WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,657
Date uploaded in London – – 14 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நமக்குத் தொழில் கவிதை!
ச.நாகராஜன்
நமக்குத் தொழில் கவிதை என்றான் மஹாகவி பாரதி.
ஒரே ஒரு கவிதை இயற்றுவது என்பதே இமாலய கஷ்டம்.
இதில் கவிதையையே தொழிலாகக் கொண்டால் கவிஞன் படும் பாடு எவ்வளவு கஷ்டமானது என்பது புரியும்.
ஆசார்ய ஹேமசந்த்ர கவிதை இயற்றுவது எவ்வளவு கஷ்டம் என்பதை நன்கு உணர்ந்து அதை தன் ‘காவ்யானுசாஸன’த்தில் கூறுகிறார்.
முதலில் கவிதை இயற்ற பிரதிபா வேண்டும்.
பிரதிபா என்றால் புதியன உருவாக்கும் மேதையாக இருப்பது, மிகுந்த கற்பனை வளத்தைக் கொண்டிருப்பது, ஆழ்ந்த கருத்தை அனாயாசமாக அழகுறத் தருவது.
இந்த இயற்கையான அதி புத்திசாலித்தனத்தை, ஏராளமான காவியங்களைப் படிப்பதாலும் தன்னைச் சுற்றி இருப்பதை உற்று நோக்குவதாலும் மேம்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பிரதிபா இல்லையேல் கவிஞனும் இல்லை; காவியமும் இல்லை.
இந்த பிரதிபா என்பது இருவகைப் படும் என்கிறார் ஆசார்ய ஹேமசந்திரர்.
ஒன்று : இயற்கையாக அமைவது
இரண்டாவது : வெளிப்புறக் காரணங்களால் அமைவது
இந்த இருவகையான பிரதிபாவை மிக அதிக ஒளியுடனும் அதிக சக்தியுடனும் தருவதற்கு இரு வழிகள் உண்டு.
ஒன்று வியுத்பத்தி எனப்படும்
இரண்டாவது அப்யாஸம் எனப்படும்.
வ்யுத்பத்தி என்றால் மனித குலத்தில் இருக்கக்கூடிய பரந்த அறிவையும் நம்மைச் சுற்றி இருக்கும் பரந்த உலகில் நடப்பது அனைத்தையும் கூர்ந்து கவனித்து அறிவதாகும்.
வ்யுத்பத்தி என்பது படித்துப் படித்து தன் அறிவை சிகரத்தில் ஏற்றுவதையும் குறிக்கிறது.
எத்தனை இலக்கியங்கள்! அதில் தான் எத்தனை வகைகள்! அனைத்தையும் ஒருவன் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்,
யாப்பிலக்கணம், மொழியின் நுட்பங்கள், பழக்க வழக்கங்கள், சொற்களின் வல்லமை, வேத, இதிஹாஸ புராணங்கள், மகத்தான காவியங்கள் அனைத்தையும் முதலில் முறைப்படி கற்று உணர வேண்டும். வரலாறு, பூகோளம், பொருளாதாரம், தேசீய நிலவரம், தர்க்கம், சிருங்கார சாஸ்திரம், இதர மனித உணர்வுகளைத் தூண்டும் ரஸங்கள், யோகா உள்ளிட்ட அனைத்தையும் கற்று வல்லவனாதல் வேண்டும்.
ஹேமசந்திரர் கூறுகிறார்:-
“ந ச ஷப்தோ ந ததாச்சயம் ந ஸ ந்யாயோ ந ஸா கலா|
ஜாயதே யன்ன காவ்யாங்கமஹோ பாரோ குரு: கவே||”
இதன் பொருள் : வெறும் சப்தம் இல்லை. வெறும் ஒரு முதுமொழி இல்லை, வெறும் ஒரு கலை இல்லை – அனைத்துமே ஒரு காவியம் எழுதத் தேவை.
ஒரு கவிஞனின் சுமை சொல்ல முடியாத அளவு பெரிது.
மாயவித்தை என்று இந்த்ர ஜால கலையை ஒரு கவிஞன் வெறும் வார்த்தையால் குறிப்பிட்டு விட்டால் அது கவிதை ஆகாது.
அந்தக் கலையின் நுட்பத்தை உணர்ந்து அதில் ஒரு அம்சத்தைக் கோடிட்டுக் காட்டி கேட்பவனை பிரமிக்க வைத்து உயரத்தில் ஏற்ற வேண்டும், அது தான் கவிதை!
எதிலும் ஒரு ஒழுங்குமுறை, நியாயம், நேர்மை, பொருத்தம் வேண்டும் – அவன் உலகுக்கு அளிப்பதில்!
லோகாதிநிபுணதா என்று கூறுகிறார் ஹேமசந்திரர்.
இது கவிஞனுக்கு முக்கியம்.
எதையோ பார்த்தோம், பாடினோம் என்று இருக்கக் கூடாது.
ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அவனது பார்வை கூர்மையாக இருப்பதோடு அதில் நிபுணத்வத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இது தான் ஐயா கவிதை!
சரி, இதை எல்லோரும் கொண்டிருக்க முடியுமா, கற்றுத் தேற முடியுமா?
இடைவிடாத முயற்சி, ஒரு கவிஞனான ஆசானின் பூரண வழிகாட்டுதல் – இந்த இரண்டும் இருந்தால் கவிஞன் ஆகலாம்.
Practice Makes Perfection என்பது ஆங்கிலப் பழமொழி.
அப்யாஸோ ஹி கௌஸலம் என்பது சம்ஸ்கிருத மொழி.
அப்யாஸம் எனப்படும் இடைவிடா முயற்சியினால் திறமை மேம்படும் என்பது இதன் பொருள்.
ஒரு துளி நீர் ஒரு கல்லைக் கரைக்காது.
“True ease in writing comes from art, not chance,
As those move easiest who have learned to dance.”
என்றார் அலெக்ஸாண்டர் போப் (Alexander Pope, Sound and Sense)
ஆகவே கவிதை எழுத ஆசை கொண்டிருப்பவர் முதலில் ஏராளமான காவியங்களையும், காவிய உத்திகளையும் , கவிஞனின் நுட்பமான பார்வையையும் முதலில் படித்து ரஸித்து, உணர்ந்து அனுபவித்து மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
பிறகு சொற்கள் செய்யும் ஜால உலகத்தில் நுழையலாம்.
ஆகவே, முதலில் காளிதாஸனையும், கம்பனையும், பாரதியையும் கற்போம்;
பின்னர் கவிதை ஒன்றையும் சற்று முயன்று இயற்றிப் பார்க்கலாம்! நன்கு திறன் கூடி விட்டால் நாமும் சொல்லலாம் – நமக்குத் தொழில் கவிதை என்று!
tags– கவிதை, ஹேமசந்திரர்
You must be logged in to post a comment.