
பூர்வ, தக்ஷிண, பச்சிம, உத்தர சதுச் சமுத்ராதிபதி கிருஷ்ண தேவ மகாராயர் (Post No.4089)
Written by London Swaminathan
Date: 17 July 2017
Time uploaded in London-16-08
Post No. 4089
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
முஸ்லீம்களின் படை எடுப்பிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றியவர் இருவர்: தென்னகத்திலிருந்து முஸ்லீம் படை எடுப்பாளர்களை விரட்டியவர் கிருஷ்ண தேவ ராயர்; வடநாட்டிலிருந்து விரட்டியவர் வீர சிவாஜி.

கிருஷ்ண தேவ ராயர் போல கோவில்களுக்கு தானம் செய்தவரும் இல்லை; இலக்கியத்தை வளர்த்தவரும் இல்லை. திருப்பதி கோவிலுக்கு வாரி வழங்கியுள்ளார். ஆமுக்த மால்யதா என்ற காவியத்தைத் தெலுங்கில் எழுதினார். அவர் ஒரு வீர வைஷ்ணவர்; திருப்பாவை மீது அலாதிப் பிரியம் கொண்டவர்.
ஆமுக்தமால்யதா என்பது ஆண்டாள்- விஷ்ணு கல்யாணம் பற்றிய கவிதை ஆகும்.
1509 ஆம் ஆண்டு முதல் 1529 ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளுக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்டார்; அதை விரிவாக்கினார். இவரது சபையில் அஷ்ட திக்கஜங்கள் எனப்படும் எட்டு பேரறிஞர்கள் இருந்தனர். அவர்களில் புகழ் பெற்ற இருவர் அல்லாசானி பெத்தண்ணா, தெனாலி ராம (கிருஷ்ணா)
துளுவ வம்சத்தை ஸ்தாபித்தவர். திருப்பதி முதல் திருவண்ணாமலை வரை கோவில்களுக்கு தானம் வழங்கினார்.
திரு ஈங்கோய் மலை மீதுள்ள க்ருஷ்ண தேவ மகாராயரின் கல்வெட்டு அவருடைய வீரதீரச் செயல்களை விவரிக்கின்றது. அவருடைய பட்டங்கள் கம்பீரமான சொற்களை உடையது.
முதலில் கல்வெட்டின் சுவையான பகுதிகளைக் காண்போம்:
இந்தக் கல்வெட்டுக்குத் தீங்கு செய்வோருக்கு காசியில் பிராமணர்களையும் பசுக்களையும் கொன்ற பாவம் வரட்டும் என்று சாபம் தரும் பகுதியைக் கவனிக்கவும்.

பசுவுக்குத் தீங்கு செய்வோருக்கு, அதுவும் காசியில் தீங்கு செய்வோருக்கு வரும் பாபம்= அதாவது பல படங்கு பாவம்!!
கடைசியில் ஒரு அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது; அதன் பொருள்:-
“தான், தானம் செய்வதைக் காட்டிலும் மற்றவர் கொடுத்ததைத் திறம்பட நிர்வகிப்பது இரு மடங்கு பலன் தரும்
பிறர் கொடுத்ததை அபகரித்தால், தான் செய்த புண்ணியங்களும் வீணாகிப் போய்விடும்” என்று கல்வெட்டு எச்சரிக்கிறது.
அருமையான எச்சரிக்கை.
இறை வணக்கமாகக் கல்வெட்டின் ஆரம்பத்திலுள்ள ஸ்லோகம் பரம சிவனின் அருளை வேண்டுகிறது.
இக் கல்வெட்டு கிருஷ்ணவேணி ஆற்றங்கரையில் மகர சங்கராந்தித் திருநாளன்று (பொங்கல் திருநாள்) மன்னன் எழுந்தருளிய போது சோழ மண்டலத்திலுள்ள சிவன், விஷ்ணு கோவில்களுக்கு பத்தாயிரம் வராகன் பொன் தானம் செய்ததைக் கூறுகிறது
கோவில்களுக்கு சோடி, சூல வரி, புற வரி, அரச பேறு ஆகிய வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதைக் கல்வெட்டு விளம்புகிறது.
விஜய நகரத்திலிருந்து புறப்பட்ட மன்னர் எந்தெந்த மன்னரை வெற்றி கொண்டு உயிருடன் சிறைப்படுத்தினார் என்பதையும் இது குறிக்கிறது.

