிடித்தவர்கள்; காதால் கேட்டவர்கள்; இதனால்தான் திருவள்ளுவரும் அவருக்கு முந்தைய சங்கத் தமிழ்ப் புலவர்களும் “கேள்வி” என்பர்; காதால் கேட்டது ‘ச்ருதி’= ‘கேள்வி’. நிற்க

இவருடைய பெயரின் பொருள்- நீண்ட இருள்

இவர் தாயின் பெயர் மமதா

தந்தையின் பெயர் உசத்யா

ஆனால் இவர் சத்யகாம ஜாபாலா போல தாயின் பெயர் கொண்டு ‘தீர்கதமஸ் மாமதேய’ என்றே அழைக்கபட்டார். அதுவும் புதிரானதே.

சில நேரங்களில் தந்தையின் பெயரால் ‘தீர்கதமஸ் ஔசத்ய’ என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் பற்றிய செய்திகள் ரிக் வேதத்திலும் சாங்காயன ஆரண்யகத்திலும் காணப்படும். இவர் நூறு ஆண்டுகள்  வாழ்ந்ததாக அவை செப்பும்.

 

 

 

தீர்கதமஸின் 1-164 கவி அறிஞர்களைத் திணறடித்துவிட்டது. 52 கண்ணிகளில் எண்களை வைத்து விளையாடிவிட்டார். இவருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவதரித்த திருமூலர், சிவ வாக்கியர், திருமழிசை ஆழ்வார் ஆகியோரும் எண்களைக் கொண்டு கவிபாடினர். இதற்குப் பலவிதமான பொருள்களைக் கற்பிக்க முடியுமாதலால் அவை  சுவை உடைத்து.

 

இந்தியாவுக்குப் பெயர் கொடுத்த – ‘பாரதம்’ என்று பெயர் கொடுத்த – பரத மாமன்னனுக்கு இவர் புரோஹிதர் என்றும் ஐதரேய பிராம ணம் பகரும்.

பிருஹத் தேவதா என்னும் நூல் இவர் பற்றிய செய்திகளை மொழியும். இவர் கண் பார்வையில்லாமல் பிறந்து பிற்காலத்தில் பார்வை பெற்றாராம்.

வயது முதிர்ந்த காலத்தில் இவரை த்ரைதன என்பவன் தாக்கினானாம். ஆனால் அவன் தற்கொலை செய்து கொண்டான். இவரை ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டனர். அங்க தேசத்தில் இவரை ஆற்றிலிருந்து வெளியே எடுத்துக் காப்பாற்றினர். அங்கு ஒரு அடிமைப் பெண்ணை மணம் புரிந்தார். கக்ஷிவந்த் என்ற மகனை ஈன்றெடுத்தார். அவனும் மாபெரும் கவிஞன் ஆனான்.

 

இனி மஹாபரதத்தில் இவர் பற்றி  காணப்படும் செய்திகளைக் காண்போம்.

 

ஆதி பர்வத்தில் இவர் முற்காலத்திய ரிஷி என்று சொல்லப்படுவதால் இவர் மஹாபாரதத்துக்கு மிகவும் முன்னால் வாழ்ந்தவர் என்பது தெளியப்படும்.

 

பிராமணர்களான மமதாவுக்கும் உதத்யனுக்கும் பிறந்தவர் இவர் என மஹாபாரதம் உரைக்கும்.

ஒரு விநோதக் கதை இதோ:-

மமதா கர்ப்பிணியாக இருந்தபோது உதத்யனின் தம்பி பிருஹஸ்பதி அவளைப் பலவந்தப்படுத்தினார். உள்ளே இருந்த குழந்தை இன்னும் ஒரு வித்துக்கு கர்ப்பப்பையில் இடமிலை என்று அறிவித்தது. அப்படியும் பிருஹஸ்பதி பலவந்தம் செய்யவே புதிய விதையை, மமதாவின் உள்ளே இருந்த குழந்தை வெளியே தள்ளியது. உடனே சிற்றப்பன் பிருஹஸ்பதி ஒரு சாபம் போட்டார். மமதாவின் கர்ப்பத்தில் உள்ள குழந்தை குருடாகப் பிறக்கட்டும் என்று சபித்தார். இதுவே தீர்க தமஸ் கண் பார்வை இழந்த கதை.

