
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9034
Date uploaded in London – –14 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 13-12-2020 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.
ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது ஏழு மோக்ஷபுரிகளில் நடு நாயகமாகத் திகழும் காசி ஸ்தலமாகும். இதன் புனிதத்தன்மையையும் மஹிமையையும் யாராலும் முழுவதுமாக விளக்க முடியாது. 1800 கோவில்கள் உள்ள நகரம் உலகிலேயே காசி ஒன்று தான் என்று சரித்திர ஆசிரியர்கள் வியந்து கூறுகின்றனர். அன்னபூரணி,விசாலாட்சி, துண்டி கணபதி, துர்க்கா, சங்கட விமோசன ஹனுமான், கால பைரவர், பசுபதிநாதர், பிந்து மாதவர் என மஹிமை வாய்ந்த ஆலயங்கள் பல இங்கு உள்ளன. ஆகவே இரவும் பகலுமாக பக்தர்கள் கூட்டத்தை ஆங்காங்கே கண்டு கொண்டே இருக்கலாம்.
அத்துடன் மிக அதிகமான புண்ணிய ஸ்நான கட்டங்கள் கங்கைக் கரை ஓரம் அமைந்திருக்கும் இடமும் காசி தான்.
க்ருதே த்ரிசூலவத் ஞேயம் த்ரேதாயாம் சக்ரவத்ததா |
த்வாபரம் து ரதாகாரம் ஷங்காகாரம் கலௌ யுகே ||
கிருத யுகத்தில் திரிசூல வடிவத்திலும், திரேதாயுகத்தில் சக்கர வடிவத்திலும், துவாபர யுகத்தில் தேர் வடிவத்திலும் கலி யுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி க்ஷேத்திரம் இருப்பதாக காசி ரகஸ்யம் கூறுகிறது.
காசி என்றால் ஒளி தரும் இடம் என்று பொருள்.
காசி என்றவுடன் கங்கை நதி நம் மனதிலே எழுந்தருளுவாள்.

அரிய தவம் செய்து பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். அனைத்துப் பாவங்களையும் போக்கும் புனித நதி கங்கை.
கங்கைக் கரை ஓரமாகச் சென்றால் காசியின் நீளம் சுமார் நான்கு மைல்கள். இந்தப் பகுதியில் 64 ஸ்நான கட்டங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை ஐந்து.
அஸி கட்டம் என்பது காசியின் தொடக்கத்தில் இருப்பது. இங்கு தான் அஸி நதி கங்கையுடன் கலக்கிறது. தச அசுவமேத கட்டம் என்பது பத்து அசுவமேத யாகங்களைச் செய்வதால் கிடைக்கும் பலனைத் தரும் கட்டம்.வருணாகட்டம் என்பது வருணா நதி சங்கமம் ஆகும் இடம் ஆகும். அடுத்து பஞ்ச கங்கார கட்டம் என்பது ஐந்து நதிகள் கங்கையுடன் சங்கமம் ஆகும் இடத்தில் அமைந்துள்ள கட்டமாகும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கட்டம் மணிகர்ணிகா கட்டம். இதுவே பிரதான ஸ்நான கட்டமாகும். இந்த ஐந்து கட்டங்களில் நீராடியவர்கள் பித்ரு காரியங்களைச் செய்வது மரபு.
மணிகர்ணிகா கட்டத்தில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ளது அரிச்சந்திரா காட்! இங்கு தான் சந்திரமதி தன் மகன் லோகிதாசனை எரிக்க வரும் போது அரிச்சந்திரன் வெட்டியானாக வந்து பார்த்த இடம்.
இந்த ஸ்நானத்தை முடித்தவுடன் மணிகர்ணிகா கட்டத்திற்கு அருகில் உள்ள தாரகேஸ்வரர் ஆலயம் சென்று ஸ்வாமியைத் தொட்டு பூஜிக்கலாம். கங்கை நீரை எடுத்துக் கொண்டு வந்து அபிஷேகமும் செய்யலாம். மேலே துர்க்கையம்மன் ஆலயம் உள்ளது. இந்த தரிசனத்தை முடித்த பின்னரே காசி விஸ்வநாதரைத் தரிசிக்க வேண்டும் என்பது பாரம்பரிய பழக்கமாகும்.
காசி விஸ்வநாதர் ஆலய பிரகாரம் வழவழப்பான சலவைக் கல்லால் அமைந்துள்ள பிரகாரமாகும். மையத்தில் விஸ்வநாதரின் கர்பக்ருஹம் உள்ளது. கங்கை நீர், பால் ஆகியவற்றால் பக்தர்கள் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும்.
இந்த ஆலயத்தை ராணி அகல்யாபாய் கட்டியதாக வரலாறு கூறுகிறது. கோவிலில் இருபத்தி இரண்டு மணங்கு தங்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. ஆகவே இதை தங்க ஆலயம் என்றே அனைவரும் அழைக்கின்றனர்.
தேவியானவள் காசி ஈஸ்வரருக்கு உணவு அளித்த இடம் இது.
இங்குள்ள அன்னபூரணி கோவிலை மராட்டிய மன்னர்கள் பயபக்தியுடன் வடிவமைத்துள்ளனர். கோயிலின் நடுவில் எண்கோண வடிவத்தில் மண்டபம் உள்ளது. அதை பன்னிரெண்டு கல் தூண்கள் தாங்குகின்றன. பலவித ரத்தினங்கள், மணிகள் பதிக்கப்பட்ட மணிமகுடத்துடன் அழகிய ரூபத்தில் காட்சி தரும் அன்னபூரணிக்கு கீழே ஸ்ரீ சக்ர மேரு யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
இடது கரத்தில் தங்கக் கிண்ணம், வலது கரத்தில் தங்கக் கரண்டி இவற்றுடன் பிட்சை ஏந்தி நிற்கும் இறைவனுக்கே அன்னம் அளிக்கிறாள் லோகமாதா.
அம்பாளின் அருகே இரு புறமும் தங்கத்தினால் ஆன ஸ்ரீ தேவியும் பூதேவியும் கொலுவிருந்து கையைத் தூக்கி ஆசீர்வதித்து அருள்கிறார்கள்.
அன்னபூரணி ஆலயத்திற்குச் சற்றுத் தொலைவில் விசாலாட்சி ஆலயம் அமைந்துள்ளது. குத்துவிளக்கு எரிய கர்பக்ருஹத்தில் தேவியை தரிசித்து குங்கும அர்ச்சனையையும் செய்யலாம்.
கங்கா ஸ்நானம் செய்து காசி விஸ்வநாதரையும் அன்னபூரணியையும் தொழுதால், பாவம் தொலையும், புண்ணியம் சேரும், முக்தி கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்கு பஞ்சமில்லை, எப்போதும் எதிலும் வெற்றியே கிடைக்கும்.
காசியின் முக்கியமான மூர்த்திகளைச் சொல்லும் ஒரு ஸ்லோகம் உண்டு.
விஸ்வேஸம், மாதவம், துண்டிம், தண்டபாணிஞ்ச, பைரவம் – வந்தே
காசிம், குஹாம், கங்காம், பவானிம், மணிகர்ணிகாம் என்பதே அது.
துளஸிதாஸர், கபீர் தாஸர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் வாழ்ந்த இடம் இது. இன்றும் ஏராளமான மகான்களும் சித்தர்களும் இருந்து வரும் தலம் காசி! காலம் காலமாக கோடிக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் புனித காசி யாத்திரை மேற்கொண்டு கங்கையில் ஸ்நானம் செய்து வணங்கி வரும் காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி

——-
You must be logged in to post a comment.