கற்பு பற்றி வள்ளுவர், வால்மீகி , கம்பர், ஷேக்ஸ்பியர், மநு! (Post No.10,664)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,664

Date uploaded in London – –    16 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்குங் காப்பே தலை – குறள் 57

பெண்களை பலவகையான காவலுக்கு இடையே சிறைவைப்பது என்ன பயனைத் தரும்?  தம் 

கற்பு நெறியால் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் காப்புதான் சிறப்புடைய காவல் ஆகும் .

பெண்களை என்ன காவலில் வைத்த்தாலும் பலன் தராது. அவர்களுடைய கற்புதான் அவர்களைக் காக்கும். இந்தக் கருத்து வால்மீகி ராமாயணம், உலகின் முதல் சட்ட நூலான மனு ஸ்ம்ருதி, ஷேக்ஸ்பியரின் நாடகம் , கம்பராமாயணம் ஆகியவற்றிலும் வருகிறது. ஆயினும் வால்மீகியும் மனுவும் இதை அப்படியே சொல்லியிருக்கிறார்கள்.

வால்மீகி சொல்கிறார் ,

न गृहाणि न वस्त्राणि न प्राकारास्तिरस्क्रियाः |

नेदृशा राजसत्कारा वृत्तमावरणं स्त्रियः ||

ந க்ருஹானி ந வஸ்த்ரானி ந ப்ரகார ஸ்திரஸ்க்ரியாஹா

நேத்ருசா ராஜஸத்காரா வ்ருத்தமாவரணம் ஸ்திரியஹ

இதன் பொருள் :

வீடோ , அணியும் உடைகளோ,வீட்டைச் சுற்றி எழுப்பப்படும் காவல் மதில்களோ , கதவுகளோ அல்லது அரசர்கள் கொடுக்கும் விருதுகளோ ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக இராது .அவளுடைய ஒழுக்கமே (கற்பு) அவளைப் பாதுகாக்கும் கேடயம் ஆகும் — யுத்த காண்டம், அத்தியாயம் 114

Xxx

மானவ தர்ம சாஸ்திரத்தில் மநுவும் இதையே சொல்கிறார்,

பெண்களை ஆண்கள் , ஒரு வீட்டுக்குள் காவலில் வைப்பது அவர்களைக் காக்காது; பெண்மணிகள், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதே நல்ல பாதுகாப்பு ஆகும் – மநு ஸ்ம்ருதி 9-12

अरक्षिता गृहे रुद्धाः पुरुषैराप्तकारिभिः ।

आत्मानमात्मना यास्तु रक्षेयुस्ताः सुरक्षिताः ॥ ९.१२॥

அரக்ஷிதா க்ருஹே ருத்தாஹா புருஷைராப்தகாரிபிஹி

ஆத்மானமாத்மனா  யாஸ்து ஸுரக்ஷிதாஹா

“நம்பிக்கை மிக்க ஆண்களைக் காவல் காக்கவைத்தாலும்” அது அவர்களைக் காக்க முடியாது என்பதையும் மநு சேர்த்துச் சொல்லியுள்ளார். அவர்களிடம் மனக் கட்டுப்பாடு , கற்பு நெறி, இல்லாவிடில் இது சாத்தியமாகாது என்று உரைகாரர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

XXXX

ஸம்ஸ்க்ருத , தமிழ் இலக்கியங்களில் கற்பு என்பதை ஒரு முக்கிய பண்பாகக் கருதி நிறைய பாடல்களை எழுதிச் சேர்த்துள்ளனர். அருந்ததி என்னும் கற்பரசியை சங்கத் தமிழ் நூல்களும் வேத இலக்கியங்களும் போற்றிப் பாடியுள்ளன . இப்படிப்பட்ட ஒரு பண் பையோ , மாதரசியையோ மேலை நாட்டு இலக்கியத்தில் காண்பது அரிதிலும் அரிது. ஆயினும் நாடக மன்னன் ஷேக்ஸ்பியர் தனது நாடகம் ஒன்றில் டயானா DIANA  என்னும் கத பாத்திரம் வாயிலாக சொல்லுவதைப் படியுங்கள்

டயானா

என்னுடைய மானம் ஒரு மோதிரம் ;

என் கற்புதான் எங்கள் வீட்டின் ஆபரணம்

அது என் முன்னோர்களிடமிருந்து வந்தது

……….

