Written by S NAGARAJAN
Date: 15 JULY 2018
Time uploaded in London – 8-33 AM (British Summer Time)
Post No. 5219
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
புத்த தரிசனம்
எல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர்
ச.நாகராஜன்
அற்புதமான புத்த சரித்திரம் அவரது எல்லையற்ற கருணை வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைக் காண்பிக்கிறது. புத்த ஜோதியைத் தரிசித்த யாவரும் பரிசுத்தமாயினர்;ஜோதிக்குள் ஐக்கியமாயினர்.
இங்கு சில நிகழ்வுகளை புத்த சரித்திரத்திலிருந்து பார்க்கலாம்.
அங்குலிமாலா என்ற கொள்ளைக்காரன் அந்த நாளில் வாழ்ந்து வந்தான். அவனை நினைத்தாலே அனைவரும் பயப்படுவர். 999 பேரைக் கொன்று அவர்களின் விரல்களை அறுத்து அதை மாலையாகத் தொடுத்து அணிந்து கொண்டவன் அவன். இரக்கமின்றி எதிரில் வருபவரைக் கொன்று குவித்த கொலைகாரன். ஆகவே அவன் பெயரைச் சொன்னாலே அனைவரும் நடுங்குவர்.
ஒருநாள் புத்தர் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியைப் பார்த்த மக்கள் அவர் அருகில் சென்று அந்த வழியில் போகவேண்டாம் என்றும் அது நேரடியாக அங்குலிமாலாவின் இருப்பிடத்திற்குக் கொண்டு சேர்த்து விடும் என்றும் எச்சரித்தனர்.
அமைதியாக அதைக் கேட்டுக் கொண்ட புத்தர் தன் வழியிலே செல்லலானார்.
அங்குலிமாலா ஆயிரமாவது நபருக்காகக் காத்திருந்தான். எதிரிலே புத்தர் வருவதைக் கண்ட அவன், “என்ன, என்னைக் கண்டு பயமில்லையா! ஆயிரமாவது ஆளான உன்னை என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?” என்று கர்ஜித்தான்.
அமைதியாக புத்தர் அவனை நோக்கிப் புன்முறுவலுடன் முன்னேறினார்.
அச்சமின்றி தன் எதிரில் வரும் ஜோதி வெள்ளத்தைக் கண்டு அவன் பிரமித்தான். அவர் விரலை அறுக்க முயன்றாலும் அவனால் முடியவில்லை. அவர் பாதத்தில் வீழ்ந்தான்.
அந்தக் கணமே கொள்ளைக்காரன் அங்குலிமாலா மறைய, புதிய புத்த சீடனான அங்குலிமாலா உருவானானான். அவன் புதிய பெயரையும் பெற்றான்.
பத்து வருடங்கள் கழிந்தன. புத்தர் ஒருநாள் அவனை அழைத்து, “ நீ தகுதி பெற்றவனாகி விட்டாய்! சென்று தர்ம பிரச்சாரம் செய்” என்று கட்டளையிட்டார்.
ஆனால் மக்கள் அங்குலிமாலாவைக் கற்களைக் கொண்டு அடித்தனர். ஆனால் அங்குலிமாலா புன்சிரிப்புடன் அவர்களை எதிர்கொண்டான். அவர்கள் ஆச்சரியப்பட்டனர். எதனால் இந்த மாற்றம்?
அங்குலிமாலா கூறினான்: “ நான் முன்பு செய்த கொடுமைகள் அவர்களுக்குக் கோபத்தை உருவாக்கியது உண்மை தான். ஆனால் அதை விட அதிக கோபம் இப்போது அவர்கள் என்னைக் கல்லைக் கொண்டு எறியும் போதும் நான் பேசாமல் இருப்பதால் அதிகம் ஏற்படும். என் உள்ளார்ந்த அமைதியை அவர்கள் உணர்வர். அந்த அற்புதமான தெய்வீக ஞானத்தைப் பெற அவர்கள் தாமாகவே முன் வருவர்.”
உண்மை! அதிசயிக்கத் தக்க மாற்றத்தைக் காண்பித்த கொள்ளைக்காரன் இப்போது புத்த பிக்ஷுவாக மாறியதைக் கண்டு வியந்த மக்கள் இப்போது அவன் கூறும் தர்மோபதேசத்தைக் கேட்கத் தயாராயினர்.
ஆம்ரபாலி என்று பெரும்பாலோரால் அறியப்படும் அம்பாபாலிகா வைசாலி நாட்டின் பேரழகி. சம்ஸ்கிருதத்தில் ஆம்ரம் என்றால் மாமரத்தைக் குறிக்கும். பாலி இலையைக் குறிக்கும். அவள் அரசின் மாந்தோப்பில் கண்டெடுக்கப்பட்டதால் அவளுக்குப் பெயர் ஆம்ரபாலி ஆயிற்று.
