Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொண்டைமண்டல சதகம் பாடல் 16
பரிமேலழகர் வாழ்ந்த காஞ்சிபுரம்!
ச.நாகராஜன்
படிக்காசுப் புலவர் இயற்றிய நூல் தொண்டைமண்டல சதகம்.
தென்களத்தூரில் பிறந்த இவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர்.
நூறு பாடல்கள் கொண்ட இந்த சதக நூலில் தொண்டை மண்டலத்தின் அனைத்துச் சிறப்புகளும் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று பரிமேலழகர் வாழ்ந்த இடம் தொண்டைமண்டலம் என்பது.
சதகத்தின் 16வது பாடல் இது:
வள்ளற்சிலைப்பெரு மாணச்சர்சாத்தர் வழுதிமுதற்
றள்ளுவனார்க்குந்த் தலையானபேரையுந் தன்னுரையை
விள்ளுவனார்க்குத் திருக்காஞ்சிவாழ்பரி மேலழகன்
வள்ளுவனார்க்கு வழிகாட்டினான்றொண்டை மண்டலமே
பாடலின் பொருள் :-
தனது கல்விப் பெருக்கத்தின் பயனாகிய நூல்களுக்கு உரை செய்கின்ற திறத்தால், வள்ளல்சிலைப்பெருமாள், நச்சர், சாத்தர், வழுதி முதலிய உரையாசிரியர்களை வென்றவனாகிய காஞ்சிபுரத்தில் வாழ்ந்த பரிமேலழகன் என்னும் உரையாசிரியர் திருவள்ளுவரின் நூலின் பொருளை உலகத்தினர் கண்டெடுத்து உய்யும் பொருட்டுச் சிறந்த உரையாகிய ஒரு வழியை ஏற்படுத்தினார். அப்பரிமேலழகர் வாழ்ந்த காஞ்சீபுரமும் தொண்டைமண்டலத்தில் உள்ள நகரேயாகும்.
திருவள்ளுவரின் திருக்குறளுக்குச் சிறந்த உரைகளை எழுதியவர்கள் பத்துப் பெரும் உரையாசிரியர்கள்.
தருமர் மணக்குடையர் தாமத்தர் நச்சர்
பரிலேழகர் பருதி – திருமலையர்
மல்லர் கவிப் பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்.
தருமர் 2) மணக்குடவர் 3) தாமத்தர் 4) நச்சர் 5) பரிமேலழகர் 6) பருதி 7) திருமலையர் 8) மல்லர் 9) கலிப்பெருமாள் 10) காளிங்கர் ஆகிய பத்துப் பேரே திருக்குறளுக்கு உரை எழுதிய பேராசிரியர்கள் ஆவர்.
இந்தப் பத்துப் பேருடைய உரையில் பரிமேலழகர் உரையே சிறந்ததாக அமைகிறது என்பதை அனைவரும் உணர்ந்து அதைப் பாராட்டியுள்ளனர்.
இவர்களில் காலத்தால் பிற்பட்டவர் பரிமேலழகர். பரிமேலழகரின் உரை வந்த பின்னர் மற்ற ஒன்பது உரைகளும் அவ்வளவாகப் பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை.
“பரித்த உரை எல்லாம் பரிமேலழகன்
தெரித்த உரையாமோ தெளி”
என்ற தெளிவு மொழி இதைச் சுட்டிக் காட்டுகிறது.
ஒவ்வொரு உரையாசிரியரும், அதிகார முறை வைப்பிலும் கூட மாறுபடுகின்றனர். சில பாட பேதங்களும் ஓலைச் சுவடிகளில் உண்டு.
ஆனால் பரிமேலழகர் உரை தெளிவான ஒரு பார்வையைக் காட்டுகிறது.
பரிமேலழகர் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பரிபாடலுக்கும் சிறந்த உரையை இவர் எழுதியுள்ளார். பரிமேலழகர், காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் அர்ச்சகராக இருந்த வைஷ்ணவர்.