இழப்பதற்கு அரியது

All is well that ends well, Act 4, Scene 2

Xxx

கம்பனும் கற்பு பற்றி, சீதையின் கற்பு பற்றி , அது எப்படி அவளைக் காக்கும் என்பதை குறைந்தது இரண்டு இடங்களில் காட்டுகிறான் . சீதையை தூக்கிச் செல்லும் ராவணனை தடுக்க முயன்று வெட்டுப்பட்ட ஜடாயு என்னும் பறவை அரசன், அடடா இவள் ராவணனால் சிறை வைப்படப்போகிறாளே என்ன ஆகுமோ என்று புலம்புகிறான். பின்னர் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு கவலைப்பட ஒன்றுமில்லை; சீதையின் கற்பு அவளைக் காக்கும் என்று சொல்கிறான்

3560.  பரும் சிறை இன்னன பன்னி உன்னுவான்;

அருஞ்சிறை உற்றனளாம் ” எனா மனம்

பொரும் சிறை அற்றதேல் பூவை கற்பு எனும்

இரும் சிறை இறாது ‘என இடரும் நீங்கினான்.

ஆரண்ய காண்டம் சடாயு உயிர்நீத்த படலம்

பூவை – நாகண வாய்ப்பறவை போல மொழியுடைய சீதை 

Xxx

சுந்தர காண்டத்தில் மற்றோர்  காட்சி ,

ராவணனின் அரண்மனை படுக்கை அறை , அந்தப் புரம் எல்லாவற்றிலும் சீதையைத் தேடும் அனுமன், அசோகவனத்தில் ஒரு மரத்தின் அடியில், அரக்கிகளின் காவலுக்கு  இடையில் சீதையைக் கண்டவுடன் வியக்கிறான் : அற்புதம், அற்புதம் ! இவள் இங்கே மானபங்கம் ஆகாமல் இருந்ததற்கு ஜனகன் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் காரணமா?அல்லது தர்மம் இவளை இதுவரை காத்து உதவியதா? அல்லது சீதையின் உயரிய கற்பு நெறிதான் அவளைக் காத்து நிற்கிறதா?  ஒப்பற்ற காட்சி;  எது காரணம் என்பதை என்னைப் போன்றவர் உரைக்கவும் இயலுமோ என்று கம்பன் பாடி முடிக்கிறான்.

5143. 

தருமமே காத்ததோ ? சனகன் நல் வினைக்

கருமமே காத்ததோ? கற்பின் காவலோ ?

அருமையோ !அருமையே ! யார் இது ஆற்றுவார் ?

ஒருமையே, எம்மனோர்க்கு, உரைக்கற்பாலதோ ?

-சுந்தர காண்டம் , காட்சிப் படலம்

Xxxx

ஆக கற்பு நெறியின் சிறப்பை வால்மீகி முதல் கம்பன் வரை கண்டோம். நாலடியார், பழமொழி ஐம்பெரும் காப்பியங்களிலும் நிறைய குறிப்புகள் உள .

–சுபம் —-

tags-  கற்பு , வள்ளுவர், வால்மீகி , கம்பர், ஷேக்ஸ்பியர், மநு, 

அந்தணர் பற்றி கம்பர் எச்சரிக்கை (Post No.9741)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9741

Date uploaded in London – –16 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அந்தணர் பற்றி கம்பர் எச்சரிக்கை

ராம பிரானுக்கு முடி சூட்ட தசரதன் ஏற்பாடு செய்கிறார். ஊர்ப் பெரியோர்கள் மற்றும் மந்திரிசபைகுல குரு  ஆகிய மக்களை ஜன நாயக முறையில் கருத்துக் கேட்டு அப்படி முடிவு  செய்கிறார். எல்லோரும் Yes, Yes யெஸ் யெஸ்‘  என்று தலையை அசைத்துவிட்டனர். அப்போது தசரத மா மன்னன் குல குரு  வசிஷ்டருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறான். ராம பிரானைச் சந்தித்துக் கொஞ்சம்  அரசியல் விஷயங்களைக் கதைத்து விட்டு வாருங்கள். எதுஎது தர்மம் என்று கற்பியுங்கள் , ‘ப்ளீஸ்‘ Please என்கிறான்.

வசிட்டனும் ராமனைச் சந்திக்கிறார். அவருக்குச் சொல்கிறார்.

அன்பரே அந்தணர் /பார்ப்பான் விஷயத்தில் ஜாக்கிரதையாக இரும்.

அவர்கள்  நினைத்தால் அது அப்படியே நடக்கும்

ஆவதும் ஐயராலே அழிவதும்  ஐயராலே ! கபர்தார்உஷார்ஜாக்கிரதை!’ என்கிறார்.

இதோ கம்பன் வாய் மொழி மூலம் அறிவோம்.

