

Post No. 8782
Date uploaded in London – –6 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வடக்கில் கிருஷ்ண ஜன்ம பூமியான மதுரா உளது. அதனால் கடல்கொண்ட தமிழ்ச் சங்க மதுராவை ‘தென் மதுரை’ என்று அழைத்தனர் . வடக்கில் இந்துக்களின் மிகப் பழைய புனித ஸ்தலமான காசி உளது. அதனால் தமிழ் நாட்டிலுள்ள காசியை ‘தென் காசி’ என்று அழைக்கிறோம்.. அதே போல வடக்கில் பாடலிபுரம் உளது, தெற்கில் திருப்பாதிரிப்புலியூர் என்று மாற்றிக்கொண்டோம். இது போல நிறைய ஊர்கள் தமிழ் நாடு மட்டிலும் இன்றி பல்வேறு இடங்களில் ‘தக்ஷிண கைலாசம்’ முதலியவற்றைக் காண்கிறோம். ஆனால் பாணினி சொல்லும் ஒரு விஷயம் வியப்பானது.
பஞ்சாபிலும் ஒரு கபிஸ்தலம் இருந்தது. இப்பொழுது அது ஹரியானா மாநில எல்லைக்குள் கைதால் என்ற பெயருடன் விளங்குகிறது!
கும்பகோணத்தின் அருகில் ஒரு கபிஸ்தலம் இருக்கிறது. அங்குள்ள கஜேந்திர வரதர் கோவில் மிகவும் புகழ் பெற்றது ; கஜேந்திர மோட்சம் கதையும் மிகவும் பிரபலமானதே. தமிழ் நாட்டில் திருமோகூர் உள்பட பல வைணவத் தலங்களுடன் இக்கதை தொடர்பு படுத்தப்படுகிறது. அதற்கெல்லாம் முன்னதாக குப்தர்கால சிற்பங்கள் 2000 ஆண்டுகளாக நமக்கு இதைக் காட்டி வருகின்றன.
பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் என்பதை கோல்ட்ஸ்டக்கர் (Goldstucker) ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கிறார். ‘பாணினி கால இந்தியா’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய வி.எஸ்.அக்ரவாலா கி.மு.நாலாம் நூற்றாண்டு என்று சொன்னபோதிலும் அவர் எழுதிய ஒவ்வொரு அத்தியாயமும் அவர் சொல்லும் ஆண்டு ‘தப்பு’ என்று காட்டுகிறது. ஏனெனில் நாணயம், நடை உடை பாவனை , அளவுமுறைகள், இலக்கண வழக்குகள் ஆகிய அனைத்திலும் காத்யாயனர், கெளடில்யர் காலத்துக்கும் பாணினி காலத்துக்கும் மிகப்பல வேறுபாடுகளைக் காண்கிறோம். புத்தர், மஹாவீரர் போன்ற பெயர்களையே பாணினியத்தில் காணமுடியாது ஆக 2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கபிஸ்தலம் இருந்தது உறுதியாகிறது.
கபிஸ்தலம் என்பது ஸம்ஸ்க்ருதப் பெயர் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது . அது மட்டுமல்ல ‘கபி’ என்றால் குரங்கு என்பதும் தெரிந்ததே.
முந்தைய பஞ்சாபில் , தற்போதைய ஹரியானா எல்லைக்குள் இருக்கும் கபிஸ்தலம் 2700 ஆண்டுக்கும் முந்தையது என்பதற்கு பாணினி நூலில் சான்றுள்ளது. ஆனால் கும்பகோணம் அருகிலுள்ள கபிஸ்தலம் அவ்வளவு பழமையுடையது அல்ல. அதற்கு கபிஸ்தலம் என்ற பெயர் வந்ததற்கான காரணங்களும் வலுவாக இல்லை. உ’ப்புக்குச் சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை’ என்று ஏனோ தானோ என்று அனுமனையும், வாலியையும் சுக்ரீவனையும் வலிய இழுத்து வந்து தொடர்புபடுத்துகின்றனர் . ஆகையால் வாலி- சுக்ரீவன்- அனுமன் தொடர்புக்கு நல்ல ஆதாரம் கிடைக்கும் வரை பஞசாபுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்று ஆராய்தல் நலம் பயக்கும்.
