
Written by London Swaminathan
Date: 6 May 2017
Time uploaded in London: 14-48
Post No. 3883
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
ஒரு தமிழ்ப் புலவர் குயிலையும் காக்கையையும் வைத்து நமக்கு ஒரு நல்ல அறிவுரை வழங்குகிறார்.
ஒருவருடைய தோற்றத்தைக் கண்டு அவரை எடை போடாதீர்கள். அவருடைய பேச்சை வைத்து, அதாவது கருத்து ஆழத்தைக் கொண்டு, அவரை எடை போடுங்கள் என்று தமிழ்ப் புலவர் மொழிகிறார்.
ஒருவர் பட்டு வேஷ்டி, ஜரிகை அங்க வஸ்திரம், குங்கும சந்தனப் பொட்டு, வைர மோதிரம் அணிந்து மேடை ஏறிப் பாட வரலாம். ஆயினும் அவர் பாடும் பாட்டு ரசிக்கும்படியாக இல்லையானால் கூட்டம் கலைந்துவிடும். அது போலவே ஒருவர் நன்றாக உடை அணிந்து பெரிய மனிதர் தோரணையில் உலா வரலாம். ஆயினும் அறிஞர் இடையே அவர் பேசத் துவங்கினால் அவருடைய உண்மை மதிப்பு தெரிந்துவிடும்.
வாக்கு நயத்தாலன்றிக் கற்றவரை மற்றவரை
ஆக்கை நயத்தால் அறியலாகாதே – காக்கையொடு
நீலச் சிறுகுயிலை நீடிசையால் அன்றியே
கோலத் தறிவருமோ கூறு
–நீதி வெண்பா

பொருள்:-
காக்கையொடு நீலச் சிறுகுயிலை-காக்கையையும் அதைப் போலவே கருநிறக் குயிலையும்
நீடு இசையால் அன்றி – இனிமை மிக்க இசைக்குரலால் அல்லாமல்
கோலத்து அறிவருமோ கூறு- உருவத்தினால் அவற்றின் பெருமையை அறியக்கூடுமோ, நீ சொல்
(அவற்றின் பெருமையை எப்படி உருவத்தால் அறிய முடியாதோ, அதைப் போலவே)
கற்றவரை மற்றவரை – படித்த பெரியவர்களையும், படிக்காத மற்றவர்களையும்
வாக்கு நயத்தால் அன்றி – அவரவர்களின் பேச்சின் இனிமையினால் அல்லாமல்
ஆக்கை நயத்தால் அறியலாகாதே – உடம்பு அழகினால் அறிய முடியாது.

இதைப் போலவே சம்ஸ்கிருதத்திலும் ஒரு பா உண்டு:-
காகஹ கிருஷ்ணஹ பிகஹ கிருஷ்ணஹ கோ பேதஹ பிககாகயோஹோ
வசந்த காலே சம்ப்ராப்தே காகஹ காகஹ பிகஹ பிகஹ
பொருள்:-
காகமும் கறுப்பு, குயிலும் கறுப்பு; பின்னர் குயிலுக்கும் காகத்துக்கும் வேறு என்னதான் வேறுபாடு?
(ஓ அதுவா?)
வசந்த காலம் வந்துவிட்டால், காக்கை காக்கைதான், குயில் குயில்தான்! ( அதாவது அதன் வண்டவாளம் தெரிந்து விடும்.குயில் இனிமையாகப் பாடத் துவங்கும்; காகம் கர்ண கடூர சப்தம் உண்டாக்கும்)
ஏன் இப்படிக் காகத்தையும் குயிலயும் ஒப்பிடுகிறார்கள் என்றால், காகத்தின் கூட்டில் குயில்கள் முட்டை இடும். அவைகளுக்கு அடைகாக்கத் தெரியாது. காக்கையும் குயிலின் தந்திரத்தை அறியாமல் எல்லாவற்றையும் அடை காத்து குஞ்சு பொறிக்கும். வசந்த காலம் வருகையில் குயில் இனிமையாகப் பாடிக்கொண்டு பறந்தோடிப் போகும்.

காளிதாசன், குயிலின் இந்தக் குணத்தைக் குறிப்பிட்டு பெண்களின் தந்திர புத்தியைச் சாடுகிறான். ஒன்றுமறியாத பறவை இனமே இப்படி ஏமாற்றினால், எல்லாம் அறிந்த மனித இனப் பெண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்? என்று அவனது உலகப் புகழ் பெற்ற சாகுந்தல நாடகத்தில் ஒரு வசனம் வருகிறது (5-22)
அதே போல ரகு வம்ச காவியத்திலும் (12-39) சூர்ப்பநகை குயில் போல இனிமையாகப் பேசி ராம லெட்சுமணர்களைக் கவரப் பார்த்தாள் என்று காளிதாசன் சொல்லுவான். அதன் உட்பொருள் குயில் போலத் தந்திரம் செய்து ஏமாற்றப் பார்த்தாள் என்பதே.
இவ்வாறு ஓரிரு இடங்களில் குயில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், நூற்றுக் கணக்கான இடங்களில் பெண்களை வருணிக்கையில் குயில் போன்ற இனிமையான குரலையும் மயில் போன்ற அழகையும் உடையவர்கள் என்றே இந்தியப் புலவர்கள் போற்றிப் புகழ்வர்.
–subham–
.