ஆவதற்கும் அழிவதற்கும்  அவர்

ஏவ ,நிற்கும் விதியுமென்றால்இனி

ஆவது எப்பொருள் இம்மையும் அம்மையும்

தேவரைப் பாரா வுந்துணை  சீர்த்ததே

மந்தரை சூழ்ச்சிப் படலம்அயோத்யா காண்டம்கம்ப ராமாயணம்

பொருள்

ஒருவரை உயர்த்துவதற்கும் தாழ்த்துவதற்கும் விதி கூட அந்தணப்  பெருமக்களின்

கட்டளைக்குக் காத்திருக்கும் என்றால் இப்பிறப்பிலும் மறு  பிறப்பிலும்  பூலோக

தேவர்களாக விளங்கும் பார்ப்பனர்களை போற்றுவது சிறப்புடையது ஆகும்  .

 இதனைவிட மேலான பொருள் வேறு எதுவும் இல்லை “.

(இங்கு அந்தணர் என்பதற்கு ஒழுக்கம் உடைய அறிஞர்கள் என்பது பொருள். ‘வெளுத்தது எல்லாம் பால் அல்ல’. ‘மின்னுவதெல்லாம் பொன் அல்ல’பூணுல் போட்ட எல்லோரும் பார்ப்பனர் அல்ல. மனம்மொழிமெய் என்ற மூன்றிலும் சுத்தம் உடைய- திரி கரண சுத்தி உடைய — பெரியோர் அந்தணர். அந்தக்காலத்தில் அப்படி இருந்தனர் நூற்றுக்கு 99 சதம் பிராமணர்கள்!)

இதில் அந்தணர் என்ற சொல்லே இல்லையே என்று சிலர் நினைக்கலாம்.

அதற்காக முன்னிரு பாடல்களையும்  தருகிறேன் .

அந்தணாளர் முனியவும் ஆங்கவர்

சிந்தையால் அருள் செய்யவும் தேவரில்

நொந்துளாரையும் நொய்து உயர்ந்தா ரையும் ,

மைந்த! எண்ண வரம்பும் உண்டு ஆங்கொலோ

பொருள்

டேய் சின்னப்பையா (ராமா ) கேள் !

ஐயர்கள் நினைத்த மாத்திரத்தில் சிலர் பதவி இழந்து அதல பாதாளத்தில் விழுந்தனர் ஐயர்கள் நினைத்த அளவில் சிலர் ‘பிரமோஷன்’ Promotion பெற்று பெரிய பதவியை அடைந்தார்கள் . இந்த விஷயத்தைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தேவலோகத்திலேயே கணக்கற்றவர்கள் இருக்கிறார்கள்!

(இந்த இடத்தில் உரைகாரர்கள் மூன்று எடுத்துக்காட்டுகளை இயம்புகின்றனர்: தேவர்களை விட அந்தணர்கள் உயர்ந்தோர் ஆவர். அருளிக்கூறினும் வெகுண்டு கூறினும் அது அப்படியே நடந்து விடும். அவர்கள் ஆற்றல் மிக்க நிறைமொழி (மந்திரம்) மாந்தர்கள். இந்திர பதவியில் இருந்த நகுஷன் அகத்தியன் சாபத்தினால் பூமியில் மலைப் பாம்பாக விழுந்தான். துருவாசருக்கு ஒரு தேவ லோகப் பெண் ஒரு மாலை அளித்தாள் . அதை அந்தப் பக்கம் ஐராவத யானை மேல் பவனி வந்த இந்திரன் மீது துர்வாசர் எறிந்தார். அவன் அதை வாங்கி யானையின் தலை மீது வைத்தான். அது மலரிலுள்ள மது வாசனையால் அதைத் தூக்கி கீழே எறிந்தது கோபத்தின் சின்னமான துருவாசர் இந்திரா! பிடி சாபம்! இந்த மாலை கீழே விழுந்தது போல நீயும் உன் பதவியிலிருந்து விழ க்கடவாய் ! என்றார் . இந்திரன் பதவியும் போச்சு. இன்னொரு எடுத்துக்காட்டு பிருகு- விஷ்ணு மோதல் ஆகும். பிருகு முனிவர் மும்மூர்த்திகளையும் சோதிக்க ஓவ் வொருவரையாக இன்டர்வியூ interview செய்யக் கிளம்பினார் . ஒவ்வொருவரும் அவரைக் கவனிக்காததால் ஒவ்வொரு சாபம் பெற்றனர். விஷ்ணு எப்போதும் அறிதுயிலில் இருப்பவர். தன்னைக் கவனிக்காமல் தூங்கிக் கொண்டு இருக்கிறார் என்று நினைத்து அவருக்கு சாபம் இட்டார். நீவிர் பூமியில் அவ்வப்போது மனிதனாக அவதாரம் எடுத்து யான் பெற்ற துன்பம் பெறுக என்று சபித்தார்)