 

(என் கருத்து: ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஒருவர் பலவந்தப்படுத்தினால் அந்த அதிர்ச்சியால், குழந்தை ஊனமாகப் பிறக்க வாய்ப்பு உண்டு என்பதை நவீன அறிவியலும் ஏற்கிறது)

 

காலப்போக்கில் அவர் கவி புனையும் ஆற்றலைப் பெற்றார். பிரத்வேஷி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார். ஐந்து குழந்தைகளைப் பெற்றார்.மூத்த மகனுக்கு கவுதமன் என்பது திரு நாமம். சில முனிவர்களுக்குக் குருட்டுக் கவிஞன் தங்களிடையே இருப்பது பிடிக்காததால் மனைவி பிரத்வேஷியையும் மகன்களையும் தூண்டிவிட்டனர். பிரத்வேஷியும் இந்த வயதான கிழவரைக் கவனிக்க என்னால் இனிமேல் முடியாது என்று அவரை ஒரு படகில் கட்டி கங்கை ஆற்றில் மிதக்கவிட்டனர்.

 

பலிராஜன் என்ற மன்னன் கங்கை நதியில் குளிக்க வந்தபோது படகில் ஒரு கண் பார்வையற்றவர் இருப்பதைக் கண்டு அவரை விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

 

அவருடைய பூர்வ கதைகளைக் கேட்ட மன்னன் தன் மனைவி சுதேஷ்னாவுடன் படுத்டு ஒரு குழந்தையைப் பெற்றுத் தரும்படி வேண்டுகிறான். ஒரு மன்னனுக்கு வாரிசு இல்லாவிடில் பிராமண முனிவர்களை அணுகி குழந்தைப் பெற்றுக் கொடுக்கும்படி வேண்டுவது அக்கால வழக்கம்.

ஆனால் இவரிடம் படுக்க மனம் இல்லாத மஹாராணி, தனது தோழிகளில் ஒருவரை அனுப்பி வைத்தார். 11 குழந்தைகள் பிறந்ததாகவும் அவர்களில் ஒருவர்தான் கக்ஷிவன ரிஷி என்றும் மஹாபாரதம் இயம்பும். அவர்கள் அனைவரும் தன்னுடைய குழந்தைகளா என்று மன்னன் வினவ, தீர்க தமஸ் உண்மையைச் சொன்னார். பின்னர் மன்னன் தனது மனைவியிடம் வலியுறுத்த அவர் தீர்க தமஸுடன் கூடி ஐந்து பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள்: அங்க, வங்க, கலிங்க, பன்ற, சுஹ்ய. என்ற பெபயருடைய ஒவ்வொருவரும் வெவ்வேறு வம்சத்தை ஸ்தாபித்து, நாட்டின் வெவ்வேறு பகுதிகளை ஆண்டனர்.

 

இதை சத்யவதியிடம் பீஷ்மர் கூறினார்.  விசித்ர வீர்யனுக்குக் குழந்தைகள் இல்லாததால் அவ்னுடைய மனைவியிடத்தில் பிராமணர்களைக் கொண்டு குழந்தைகளைப் பெறுவதே முறை என்று பீஷ்மர் வலியுறுத்தினார்.

 

மொத்தத்தில் பல கதைகள் சொன்னாலும் அதில் இழையோடும் கருத்துக்களை எவரும் பிடித்துக்கொள்ள முடியும்.

 

தீர்கதஸுக்குப் புகழ் அவர் சொன்ன வேத மந்திரங்களிலிருந்து வந்தது என்பதைக் கட்டுரையின் முதல் பகுதியில் விளக்கியுள்ளேன்.

 

TAGS:- தீர்கதமஸ், கதை, சுவையான

–சுபம்–

 

வேதத்தில் மரங்களின் கதை (Post No.4372)

Written by London Swaminathan 

 

Date: 6 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-36

 

 

Post No. 4372

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Sacred Tree in Varanasi/ Benares

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நியக்ரோத, உதும்பர, அஸ்வத்த என்று மூன்று மரங்களின் பெயர்கள் விஷ்ணுவின் அம்சமாக வழிபடப்படுகின்றன. மஹாபாரதத்தில் உள்ளதும், ஸ்ஹஸ்ரநாமங்களில் பழையதுமான ஒரு துதியில் மூன்று மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மர வழிபாடு வேத காலத்திலேயே உண்டு. மேலும் இந்துக்கள் ஐரோப்பாவில் குடியேறி அவர்கள் பண்பாட்டைப் பரப்பியபோது விட்டு வந்த மிச்ச சொச்சங்களை இன்றும் ஐரோப்பாவில் காணலாம். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஹாலிவுட் (ஹோலி உட் = புனித மரம்) ஹோலிஓக் (புனித ஓக் மரம்) இப்படி நூற்றுக் கணக்கான இடப் பெயர்கள் உண்டு.