தனது திருக்குறள் உரையில் ‘திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்ற நம்மாழ்வார் பாசுரத்தை இவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். அத்துடன் கடவுள் வாழ்த்தில் வரும் ‘எண்குணத்தான்’ என்ற தொடரை இது சைவ ஆகமத்தில் கூறப்பட்டிருக்கிறது என்று கூறுவதால் இவர் சைவம், வைணவம் உள்ளிட்ட அனைத்து சமயப் பிரிவுகளையும் சமமாகக் கருதுவது குறிப்பிடத் தகுந்தது. உமாபதி சிவாச்சாரியாரும் பரிமேலழகரைப் பாராட்டியுள்ளார்.
மு.இராகவையங்கார் தனது ஆராய்ச்சிப்படி கி.பி. 1272இல் இவர் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகிறார்.
திருக்குறளைப் படிக்க பரிமேலழகர் உரை பெரிதும் உதவும். தற்கால உரைகளை (குறிப்பாக 1967க்கு பிற்பட்டு வந்த பெரும்பாலான உரைகள், உரை எழுதியவர் தனது முகத்தைத் திருக்குறள் என்னும் கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்து மகிழ்ந்து எழுதியது என்றே கூறி அவற்றை) விலக்கி விடலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனில் நாடி ஜோதிடம்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நானும் என் மகனும் வாரம் தோறும் வேதம் கற்க ‘சிந்தி மந்திரு’ (Sindhi Mandir) க்குப் போவோம். அங்கு திருச்சி கல்யாண சுந்தர குருக்கள் எங்களுக்கு ருத்ரம், சமகம், சூக்தம் எல்லாம் சொல்லிக் கொடுப்பார். ஏர் இந்தியா Air India வெங்கடராமன் அல்லது இந்தியன் ரயில்வே India Railways ஏஜெண்ட் Mr.தண்ட பாணி எனக்கும் என் மகனுக்கும் காரில் லிப்ட் (Lift) கொடுப்பார்கள். ஒரு நாள் Mr.வெங்கட்ராமன் என்னிடம், ஒரு உதவி கேட்டார். அவருடைய நண்பருக்கு தமிழ் செய்யுள் சிலவற்றை மொழிபெயர்க்க வேண்டும் என்றார் . எனக்கோ தமிழ் என்றால் நெய் ஒழுகும் கோதுமை ஹல்வா சாப்பிட்டது போல. உடனே தயங்கமால் யெஸ் YES என்று சொன்னேன்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. வீட்டு வாசலில் கார் நின்றது. காரில் செல்லுகையில் வெங்கடராமனிடம் எங்கு போகிறோம், யாரைப் பார்க்கப் போகிறோம், என்ன செய்யுள்? அவர் இயற்றியதா? என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்தேன்.
திரு வெங்கடராமன் சொன்னார்: நாம் பார்க்கப்போகும் மனிதர் லண்டனில் ஹிந்தி பேசும் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். அவர் இராமாயண உபன்யாசம் செய்யும் ஒரு பிரவசனகர்த்தா என்றார் . அவர் மகனைப்பற்றி ஒரு நாடி ஜோதிடர் எழுதிக் கொடுத்த செய்யுட்களை மொழி பெயர்க்கத்தான் உங்களை அழைத்தார்.
இதைக் கேட்டவுடன் எனக்கும் மகிழ்ச்சி. அட ஒருவர் தன் குடும்ப ரஹசியங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு வந்திருக்கிறாரே என்று நினைத்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரது வீட்டில் அமர்ந்து நாடி ஜோதிடர் 40 பக்க நோட்டில் அழகான கையெழுத்தில் எழுதிக்கொடுத்த செய்யுட்களை மொழி பெயர்த்து முடித்தேன். அவர் காதால் கேட்டாரே தவிர ஒன்றும் குறித்துக் கொள்ளவில்லை. எனக்கும் வியப்பு.! என்னடா இது. இவ்வளவு கஷ்டப்பட்டு மொழி பெயர்க்கிறோம்; கவனமாகக் கேட்கிறார். ஆனால் ஒன்றும் எழுதிக் கொள்ளவில்லையே என்று நினைத்தேன்.