அந்தணர் என்போர் துறவியரா அல்லது பார்ப்பனரா என்ற கேள்வி சிலருக்கு எழும். ‘நான் மறை அந்தணர்’ என்று சங்க இலக்கியமே பல இடங்களில் பேசுவதால் மறை  ஓதும் அந்தணர் பார்ப்பனர் என்பதில் சந்தேகமில்லை. ‘நான்மறை அந்தணர்’ என்ற சிலப்பதிகார மணிமேகலை வரிகளாலும், ‘நான்மறை முதல்வர்’ என்ற புறநானுற்றுச் சொற்களின் உரைகளாலும் வேதம் ஓதும் அந்தணர்களேதான் அவர்கள் என்பதில் ஐயம் வராது

இதோ கடைசி பாடல்

அனையர் ஆதலின் ஐய! இவ்வெய்ய தீ

வினையின் நீங்கிய மேலவர் தாளிணை

புனையும் சென்னியை ஆய்ப்புகழ்ந்து ஏத்துதி ;

இனிய கூறி நின்று ஏயின செய்தியால்

அந்தணர்கள் சொன்னபடி நடந்தே தீரும் என்பதால் கொடிய பாபத்தினின்று

நீங்கிய அந்த அந்தணர்களின் திருவடிகளைப்ப போற்றிப் புகழ் ந்து துதிப்பாயாக . மேலும் அவர்கள் ஏவிய பணிகளையும் மனமுவந்து செய்வாயாக.

ஆக அந்தணரைப் பணிவதோடு இல்லாமல் அவர்கள் சொன்னதையும் செய்க என்பது வசிட்டன் வாய் மூலம் கம்பன் தரும் கட்டளை.

இதை சிலப்பதிகாரத்தில் காணலாம். வெற்றிக் களிப்பில் மிதந்த செங்குட்டுவனைத் தட்டி எழுப்புகிறான் மாடல மறையோன் என்னும் பார்ப்பனன். “ஏய் ! போதும் உன் போர்கள். இனி போகும் வழிக்குப் புண்ணியம் சேர். யாக யக்ஞங்களைச் செய் ! என்று சொன்னவுடன் அப்படியே செய்கிறான் சேரன் செங்குட்டுவன். அது மட்டுமின்றி அந்தப் பார்ப்பனனுக்கு எடைக்கு எடை தங்கமும் பரிசாகத் தருகிறான் (காண்க- சிலப்பதிகாரம்)

–subham–

tags — அந்தணர் , கம்பர்,  எச்சரிக்கை,

பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல் (Post No.4393)

பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல் (Post No.4393)

 

 Written by London Swaminathan 

 

Date: 13 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-21

 

 

Post No. 4393

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பூணூல் அணிந்த ராவணனை, “இரா+வண்ணன்= இருட்டு போலக் கருப்பு நிறத்தன்” என்று சொல்லி அவனுக்கு திராவிட முத்திரை குத்தும் அறிவிலிகள் உலகில் உண்டு! இப்படிப் பிரித்தாளும் சூட்சி உடையோர் தமிழ் நாட்டில் காலடி எடுத்து வைப்பர் என்று முன் உணர்வால் அறிந்து இராவணனுக்கு பிராமணன் என்று ‘அக்மார்க்’ முத்திரை வைத்துவிட்டனர் அப்பரும் கம்பரும். ஒருவர் சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மற்றொருவர் 1000 . ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர்.

 

 

அப்பர் நாலாம் திருமுறையில் ராவணன் பற்றிச் சொல்லுகையில் அவனுடைய பூணூலையும் சேர்த்துப் பாடுகிறார்.

 

அசுரர்கள் ராக்ஷசர்கள் தேவர்கள், நாகர்கள் முதலியோர் , ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று நம் வேத, இதிஹாச புராணங்கள் பேசும்; ஆனால் வேற்றுமை பாராட்டி இந்துக்களைப் பிரிக்க விரும்பும் அரசியல்வாதிகளும், பிற மதத்தினரும் ஒரு சாராரை திராவிடர்கள் என்றும், பழங்குடி மக்கள் என்றும் சொல்லிப் பிரித்தாளுவர்.

