Written by S NAGARAJAN
Date: 21 MAY 2018
Time uploaded in London – 6-33 AM (British Summer Time)
Post No. 5031
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ரமண தரிசனம்
அனைவருக்கும் சமமான ரமணரின் கருணை மழை!
ச.நாகராஜன்
1
பகவான் ரமண மஹரிஷியிடம் பக்தர் ஒருவர் வந்தார்.
அவர் கேட்டார்: கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் தானே!
ரமணர் : ஆமாம்.
பக்தர் : அவரது கருணையும் அனைவருக்கும் பொதுவானது தானே!
ரமணர் : ஆமாம்
பக்தர் : அப்படியானால் அவர் எனக்கு மட்டும் ஏன் கருணை காட்ட மாட்டேன் என்கிறார்.எப்பொழுதும் துன்பம் தானே எனக்கு வருகிறது.
ரமணர் : நீ பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்திருக்கிறாயே. அதை நிமிர்த்தி வைத்தால் தானே கருணை மழை பொங்கித் ததும்பும்!
பக்தர் புரிந்து கொண்டார். இறைவன் அனைவருக்கும் சமமான கருணையைத் தான் பொழிகிறார். அதை ஏற்க நாம் தயாராக – பாத்திரத்தைத் திறந்து வைத்து – இருக்க வேண்டும்.
மனதைத் தூய்மையாக, ஏற்கக்கூடிய பக்குவ நிலையில் வைக்க வேண்டும்.
அத்துடன் பாத்திரம் சிறிய அளவா, அண்டாவா அல்லது மிகப் பெரியதா என்பதையும் நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
இறைவனின் கருணை மழையைப் போலவே பகவான் ரமணரின் கருணை மழையும் அனைவருக்கும் பொதுவானது.
2
பகவானிடம் அருளாசி பெற பாரதத்தின் முதல் ராஷ்ட்ரபதி பாபு ராஜேந்திர பிரசாத் வந்தார். அருளாசி பெற்றார்.
ராஜாஜி வந்தார். மகாகவி பாரதியார் வந்தார். ஏராளமான துறவிகள், பேராசிரியர்கள் வந்தனர். ரமண தரிசனத்தால் பெரும் பேறு பெற்றனர்.
அனைவர் மீதும் அவரது கருணை மழை சமமாக இருந்தது.
உயர்தட்டில் இருந்தவர்களுக்குத் தான் அவரது கருணை என்பது இல்லை; ஏழையாக, சாமானியராக, எழுத்தறிவில்லாதவராக இருந்தாலும் கூட அவர்களுக்கும் அவர் பொது தான்; அவர்கள் மீதும் அவரது கருணை அளப்பரியதாக இருந்தது.
ஒரு சம்பவம்.
பூவன் என்ற ஆட்டிடையனின் ஆடு தொலைந்து விட்டது. ஒரே கவலை. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. ஆடு கர்ப்பமாக வேறு இருந்தது. அவனுக்கு நம்பிக்கையே போய் விட்டது. காட்டு மிருகங்கள் அதை அடித்துத் தின்று விட்டதோ!
ஒரு நாள் ஆசிரமம் வழியே சென்று கொண்டிருந்த அவன் பகவானைப் பார்க்க, அவர் அவனை எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். பூவன் தனது ஆடு தொலைந்த விஷயத்தைச் சொன்னான். பகவான் வழக்கம் போலப் பேசாமல் இருந்தார். பிறகு அவனிடம் சில கற்களைத் தூக்கத் தனக்கு உதவுமாறு கேட்டார். அவனும் சந்தோஷமாக அந்த வேலையைச் செய்தான். அந்தப் பணி முடிந்ததும் பகவான், “இந்தப் பக்கமாகப் போ” என்று ஒரு வழியைச் சுட்டிக் காட்டினார். “அங்கு உன் ஆட்டை வழியில் காண்பாய்” என்றார் அவர். அதே மாதிரி தனது ஆட்டை இரண்டு குட்டிகளுடன் அவன் கண்டான்!