 

 

2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓவிட் (Ovid) என்னும் ரோமானியப் புலவர் மரங்களுக்கு காணிக்கை செலுத்துவது, நூல் கட்டுவது, கந்தைத் துணிகள் சாத்துவது பற்றிப் பாடியுள்ளார். இந்துக்கள் இயற்கையின் எல்லா றை அம்சங்களையும் வணங்கினர். மற்ற நாடுகளில் பழைய மர வழிபாடு இலக்கியத்திலும் மியூஸியங்களிலும் மட்டும் உள்ளது. ஆனால் இந்தியாவிலோ இமயம் முதல் குமரி வரை இன்றும் மர வழிபாடு இருக்கிறது.

 

தமிழ் நாட்டின் கோவில்களில் தல விருட்சங்கள் இருப்பது போல வட இந்தியாவில் புனித க்ஷேத்ரம் முழுவதும் புனித மரங்கள் இருக்கின்றன. வேத காலத்தில் பிப்பலாடன் (அரச மரம்) என்ற பெயரில் ரிஷி முனிவர்கள் வாழ்ந்தனர். பிராமணர்கள் அரச மரக் குச்சி (ஸமித்து) இல்லாமலோ தர்ப்பைப் புல் இல்லாமலோ வாழ முடியாது– அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் குஸ ( தர்ப்பை) புல், அரச, பலாச மரங்கள் இணைந்து பிணைந்துள்ளன. ராமனின் புதல்வர்கள் இருவரில் ஒருவர் பெயருக்குக் காரணமே தர்ப்பைப் புல் (குஸ) தான்.

ஓரிரு வேதக் கதைகளைக் காண்போம்

 

பூமி, பிரஜாபதி ஆகியோரின் முடி (மயிர்) தான் தாவரங்கள் என்று சதபத பிராமணம் கூறும்; அதாவது ஒரு காலத்தில் தாவரங்களே இல்லாத பூமியில் தாவரங்கள் வளர்ந்ததை கதை போலச் சொல்லும் பகுதி இது.

 

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு- என்ற முது மொழியின்படி பூமியில் உள்ள தாவரங்கள்= மனிதனின் உடலிலுள்ள முடி

பூமியிலுள்ள ஆறுகள்= மனிதனின் உடலிலுள்ள ரத்தக் குழாய்கள்

 

–இவ்வாறு பல விளக்கங்கள் உண்டு.

 

கதை போலச் சொல்லுவதால் அதன் பின்னுள்ள மறை  பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

முக்கியமான விஷயம் என்ன வென்றால் தர்ப்பை (குஸ), தூர்வா (அருகம் புல்) உதும்பர, அஸ்வத்த, வட/ஆலம் மரங்கள் பற்றிய குறிப்புகள் வேத காலம் முதற்கொண்டே இருக்கின்றன என்பதே.

Kadamba Tree in Chir Ghat near Yamuna River

காட்டிலுள்ள தாவரங்களையும் மரத்திலுள்ள பழங்களையும் சாப்பிடலாம் என்று பிராமண நூல்கள் சொல்லும்.

 

பிதகோரஸ் என்ற கிரேக்க தத்துவ அறிஞர், அவரை (Beans) விதைகளை சாப்பிடக்கூடாது என்று தடுத்ததாகச் சொல்லுவர். இந்துக்களும் இப்படிப் பல தாவரங்களைத் தவிர்த்தனர். ரோமன் கத்தோலிக்க மதத்தினரும் , விரத காலத்தில் சில வகை உணவுகளை உண்ண மாட்டார்கள்.

 

உதும்பர என்பது அத்தி வகைத் தாவரம். இதில் செய்யப்பட்ட நாற் காலி அல்லது ஆசனத்தின் மீதமர்ந்து குளிப்பது பற்றி பல குறிப்புகள் பிராமண நூல்களில் உள.