அவளை அடைய பெரும் பிரபுக்களும் செல்வந்தர்களும் விரும்பினர். இதை விரும்பாத வைசாலி மன்னன் இதைத் தடுக்க ஒரே வழி அவளை அரசவை நடனமங்கை ஆக்குவது தான் என்ற முடிவுக்கு வந்து அவளை அரசவை நடன மங்கை ஆக்கினான். ஆனால் அடுத்த நாட்டு அரசனான பிம்பசாரன் அவளுக்கு இணையான இன்னொரு அழகியைத் தனது நாட்டில் அரசவை நடனமங்கையாக அறிவிக்க முடியாமல் தவித்தான். ஆகவே போரை மேற்கொண்டு வைசாலியை ஜெயித்து அவளை மணந்தான். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.
ஒருமுறை ஆம்ரபாலி புத்தருக்கு பிக்ஷை அளிக்க விரும்பினாள். அதே தினத்தில் லிச்சாவி மன்னனும் புத்தரை விருந்துக்கு – பிக்ஷைக்கு – அழைத்தான்.
ஆனால் மன்னனின் கோபத்தையும் மீறி ஆம்ரபாலி இல்லத்திற்கு புத்தர் விருந்தை ஏற்க ஏகினார். அங்கு அவளுக்கு புத்த தர்மத்தை உபதேசித்தார்.
எல்லையற்ற கருணைவெள்ளமான புத்த தரிசனத்தை அம்பாபாலிகா பெற்றாள். உடனே மாறினாள். அவளும் அவளது மகன் விமல் கொண்டனனும் புத்தமதம் தழுவினர்.
ஒருமுறை அங்குட்டராபா பட்டிணத்தில் ஆபனா நகருக்கு புத்தர் தன் 1250 சீடர்களுடன் விஜயம் செய்தார். 1250 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஒரே வரிசையில் புத்தரின் பின் சென்றதை மக்கள் வியப்புடன் பார்த்தனர். வீதி வழியே அவர்கள் செல்ல மக்கள் வீதியின் இருபுறமும் திரளாக நின்று அவர்களை வரவேற்று வணங்கினர்.
கேனியா என்று ஒரு பிராமணர் புத்தரின் அருகில் சென்று அவரை வணங்கி அவரிடம் தனது இல்லம் வந்து பிக்ஷையை ஏற்குமாறு கூறினார்.புத்தர் மறுத்து விட்டார்.
“பெரிய குழுவுடன் நான் வந்திருக்கிறேன். அனைவருக்கும் உணவு சமைப்பது என்றால் அது பெருத்த சிரமத்தை உருவாக்கும். வர இயலாது” என்றார் புத்தர்.
கேனியா மூன்று முறை அழைத்தார். அதற்குப் பின்னர் புத்தர் அவர் அழைப்பை ஏற்றார்.
1250 பேருக்கு உணவைச் சமைப்பதில் ஏற்படும் கஷ்டமும், அவர்களுக்குப் பரிமாறுவதில் உள்ள சிரமத்தையும் உலகாயத ரீதியாக அறிந்ததால் புத்தர் அதை மறுத்தார். மூன்று முறை அழைத்தவுடன் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.
மறுநாள் தகுந்த குழுக்களை அமைத்து 1250 பேருக்கும் கேனியா விருந்தளித்தார்.
விருந்துக்குப் பின்னர் புத்தர் தர்மோபதேசத்தைச் செய்தார்.
அனைவரும் பயனடைந்தனர்.
புத்தர் போதி மரத்தடியில் ஞானத்தை அடைந்த பின்னர், முதலாவதாக தான் மதித்து கௌரவிக்க வேண்டிய குரு யாராவது தனக்கு இருக்கிறாரா என்பதைத்தான் கண்டுபிடிக்க முயன்றார். தனக்கு இணையான ஒரு நபரையே அவரால் கண்டு பிடிக்க முடியாமல் போனது. ஆகவே குருவைக் கண்டு பிடிக்கும் பிரச்சினை இன்னும் சிக்கலானது. அப்படி ஒரு குரு இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.
ந மே ஆசார்ய அத்தி சதிஸா மேன நவீஜ்ஜா இதி (எனக்கு ஒரு குரு இல்லை; என்னை ஒத்த இன்னொருவரும் இல்லை)
ஆகவே தான் புத்தர் தனது தர்மத்தையே தனது குருவாகக் கொண்டார்.
அந்த தர்மத்தை அஹிம்சா வழியில் அனைவருக்கும் உபதேசித்தார்.
அவரது கருணைவெள்ளம் கரை புரண்டு ஓட அதில் நனைந்து மக்கள் மகிழ்ந்தனர்.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
***
You must be logged in to post a comment.