இந்த வெற்றிகளைக் குறிக்கும் வண்ணம் பொட்டுனூரில் ஒரு வெற்றித் தூண் நிறுவியதையும் கல்வெட்டு சொல்கிறது.
இவைகளில் பெரும்பாலும் தெலுங்குதேச வெற்றிகளாகும். தென்னகத்தின் மிகப் பெரும்பகுதியை ஆண்டவர் ராயர். இவருடைய பொக்கிஷங்களை மதிப்பிட வந்த ஐரோப்பியர் இவைகளை மதிப்பிடவே முடியாது; அவ்வளவு விலைமிகுந்த ரத்தினங்கள் என்று எழுதி வைத்துள்ளனர்.
திருச்சி மவட்டத்தில் திரு ஈங்கோய் மலை மீதுள்ள மரகதாசலேசுவரர் கோயிலில் இக்கல்வெட்டு உள்ளது; கல்வெட்டின் காலம் சக வருஷம் 1439, அதாவது கி.பி.1517.
இதோ அந்தக் கல்வெட்டு
“ஸ்வஸ்தி ஸ்ரீ நமஸ்துங்க சிரச்சும்பி
சந்த்ர சாமரசாரவே
த்ரைலோக்ய நகராரம்ப
மூலஸ்தம்பாய சம்பவே”
“ஸ்ரீ விசயாயாப்யுதய சாலிவாகன சகாப்தம் 1439 இதின்மேல் செல்லாநின்ற ஈசுவர (பிலவங்க) சம்வத்சரம் (புஷ்ய மாசத்துப் பௌர்ணமி நாள்) ஸ்ரீமன் மஹாமண்டலேஸ்வர,
அரியராய ரவிபாடன்,
பாஷைக்குத் தப்புவராய கண்டன்,
கண்டநாடு கொண்டு,
கொண்டநாடு கொடாதான்
பூர்வ தக்ஷிண பச்சிம உத்தர சதுச் சமுத்ராபதிபதி
(East, South, West, North நாற்கடலை எல்லையாக உடையவர்)
ஸ்ரீ வீரப்ரதாப, ஸ்ரீ வீரகிருஷ்ண தேவ மகாராயர்
சோழ மண்டலத்து விஷ்ணுஸ்தானம், சிவஸ்தானம், முதலான தேவஸ்தானங்களுக்கு சோடி, சூல வரி, புறவரி, அரசபேறு மற்றும் உண்டா னது எல்லாம் சர்வமானியமாக திருவுளம் பற்றின தர்மசாசன ராயசம்.
நாம் விசய நகரத்திலிருந்து புறப்பட்டு, பூர்வ திக்கு விசையார்த்தம் எழுந்தருளி உதயகிரி துர்கமும் யிரிசிக் கொண்டு,
திருமலை ராகுத்தராயனையும் பிடித்துக்கொண்டு, வினி கொண்டை, வெல்லம கொண்டை, நாகார்ச்சுன கொண்டை, கொண்டை வீடு, கொண்டை பள்ளி ராசமகேந்திரவரம், முதலான துர்கங்களும் இரிசிக்கொண்டு,
பிரதாபருத்ர கசபதி பிரகலாதன், சிரச்சந்திரன், மல்லூகான், உத்தாண்டகான், முதலான பாத்திர சாமந்தரையும் சீவக்கிரகமாகப் பிடித்துக்கொண்டு, பிரதாபருத்திர கசபதியையும் முறியவெட்டி, சிங்காத்திரிக்கு எழுந்தருளி, பொட்டு நூரில் ஜயஸ்தம்பம் நிறுத்தி,
சோள மண்டலத்தில் தேவஸ்தானம் திருச்சிராப்பள்ளி, திரு ஈங்கோய்மலை, சந்தலைகை, திருக்காட்டுப்பள்ளி, திருமழவாடி, வல்லம், தஞ்சாவூர் திருநல்லூர், திருவாரூர், திருநகரி, திருவையாறு, திருவெழுந்தூர், இராசுராமப்பாளையம், திருவாஞ்சியம், திருப்புகலூர், திருப்பனந்தாள், திருநாங்கூர், தாடலங்கோயில், சீர்காழி, ச்ரிகண்டபுரம் உள்பட இரண்டாற்றுப் பற்றுச் சீர்மை, புவனேகவீரன் பட்டனச் சீர்மை, ராசராசச்சுர சீர்மை, தஞ்சாவூர்ச் சீர்மை , வீரமடக்குச் சீர்மை, வழுதலம்பட்டுச் சீர்மை, வழுவத்தூர்ச் சீர்மை பெரம்பூர்ச் சீர்மை,
குழித்தண்டலைச் சீர்மை, உடபட விஷ்ணுஸ்தானம், சிவஸ்தானம் தேவஸ்தானங்களில் பூர்வம் அரண்மனைக்கு இறுத்து வருகிற சோடி, சூலவரி, ஆயம் ஸ்தலயாதிக்கம் பதினாயிரம் பொன்னிலே
(அந்தந்த தேவஸ்தானங்களுக்கு மகரசங்கராந்தி புண்ணியகாலத்திலே கிருஷ்ணவேணி தீரத்திலே)
உண்டவல்லி அநந்தசாயி சந்நிதியிலும்
விசயவாடை மல்லிகார்ச்சுன தேவர் ஆக
தாராபூர்வமாகச் சர்வமானியமாகவிட்டு (தர்மசாசன ராயசமும் பாவித்தோம். இந்த ராயசப்
பிரமணத்திலே எல்லா தேவஸ்தானங்களிலும்)
சிலாசாசனம் எழுதிவிச்சு பூஜை புனஸ்கரமும் அங்கரங்க வைபோகமும், திருப்பணிகளும் சாங்கோபாங்கமாக ஆசந்திராதித்த (Moon and Sun) ஸ்தாயியாக நடத்திகொண்டு சுகத்திலே இருக்கவும்
இந்த தர்மத்துக்கு அகிதம் (harm) நினைத்தவன் தங்கள் மாதா பிதாவையும் கோ பிராமணரையும் வாரணாசியிலே கொன்ற பாவத்திலே போகக்கடவராகவும்.
ஸ்வ தத்தாத் விகுணம் புண்யம் பர தத்தானுபாலனம்
பரதத்தாபராரேன ஸ்வதத்தம் நிஷ்பலம் பவேது

Source: Kalvettu- An Intoduction, Archaological Department of Tamil Nadu, year 1976
–Subham–
You must be logged in to post a comment.