 

உதும்பர மரம் பறிய கதை ஒன்று:–

 

தேவர்களும் அசுரர்களும் பிரம்மாவிடம் தோன்றினர். அவர்கள் அக்னியை முன் நிறுத்தி, அசுரர்களிடம் சென்றனர். அவர்கள் அக்னியை வெட்டி வீழ்த்தவே அது பூமியில் ‘க்ரிமுக’ மரம் ஆனது இதனால்தான் அது செந்நிற,,,,,தில் உளது.

 

பிரஜாபதி, முதல் யாகம் செய்தபோது அங்கிருந்து ‘வின்கங்கட’ மரம் வந்தது. அதன் மூலம் அவர் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டார்.

 

தேவர்களும் அசுரர்களும் பிரஜாபதியிடம் தோன்றினர். அவர்கள் ஒன்றாகச் செய ல்பட்ட காலத்தில் உதும்பர மரம் தவிர ஏனைய மரங்கள் எல்லாம் அசுரர் தரப்பில் நின்றன. ஆனால் தேவர்கள் வெற்றி பெற்றவுடன் எல்லா மரங்களும் தேவர் வசம் வந்தன. தோற்றுப்போன மரங்கள் எல்லாம் உதும்பர மரத்தில்  நுழைந்து கொண்டன. இதனால்தான் உதும்பர மரம் பால் வடியும் மரமாகவும் ஏராளமான பழங்கள் உடைய (அத்திப் பழம்) தாகவும் உளது.

Picture from Lalgudi Veda

இப்படிப்  பல கதைகள் சதபத, ஐதரேய பிராமனங்களில் இருக்கின்றன. அந்தக் காலத்திலேயே மரங்கள் பற்றி அக்கறை செலுத்தியதும், அதில் ஒரே இனத்தைச் சேர்ந்த (பைகஸ்  FICUS குடும்பம்) மூன்று மரங்களை விஷ்ணு சஹஸ்ரநாமம் வேதம் முதலியன குறிப்பிடுவதும் தாவர இயல் அறிவைக் காட்டும்.

 

மறை பொருள் உடைய கதைகள் என்பதால் இதன் மூலம் வேறு ஏதேனும் சொல்ல முற்பட்டனரா என்பதும் ஆராய்ச்சிக்குரியது.

 

எல்லாவற்றையும் விட முக்கியமானது—

தேவர்களும் அசுரர்களும் பிரஜாபதி என்னும் பிரம்மாவிடம் தோன்றியதாக கி.மு 1000 ஆண்டைச் சேர்ந்த பிராமண நூல்கள் கூறுவதாகும். இவைகளை  மறைத்துவிட்டு ஒரு தரப்பை பழங்குடியினர் அல்லது திராவிடர் என்று சித்தரிப்பது பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்ல வெளிநாட்டினரின் சதியாகும். சூத்திரர்களையும் கடவுளின் ஒரு பகுதி என்று ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் சொல்லும். தேவர்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள் ஆகியோர் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும் வேதம் சொல்லும்— ஆனால் இவைகளை மறைத்து அவர்களை ஆதிப் பழங்குடி போல சித்தரிப்பது விஷமிகளின் வேலை. ஆக தாவரவியல் தவிர மானுடவியலும் சமூகவியலும் இந்த நூல்களில் காணக்கிடக்கின்றன என்ப தை அறிக.

 

—சுபம்—-

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது?

IMG_7834 (2)

Written  by London swaminathan

Date: 31 October 2015.

Post No:2289

Time uploaded in London :–  10-05 AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

இதோ சில சம்ஸ்கிருதப் பழமொழிகள்:–

5b9f3dfbd232bad184e25ce9f3059f23

நகைச்சுவை நடிகர்கள், முட்டாள்கள் போல நடித்து நமக்கு அறிவூட்டினர்.

முட்டாள்களின் (அவ) லட்சணம்

தூரத: சோபதே மூர்கோ லம்பசாடபடாவ்ருத:

தூரத்திலிருந்து பார்க்கும்போது பகட்டான ஆடைகளோடு முட்டாள் பிரகாசிக்கிறான்.(பக்கத்தில் போனால் வண்டவாளம் தெரிந்துவிடும்)

அர்தோ கடோ கோஷமுபைதி நூனம்

குறைகுடம் கூத்தாடும்; நிறைகுடம் தழும்பாது (அதிகம் பேசுபவன் மூடன்)

அசுபம் வாக்யமாதத்தே புரீஷமிவ சூகர: — மஹாபாரதம்

எப்படிப் பன்றிகள் மலத்தை நாடிப் போகின்றனவோ, அது போல மூடர்கள் சொல்லத் தகாத சொற்களையே (கெட்ட வார்த்தை) நாடுவர்.

