Article No 1945
Written by S NAGARAJAN
Date: 21st June 2015
Uploaded in London at 6-19 am
By ச.நாகராஜன்
அருணகிரிநாதர் அருளிய நூல்கள்
முருகனின் அனைத்துப் பெருமைகளும் சொல்லில் அடங்கா. ஆனால் அருணகிரிநாதர் அந்தப் பெருமைகளில் பெரும்பாலானவற்றைத் தன் பதினாறாயிரம் திருப்புகழ் பாடல்களில் பாடி வைத்துள்ளார். இன்று நமக்குக் கிடைத்திருப்பதோ சுமார் 1311 பாடல்கள் மட்டுமே!
திருப்புகழுடன் அருணகிரிநாதர் அருளியுள்ள இதர நூல்களாவன:-
கந்தர் அந்தாதி (நூறு செய்யுள்கள்)
கந்தர் அலங்காரம் (நூறு பாடல்கள்)
கந்தர் அநுபூதி (51 செய்யுள்கள்)
திருவகுப்பு (மொத்தம் 18 வகுப்புகள்)
வேல் விருத்தம்
மயில் விருத்தம்
சேவல் விருத்தம்
திரு எழு கூற்றிருக்கை
சிவத்தின் சாமி, நாம் புரியும் பிழை பொறுக்கும் சாமி
முருகனை அவர் விவரிக்கும் அழகை உணர இரு பாடல்களை மட்டும் இங்கு காண்போம்.
புவிக்குள் பாதமதை நினைபவர்க்கு எனத் தொடங்கும் திருப்புகழில் இறுதிப் பகுதி இது:-
சிவத்தின் சாமி, மயில்மிசை நடிக்கும் சாமி, எமதுளெ
சிறக்கும் சாமி, சொருபமி தொளிகாணச்
செழிக்கும் சாமி, பிறவியை ஒழிக்கும் சாமி, பவமழை
தெறிக்கும் சாமி முனிவர்க ளிடமேவுந்
தவத்தின் சாமி, புரிபிழை பொறுக்கும் சாமி, குடிநிலை
தரிக்கும் சாமி, அசுரர்கள் பொடியாகச்
சதைக்கும் சாமி, எமை பணி விதிக்கும் சாமி, சரவண
தகப்பன் சாமி என வரு பெருமாளே!
எப்படி? இனிய தமிழ். எளிய தமிழ். அரிய கருத்துக்கள்.
புரிபிழை பொறுத்து நம்மைக் காக்கும் முருகப் பிரானின் அருமைகளை சில வார்த்தைகளில் சொல்லி அருள்கிறார் அருணகிரிநாதர்.
வரோதயன்
மயில் விருத்தத்தில் பத்தாவது பாடலில் முருகப் பெருமானின் திருநாமங்கள் அருமையாக தொகுத்துக் கூறப்படுவதைக் காணலாம்.
நிராசத – ராஜஸ குணம் இல்லாதவர்
விராசத – ராஜஸ குணத்திற்கு மாறுபட்ட சத்வ குணம் உடையவர்
வரோதயன் – வர உதயன் – வரங்களுக்கு உறைவிடமானவர்
பராபரம் – மிக மேலான பரம் பொருள்
நிராகுலன் – நிர் ஆகுலன் – துன்பம் இல்லாதவர்
நிராமயன் – நிர் ஆமயன் (ஆமயம் என்றால் நோய்) நோய் இல்லாதவர்
பிரான் – பிரியான் என்பதன் சுருக்கம் பிரான் ( உயிர்களை விட்டு ஒரு போதும் பிரியாதவர்)
நிலாதெழுதலாலலறமிலானெறி யிலான் —
அறமிலான், நெறியிலான் நிலாது எழுதலால் என மாற்றிப் பார்த்தால் வரும் அர்த்தம் – அறமில்லாதவர்களும் நெறியில்லாதவர்களும் முருகன் திருவடியில் நில்லாது விலகி விடுகிறார்கள்.
ஆக முருகனைத் தொழுவதற்கே ஒரு அடிப்படைத் தகுதி தேவையாக இருப்பதைக் காணலாம். முருக பக்தர்கள் அறநெறி தவறாது வாழ்பவர்கள், புண்ணியசாலிகள் என்பதை அறியலாம்.
நெறி நிலாவிய உலாச இதயன் – நன்னெறிகள் தம்மிடம் விளங்க மகிழ்வுடன் கூடிய உள்ளத்தைக் கொண்டவர்.
