“நடப்பது நடந்தே தீரும்” கம்பன் Philosophy பிலாஸபி/ தத்துவம் (Post No.4868)

“நடப்பது நடந்தே தீரும்” கம்பன் Philosophy பிலாஸபி/ தத்துவம் (Post No.4868)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 31 MARCH 2018

 

Time uploaded in London –  6-14 am (British Summer Time)

 

Post No. 4868

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மஹாபாரதத்தில் கர்ணன் என்னும் கதா பாத்திரமும், ராமாயணத்தில் கும்பகர்ணன் என்னும் கதபாத்திரமும் அற்புதமான படைப்புகள்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு—

என்ற குறளுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர்கள். இது புறநானூற்றிலும் (புறம்.34, ஆலத்தூர் கிழார் பாடியது) ராமாயண மஹா பாரதத்திலும் உள்ள வாசகம்.

கும்பகர்ணன் வாய்மொழி மூலமாக கம்பன் உதிர்க்கும் கருத்துக்களைச் சில பாடல்கள் மூலம் காண்போம்

 

 

ஆகுவது ஆகும் காலத்து ஆகும்; அழிவதும் அழிந்து சிந்திப்

போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்!

சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்?

ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்

 

யுத்த காண்டம்,கும்ப கர்ணன் வதைப் படலம், கம்ப ராமாயணம்

 

ராமனிடம் அடைக்கலம் புக மாட்டேன் என்று மறுத்து, வீடணனிடம் கும்பகர்ணன் சொன்ன சொற்கள்:-

“என்றும் வாழ்பவனே! உரிய காலத்தில் ஆக வேண்டியது ஆகியே தீரும்; அழிய வேண்டியது. அதற்குரிய காலத்தில் அழிந்து சிதறிப் போகும். அவ்வாறு அழிய வேண்டியதை அருகேயிருந்து பாதுகாத்தாலும், அழிந்தே போவது உறுதி. இதைக் குற்றமற உணர்ந்தவர், உன்னைக் காட்டிலும் யார் உள்ளனர்? வருத்தப் படாமல்

(ராமனிடமே) நீ திரும்பிச் செல். என்னை நினைத்து நீ வருந்தாதே — என்று கூறினான் கும்பகர்ணன்.

 

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதே

 

என்பது கும்பகர்ணனின் முடிவு.

ராமனிடம் சரணடைந்தால் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் உண்டு என்று வீடணன் சொல்கிறான். அதற்கு மறுமொழி தந்த கும்பகர்ணன், நீ சொல்வது எல்லாம் சரிதான்; அதர்மத்தின் தரப்பிலுள்ள நாங்கள் எல்லோரும் இறப்பது உறுதி. நானும் ராவண னும் அரக்கர் சேனையும் கூண்டோ டு, கைலாஸம் போகப் போகிறோம். எங்களுக்கு எல்லாம் எள் இறைத்து நீர் தெளித்து இறுதிக் கடன்கள் செய்து     நாங்கள் நரகம் புகாமல் , தடுக்க ஒருவராவது தேவை. ஆகையால் நீ வெற்றி பெறும் ராமர் தரப்புக்கே சென்று விடு என்கிறான்.

 

 

இதோ சில பாடல்கள்:

 

கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனைக்காத்துத்

திருத்தலாம் ஆகின் அன்றே திருத்தலாம்? தீராது ஆயின்

பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி

ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா

 

பொருள்

“தலைவன் ஒருவன் ஆலோசனை செய்யாமல் தீய செயல் செய்ய நினைத்தால் அதைத் தடுத்து நிறுத்த முடியுமானால் நல்லது. முடியாதாயின் அவனது பகைவரை (ராமனை) அடைந்து பெறக்கூடிய பயன் உண்டா? ஒருவன் இட்ட சோற்றை உண்டவர்க்கு உரிய செயல் போரில் இறங்கி போரிட்டு, அன்னம் இட்டவர்க்கு முன்னமேயே இறக்க வேண்டியதே

 

அடுத்த பாட்டிலெல்லோரும் அழிந்தபின்னர் ராவணன் அனாதையாக அழிவதைப் பார்க்க விரும்பவில்லை என்கிறான்.

 

இராமன் செலுத்தும் அம்பு மழையில் அரக்கர் அனைவரும் அழிவர். அவ்வாறு அழிந்து விட்டால் அயோத்தி வேந்தனிடம் அடைக்கலம் அடைந்த நீ இல்லாவிட்டால் எள்ளுடன் கூடிய நீரைக் கொடுத்து தர்ப்பணம் செய்ய யார் உளர்? இருந்தால் அவரைக் காட்டுவாய்- என்கிறான் கும்பகணன்.

எய்கணை மாரியாலே இறந்து பாழ்படுவேம் பட்டால்

கையினால் எள் நீர் நல்கிக் கழிப்பாரைக் காட்டாய்

 

 

வீடணன் Philosophy பிலாஸபி பிறவி நோய்க்கு மருந்து ராமன்

 

ராமனைச் சரணடைந்தால் என்ன பயன் கிட்டும் என்று விபீஷணன் உரைக்கிறான். அதிலும் கம்பன் இந்துமத தத்துவங்களை மொழிகிறான்

 

 

இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் கரந்த வீரன்

அருளும் நீ சேரின் ஒன்றோ அபயமும் அளிக்கும் அன்றி

மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம், மாறிச் செல்லும்

உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே.

 

பொருள்

 

அறியாமை உடைய எனக்கும் அருள் பொழிந்த வீரன் ராமன்.

நீ வந்தால் உனக்கும் அருள் புரிவான். உனக்கு அபயம் (பாதுகாப்பு) தருவான்.

அஞ்ஞானம் நிறைந்த பிறவி நோய்க்கு அவன் மருந்தாக அமைவான்.

உருண்டு செல்லும் வண்டிச் சக்கரம் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இயல்புடையது வாழ்க்கை. இதனை நீக்கி மோட்சத்தை அருளுவான் ராமன்.

 

அதாவது ஜனன- மரண பிறவிச் சுழலிலிருந்து விடுவிப்பான்.

 

ஆக கும்ப கர்ண வதைப் படலத்தில் யார் யார் எல்லாம் பேசுகிறார்களோ அவர்கள் மூலம் எல்லாம் இந்துமதக் கருத்துகளை ஜூஸாகப் பிழிந்து தருகிறான் கம்பன்.

படிக்கப் படிக்கப் பேரின்பம் கிடைக்கும்.

சுபம்