 

எல்லாக் கதைகளிலும் சிவனிடமோ, பிரம்மாவிடமோ அசுரர்களும் வரம் வாங்கினர். அவர்களும் ஒரே கடவுளை வணங்கினர்; அந்தக் கடவுளரும் பாரபட்சமின்றி வரம் ஈந்தனர். ஆனால் உலக விதி, ‘அறம் வெல்லும், பாவம் தோற்கும்’ என்பதாகும். இதனால் வரம் பெற்றும் கூடத் தீயோர் வெல்ல முடியாது. ராவணனும் பல வரங்களைப் பெற்றும், செய்த தவற்றினால் உயிர் இழந்தான். ராவணன் பூணூல் பற்றி அப்பர் தரும்  தகவல் இதோ:

 

மாலினா ணங்கையஞ்ச மதிலிலங் கைக்குமன்னன்

வேலினான் வெகுண்டெடுக்கக் காண்டலும் வேத நாவன்

நூலினா  னோக்கிநக்கு நொடிப்பதோ ரளவில்வீழக்

காலினா  லூன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

பொருள்:-

பெருமையுடைய உமா தேவியார் அஞ்சுமாறு, முப்புரிநூல் அணிந்த திரு மார்பினரும், வேதம் ஓதும் திரு நாவினை உடையவருமான இராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க,  ஈசன் ஒரு நொடிப்பொழுதில் அவ்வரக்கன் அஞ்சுமாறு திருப்பாத விரலால் அமுக்கியவர். அந்த ஈசன் உறையும் இடமே கழிப்பாலை என்னும் திருத்தலம்

 

 

வேத நாவர்- மறை ஓதும் நாவினை உடையோர்

நூலினான் – நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன்

 

இரண்டும் இராவணனைக் குறித்தன எனக் கொண்டு, சாம வேத கானம் பாடியவன், நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன் என்றுரைத்தல் பொருத்தம் உடைத்து என்று தருமபுர ஆதீனப் புலவரின் தேவார உரை கூறும்.

 

இதி வேதம் ஓதுதலையும், முப்புரி நூல் அணிவதையும் சிலர் சிவன் மீது ஏற்றிச் சொல்லுவர். அப்படிச் சொல்லும் வழக்கம் அரிது. அப்படிச் சொன்னாலும் அதை பிரம்மனுக்கே ஏற்றிச் சொல்லுவர்.

 

பூணூலும் வேத நாவும் ராவணனையே குறிக்கும் என்பதற்கு கம்ப ராமாயணம் துணை புரியும்; இதோ கம்பன் கூற்று:–

வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்

ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் — என்று சுந்தர காண்ட நிந்தனைப் படலத்தில் ராவணனை வருணிக்கிறான் கம்பன்; இதன் பொருள்:-உலகைப் படைத்தவன் பிரம்மன்; அவன் மகன் புலஸ்தியன்; அவன் மகன் விசிரவசு; அவன் மகன் ராவணன்; ஆயிரம் கிளைகளை உடைய சாம வேதத்தில் வல்லவன்.

பிரம்மாவை வேதியன், பிராமணன் என்றே இலக்கியங்கள் போற்றும்

அக்க குமாரன் வதைப் படலத்தில் கம்பன் சொல்லுவான்:

அயன் மகன் மகன் மகன் அடியில் வீழ்ந்தனள்

மயன்மகள் வயிறு அலைத்து  அலறி மாழ்கினாள் என்று. இதன் பொருளாவது– மயனுடைய மகளான மண்டோதரி தன் கணவனான ராவணனிடம் சென்று வயிற்றில் அடித்துக்கொண்டு அலறினாள்– சீதையை விட்டுவிடு என்று. ராவணனுக்குக் கம்பன் கொடுக்கும் அடை மொழி– பிரம்மனின் மகனான, புலஸ்தியன் மகனான, விசிரவசுவின் மகனான ராவணன்  என்பதாகும்.

அதே சுந்தர காண்டத்தில் பிணிவீட்டு படலத்தில்,

அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்

தந்தவன் அன்புக்கு ஆன்ற தவநெறி உணர்ந்த தக்கோய்” என்று சொல்லுவான்; உலகங்கள் மூன்றையும் ஆதிகாலத்தில் படைத்த அந்தணன் பிரம்மாவின் வழி வந்தவனே! என்று  ராவணனை போற்றும் வரிகள் இவை. ஆக கம்பராமாயணம் முழுதும் ராவணன் ஒரு பிராமணன் என்று அடிக் கோடிட்டுக் கொண்டே செல்வான் கம்பன். இதன் காரணமாகவே தேவாரத்துக்கு உரை எழுதிய பெரியாரும் பூணுல் அணிந்ததையும் வேத பாராயணம் செய்ததையும் அப்பர் பாட்டில் ராவணனுக்கு உரித்தானதாகச் சொல்கி றார். நாம் அதை ஏற்பதில் தயக்கம் ஏதுமில்லை.