பூவன், “என்ன அற்புதமான பகவான் இவர்! அவரது வார்த்தைகளின் சக்தியைப் பாருங்கள். என்னப் போன்ற ஒரு ஏழையைக் கூட அவர் மறக்கமாட்டார். எனது பையன் மாணிக்கத்தைக் கூட அவர் அன்புடன் நினைவு வைத்துக் கேட்கிறார். பெரியவர்கள் எப்போதுமே அப்படித்தான். கோடையில் பசுக்களைப் பார்க்கும் சிறு பணியை அவருக்காகச் செய்வதில் எனக்கு சந்தோஷம்.” என்றான்.
முனகல வெங்கடராமையா தொகுத்திருக்கும் அற்புத நூலான
Talks with Sri Ramana Maharshi என்ற நூலில் 16 டிசம்பர் 1936 தேதியிட்ட பதிவு இது: (ஆங்கில மூலத்தை அப்படியே கீழே காணலாம்.)
Poovan, a shepherd, says that he knows Sri Bhagavan since thirty
years ago, the days of Virupakshi cave. He used at times to supply
milk to the visitors in those days.
Some six years ago he had lost a sheep, for which he was searching
for three days. The sheep was pregnant and he had lost all hopes of
recovering her, because he thought that she had been set upon by
wild animals. He was one day passing by the Asramam, when Sri
Bhagavan saw him and enquired how he was. The man replied that
he was looking out for a lost sheep. Sri Bhagavan kept quiet, as is
usual with Him. Then He told the shepherd to help in lifting some
stones, which he did with great pleasure. After the work was finished,
Sri Bhagavan told him: “Go this way”, pointing the footpath towards
the town. “You will find the stray sheep on the way”. So he did and
found the lost sheep with two little lambs.
He now says, “What a Bhagavan is this! Look at the force of his
words! He is great! He never forgets even a poor man like me. He
remembers my son Manikkam also with kindness. Such are the great
ones! I am happy when I do any little work for Him, such as looking
to the cows when they are in heat.
3
இதே போல பகவானுக்கு பௌர்ணமி தோறும் க்ஷவரம் செய்ய வரும் நடேசனும் அவர் பால் அதீத பக்தி கொண்டவர். பகவானுக்கு நமஸ்காரம் செய்து விட்டுத் தான் அவர் தன் வேலையைத் தொடங்குவார். ஒரு நாள் மலையில் வழியில் பார்த்த பகவானை அவர் நமஸ்காரம் செய்ய, “இங்கு எதற்கு?” என்றார்.
என்ன அற்புதமான குறிப்பு!
பௌர்ணமி தோறும் கோசாலையில் க்ஷவரம் செய்ய வரும் போது செய்யும் நமஸ்காரமே போதுமே என்று கருணையுடன் குறிப்பால் உணர்த்த அவர் கூறிய அன்புச் சொற்கள் அது.
இன்னொரு முறை நடேசன் அவசரமாக செல்ல வேண்டிய ஒரு தருணத்தில்,” அவன் போக வேண்டும்; ஆனால் சாப்பிட்டிருக்க மாட்டானே” என்றார் பகவான்.
குறிப்பறிந்த தொண்டர் உடனடியாக சமையலறைக்குச் சென்று நடேசனுக்கு உணவு கொண்டு வந்தார்.
தழுதழுத்த குரலில் சொன்னார் நடேசன்: “பகவானுக்கு அனைவருமே சமம் தான். பொதுவாக அனைவரும் உண்ட பின்னரே நாங்கள் உண்பது வழக்கம். இன்று பாருங்கள், பகவானின் கருணையை!” என்றார்.
எந்த வித பேதமுமின்றி பொழிவதே இறைவனின் கருணை.
அந்த அவதாரமாக வந்த பகவானுக்கும் அதே கருணை இருப்பது இயல்பு தானே!
***