கம்பன் கவி இன்பம்:மேதையைக் கணித்தல் முடியுமா, என்ன? (Post no.4349)

Written by S.NAGARAJAN

 

 

Date: 30 October 2017

 

Time uploaded in London- 5-48 am

 

 

Post No. 4349

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 6)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

கொள்வன கொண்டு, குறைப்பன குறைத்து, சேர்ப்பன சேர்த்த மேதையைக் கணித்தல் முடியுமா, என்ன?!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

பாடல் 16

பூமி மாது புனையும் மஹாகவித்

தாம நாப்பண் தயங்கிச் சதிரொளி

ஏமம் வீசி எரிநடு நாயகம்

காம இன்பமும் கைப்பித்த கம்பனே

 

காம இன்பத்தையும் கசப்பென்று தள்ளிவிடத்தக்க இனிமையை ஊட்டும் கவி புனையும் கம்பன் என்னும் மஹாகவி , பூமி தேவி தன் மார்பில் அணிகின்ற மஹாகவிகளாம் இரத்தின வடத்தில் நடுவே நின்று, அழகிய ஒளியையும் இன்பத்தையும் எங்கும் வீசி மிளிர்கின்ற இரத்தினமாக இன்றும் பிரகாசிக்கின்றான்.

 

பாடல் 17

பாங்கில் வேந்தைப் பனிக்குடை பாலிக்கக்

தாங்கும் சக்கர வர்த்தித் தகையினர்;

தூங்குஞ் செந்தமிழ்த் தொல்கவி ராஜர்மேல்

ஓங்கும் கம்பன் ஒருகவி நீழலே

 

பாடல் 18

மான சமடு வந்த சரயு போல்

பாந சைப்புல வர்பல குன்றிடை

வான சைல மெனவளர் கம்பனுள்

ஞான வாவியிக் காவியம் நன்குமால்

 

பாடல் 19

(வேறு)

“வாங்கரும் பாதம் நான்கும் வகுத்தவான் மீகிதந்த

ஓங்கிடும் புகழ்நூற் பற்றி யுதவின னேனும் கம்பன்

வீங்கறி வுடைய ஞாலம் வேண்டிய வாறு காதை

ஆங்கங்கே திருத்தி யாண்டும் அழகுற அமைத்த திந்நூல்

 

பாடல் 20

முதலென வழிநூ லென்ன முடித்துளார் முறையிற் சென்றே

சதிருறா முதநூல் தானே தலைநின்று தயங்குமென்பர்;

மதத்திறன் மதிக்க லாதிம் மதம்விரித் துரைத்தார் தாமும்

எதிரிலா ராமகாதை யெதிர நாவெடுக்க லாரே.

 

பாடல் 21

நூலினை வகுத்துக் கூறும் நுண்ணறி வெனைத்தென் றாலும்

மேலினை வகுக்கு மாபோல் வினைக்கடை வியர்த்தமாமே;

ஞாலத்திற் புலவர் புந்தி நடைத்திறன் கணித்தல் சீவன்

மூலத்தைக் கணித்தல் போலும் முரட்டுற்ற முயற்சியம்மா!

 

பாடல் 22

பூதபென திகத்துட் கணிப் புதுமைபூத் தொளிராச் சத்தி

ஓதமோ ரளவைத் தாகி யொதுங்கலு மதற்கும் வேறாய்

மேதகு மனத்தி னூற்றம் விளைந்துமேக் குறலும் கால

பேதத்திற் பின்ன லாய பெரும்பரிணாம மன்றே

 

பரிணாமம் -இயற்கைத் தோற்றத்தினை விளக்கும் அபிவர்த்தன வாதக் கொள்கை ((Evolution)

 

பாடல் 23

ஆதலால் அறிஞ ரானோர் அளக்குறார் உளத்தி னாற்றல்

பூதலத் துயரின் போக்கைப் புனைபொறி புகுத்த நோக்கால்

மாதவத் துயர்ந்த முன்னோர் மாண்புள ரென்றும் பின்னோர்

மேதினி விளக்கு ஞானம் மேவல் போல் மேவினாரே

 

பாடல் 24

பண்பமை நூல்க ளெல்லாம் பண்டையர் போலப் பீடு

கொண்டன வென்னக் காட்சி கோடற்க இற்றை ஞான்றும்

எண்டயங் குறுநூல் செய்தாங் கிசைநட்டா ருளரே யாதற்

கண்டனம் ராம லிங்க கவியருட் பாவின் காட்டால்

 

பாடல் 25

ஆரிய மொழிக் கோர் ஆதி கவியெனும் அழிவில் சீர்த்தி

சேரிய முனிவன் றானே செப்பின னேனுந் தொன்னூல்

கூறிய அறிவில் ஞானக் கோளசைக் குனித்த கம்பன்

சீரிய கலைக்குச் சித்ர லைக்கவி சிறத்தல் செய்ய

 

பாடல் 26

குறைப்பன குறைத்து வேண்டிக் கொள்வன கொண்டு மாற்றம்

செறிப்பன செறித்துச் செப்ப னிட்டசே டகப் பொற் றட்டிற்

குறிப்ப்ன கோலத் துள்ள துகிலிகை கொண்டு யாணர்ப்

பொறிப்பன வாய பொன்சித் திரத்தின் வித்தார மம்ம!

 

***

வாங்க அரும் பாதம் வகுத்தவன் என்று வான்மீகியைக் கம்பன் புகழ்கிறான். ஒரு சுலோகத்தில் நான்கு பாதங்கள் உண்டு. அதில் ஒரு பாதத்தைக் கூட மாற்ற முடியாது; இடைச் செருகல் செய்ய முடியாது. அப்படி ஒரு சொல் மாலை வால்மீகி ராமாயணம்.

அதில் கம்பன் கொள்வன கொண்டான்; குறைப்பன குறைத்தான்; சேர்ப்பன சேர்த்தான். பொன் தட்டில் நமக்குத் தமிழில் ராமாயணத்தைத் தந்தான்.

பண்டைய நூல்கள் தான் நூல்கள் என்று எண்ண வேண்டாம். இந்த நாளிலும் கூட குறு நூல் செய்து இசை நட்டார் உளர்; அருட்பிரகாச வள்ளலார் எனப்படும் ராமலிங்கக் கவியின் அருட்பாவும் உண்டு, அல்லவா!

கம்பனை யாராலாவது கணிக்க முடியுமா, என்ன? புலவரின் புத்தி, நடைத்திறன் ஆகியவற்றைக் கணிக்கும் முயற்சியானது உயிர் எப்படித் தோன்றுகிறது என்ற மூலத்தினை ஆராய்ச்சி செய்வதற்கு ஒப்பாகுமல்லவா? அதை எப்படி யாராலும் கண்டுபிடிக்க முடியாதோ அது போல கம்பனின் அளவற்ற மேதா விலாசத்தையும் நடைத்திறனையும் யாராலும் கணிக்க முடியாது! அம்மம்மா!

என்று இப்படியெல்லாம் வியக்கிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.

கம்பனில் தோய்ந்த ரஸிகர் அல்லவா, அவர்.

இன்னும் மேற்கொண்டு உள்ள பாடல்களை அடுத்துப் பார்ப்போம்.

                                  -தொடரும்

***