இரண்டு கபிஸ்தலம் பற்றியும் காண்போம்; ஒப்பிட்டு ஆராய்வோம்.
கைதால்(Kaithal=Kapisthal) என்பது இப்பொழுது பஞ்சாப் எல்லையில் ஹரியானா மாநிலத்துக்குள் இருக்கிறது. ஆனால் இதன் பழைய பெயர் கபிஸ்தலம் என்பதை எல்லோரும் எழுதுகின்றனர் யுதிஷ்டிரர் இந்த நகரை ஸ்தாபித்தார். அங்கே ஆஞ்சனேயரின் தாயாரான அஞ்சனி தேவிக்கு ஒரு கோவிலும் உளது. இந்த இடத்தில் மட்டுமே சிவனுக்கு 108 கோவில்கள் உண்டு என்றும் அதில் ஒன்று ஏகாதச லிங்கக்கோவில் என்றும் ஊர் மக்கள் பெருமையாகக் கூறுகின்றனர். குருக்ஷேத்திரத்தைச் சுற்றியுள்ள 48 புண்ய ஸ்தலங்களில் கபிஸ்தலம் முக்கியமானது. 48 கோவில்களையும் வல ம் வருவோர் — பரிக்ரமம் செய்வோர்- இங்கு வருவார்கள் . இதையெல்லாம் பார்க்கும்போது இது மஹாபாரத காலம் முதல் புகழ் பெற்ற ஊர் என்பது தெளிவாகிறது. மேலும் அனுமனின் தாயார் கோவில் இருப்பதால் கபி (குரங்கு) என்ற பெயரையும் தொடர்புபடுத்துகிறது.
இதை கும்பகோணம் அருகிலுள்ள கபிஸ்தலத்துடன் ஒப்பிட்டால் இதில் எந்த ஒரு விஷயத்தையும் காணமுடியவில்லை. கஜேந்திர மோட்சக் கதைக்கு அடுத்தபடியாக, அதற்குச் சம்பந்தமில்லாத வாலி- சுக்ரீவன் – அனுமன் கதையைத்தான் வலுக் கட்டாயமாகச் சேர்க்கின்றனர். ஆகையால் பஞ்சாப்-ஹரியானா கபிஸ்தலம் பெயர், இங்கே எப்படி வந்தது என்பதை ஆராய்தல் அவசியம். வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பதை துருவி ஆராய்வோம்.
கபிஸ்தலம் பற்றி பாணினி மற்றும் கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் கூறும் வியப்பான செய்திகள் இதோ :–
கபிஸ்தல என்பதை கோத்திரங்களில் ஒன்றாக பாணினி குறிப்பிடுகிறார்.சூத்திரம் 8-3-91
பொதுவாக ரிஷிகளின் பெயரிலேயே கோத்திரங்கள் பெயர்கள் அமையும். ஆகையால் கபிஸ்தல என்பதும் ரிஷியின் பெயரே. மெகஸ்தனீஸ் பஞ்சாபிலுள்ள ஒரு மக்கள் குழுவை ‘கம்பிஸ்தலோய்’ என்று அழைக்கிறார். இது கபிஸ்தல என்பதன் மருவு. அலெக்சாண்டரின் படையெடுப்பை எதிர்த்த காடக இனத்தினரோடு அவர்கள் இருந்திருக்கலாம். ஊர்ப்பெயரான கபிஸ்தலத்துடன் தொடர்பில்லாமலும் இருந்திருக்கலாம்..
பாணினி அலெக்ஸ்சாண்டருக்கும் அசோகருக்கும் பல நுறு ஆண்டுகள் முன்னால் வாழ்ந்தவர். ஒரு இனமோ, குழுவோ நகர்ந்து முன்னேற முன்னேற அவர்கள் வாழும் நாடோ , ஊரோ , பிரதேசமோ விரிவடைவதைக் காண்கிறோம்.
