கருணைக்கு அருணகிரி!

Written by London swaminathan

Date: 21 April 2015; Post No: 1817

Uploaded in London at 17-47

உரையாசிரியர்களில் வல்லவரான நச்சினார்க்கினியரை “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்” என்றும் தொல்காப்பியம் யாத்த தொல்காப்பியனை “ஒல்காப்புகழ் தொல்காப்பியன்” என்றும் சங்கத் தமிழில் மிக அதிகப் பாடல்களை இயற்றிய பிராமணப் புலவன் கபிலனை “புலன் அழுக்கற்ற (ஜிதேந்திரியன்) அந்தணாளன்”, “வாய்மொழிக் (சத்தியவான்) கபிலன்” என்றும் பாராட்டுவர். நம்மாழ்வாரை “வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்றும் அடை மொழி கொடுத்து பாராட்டிப் போற்றுவர். இதில் ஒவ்வொன்றிற்கும் ஒர் காரணம் உண்டு. இதே போல திருப்புகழ் பாடி சந்தக் கவிகளால் பெயர் பெற்ற அருணகிரிநாதருக்கு ஒரு சிறப்புப் பட்டம் உண்டு. “கருணைக்கு அருணகிரி” என்று அவரை பக்தர் உலகமும் தமிழ் உலகமும் போற்றும்.

“கருணைக்கு அருணகிரி” என்று அவரைப் போற்ற பல காரணங்கள் உண்டு. கந்தனின் கருணையால் அவருக்கு மறு ஜன்மம் கிடைத்தது. கந்தனின் கருணை மழையில் நாம் எல்லோரும் நனைய நமக்கு 1300-க்கும் மேலான திருப்புகழ்களைக் கொடுத்தார். இதையெல்லாம் விட தமிழ்ப் புலவர்களை எல்லாம் தமது அகந்தையால் படாதபாடு படுத்திய வில்லிப்புத்தூராரைத் தண்டிக்க வாய்ப்புக் கிடைத்தும் அவர் மீது கருணை காட்டினார்.

அது என்ன கதை?

வில்லிபுத்தூரார் தன்னை மிஞ்சிய தமிழ் அறிவு யாருக்கும் இல்லை என்றார். அப்படி யாராவது தனக்கும் மிஞ்சிய அறிவு படைத்ததாகச் சொன்னால் கவிதைப் போட்டிக்கு வரவேண்டும் என்றும் சவால் விட்டார். அந்தப் போட்டியில் தோற்போரின் காதைக் துறட்டு வைத்து அறுத்தும் விடுவார். பல போலி புலவர்களை நடுநடுங்க வைத்தார். ஒவ்வொரு ஊராகச் சென்று புலவர் என்று பெயர் சொல்லிய எல்லோரையும் வாதுக்கு அழைத்தார்; வம்புக்கும் இழுத்தார்.

அருணகிரி புகழ் அறிந்து அவர் வாழ்ந்த திருவண்ணாமலைக்கும் வந்தார். திருப்புகழையும் குறை சொன்னார். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டி, அந்தப் பகுதி மன்னன் பிரபுடதேவன் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தான். அருணகிரியும், வில்லிப் புத்தூராரும் அதற்கு இசைவு தெரிவித்தனர். எப்போதும் நிபந்தனை போடும் வில்லிக்கு வில்லனாக வந்த அருணகிரியும் ஒரு நிபந்தனை விதித்தார். தன் கையிலும் ஒரு துறட்டியைக் கொடுக்க வேண்டும் என்றும் வில்லி தோற்றால் அவர் காது அறுபடும் என்றும் எச்சரித்தார்.

அருணகிரி பாடும் ஒவ்வொரு செய்யுளுக்கும் பொருள் சொல்ல வில்லி ஒப்புக் கொண்டார். முருகன் அருள் பெற்ற அருணகிரி, கந்தர் அந்தாதி என்னும் அற்புதப் பாட்டை எட்டுக்கட்டி ஒவ்வொரு செய்யுளாகச் சொல்லச் சொல்ல போட்டி நீண்டு கொண்டே போனது. ஐம்பத்து நான்கு பாடல்கள் வரை பாடி முடித்த அருணகிரி, ஒரே எழுத்துக்களான கவிதையை எடுத்து வீசினார். இது பொருளற்ற பிதற்றல் என்றும் அப்படிப் பொருள் இருந்தால் அதற்கு அருணகிரியே பொருள் சொல்லட்டும் என்றும் வில்லிப்புத்தூரார் கூறினார்.

அபோது அருணகிரி, ‘குமரா’ என்று பெயர் சொல்லி அழைக்க ஒரு பாலகன் அவர் முன்னே வந்தான். அதாவது முருகனே பையன் போல வந்தான். அவனே அக்கவிதைக்கும் பொருள் சொல்லவே வில்லி தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆயினும் அவரது காதை அறுக்காமல் விட்டு விட்டு அவரிடம் இருந்த துறட்டியையும் வாங்கிக் கொண்டு நீங்களும் நல்ல கவி இயற்றிப் புகழ் பெறலாமே என்று அறிவுரையும் ஆசியும் வழங்கினார்.

இதற்குப் பின்னரே வில்லிப்புத்தூரார் மஹாபாரதத்தை தமிழ் வடிவில் தந்து பெயர் பெற்றார். இன்று வரை வில்லி பாரதம் அவர்தம் புகழைப் பரப்புகிறது. அகந்தை அழிந்து அறிவுக் கண் திறக்க உதவிய அருணகிரியை உலகம், “கருணைக்கு அருணகிரி” என்று வாழ்த்தியது.

அவர் பாடிய, வில்லியைத் திணறடித்த, பாடல்:

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

இதன் பொருள்:

திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய (தாதை) பரமசிவனும், மறை கிழவோனாகிய (தாத) பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய (தத்தி) ஆதிசேசனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய (அத்தி) திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசத் தலமாகக் கொண்டு), ஆயர்பாடியில் (ததி) தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே (தித்தித்ததே) என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்), போற்றித் (துதித்து) வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே (ஆதி), தந்தங்களை (தத்தத்து) உடைய, யானையாகிய ஐராவதத்தால் (அத்தி) வளர்க்கப்பட்ட, கிளி (தத்தை) போன்ற தேவயானையின்,தாசனே, பல தீமைகள் (திதே துதை) நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு), அக்னியினால் (தீ), தகிக்கப்படும், அந்த (திதி) அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து (துதி தீ) வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட (தொத்ததே) வேண்டும்.