இப்படி அரும் பெயர்களைச் சுட்டிக் காட்டும் பாடல் இது தான்:-
நிராசத விராசத வரோதய பராபர
நிராகுல நிராமய பிரான்
இலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி
நிலாவிய உலாசவி தயன்
குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
குராநிழல் பராவு தணிகைக்
குலாசல சராசர மெலாமினி துலாவிய
குலாவிய கலாப மயிலாம்
புராரிகுமரா குருபரா வெனும் வரோதய
புராதன முராரி மருகன்
புலோசமசை சலாமிடு பலாசன வலாரிபுக
லாகுமயிலாயுதன் நெடுந்
தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல
சாதனன் விநோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
ஷடாநநன் நடாவு மயிலே
அற்புதமான இந்தப் பாடலில் மயிலின் பெருமை தெரிகிறது.
“திரிபுரத்தை எரித்த சிவபெருமானுடைய குமரனே! குருமூர்த்தியே என்று புகழ்ந்த, வரங்களுக்கு இருப்பிடமானவனும், பழையோனும் ஆகிய திருமாலின் திருமருமகன், கிளி போன்ற இந்திராணி, வணங்குகின்ற இந்திரனுக்கு புகலிடமாகிய வேலாயுதக் கடவுள், நீண்ட, பூமியில் உள்ள, வேடர்கள், குலத்துக்கு சூரியனைப் போல மாப்பிள்ளையாய் வந்த அழகராம் வல்லமையைச் சாதித்தவன், விளையாட்டாகப் போர் புரிகின்றவர், கிரவுஞ்ச மலைக்குப் பகையாக இருப்பவர், தொந்தரவு தந்த அசுரனாகிய சூரனை (சூர்மாவை), வெட்டித் தள்ள கோடாரி போல இருந்தவர், மகிழ்ச்சியுற்று விளங்குகின்ற ஆறு திருமுகங்களை உடையவர், நடத்துகின்ற மயில் தான் இராஜஸ குணம் இல்லாதவர், சத்வ குணத்தை உடையவர், வரங்களுக்கு இருப்பிடமானவர், மேலான பரம்பொருள், வருத்தம் இல்லாதவர், நோயற்றவர், உயிர்களை விட்டுப் பிரியாதவர், அறமில்லாதவனும் நெறியில்லாதவனும் தம்மிடத்தில் சாராது, விளங்குவதால், நன்னெறியில் விளங்குகின்ற, மகிழ்ச்சியுடன் கூடிய, உள்ளத்தை உடையவர், குராமரத்தில் நிறைந்து கலந்து வெளித் தோன்றும் பருத்த அடிப்பாகத்தில் (திருவிடைக்கழியில்) அமர்ந்து, ஒளி பொருந்திய குரா மரங்களின் நிழல் மிகுந்துள்ள தணிகை என்கின்ற சிறந்த மலை முதலாக அசைவன, அசையாதனவாகிய எல்லாவற்றிலும் இனிது உலாவிய களித்த தோகை மயில் ஆகும்.”
இதுவே கிருபானந்தவாரியார் தரும் செய்யுளின் பொழிப்புரை. ஆறுமுகன் நடத்தும் மயில் உலகெலாம் உலாவி உவக்கும் பெருமையை உடையது.
சலாம் என்ற வார்த்தை பிரயோகமும் இந்த செய்யுளில் அமைந்திருப்பதைக் காணலாம்.
முருகனின் அழகை மயில் விருத்தம் மூலமாக அறியும் போது மனம் மிக மகிழ்கிறோம்.
இதே பிளாக்கில் லண்டன் சுவாமிநாதன் எழுதிய திருப்புகழ்ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படியுங்கள்:–
சலாம் முருகா! சலாம் முருகா! அருணகிரிநாதரின் தனி வழி!! —வெளியிட்ட தேதி ஜூன் 25, 2014
அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி – வெளியிட்ட தேதி ஜனவரி 16, 2012
சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்— வெளியிட்ட தேதி ஜனவரி 17, 2013
டாக்டர் முருகனும் ‘பேஷண்ட்’ அருணகிரிநாதரும் – வெளியிட்ட தேதிஜனவரி 15, 2013
தனிமையில் இனிமை –அருணகிரிநாதர் — வெளியிட்ட தேதி ஜனவரி 14, 2013
திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – வெளியிட்ட தேதி ஜனவரி22, 2013
நரகத்துக்குப் போவோர் பட்டியல் – வெளியிட்ட தேதி ஜனவரி 23, 2013
தமிழில் திட்டத் தெரியுமா? வசைபாடுவது எப்படி? —வெளியிட்ட தேதிஜனவரி 21, 2013
((படங்கள் முக நூல் நண்பர்களனுப்பியவை;நன்றி உரித்தாகுக:சுவாமி))
***************
You must be logged in to post a comment.