தமிழ் நாட்டின் கபிஸ்தலத்தோடு ரிஷி பெயரோ இனப் பெயரோ சம்பந்தப்படவில்லை .இரண்டு கபிஸ்தலங்களும் ஆராய்ச்சியாளருக்கு சவால் விடுகின்றன .
XXXX

பாணினியில் பிராமண அதிசயம்!
பிராமணர்கள் உலக மஹா அதிசயம் என்றும் அவர்கள் வாழும் படிம அச்சுக்கள் (Living Fossils) என்றும் பழமையைக் காக்கும் இனம் என்ற வரிசையில் கின்னஸ் புஸ்தகத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டும் என்றும் நான் நீண்ட கட்டுரைத் தொடர் எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நீண்ட காலம் பழமையான விஞ்ஞான விஷயங்களைக் கடைப்பிடிக்கும் இனம் என்பதைக் காட்டி இருந்தேன் .
சப்த ரிஷி மண்டலம் எனப்படும் பெருங்கரடி நட்சத்திரக் கூட்டத்தில் (Ursa Major= Great Bear) 7 நட்சத்திரங்கள் இருப்பதும் அதிலுள்ள அருந்ததி/வசிஷ்ட நட்சத்திரத்தை முதலிரவு அறைக்குள் நுழைவதற்கு முன்பாக புதுமணத் தம்பதிகள் ‘அருந்ததி காட்டல்’ என்ற சடங்கில் அருந்ததி நட்சத்திரத்தைக் காண்பது பற்றியும் அனைவரும் அறிவர். சங்க இலக்கிய நூல்களில் அருந்ததி வழிபாடு , சப்த ரிஷி வழிபாடு இரண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராமணர்கள், தினசரி மூன்று முறை சூரிய வணக்கம் செய்வர். இதை ‘சந்தியா வந்தனம்’ என்பர். இதன் இரண்டாவது பகுதியில் நான்கு வேதங்கள் புகழும் காயத்ரி மந்திரம் உளது. அந்த காயத்ரீ தேவதையை இதயத்துக்குள் எழுந்தருளச் செய்ய ஒரு மந்திரம் சொல்லுவார்கள் .
அப்பொழுது தலையின் முன் பகுதியில் கையை வைத்துத் தொட்டு, ஏழு ரிஷிகளின் பெயர்களைச் சொல்லுவர். (இதை நானும் லண்டனில் தினமும் செய்து வருகிறேன்.) அதில் நாங்கள் சொல்லும் ரிஷிகளின் பெயர்கள் ஏழும் அதே வரிசையில் 2700 ஆண்டுகளுக்கு முந்தைய பாணினியின் வியா கரணத்தில் வரிசை மாறாமல் உளது.
இதோ அந்த சூத்திரம்—
சூத்திரம் 2-4-65-ல் அவர் சில இலக்கண விதிகளை விளக்குகிறார்.
‘அத்ரி ப்ருகு குத்ஸ வசிஷ்ட கோ த்தமாரங்கிரேப் ய ஸ் ச’
என்கிறார். அவர் விளக்கும் இலக்கண விதிகளை நாம் இப்போது அலச வேண்டியதில்லை.
இதே வரிசையில் தான் பிராமணர்கள் தினசரி மூன்று முறை 7 ரிஷிகளின் பெயர்களைச் சொல்கிறா ர்கள் —
அத்ரி, பிருகு, குத்ஸ, வசிஷ்ட, கெளதம, காஸ்யப, ஆங்கிரஸ என்பன அந்த 7 ரிஷிக்கள். சில பகுதிகளில் பெயர்கள் ஒன்றிரண்டு மாறுபட்டிருக்கும் . அதே கோத்திரத்தைச் சேர்ந்த ரிஷி என்பதால் பெயர் வரிசையில் மாறுதல் இல்லை.
ஆக 2700 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமணர்கள் சப்த ரிஷிக்களின் பெயர்களை ஒரே மாதிரியாகச் சொல்லி வணங்கி வருகின்றனர்.
–சுபம்–
TAGS – பிராமணர்கள், அத்ரி ப்ருகு குத்ஸ, கபிஸ்தலம்,