கோவில்களில் கபட நாடகம்: இரண்டு கதைகள்

church stamp

Article No.1991

Compiled by London swaminathan

Date 13th July 2015

Time uploaded in London:  காலை 10-00

மஹாபரதத்திலுள்ள குலிங்கப் பறவையின் கதை, பஞ்சதந்திரக் கதைளிலும், மாமல்லபுரம் சிற்பத்திலுமுள்ள ருத்திராட்சப் பூனை கதை ஆகியவற்றை இதற்குமுன்னர்  பார்த்துவிட்டோம். இன்று வேறு இரண்டு சுவையான விஷயங்களைப் பார்ப்போம்.

சர்ச்சில் கபட நாடகம்

ஒரு மாதாகோவிலில் கிறிஸ்தவப் பாதிரியார் தனது பிரசங்கத்தை முடிக்கையில் “அன்பர்களே, அடுத்த ஞாயிற்றுக் கிழமை சொற்பொழிவில் நான் “கபட வேடம் போடுவோர்” பற்றி உரையாற்ற எண்ணியுள்ளேன். அதை நன்கு புரிந்து கொள்ளும் முகத்தான் நீங்களும் ஒன்று செய்ய வேண்டுகிறேன். புனித பைபிளில் மார்க் சுவிசேஷத்தில் உள்ள 17ஆவது அத்தியாயத்தை அனைவரும் படித்து வருக–என்றார்.

அடுத்த ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. எல்லோரும் கபடவேடதரிகள் பற்றிய சுவையான சொற்பொழிவுக்காகக் காத்திருந்தனர். பாதிரியார் பேச்சைத் துவங்கினார்: “அன்பர்களே சென்ற ஞாயிறன்று உங்களுக்கு நான் விடுத்த வேண்டுகோள் நினைவிருக்கும் என்று நம்புகிறேன். எத்தனை பேர் நான் சொன்னது போல, “மார்க் சுவிஷேச”த்தின் 17ஆவது அத்தியாயத்தைப் படித்தீர்கள்? தயவுசெய்து படித்தவர்கள் மட்டும் கையை உயரத்தும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” – என்றார். மாதாகோவிலில் உட்கார்ந்திருந்த அத்தனை பேரும் கையை உயர்த்தி தாம் படித்ததை பட்டவர்த்தனமாக அறிவித்தனர்.

பாதிரியாருக்கு ஒரே சிரிப்பு. அன்பர்களே! மார்க்-கில் 17-ஆவது அத்தியாயமே கிடையாது. உங்களைப் போன்றோருக்குதான் இதுபோன்ற நல்லுபதேசங்கள் அவசியம். ஆகவே அமைதியாக இருந்து கேளுங்கள் என்று உபந்யாசத்தைத் துவக்கினார்!

எல்லோர் முகத்திலும் அசடு வழிந்தது!

–ஆதாரம்: திசாரஸ் ஆப் அனெக்டோட்ஸ்

20 armed ganesh,chicago

பிள்ளையார் கோவில் பூசாரி கதை

ஒரு ஊரில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. பக்தர்கள் கூட்டம் நெருக்கித் தள்ளியது. பூசாரிக்கு ஒரே மகிழ்ச்சி. இதுதான் நல்ல தருணம் என்று “மைக்”-கைக் கயில் எடுத்து ஒரு முக்கிய அறிவிப்பு என்றார். ஊசி விழுந்தால்கூட கேட்கும் அளவுக்கு நிசப்தம்.”

“மெய்யன்பர்களே! அடுத்த வெள்ளிக் கிழமை சதுர்த்தி வருகிறது. பிள்ளையாருக்கு மிகவும் விசேஷமான நாள்; அது மட்டுமல்ல; வெள்ளிக் கிழமையும் சேர்ந்து வருவது அபூர்வம். ஆகையால் பெரிய பாலாபிஷேகம் நடைபெறவுள்ளது. பக்தர்கள் எல்லோரும் தங்களாலியன்ற அளவுக்கு பால் கொண்டு வரவேண்டும். இதற்காகவே க.மு..செ.து.வ.அ.ப.ம.ரா. செட்டியார் அவர்கள் மூடியுடன் கூடிய பெரிய தொட்டி (டேங்க்) ஒன்றைத் தானம் கொடுத்துள்ளார். அன்பர்கள் அனைவரும் அதிகாலையில் பால் கொண்டுவந்து அதில் கொட்டினால் போதும். உங்கள் அனைவருக்கும் இறையருள் கிட்டி எண்ணியதெல்லாம் நடைபெறும் என்றார்.