செய்யுட்களை மொழிபெயர்த்து முடித்ததுதான் தாமதம்.
EXACTLY SAME ! எக்ஸ்சாக்ட்லி சேம் ; ‘பில்குல் டீக் ஹை’ என்றார்
என்ன பொருள் என்று வினவினேன்.
ஏற்கனவே ஒருவர் அவ்வளவு செய்யுட்களையும் மொழிபெயர்த்துக் கொடுத்துவிட்டார் என்றும் நான் அப்படியே அதை மொழி பெயர்த்தேன் என்றும் பாராட்டி நன்றி சொன்னார்.
மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
அட! பாவி மனுஷா! இதை முன் கூட்டியே சொல்லி இருக்கக் கூடாதா ? நான் இன்னும் கவனமாக பயந்து கொண்டே — பய பக்தியுடன் — மொழி பெயர்த்து இருப்பேனே! என்று மனதில் பொருமினேன் .
போகட்டும்; அவரிடம் போனபோது ஒரு புதிய விஷயம் கிடைத்தது. காஞ்சிபுரத்தில் ஒரு பிரபல நாடி ஜோதிடர் இருக்கிறார். நிறைய வெளி நாட்டுக்காரர்கள் அவரை மொய்ப்பதால் அப்பாயிண்ட்மெண்ட் APPOINTMENT இல்லாமல் பார்க்க முடியாது ; இந்த ஹிந்திவாலாவும் ஒவ்வொரு முறையும் அவரைப் பார்த்து ஜோதிடம் கேட்பது வழக்கம். அவர் துல்லியமாக சொல்லுவார். அருகிலேயே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதிக் கொடுப்பார்கள் என்று.
நானும் நினைப்பேன்; அடுத்த முறை காஞ்சி செல்லும்போது இவரைப் பார்த்துவிடவேண்டும் என்று. ஆ னால் நான் ஒவ்வொரு முறை இந்தியாவுக்குச் செல்லும்போதும். காஞ்சி மடத்துக்கும் கோவில்களுக்கும் செல்லவே நேரம் சரியாகப் போய்விடுகிறது.
2018ல் இந்தியாவுக்குச் சென்ற போது நிறைய நேரம் மரத்துக்கு அடியில் காரை நிறுத்தி 5 மணி நேரம் வீணடித்தேன் . காலை ரவுண்டு கோவில்களை ஒன்னரை மணிக்கு (1-30 PM) முடித்தோம். அடுத்த ரவுண்டு 5 PM அல்லது 6 PM மணிக்குத்தான் கோவில்கள் திறக்கும் என்றார்கள் . சகுந்தலா நினைவு மியூசியத்தைச் சுற்றிப்பார்த்தேன்; சமண காஞ்சிக்குப் போய் கொதிக்கும் வெயிலில் பாதி மலை ஏறி வி ட்டு குரங்குகள் மட்டும் இருப்பதைப் பார்த்து பயந்து திரும்பிவிட்டேன்; ஜன நடமாட்டமே இல்லை. அப்போது கூட இந்த நாடி ஜோதிடர் நினைவுக்கு வரவில்லை.
உண்மைதான் ; நாடி ஜோதிடரைப் பார்க்கப்போவதும் விதிப்படிதான் நடக்குமாம். நாம் போகும் போது நம்மைப் பற்றிய நாடி அவர் தொகுப்பில் இருக்குமாம். அவரிடம் அந்த நாடி ஓலைகள் இல்லாவிடில் அவரிடம் செல்லாமல் நம்மை விதியே தடுக்குமாம்.
வாழ்க “நல்ல” நாடி ஜோதிடர்கள் !
TAGS — நாடி ஜோதிடம், பலித்தது, லண்டன், காஞ்சிபுரம்
CHINESE ASTROLOGY; I TOOK THESE PICTURES IN HONG AND AUSTRALIA