சீதை சொன்ன காகாஸுரன் கதை!

ram gem

By S Nagarajan
Post No.986; Dated 18th April 2014.
அத்தியாயம் 23

சுந்தர காண்டத்தில் அனுமன் சீதையைக் கண்டு மன மகிழ்ச்சி கொண்டு தன் விஸ்வரூபத்தைக் காண்பித்துத் தன்னுடன் உடனடியாக ராமரிடம் வருமாறு வேண்ட அதற்குச் சீதை மறுத்து ஸ்ரீராமரே தன்னை வந்து மீட்டுச் செல்ல வேண்டும் என்று தன் திருவுள்ளக் கருத்தை வெளியிடுகிறார். அப்போது ஹனுமான் சீதையிடம் ஒரு அடையாளம் தர வேண்டுமென்று விண்ணப்பிக்கிறார் உடன் சீதை தன் சூளாமணியைத் தருகிறார். அத்தோடு முன் நிகழ்ந்த காகாசுரனின் கதையையும் அடையாளமாக ஹனுமானிடம் சொல்கிறார். 38வது ஸர்க்கமாக அமையும் சீதை சொன்ன காகாசுரனின் கதை இது தான் :-

சித்திரகூடமலையில் வடகீழ் தாழ்வரையில் உள்ளதும் மந்தாகினிக்கு ஸமீபத்தில் உள்ளதும் ஏராளமான கிழங்குகளும், கனிகளும், தீர்த்தங்களும் அமைந்த சித்தாஸ்ரம்ம் என்னும் ஆஸ்ரமத்தில் ஒரு ப்ரதேசத்தில் ஜலத்தில் பலவகை மலர்களால் நறுமணம் வீசிகிற நெருங்கிய சோலைகளிலும் அலைந்து களைத்து தபஸ்விகளின் ஆசிரமத்திலிருந்து வந்த நீர் என் மடியில் படுத்திருந்தீர்,
அப்போது மாமிசம் உண்பதில் ஆசையுற்ற ஒரு காகம் கூரான மூக்கால் என்னைக் குத்திற்று. அந்தக் காகத்தை மண்ணாங்கட்டியால் பயமுறுத்தி விரட்டினேன்.
ஆனால் மாமிசத்தை விட விரும்பாத அந்தக் காகம் என்னைக் குத்திய வண்ணமே அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது. நான் காகத்திடம் சினந்து என் அரைநூல் மாலையை மாத்திரம் கழற்றவும் அதனால் ஆடை நழுவி வீழ்கையில் உம்மால் பார்க்கப்பட்டேன்.

தீனியில் ருசி கொண்ட காகத்தால் குத்தப்பட்டு கோபம் மூட்டப்பட்டுக் களைத்திருந்த நான் உம்மால் பரிஹாஸம் செய்யப்பட்டேன். அதனால் மிகவும் வெட்கம் அடைந்தேன். அப்படியிருந்தும் உம்மிடமே வந்து சேர்ந்தேன். உமது மடியில் வந்து உட்கார்ந்தேன்.முகம் மலர்ந்திருந்த உம்மால் கோபமுற்றிருந்த நான் தேற்றப்பட்டேன்.

நாதா! முகமெல்லாம் கண்ணீர் நிரம்பி இருக்கக் கண்ணீரை மெதுவாகத் துடைத்துக் கொண்டிருந்த என்னை அதிகம் கோபம் கொண்டவளாக அறிந்தீர்.

ram in frame

நான் மிகவும் களைப்பால் அப்படியே உமது மடியில் படுத்து உறங்கினேன் நீரும் என் மடியில் கண் வளர்ந்தீர். அப்போது அதே காகம் மறுபடியும் வந்தது. தூங்கி எழுந்திருந்த என்னை மார்பில் கீறிற்று.
அப்படிப் பல தடவை பாய்ந்து பாய்ந்து என்னைக் கீறவே அப்போது சொட்டிய ரத்தத் துளிகளால் ஸ்ரீ ராமர் எழுந்தார்.

அவர் என் மார்பகங்களில் காயப்பட்டதை அறிந்து சினம் கொண்டு,” “உனது மார்பு எவனால் புண்படுத்தப்பட்டது? ஐந்து தலை நாகத்துடன் எவன் விளையாடுகிறான்?”, என்று கேட்டு சுற்றுமுற்றும் பார்த்து காகத்தைக் கண்டார்.

அந்த காகம் இந்திரனுடைய மைந்தன். கதியில் வாயுவுக்கு நிகரானது. அது அங்கே உடனே அங்கிருந்து மறைந்து விட்டது. கோபம் கொண்ட ராமர் தர்ப்பாஸனத்திலிருந்து ஒரு புல்லை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரத்தை மந்திரித்தார்.அது ஊழித்தீயெனப் பற்றி எரிந்தது. காகத்தைத் துரத்தியது.
உலகனைத்தும் ஓடி ஓடிக் களைத்த அது ராகவரையே சரணம் அடைந்தது.சரணம் என்று தம்மை வந்து அடைந்த காகத்தை நோக்கி,”பிரம்மாஸ்திரத்தை வீணாகச் செய்ய முடியாது. ஆகையால் வழி சொல்” என்றார் அவர்.

காகம், ‘அஸ்திரம் என் வலது கண்ணை அழிக்கட்டும்’ என்று கூறவே பிரம்மாஸ்திரம் அதன் வலது கண்ணை அழித்தது.

அது முதல் காக்கைகளுக்கு ஒற்றைக் கண் என்பது தெரிந்த விஷயம் என்று இப்படி காகத்தின் நீண்ட வரலாற்றை சீதை கூறி அருளினார். பின்னர் தன் சூடாமணியை ஹனுமானிடம் தந்தார்.

ததௌ வஸ்த்ரகதம் முக்த்வா திவ்யம் சூடாமணிம் சுபம் I
ப்ரதேயோ ராகவாயேதி சீதா ஹனுமதே ததௌ II

-சுந்தர காண்டம், முப்பத்தெட்டாவது ஸர்க்கம், எழுபதாவது ஸ்லோகம்

தத: – அப்பொழுது வஸ்த்ரகதம் – வஸ்த்ரத்தில் முடிந்திருந்த சூடாமணிம் – சூடாமணி என்னும் திவ்யம் சுபம் – திவ்ய ஆபரணத்தை முக்த்வா – அவிழ்த்தெடுத்து ராகவாய – ராகவருக்கு ப்ரதேய – சேர்த்து விட்டேன் இதி – என்று சொல்லி சீதா ஹனுமதே ததௌ – சீதை ஹனுமானிடம் தந்தாள்

இந்த சூடாமணியைக் கண்டவுடன் தான் ராமருக்கு உயிர் வந்தது. முக்கியமான ஒரு கட்டத்தை வால்மீகி விளக்குகையில் சூடாமணி தரப்பட்ட இந்த ஸ்லோகம் அர்த்தமுள்ள ஸ்லோகமாக அமைகிறது. காலம் காலமாக கேட்பவரின் மனத்தை உருக வைக்கும் கவிதையாகவும் ஆகி விட்டது.
contact swami_48@yahoo.com