பக்தர்களுக்கு மிகவும் சந்தோஷம். இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று எண்ணினர். கோவிலுக்கு வெளியே வந்ததுதான் தாமதம்! அவர்களின் சுபாவ குணங்கள் என்னும் பூதங்கள் அவர்களைப் பிடித்துக்கொண்டன. உடனே எண்ணம் மாறியது.

நான் பெரிய குடத்தில் தண்ணீர் கொண்டுபோய் பொழுது விடிவதற்குள் தொட்டியில் விட்டுவிடுவேன். இருட்டில் யாருக்கும் தெரியாது. மேலும் மூடி இருப்பதால் அதை யாரும் அறியார் என்று ஒவ்வொருவரும் எண்ணினர்.

வெள்ளிக்கிழமயன்று எள் போட்டால் எண்ணையாகிவிடும் அளவுக்குப் பக்தர் கூட்டம். எல்லாரும் “பயபக்தி”யுடன் பொழுது விடிவதற்குள், இருள் சூழ்ந்திருக்கும் போது குடம் குடமாகத் தொட்டியில் கொட்டினர் – பால் அல்ல – அத்தனை குடங்களிலும் தண்ணீர்!!!

பூசாரி வந்தார். தொட்டி முழுவதும் நிரம்பியிருப்பதை அறிந்தார். கோவிலுக்குச் சொந்தமான நிறைய வெள்ளிக் குடங்களை வரிசையாக வைத்து எல்லா பக்தர்களும் வரிசையாக பாலை நிரப்பி வந்து கொடுக்கலாம் என்றார். “அந்த கைங்கரியத்தைச் செய்ய பகதர்களுக்குள் போட்டா போட்டி. ஆனால் ஒவ்வொரு குடத்திலும் நீர் மட்டுமே வந்தது. பால் வரவில்லை. ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக்கொண்டனர். அசடு மட்டுமா வழிந்தது? கூடவே விளக்கெண்ணையும் சேர்ந்து வழிந்தது.

பூசாரிக்கு மஹா கோபம்! பிள்ளையாருக்கோ மனதுக்குள் பெரிய சிரிப்பு. சிலையைப் பார்த்தோருக்குக் கூட ஒரு புன்னகை பளிச்சிட்டது போலத் தோன்றியது!

பூசாரி உரத்த குரலில் பிருஹத் ஆரண்யக உபநிஷத் மந்திரத்தைச் சொன்னார்:

“அஸதோ மா சத் கமய” — (அறியாமையிலிருந்து என்னை அறிவொளிக்கு அழைத்துச் செல்)

“தமஸோ மா ஜ்யோதிர் கமய” — (இருளிலிருந்து என்னை ஞான ஒளிக்கு அழைத்துச் செல்)

“பக்தர்கள்” கூட்டம் கலைந்தது! ஆனால் பிரசாதம் வாங்க மறக்கவில்லை!!

ஆதாரம்: பள்ளியில் தமிழ் ஆசிரியர் சொன்னாரா அல்லது வாரியார், கீரன் போன்றோர் சொற்பொழிவினில் கேட்டதோ நினைவில்லை.

abrus

வள்ளுவரின் மூன்று அற்புதமான உவமைகள்:

கபட நாடகம் பற்றி பத்து குறட்பாக்களே பாடிவிட்டார் வள்ளுவர்.

தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து

வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று – குறள் 274

பொருள்: சந்யாசி வேஷத்தில் பாவம் செய்பவன்= புதரில் ஒளிந்திருந்து பறவைகளைப் பிடிக்கும் வேடன்

வலியில் நிலைமையான் வல் உருவம் பெற்றம்

புலியின் தோல் மேன் போர்த்து மேய்ந்தற்று – குறள் 273

பொருள்: – போலி சந்யாசி = புலித் தோலைப் போர்த்திக்கொண்டு மேயும் கபட பசு

புரங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி

மூக்கிற் கரியார் உடைத்து — குறள் 277

சந்யாசியின் வேடம் = குன்றிமணியின் (குண்டுமணி விதை) சிவப்பு நிறம்

போலி சந்யாசியின் மனம் = குன்றிமணியின் கரிய மூக்கு

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும் — குறள் 271

போலி ஒழுக்கசீலனைக் கண்டு அவன் உடலில் இருக்கும் பஞ்சபூதங்களும் (நிலம், நீர், தீ, வான், வளி) நகைக்கும். அதாவது ஒருவன் மனைவி, கணவன், அப்பா, அம்மா, உறவினர், நண்பர்களை ஏமாற்றலாம். ஆனால் அவன் மனச் சாட்சி அவனைப் பார்த்துச் சிரிக்கும். அதை ஏமாற்றவே முடியாது!