கம்ப ராமாயணத்தில் அதிசயச் சங்கு! (Post No.2909)

valampuri 1

Compiled by London swaminathan

 

Date: 20  June 2016

 

Post No. 2909

 

Time uploaded in London :– 10-34 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணத்தை ராம பிரானின் புனித வாழ்வைப் போற்றும் காவியமாகப் பார்ப்பர் பலர்; இலக்கிய இன்பத்துக்காக நுகர்வர் பலர்; ஆராய்ச்சி நோக்குடன் அணுகுவர் சிலர். இவ்வாறு அணுகி முன்னரே பல கட்டுரைகளில் மின்மினிப் பூச்சிகளை, குருவிகள் மின்சார பல்புகள் போல அவைகளின் கூடுகளில் வைத்துப் பயன்படுத்துதல் முதலியன பற்றி எழுதியுள்ளேன். இன்று வலம்புரிச் சங்குகளில் மிகவும் அதிசயமான சலஞ்சலம் பற்றி கம்பன் சொன்னதைக் காண்போம்.

 

செங்கண் அங்க அரவின் பொரு இல் செம்மணி விராய்

அங்கண் அங்கவலயங்களும் இலங்க அணியச்

சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவளக்

கங்கணங்களும் இலங்கிய கரம் பிறழவே

–விராதன் வதைப் படலம், ஆரணிய காண்டம்,கம்ப ராமாயணம்

பொருள்:-

விராதன் என்னும் அரக்கன் எப்படி வந்தான்? சிவந்த, செம்மையான உடம்புடைய பாம்புகள் கக்கிய மாணிக்க வளையங்களையும், சங்குகள் வருந்திப் பெற்றெடுத்த சலஞ்சலம் எனும் சங்குகளினால் ஆன வளையல்களையும் அணிந்த கரங்களை முன்னும் பின்னும் வீசியவாறு வில் வீரர்களுக்கு எதிரே விராதன் வந்தான்.

valamum itamum

 

பாம்புகள் கக்கும் நாகரத்தினம் (மாணிக்கம்) பற்றி முன்னரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் கூறிவிட்டேன். இப்பொழுது அதிசய சலஞ்சலம் பற்றிப் பார்ப்போம்.

 

வலம்புரிச் சங்கு என்பது இந்து மஹா சமுத்திரத்தில், மிகவும் அபூர்வமாகக் கிடைக்கக்கூடியது. பெரும்பாலான சங்குகளுக்கு உள்ள சுழிக்கு எதிர்ப்புறமாக இதன் சுழி இருக்கும். ஆங்கிலத்தில் இதை இடம் சுழிச் சங்கு என்பர். சங்கை மேல் புறத்திருந்து பார்க்கிறோமா, கீழ்ப் புறத்திலிருந்து பார்க்கிறோமா என்பதைப் பொருத்து இடம், வலம் என்ற மாறுபாடு வருகிறது.

கம்பன் ஏன் சலஞ்சலம் என்னும் சங்கினால் ஆன வளையல் என்று சொன்னான்? மாணிக்கத்துக்கு நிகரான விலை கொண்டது அது. நாகரத்தினம் போல அபூர்வமானது அது.

ஆயிரம் இடம்புரிச் சங்குகளால் சூழப்பட்ட சங்கு வலம்புரிச் சங்கு என்றும், அதுபோன்ற 1000 வலம்புரிச் சங்குகளால் சூழப்படது சலஞ்சலம் என்றும் நூல்கள் செப்பும். இது போன்ற சங்குதான் கிருஷ்ணன் கையிலுள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கு ஆகும்.

 

பகவத் கீதையிலேயே ஐந்து பாண்டவ வீரகளின் கையிலுள்ள ஒவ்வொரு சங்கிற்கும் தனித் தனி பெயர் கொடுத்திருப்பதால் இந்துக்கள்தான் முதல் முதலில் சங்கைப் பயன்படுத்திய நாகரீகம் வாய்ந்த சமூகம் என்று சொல்லவேண்டும்.

 

பகவத்கீதை முதல் அத்தியாயத்தில் பாண்டவர்கள் கையிலும் கிருஷ்ணன் கையிலும் உள்ள சங்குகளின் பெயர்கள் காணப்படுகின்றன:

பாஞ்சஜன்யம் ஹ்ருஷீ கேசோ தேவதத்தம் தனஞ்ஜய:

பௌண்ட்ரம் தத்மௌ மஹாசங்கம் பீம கர்மா வ்ருகோதர:

 

அனந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:

நகுல: ஸஹதேவஸ்ச ஸுகோஷ மணிபுஷ்பகௌ (1-15/16)

 

கிருஷ்ணன் – பாஞ்சஜன்யம்

அர்ஜுனன் – தேவதத்தம்

தர்மன் – அனந்தவிஜயம்

பீமன் – பௌண்ட்ரம்

நகுலன் – சுகோஷம்

சஹாதேவன் – மணிபுஷ்பகம்

 

(‘அபூர்வ வலம்புரிச் சங்கு’ என்ற தலைப்பில் நான் எழுதி 17 செப்டம்பர் 2012-ல் இங்கே வெளியிட்ட கட்டுரையில் சங்குகள் பற்றிய சுவையான விவரங்களையும் காண்க)

–சுபம்–