 

சுபம் –

 

கண்ணாடி முன்னர் ஷேக்ஸ்பியரும், கம்பனும்!

symposiumIII

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Wriiten  by S NAGARAJAN

Date: 28 September 2015

Post No: 2194

Time uploaded in London :– 15-12

(Thanks  for the pictures)

 

கம்பன் காவிய இன்பம்

கண்ணாடி முன்னர் ஷேக்ஸ்பியரும், கம்பனும்!

.நாகராஜன

 

கண்ணாடி

உலக மகாகவி கம்பன் என்று சொன்னால் உதட்டைப் பிதுக்குவர் ஆங்கில இலக்கியம் நன்கு அறிந்தோர் – பழைய காலத்தில்!

அது ஆங்கிலேயர் அரசாண்ட காலம். தமிழைப் படிக்க வாய்ப்பில்லை. வாய்ப்பிருந்தாலும் தமிழில் ஒன்றும் இல்லை என்று சொல்வது ஒரு வித கௌரவம்!

இரண்டு மொழிகளின் இலக்கியங்களையும், கூடவே சம்ஸ்கிருத இலக்கியங்களையும் படித்தோர் இன்று மனமார ஒப்புக் கொள்வர் கம்பன் உலக மகா கவி தான் என்று.

உதாரணத்திற்கு ஒரே ஒரு வார்த்தையை எடுத்துக் கொள்வோம்.

ஆடி! கண்ணாடி!!

mirror2

வள்ளுவரின் கண்ணாடி

வள்ளுவர், குறளில் எதிரில் இருப்பதை உள்ளபடி கண்ணாடி பிரதிபலிப்பது போல நெஞ்சம் கடுத்ததைக் காட்டி விடும் முகம் என்றார். கண்ணாடிக்கு அவர் பயன்படுத்திய சொல் பளிங்கு.

“அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்” (குறள் 706)

வள்ளுவரிலிருந்தே கண்ணாடி உவமை பல்வேறு விதமாக காவியங்களில் இடம் பெற்று வந்துள்ளது.

mirror1

ஆலங்குடி வங்கனாரின் கண்ணாடி

குறுந்தொகையில் ஒரு பாடல் (எண் 8). ஆலங்குடி வங்கனார் என்ற புலவர் பாடிய பாடல் இது.

பரத்தை ஒருத்தி வீட்டிலிருந்து தன் இல்லம் ஏகிய தலைவன் ஒருவனை, அந்தப் பரத்தை தன் பெண்டாட்டி சொன்னபடி அவன் ஆடுவதாக எல்லோரும் கேட்க (எரிச்சலுடன் நையாண்டியாக) இதைக் கூறுகிறாள்.

கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

எம்மில் பெருமொழி கூறித் தம்மில்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப்பாவை போல

மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே

வயலில் இருக்கும் மரம் ஒன்றிலிருந்து கீழே விழும் இனிய பழத்தைக் குளத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்விப் பிடிக்கும் நாட்டவனான ஊரன், என்னுடைய வீட்டில் இருக்கும் போது பெரும் பேச்சைப் பேசுவான் (அதாவது பரத்தை வீட்டில் ஆட்டம் போடுவான்) ஆனால் தன் இல்லம் ஏகி விட்டாலோ கண்ணாடி முன்னால் கையைத் தூக்கினால் அதுவும் தூக்குவது போல தன் மனைவிக்குப் பணிவிடை செய்வான். (அவள் பேச்சு தான் அங்கே; அங்கு ஆட்டம் மாறும் – அவள் சொல்வதற்கு ஆடுவான்! அதாவது விளையாட்டு விதிகளே மாறி விடும்).

என்ன ஒரு பாடல் பாருங்கள், கண்ணாடியை மையமாக வைத்து! செய்ததைச் செய்யும் கண்ணாடி போல ஆகி விடுவானாம் அங்கே. மனைவி கையைத் தூக்கினால் இவனும் ஆடி போலத் தூக்கி ஆட வேண்டியது தான்!

big_square_gilt_mirror_left

முகுரவானனன்

திருதராஷ்டிரனை விவரிக்க வந்த வில்லிப்புத்தூரார் வில்லி பாரதத்தில் முகுரவானனன் என்று கூறுகிறார் (ஆதிபருவம் சம்பவச் சருக்கம் பாடல் 115)

முகுரம் என்றால் கண்ணாடி. ஆனனம் என்றால் முகம். கண்ணாடி போன்ற முகத்தை உடையவன் என்று பொருள். கண்ணாடி எப்படி தான் பிறரால் காணப்பட்டு பிறரைத் தான் காணும் உணர்ச்சி அற்று இருக்கிறதோ அது போல திருதராஷ்டிரனை அனைவரும் பார்க்க முடிந்தாலும் அவர்களைக் காண முடியாத பிறவிக் குருடன் அவன் என்பதை இந்தப் பெயர் விளங்கச் சொல்கிறது.