தாவஸ்ச சோபதே மூர்கோ யாவத் கிஞ்சின்ன பாஷதே – ஹிதோபதேசம்

எதுவரை மூர்கர்கள் (முட்டாள்கள்) வாயைத் திறப்பதில்லையோ அதுவரை அவர்கள் சமாளிப்பார்கள் (பேசத் துவங்கினால் யார் என்று தெரிந்து விடும்!!)

ந சோபதே சபா மத்யே ஹம்ஸ மத்யே பகோ யதா – ஹிதோபதேச/ சாணக்ய நீதி தர்பண

சபை மத்தியில் முட்டாள்கள் இருப்பதானது, அன்னப் பறவைகளின் இடையே கொக்கு நிற்பதற்குச் சமம்.

(அன்னமும் கொக்கும் வெள்ளைதான் ஆயினும் எளிதில் இனம் கண்டு விடலாம்; அது போல அறிஞர் சபையில் முட்டாள்கள் உட்கர்ந்தாலும் அவர்களை கொக்கு போலக் கண்டுபிடித்து விடலாம். வானத்தின் மீது மயிலாடக் கண்ட வான் கோழி தானும் தன் பொல்லா சிறகை விரித்தாடிய கதைதான் இது!!)

-சுபம்–

உபகுப்தர் – வாசவதத்தையின் உருக்கமான கதை

India-Bhudda-Stamp

Post No.2269

Date: 24 October 2015

Time uploaded in London: 13-12

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

பழங்கால பௌத்த மத நூலில் காணப்படும் ஒரு சுவையான உண்மைக் கதை:–

முன்னொரு காலத்தில் வட இந்தியாவில் மதுரா நகரத்தில் உபகுப்தர் என்பவர் பலசரக்கு வியாபாரம் செய்து வந்தார். அந்த ஊரில் வாசவதத்தை என்னும் ஒரு விலைமாது (வேசி) இருந்தாள். அவளுடைய வேலைக்காரி ஒரு நாள் உபகுப்தர் கடைக்கு வந்து வாசனைத் திரவியங்களை வாங்கிச் சென்றாள். உபகுப்தரின் கட்டழகைக் கண்டு வியந்து தன்னுடைய எஜமானியான வாசவதத்தையிடம் அவருடைய ரூப லாவண்யத்தை வருணித்துச் சொன்னாள். அதைக் கேட்டது முதல் வாசவதத்தையின் மனம் சஞ்சலம் அடைந்தது. நாளாக ஆக வாசவத்தையின் ஆவலும் ஆசையும் அதிகரித்தது.

ஒருநாள், ‘உங்களுடைய முக தரிசனத்துக்காக நான் ஏங்குகிறேன்’ என்று ஒரு காதல் கடிதம் எழுதி அதை வேலைக்காரி மூலம் உபகுப்தருக்கு அனுப்பி வைத்தாள். ‘நானோ ஒரு ஏழை; என் முக தரிசனத்தினால் உனக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் நானே ஒரு நாள் உன்னைப் பார்க்கவரும் நிலை வரும்’ என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார். வாசவதத்தையின் மனம் அடங்கவில்லை. மீண்டும் ஒரு கடிதம் எழுதி அனுப்பினாள். ‘உங்களுடைய காசு, பணம் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் முகத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்புமட்டும் கொடுத்தால் போதும் என்று பிரார்த்திக்கிறேன். வேறு எதுவுமே எனக்கு வேண்டாமென்று எழுதி அனுப்பினாள். அவர் அதை வாசித்துவிட்டு பழைய பதிலையே சொல்லிவிட்டார்.

