கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? (Post No.7151)

RUBY STONE

Written by S Nagarajan


swami_48@yahoo.com

Date: 29 OCTOBER 2019

Time  in London – 5-12 am

Post No. 7151

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

மாலைமலர் 26-10-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

ச.நாகராஜன்

RUBY NECKLACE

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

         -ஆலயமணி படத்தில் கவிஞர் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் கேட்கும் கேள்விக்கு யாராலாவது மறுத்துப் பேச முடியுமா?

ஆம், கல்லெல்லாம் மாணிக்கக் கல் ஆகாது.

மாணிக்கத்தின் குணாதிசயங்களும் பலன்களும்!

ரூபி (Ruby) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மாணிக்கம் நவரத்தினங்களுள் அற்புதமான ஒரு ரத்தினம்.

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுடன் தொடர்பு கொண்ட ரத்தினம் இது. எண் கணிதத்தில் ஒன்று என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டதும் இதுவே தான்!

சூரிய காந்த மணி,கெம்பு, சீயம் என்று அழைக்கப்படும் இந்தக் கல் சூரியன் தரும் பிரகாசம், புகழ், மேன்மை, வெற்றி ஆகியவற்றை தரும்!

சூரியன் ஒரு ஜாதகத்தில் ஐந்து மற்றும் ஒன்பது ஸ்தானங்களில் இருக்கும் போது மாணிக்கம் அணிவது சிறந்த மேன்மையை ஜாதகருக்குத் தரும்.

மாணிக்கத்தில் எந்த மாணிக்கத்தை அணிவது என்ற கேள்விக்கு பல காலமாகச் சொல்லும் பதிலைத் தான் இன்றும் சொல்ல முடியும்! பர்மாவிலிருந்து கிடைக்கும் சிவப்பு வண்ண மாணிக்கம் மிகவும் சிறந்தது.

மாணிக்கம் வைரத்திற்கு அடுத்தபடி மிகவும் கடினமானது.

பிரடரிச் மோ என்ற ஜெர்மானிய அறிஞர் ஒவ்வொரு கல்லுக்கும் உள்ள கடினத்தன்மையை வரையறுத்தார். அவர் கூறும் அளவு அவரது பெயாராலே மோ அலகு எனக் கூறப்படுகிறது.

இதன் படி மிகவும் கடினமான வைரம் 10 என்ற அலகைப் பெறுகிறது. அதற்கு அடுத்தபடியாக 9 என்ற மோ அலகைப் பெறுவது மாணிக்கம்.

மாணிக்கத்தின் ஒப்படர்த்தி 3.99லிருந்து 4.05 வரை இருக்கும். இதன் ஒளி விலகல் எண் 1.756 ஆகும்.

பலவித நிற வேறுபாடுகள் கொண்ட மாணிக்கம் கிடைக்கப்பெறுகின்றன. 

புறா ரத்த வண்ணம் எனப்படும் (Piegeon Blood Red) மாணிக்கமே மதிப்பு மிக்கது, அணிவதற்கு ஏற்றது.

கண்களில் நோய் உள்ளவர்கள் மாணிக்கம் அணிந்தால் அந்த நோய்கள் விலகும்.

உடலின் வலிமை கூடும்.வீரிய விருத்தி உண்டாகும்.

ஆயுளைக் கூட்டும்.

மனதிற்கு சாந்தியைத் தரும்.

அதிகாரத்தைக் குறிக்கும் கல் என்பதால் பழைய காலத்தில் மன்னர்கள் இதை அணிவது வழக்கம். இன்றைய நாட்களில் தலைமை அதிகாரி (CEO) க்கு உரிய கல் இது.

ARGENTINA’S PRESIDENT WITH HER RUBY NECKLACE

தலைமை பீடத்தில் இல்லாதவர் இதை அணிந்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். அரசியலிலும் ஏற்றம் தரும் கல் இது.

வைத்திய சாஸ்திரங்களில் மாணிக்கத்தின் பெருமை பலவாறாகப் புகழப்படுகிறது.

பதார்த்த குணசிந்தாமணி என்ற புகழ்பெற்ற பண்டைய வைத்திய நூல் இதைப் பற்றிக் கூறும் போது,

‘சுர ரோகம் சன்னிகளின் தோஷம் அதிதாகம்

உரமான மேகம் ஒழியும் – திரமாக

ஊணிக்கொள் நேத்திரநோய் ஓடும் அரவீன்ற

மாணிக்கத்தால் வசியமாம்’ என்று கூறுகிறது.

இதன் பொருள் ; சுர நோய் தீரும். அதி தாகம், மேக நோய் ஒழியும். கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் போகும். வசியம் உண்டாகும்.

பண்டைய நாகரிகங்களில் மாணிக்கம்!