இனி உலக இலக்கியத்திற்கு வருவோம்.

ஷேக்ஸ்பியரின் கண்ணாடி

ஷேக்ஸ்பியர்! இலக்கியப் பிரியர்கள் விழிகளை விரிப்பர். அவர் இயற்றிய 43 நூல்களில் எட்டு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து நானூற்றி இருபத்தியொன்று (8,84,421) வார்த்தைகள் இருப்பதாக எழுத்தெண்ணிப் படித்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த எட்டு லட்சத்து எண்பத்திநான்காயிரம் + வார்த்தைகளில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாத வார்த்தைகள் 10. அதில் கண்ணாடியும் ஒன்று!

அவரது படைப்பான Measure for Measure இல் (II.II) ஒரு காட்சி. இஸபெல்லாவின் சகோதரனான க்ளாடியோவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது – லார்ட் ஏஞ்சலோவின் ஆணைப்படி. இஸபெல்லா தன் சகோதரனை விடுவிக்க வேண்டும் என்று ஏஞ்சலோவிடம் மன்றாடுகிறாள் இருவரும் மனிதர்களிடம் உள்ள குறைபாடுகளைப் பற்றி விவாதிக்கின்றனர். அப்போது, “Mankind’s glassy essence’ என்று ஷேக்ஸ்பியர் கூறுகிறார். இதன் அர்த்தம் யாருக்கும் சரிவர இன்று வரை விளங்கவில்லை. Glassy என்றால் கண்ணாடி போல உடை படுவதா? அல்லது பிரதிபலிப்பதா? அல்லது குணாதிசயம் அல்லது மனநிலை என்ற உளவியல் பொருளை எடுத்துக் கொள்வதா? இதுவரை ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. (அர்த்தம் சரிவர விளங்காத ஷேக்ஸ்பியருடைய இதர ஒன்பது வார்த்தைகள்: Armgaunt, balk’d, Braid, Cock- a-hoop, Demuring, Eftest, Impeticos, Portagem Watch-case)

427-Kambar

கம்பனின் இரு கண்ணாடிகள்

இனி கம்பனுக்கு வருவோம்:

சுந்தரகாண்டம், கடல் தாவு படலத்தில் ‘எழுந்தோடி’ எனத் தொடங்கும் 41வது பாடல்!

அநுமன் கடலிலிருந்து எழுந்த மைநாக மலையைப் பார்க்கும் காட்சி!

அழுங்கா மனத்து அண்ணல் (அற்புதமான இந்த சொல் தொடரைப் பற்றிய எமது கட்டுரை ஞான ஆலயம் இதழில் வெளியிடப்பட்டுள்ளதைப் படிக்கலாம்)

‘எழுந்து ஓங்கி விண்ணோடு மண் ஒக்க, இலங்கும் ஆடி

உழுந்து ஓடு காலத்திடை, உம்பரின் உம்பர் ஓங்கிக்

கொழுந்து ஓடி நின்ற கொழுங் குன்றை வியந்து நோக்கி,

அழுங்கா மனத்து அண்ணல், ‘இது என் கொல்?’ எனா அயிர்த்தான்’

எதற்கும் சலியாத மனத்தினாகிய அநுமன் விளங்குகின்ற கண்ணாடி ஒன்றின் மீது  இட்ட ஓர் உளுந்து உருள்கின்ற காலத்திற்குள்ளே ஆகாயத்திற்கும் மேலாக வியாபித்து மேலும் கீழும் எங்கும் முடியும் அடியும் படர்ந்து நின்ற மைநாக மலையை ஆச்சரியத்துடன் பார்த்து , ‘இது என்ன’  எனச் சந்தேகித்தான்.

கண்ணாடி ஒன்றில் உளுந்து ஒன்றை உருட்டிப் பாருங்கள். அது எந்த வித உராய்வுமின்றி விரைந்து ஓடும் ஒரு க்ஷணத்திற்குள்ளாகவே. இதில் உள்ளிருந்த மைநாக மலை பிரதிபலிப்பு போல வந்ததையும் பிரதிபிம்பம் காட்டும் கண்ணாடி உவமை எடுத்துக் காட்டுகிறது.தடையின்றி இயங்குதல், விரைவு, பிரதிபிம்பம் ஆகிய மூன்றை கண்ணாடியில் உருளும் உளுந்து காட்டுகிறது.