காலம் உருண்டோடியது. மதுரா நகரத்தில் ஒரு பெரிய கொலை நடந்தது. வாசவதத்தையின் காதலன் அவளுடைய வீட்டில் ரத்தவெள்ளத்தில் மிதந்தான். ஊர் முழுதும் செய்தி காட்டுத் தீ போல பரவியது. அரசனுடைய சேவகர்கள் வந்து, கொஞ்சமும் விசாரிக்காமல், அவள் விலை மாது என்பதால் பணத்துக்கு ஆசைப்பட்டு காதலனைக் கொன்றுவிட்டதாக அரசனிடம் கூறிவிட்டனர்.

buddha bhutan

பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வழக்கம் பாரத நாட்டில் கிடையாது. ஆகையால் மன்னனும் இவளுடைய அங்கங்களை சிதைத்து அவலட்சணமாக்கி ஊரை விட்டு வெளியே விரட்டி விடுங்கள் என்று கட்டளையிட்டான். வாசவதத்தை என்னும் பேரழகி, அங்கம் சிதைந்த நிலயில் கோரமாக காட்சி தந்தாள். ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டதால் சுடுகாட்டில் வசித்தாள். என்றும் விசுவாசம் மாறாத வேலைக்காரி மட்டும் அவளுடனே சென்று, வாசவ தத்தைக்குத் துணையாக சுடுகாட்டில் வசித்தாள்.

இந்தச் செய்தி பலசரக்கு வியாபாரி உபகுப்தரின் காதையும் எட்டியது. உடனே அவர் கடையில் வேலை பார்க்கும் ஊழியரை அழைத்துக்கொண்டு சுடுகாட்டுக்கு வந்தார். வாசவதத்தையின் வேலைக்காரி, உபகுப்தரை அடயாளம் தெரிந்து கொண்டு, வாசவதத்தைக்கு இன்னாரென்று அறிமுகம் செய்துவைத்தாள். அங்கமெல்லாம் உருக்குலைந்த நிலையில் உபகுப்தரைச் சந்திக்கும் துர்பாக்கியம் ஏற்பட்டதே என்று மனம் கலங்கி கண்ணீர் வடித்தாள். துக்கமும் வெட்கமூம் அவளை வாட்டி வதைத்தது.

உபகுப்தரோவெனில், கொஞ்சமும் தயக்கமின்றி வாசவதத்தையின் அருகில் போய் அமர்ந்தார். “ஸ்வாமி இந்த உடலானது அன்றலர்ந்த செந்தாமரை போன்று திவ்ய தேஜசுடன் இருந்தபோது உங்களைப் பார்க்க கெஞ்சினேனே; விலையுயர்ந்த வஸ்திரங்களை அணிந்துகொண்டு காண்போர் மனதை எல்லாம் வசீகரித்தேனே; இப்பொழுது துரதிருஷ்டமும், கஷ்டமும் என்னை வதைக்கின்றன. அப்போதெல்லாம் என்னைப் பார்க்காமல் இப்பொழுது வந்தீர்களே; வெறுக்கத்தக்க சரீரம்படைதவளாகி விட்டேனே” என்று வருந்திச் சொன்னாள்.

இதையெல்லாம் கேட்ட உபகுப்தர் கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. பிறகு அவர் நிதானமாக, “வாசவதத்தாய்! உன்னைப் பார்க்க இதுவே உரிய தருணம். மானிடர் அனுபவிக்கும் இம்மைச் சுகங்களெல்லாம் அழியக்கூடியது என்பதை உன்மூலம் அறிந்து கொண்டேன். இனி வருந்திப் பயனில்லை. தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்க்கை நடத்து; மன நிம்மதி கிடைக்கும்” என்று உபதேசம் செய்தார். அவருடைய வாக்கு என்னும் அமிர்ததாரையில், வாசவதத்தையின் துக்காக்னி அணைந்தது. அவள் பெரும் ஆறுதல் அடைந்தாள். பின்னர் அவள் புத்த சங்கத்தை நாடிச் சென்று இறுதிவரை அங்கிருந்து சாந்தி பெற்று உயிர் நீத்தாள்.

Bud16

புத்தம் சரணம் கச்சாமி!

தம்மம் (தருமம்) சரணம் கச்சாமி!!

சங்கம் சரணம் கச்சாமி!!!

(உபகுப்தர், வாசவதத்தை என்ற பெயர்கள் பல கதைகளில் வரும். ரவீந்திர நாத் தாகூர் எழுதிய உபகுப்தர் கவிதையில் அவர் ஒரு புத்த மத துறவி போல காட்டப்படுகிறார். நான் எழுதிய கதை அசோகர் என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டது)

–சுபம்–