பண்டைய நாகரிகங்களில் எகிப்திய நாகரிகம் உள்ளிட்ட நாகரிகத்தில் இது செய்வினை மற்றும் தீய சக்திகளிடமிருந்து காத்துக் கொள்ள அணியப்பட்டது. மாணிக்கத்தை நனைத்து விட்டு அந்த நீரை வயிற்று வியாதிகளுக்கு அருந்துமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தினர். அத்தோடு இதன் பொடியை ரத்த சம்பந்தமான நோய்கள் தீர்க்கவும் இதர மருந்துப் பொருள்களுடன் சேர்ந்து பயன்படுத்தினர்.

எப்போது முதல் முறையாக அணிவது?

சுக்ல பக்ஷ ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய ஹோரையில் இதை அணிவது நலம்.

தங்கம் அல்லது தாமிரத்தால் செய்யப்பட்ட மோதிரத்தில் இதைப் பதித்து அணியலாம்.

முதல் முறை அணியும் போது பாலில் இதை அமிழ்த்திப் பின்னர் நீரால் அலம்பி விட்டு அணிதல் வேண்டும்.

நான்கு வகை நல்ல மாணிக்கக் கற்கள்!

மிகப் பழைய நூலான ரஸ ஜல நிதி மாணிக்கத்தைப் பற்றிய ஏராளமான விவரங்களைத் தருகிறது:

மாணிக்கம் நான்கு வகைப்படும் 1) பத்மராகம் 2) குருவிந்தஜா 3)சௌகந்திகா 4) நீல காந்தி

இதில் தாமரை வண்ணத்தில் (வெள்ளையுடன் கூடிய சிவப்பு வண்ணம்) கண்ணுக்கு விருந்தாகும் ஒளி பொருந்திய ஒளி ஊடுருவும்  வட்ட வடிவமான மிருதுவான ஆனால் கனமான மாணிக்கமே சிறந்தது.இதுவே பத்மராகம்.

கோரண்டம் (Corundum) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது சம்ஸ்கிருதத்தில் குருவிந்தம் என அழைக்கப்படுகிறது.

லலிதாம்பிகையின் தலையில் அணியப்பட்டுள்ள கிரீடம் குருவிந்தத்தால் ஆனது என்பதிலிருந்தே இதன் சிறப்பை அறியலாம். செக்கச் செவேலென இருக்கும் அழகிய கல் இது.

சௌகந்திகம் மஞ்சள் கலந்த சிவப்பு வண்ணத்துடன் இருக்கும்.

நீல கங்கா நதியிலிருந்து கிடைப்பது நீல காந்தி. சிவப்புடன் நீல வண்ணம் உள்ளிருந்து ஒளிர இரண்டு வண்ணமும் கலந்த கல் இது.

இந்த நான்கு வகைகளும் அதன் தரத்தின் படி மேலே வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

குறைபாடுகள் எவை?

மாணிக்கத்தில் உள்ள குறைகள் பின் வருமாறு:

துளைகள் உள்ளது, அழகில்லாமல் இருப்பது, ஒளியில்லாமல் இருப்பது, கரடுமுரடாக இருப்பது, ஓளி புகாத தன்மையுடன் இருப்பது, தட்டையாக இருப்பது, மிகவும் லேசாக இருப்பது, வடிவமைப்பில் ஒழுங்கற்ற தன்மையுடன் இருப்பது.

இவையிருப்பின் அந்தக் கல்லை வாங்கக் கூடாது.

ஒரு மாணிக்கத்தில் இரு வேறு ஒளிகள் அதன் இரு வேறு பக்கங்களிலிருந்து வந்தால் அது அழிவைத் தரும். வாங்கக் கூடாது.

காகத்தின் கால் போல உள்ள தோற்றம் அளிக்கும் மாணிக்கம் தோல்வியைத் தரும்.

விரிசல் இருப்பின் அதை அணிந்தால் ஆயுதங்களால் காயம் ஏற்படும்.

மாணிக்கத்தின் உள்ளே சிறு கூழாங்கல் இருப்பின் நண்பர்கள் அழிவர்; மாடு உள்ளிட்ட கால்நடைகள் அழிந்து படும்.

மாணிக்கத்தின் உள்ளே பால் போன்ற ஒரு பூச்சு இருப்பின் அதை அணியக் கூடாது. அது துன்பத்தைத் தரும்.

தேனின் நிறத்தைப் போல இருக்கும் மாணிக்கமும் அணிவதற்குத் தக்கதல்ல. இதை அணிந்தால் ஆயுள் குறையும். துரதிர்ஷ்டம் வரும். புகழ் குறையும்.

 ஒளி இல்லாத மாணிக்கம் பண இழப்பை உண்டாக்கும்.

புகை போன்ற வண்ணம் உடைய கல் மின்னலினால் விபத்தை ஏற்படுத்தும்.

இவை எல்லாம் ரஸ ஜல நிதி தரும் அறிவுரை!

PICTURE
 OF RUBY EAR RINGS

நல்ல மாணிக்கம் எது?

அருமையான மாணிக்கக் கல்லை எப்படி அறிவது?

சூரிய ஒளி அதன் மேல் படப்பட சுற்றுப்புறம் எல்லாம் பிரகாசிக்கும்.