இலங்கை நகரை வர்ணிக்க வேண்டும். ராவணனின் இலங்கையை யாராலாவது சரியாக வர்ணிக்க முடியுமா? உலகப் பெரும் புலவராக இருந்தாலும் சரி தான்! முடியுமா?

இப்போது கண்ணாடியின் உதவியை நாடுகிறான் கம்பன். இன்னொரு கண்ணாடியைக் கம்பன் உவமையாகக் காட்டுகிறான். இலங்கை நகருக்காக! அந்த அருமையான பாடல் இது:-

அநுமன் இலங்கைக்கு இப்பால் உள்ள பவள மலை மீது கால் பதிக்கிறான். இலங்கையை நோக்குகிறான்.

மண் அடி உற்று, மீது வான் உறு வரம்பின் தன்மை

எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி,

விண்ணிடை, உலகம் என்னும் மெல்லியல், மேனி நோக்கக்

கண்ணடி வைத்தது அன்ன இலங்கையைத் தெரியக் கண்டான்

(பாடல் 79, கடல் தாவு படலம்)

நிலவுலகின் அடிப்பாகம் வரையிலும் வேர் ஊன்றப் பெற்று,உச்சியோ வானுலகில் பொருந்துதலால், உலகத்தின் மேல் மற்றும் கீழ் எல்லை நிலையை மதிப்பிடுவது போன்றதும் தன்னுடைய பாதம் தங்கியதுமான அந்தப் பவள மலையின் மீது நின்று அநுமன், வானத்திலுள்ள தேவலோகமாகிய பெண் தனது வடிவழகைப் பார்ப்பது போல  நிலைக் கண்ணாடி வைத்தது போல விளங்குகின்ற இலங்கையைப் பார்த்தான். வானுலகத்தின் மறுபதிப்பு அல்ல, அல்ல, பிரதிபிம்பமே இலங்கை.

mirror-03

நமக்கு நாமே உருவகப்படுத்த வேண்டும்

கண்ணாடி உவமை கவிஞனின் வேலையைக் கவினுற முடித்து விட்டது. கண்ணாடியின் மீது உளுந்து ஓடுவதை எந்த ஒருவராலும் தானே எளிதில் செய்து பார்க்க முடியும். தடையின்மை, வேகம், பிரதிபிம்பம் ஆகியவற்றை நேரில் உணர முடியும். இலங்கை கண்ணாடியோ ஒவ்வொருவரின் கற்பனையைப் பொருத்து அமையும். தேவலோகம் பற்றிய கற்பனையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் செய்து கொள்ளலாம். அதன் பிரதிபிம்பமே இலங்கை.

கற்பனை செய்து கண்டு கொள் என்ற இந்த உத்தி, உலக மகா கவிகளுள்ளே உன்னதமான ஒருவருக்கு மட்டுமே உதிக்க முடியும்! கம்பன் அப்படிப்பட்ட அருமையான கவி. உலக மகாகவியைக் கண்ணாடி முன்னால் நிறுத்தினால் அதன் பிரதிபிம்பமாக கம்பன் அமைவான். (இங்கும் அவனது கண்ணாடி உவமை தான் உதவுகிறது!!!)

உலகின் ஒப்பற்ற கவிஞன் கம்பன்

இப்போது பார்ப்போம் :- வள்ளுவரின் கண்ணாடி உளவியல் ரீதியிலான நெறி முறைக் கண்ணாடி. ஆலங்குடி வங்கனாரின் கண்ணாடி வாழ்வியல் அங்கத்தின் நாடக பாணியிலான கண்ணாடி. வில்லிப்புத்தூராரின் கண்ணாடி ஒரு மனிதரை விளக்க வந்த கண்ணாடி. ஷேக்ஸ்பியரின் கண்ணாடி தெளிவற்ற கண்ணாடி. கம்பனின் இரு கண்ணாடிகளோ ஒன்று செய்முறைக்கு எளிது; இன்னொன்றோ கற்பனைக்கும் அரிது; அவரவர் மனக்குதிரையின் வேகத்தையே அது பொருத்திருக்கும்.

இப்போது எடை போட்டுப் பார்த்தால் கண்ணாடி (முன்னாடி) முன்னர் ஷேக்ஸ்பியர், கம்பரில் யார் ஜொலிக்கிறார்கள்?!

முடிவு உங்கள் கையில்!

***********