கல்லால் அடித்தாலும் காப்பாற்றுகிறாயே! தாயுமானவர் வியப்பு! (Post No.3588)

Written by London swaminathan

 

Date: 29th January 2017

 

Time uploaded in London:-  21-28

 

Post No.3588

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

தாயுமனவர், பட்டினத்தார், சுந்தரர் ஆகிய சைவ அடியார்கள் எல்லோருக்கும் ஒரு வியப்பு; ஆச்சரியம்; எத்தனை பேர் உன்னை வில்லால் அடித்தனர், சொல்லால் அடித்தனர், கல்லால் அடித்தனர். அத்தனை பேருக்கும் உதவுகின்றாயே. ஆனால் அவர்களுக்கு எல்லாம் இருந்த ஆழமான அன்பு எங்களுக்கு இல்லையே என்று முறையிடுகின்றனர். உலக சமய இலக்கியங்களில் இல்லா சில விஷயங்கள் இந்து மதத்தில் மட்டுமே காணக்கிடக்கின்றன. இதோ மூன்று அடியார்கள் கொடுத்த “குற்றச் சாட்டு” பட்டியல்!

கல்லால் எறிந்தும் கைவில்லால்

அடித்தும் கனிமதுரச்

சொல்லால் துதித்தும்நற் பச்சிலை

தூவியும் தொண்டரினம்

எல்லாம் பிழைத்தனர் அன்பற்ற

நான் இனி ஏதுசெய்வேன்!

கொல்லா விரதியர் நேர்நின்ற

முக்கட்குருமணியே!

–தாயுமானவர்

 

கல்லால் அடித்து சிவனருள் பெற்றவர் -சாக்கிய நாயனார். இவர் முதலில் புத்தமதத்தைத் தழுவி பின்னர் சைவ மதம் திரும்பியதும், புத்த மதத்தினரைத் திருப்தி செய்வதற்காக சிவலிங்கம் மீது கல்லெறிந்தார். வெளியில் இப்படி வன்முறை காட்டினாலும் மனத்தகத்தே சிவன் மீது அன்புகொண்டார். வில்லால் அடித்து பாசுபதம் பெற்றவன் அர்ஜுனன்.

கனிமதுரச் சொல்லால் துதித்தவர்கள் தேவார, திருவாசக நால்வர் ஆவர். பச்சிலை தூவி வழிபட்டவர் கண்ணப்பநாயனார்.

 

இவர்களுக்கு இணையான அன்பு எனக்கில்லையே என்று வருத்தப் படுகிறார் தாயுமானவர்.

 

பட்டினத்தாரும் ஒரு பாடலில்

 

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன்

அல்லன்; மாது சொன்ன

சூளால் இளமை துறக்கவல்லேன்

அல்லன்; தொண்டுசெய்து

நாலாரில் கண்ணிடத்து அப்பவல்லேன்

அல்லன்; நானினிச் சென்று

ஆளாவது எப்படியோதிருக்

காளத்தி அப்பனுக்கே

–பட்டினத்தார்

சிறுத்தொண்ட நாயனார், சிவனடியாரைத் திருப்தி செய்ய தன் மகனையே அறுத்து கறி சமைத்தார். திருநீலகண்ட நாயனாரின் மனைவியின் சொல்லால், அவர் இன்பத்தைத் துறந்தார். கண்ணப்ப நாயனார் உலகிலேயே விரைவில் முக்தியடைந்த மாமனிதர் ஆவார். இப்படி எல்லாம் என்னால் செய்ய இயலாதே என்று பாடுகிறார் பட்டினத்தார்.

 

தாயுமானவருக்கும், பட்டினத்தாருக்கும் முன்னார் வாழ்ந்த சுந்தரர் தான் ஏன் சிவபெருமானிடம் வந்தார் என்று விளக்குகிறார்.

 

சம்பந்தன், அப்பர், நந்தனார், சாக்கியநாயனார், கண்ணப்பநாயனார், ஒரு சிலந்தி கணம்புல்லன் என்பவர் எல்லோரும் ஏதேனும் குற்றம் செய்தபோதும் அவர்களுக்கு உதவினாய். இதைப் பார்த்துதான் நானும் உன்னிடம் வந்தேன் என்பார் சுந்தரமூர்த்தி நாயனார்.

 

 

நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்

நாவினுக்கரையன் நாளைப் போவானும்

கற்றசூதன்நற் சாக்கியன் சிலந்தி

கண்ணப்பன் கனம்புல்லனென்றிவர்கள்

குற்றம்செய்யினுஞ் குணமெனக் கருதும்

கொள்கை கண்டு நின்குரை  கழல் அடைந்தேன்

பொற்றிரள்மணிக் கமலங்கள் மலரும்

பொய்கை சூழ் திருப்புன்கூருளானே

-சுந்தரர், ஏழாம் திருமுறை

இதில் எட்டு நாயன்மார்களைக் குற்றம் செய்தவராக சுந்தரர் பட்டியலிட்டார். ஆயினும் அப்பராவது வேறு மதம் சென்று திரும்பியவர். ஞானசம்பந்தர் ஒரு தவறும் செய்யவில்லை. இதற்கு இதுவரை சரியான விளக்கம் கிடைக்கவில்லை. பலர், பல விளக்கங்களைக் கொடுத்தாலும் அது திருப்தி தருவதாக இல்லை.

-suBham-