சுவையான கதை: கர்ணன் கேட்ட கேள்வியும் கண்ணன் சொன்ன பதிலும்

கர்ண

கட்டுரை எண் 1713; தேதி 13 மார்ச் 2015

எழுதியவர் – லண்டன் சுவாமிநாதன்

லண்டன் நேரம்—காலை 5—53

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமண்ய சிவா மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்ற ஒரு அரிய நூலை எழுதியுள்ளார். பெரிய புத்தகம்—அரிய புத்தகம் – 830 பக்கங்கள் – வெளியாயான ஆண்டு 1925. தமிழ்நாட்டில் கிடைப்பது அரிது என்றவுடன் லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று அதைப் படித்தேன். அவர் சொன்ன சுவையான கதை. ஆனால் அவர் சொற்களில் சொல்லாமல் சுருக்கமாக என் சொற்களில் சொல்லிவிடுகிறேன். அன்ன தானத்தின் பெருமையைச் சொல்லும் கதை இது:–

போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கிறான் கொடை வள்ளல் கர்ண மாமன்னன். தண்ணீர்! தண்ணீர்! ஒரே தாகம், தயவு செய்து தண்ணீர் தாருங்கள் என்று நாக்கு வறள கத்துகிறான். அந்தப் பக்கம் வந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஒரே புன் சிரிப்பு! கண்ணா, நீயாவது தண்ணீர் தரக்கூடாதா! என்று கெஞ்சுகிறான்.

கண்ணன் உடனே, இதோ தண்ணீர் என்று ஊற்றுகிறார். என்ன அதிசயம்! அவன் கையில் விழுந்தவுடன் எல்லாம் தங்கமாக மாறி ஓடி விடுகிறது. கண்ணா, இது என்ன வேலை? சாகப் போகிறவனுக்கு தங்கம் எதற்கு? எனக்கு தண்ணீர் கொடு, நாக்கு வறண்டு போய்விட்டது என்று கதறுகிறான்.

கண்ண

கிருஷ்ணருக்குமே புரியவில்லை. ஒரு நொடியில் ஞான த்ருஷ்டியில் பார்த்துவிட்டு மீண்டும் புன்சிரிப்பை நெளியவிடுகிறார். கர்ணா! வாழ்நாள் முழுதும் வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் தானம் கொடுத்தவன் நீ! பொன்னாக வாரி வாரி இறைத்தாய். ஆனால் ஒரு நாள் ஒருவன் பசியோடு வந்து அன்னம் கேட்டான். தங்கத்தை மட்டும் கொடுத்து அகந்தை ஏறிப்போன நீ, சோறா? அதோ அங்கே இருக்கிறதே அன்ன சத்திரம்– என்று உன் ஆள்காட்டிவிரலால் சுட்டிக் காட்டி அவனை அனுப்பி விட்டாய். அதனால்தான் இப்பொழுது அன்னமும் தண்ணீரும் கிடைக்காமல் தங்கமாக வருகிறது. அதனால் வருத்தப்படாதே. நீ அன்ன தானமே செய்யாவிட்டாலும் “அதோ! அன்ன சத்திரம்” — என்று ஒரு விரலால் சுட்டிக் காட்டினாயே! அந்த விரலில் ஒரு அன்னதானம் போட்ட புண்ணியம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதை வாயில் வைத்து சப்பு என்றார்.

இதைக் கேட்ட கர்ணன் நாணிக்கோணி தனது ஆள்காட்டி விரலை வாயில் வைக்கிறான். தண்ணீர் ஊற்றெடுத்துப் பெருகுகிறது. கன்னனுக்கும் கண்ணனுக்கும் – இருவருக்கும் — ஆனந்தம். அன்னதானத்துக்கு அவ்வளவு சக்தி. சாகும்போதும் உதவும், செத்தபின்னர், போகும் வழியிலும் உதவும்!!!

கன்னன் = கர்ணன்

karnanan-1-e13315594338311

கஞ்சன் பட்டபாடு! இன்னும் ஒரு கதை!!

இந்தக் கதையை ஒரு மஹா லோபி (வடித்தெடுத்த கஞ்சன்) கேட்டு விட்டான். எச்சில் கையாலும் காக்கா ஓட்டாதவன் அவன்! அடடா! ஒரு விரலால் அன்ன சத்திரத்தைக் காட்டினால் இவ்வளவு புண்ணியமா. என்னிடம் யாரவது வரட்டும் என்ன செய்கிறேன் என்று பார் என்று எண்ணிக் கொண்டே போனான்.அந்த நேரத்தில் ஒருவன் வந்து சேர்ந்தான்; ஐயா! பசிக்கிறது; சோறு இருந்தால் போடுங்கள் என்றான்.

உடனே அவன் ஒரு விரலால் சுட்டிக்காட்டவில்லை! உடம்பு முழுதையும் வளைத்து நெளித்து சுழித்து அன்ன சத்திரம் இருக்கும் திசையைக் காட்டி அங்கே போ, சோறு கிடைக்கும் என்று விரட்டினான். இப்படி உடம்பு முழுதையும் நெளித்து விரட்டி அடித்ததால் அடுத்த ஜென்மத்தில் நெளிந்து நெளிந்து செல்லும் புழுவாகப் பூமியில் பிறப்பெடுத்தான்!

Karnan29211

இதுவும் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா சொன்ன கதைதாந் — மோக்ஷ சாதன ரஹஸ்யம் — என்னும் அவரது புத்தகம் கிடைத்தால் படிக்காமல் விடாதீர்கள். அவர் சொன்ன மற்றொரு கதை:

சுவையான கதை: “பார்வதி கேட்ட கேள்வியும் சிவன் சொன்ன பதிலும்” — அதை நாளைக்குச் சொல்கிறேன்.