இளங்காலை நேரத்தில் உதய சூரியனின் கிரணங்கள் பட்டவுடன் சிவப்பு ஜூவாலை போன்ற ஒளியை எந்தக் கல் கக்குகிறதோ அது சிறந்தது.

தூரத்திலிருந்து பார்க்கும் போது சிவப்புத் தீ போல ஜொலிப்பது வம்ச காந்தி என்று அழைக்கப்படுகிறது. அது உடனடியாக செல்வத்தைத் தரும்.

 இருளில் ஒரு மாணிக்கத்தை வைத்தால் அது தன் ஒளியால் சுற்றுப்புறத்தில் ஒளியைத் தருமாயின் அது நல்ல கல்லாகும்.

கடவுளுக்குக் கூடக் கிடைக்காத மாணிக்கம் அல்லது கடவுளரே ஆவலுடன் விரும்பி ஏற்கும் மாணிக்கம் எது எனில். அதை ஒரு தாமரை மலரின் உள்ளே வைத்தவுடன் அது விகசித்து உடனே இதழ் விரித்து மலரும். அதுவே அற்புதமான மாணிக்கக் கல்!

மாணிக்கத்தின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?

இரண்டு கேரட் சாதாரணமாக அணியப்படுகிறது.

RUBY STAMP FROM VIETNAM

பிரபலமான மாணிக்கக் கற்கள்!

இது வரை உலகம் கண்ட புகழ் பெற்ற மாணிக்கக் கற்கள் வருமாறு:

ப்ளாக் ப்ரின்ஸின் ரூபி (Black Prince’s Ruby)

தைமூர் ரூபி (Timur Ruby)

ரோஸர் ரீவ்ஸ் ஸ்டார் ரூபி (Rosser Reeves Star Ruby)

எட்வர்ட்ஸ் ரூபி (Edwardes Ruby)

உலகின் பிரபலமான நடிகையும் பேரழகியுமான எலிஸபத் டெய்லர் 1968 ஆம் ஆண்டு ஒரு மாணிக்கம் பதித்த மோதிரத்தை அணிந்தார். அது உலகினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

அதன் எடை 8.24 கேரட். அது 2011இல் 42 லட்சம் டாலருக்கு  ஏலத்தில் எடுக்கப்பட்டது. (ஒரு டாலரின் இன்றைய ரூபாய் மதிப்பு 70) அதாவது ஒரு கேரட்டின் விலை சுமார் ஐந்து லட்சம் டாலர்!

உலகின் அதிக எடையுள்ள ரூபி ஹோப் ரூபியாகும். இதன் எடை 32.08 கேரட்.

RUBY FROM THAILAND

மாணிக்கம் கிடைக்கும் இடங்கள்!

பர்மாவைத் தவிர அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் மாணிக்கம் கிடைக்கிறது.

ஒரு முக்கியமான விஷயம், நமது தமிழ்நாட்டில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மாணிக்கம் உள்ளிட்ட பல கற்கள் உள்ளன.

ரத்தினக் கலையில் நிபுணர்களாக உள்ள வல்லார் இந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினால் தமிழகம் மாணிக்க நாடாக ஆகி விடும்.

சிலம்பில் மாணிக்கம்!

தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம் மாணிக்கத்தையும் முத்தையும் மையமாகக் கொண்டு முடிகிறது.

பாண்டிமாதேவி என் பொற்சிலம்பில் முத்துப் பரல்கள் உள்ளது என்று கூற கண்ணகி தன் காற்சிலம்பை உடைத்துக் காண்பிக்க அதிலிருந்து மாணிக்கப் பரல்கள் தெறித்து விழுந்தன.

“கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு உடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே” என அழகுற அந்தக் காட்சியை அமைக்கிறார் இளங்கோவடிகள்.

கண்ணகியின் மாணிக்கக் கற்கள் மன்னனின் வாயில் தெறிக்க, மதுரை பற்றி எரிந்ததையும் பின்னர் நடந்ததையும் அனைவரும் அறிவர்.

மாணிக்கம் இல்லாத இலக்கியம் ஒளி இல்லாத இலக்கியம்.

ஆங்கில இலக்கியத்தில் ரால்ஃப் வால்டோ எமர்ஸன் உள்ளிட்ட கவிஞர்கள் மாணிக்கத்தைத் தங்கள் கவிதையில் இழைத்துள்ளனர்.

தமிழில் மாணிக்கத்தின் பெருமையைச் சுட்டிக் காட்டும் நூற்றுக் கணக்கான பாடல்கள் உள்ளன.

பெரியாழ்வார்,

“மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்”

என்று வர்ணிப்பதிலிருந்து ஆரம்பித்தால் மாணிக்கப் பட்டியல் நீளும்.

அருளாளர்கள் அனைவரும் மாணிக்கமே என இறைவனை அறைகூவி அழைக்கும் போது மாணிக்கத்தின் உண்மையான மதிப்பு தெரிய வருகிறது, இல்லையா?

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, என்ன?!

****