காடுகள் பற்றி ரிக் வேத கவிதை — பகுதி 3 (Post No.10,276)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,276

Date uploaded in London – 30 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘காடுகள் வாழ்க ! இந்துக்களின் அற்புத வாழ்க்கை முறை’ என்ற தலைப்பில் இரண்டாவது பகுதி நேற்று வெளியானது. இன்று இறுதி பகுதியில் ரிக் வேத துதி 10-146 ல் கடைசி மூன்று மந்திரங்களைக் காண்போம்.

நேற்று இறங்கு வரிசையில் மந்திரம் 6, 5, 4 பற்றி எனது விளக்க உரையைத் தந்தேன். ஆறு மந்திரங்களின் முழு மொழிபெயர்ப்பை முதல் பகுதியிலேயே தந்து விட்டேன்.

இதோ மூன்றாவது மந்திரம் ரிக்.10-146-3

இங்கும் புலவர் ஒரு கற்பனைக் காட்சியை புலவர்  நம் முன்னே வைக்கிறார்.

புலவர் சொன்ன வார்த்தைகள் – “அங்கு பசுக்கள் மேய்வது போலத் தோன்றுகிறது. அதனால் வீடுகள் இருப்பது போலவும் தோன்றுகிறது மாலை நேரத்தில் அரண்யானி  தன்  வண்டிச் சக்கரங்களைக் கழற்றி வைத்திருக்கிறாள் போலும்!”

இதற்கு விளக்கம் எழுதியோர் உண்மையில் புலவர் பார்ப்பது மான்கள், அங்கும் இங்கும் புல் மேய்வதாகும்; வீடு என்பது  மரங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, செடி கொடிகளால் கூரை வேயப்பட்டது போலத் தோன்றுவதே என்றும் எழுதியுள்ளனர்.

வண்டிச் சக்கரம் கழற்றி விட்டது என்பது மாலை நேரத்தில் வண்டிக்காரர்கள்  காளைகளை வண்டியிலிருந்து அகற்றி இளைப்பாற விட்டுவதாகும். இங்கே காட்டில் மான்கள் சுதந்திரமாக புல் மேய்வதைக் கண்ட புலவர் அப்படிப் பாடுகிறார் .

நல்ல ஒரு காட்சியை புலவர் நம் முன்னே கொண்டுவருகிறார்.

காளிதாசன், இமய மலை அடிவாரம் பற்றி குமார சம்பவத்தில் சொல்லும் காட்சி இது. அதை அப்படியே புறநானூற்றுப் புலவர் முரஞ்சியூர் முடி நாகராயர் பாடல் 2-ல் வருணிக்கிறார்:-

சிறுதலை நவ்வி பெருங்கண் மாப்பிணை

அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்

முத்தீ விளக்கின் துஞ்சும்

பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே “

இது சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனைப் பாடிய பாடலால் மிகப் பழைய பாடல் ஆகும் .

MR NAGARAJAN’S POEM IN PURA NANURU

பிராமணர்கள் இமயமலை அடிவாரத்தில் மாலை நேரத்தில் சந்தியா வந்தனம் செய்து, யாகம் செய்வதைக் காட்டுகிறது .இன்று தேசப்படத்தில் ‘கஞ்சன் ஜங்கா’ என்று போட்டிருக்கும் சிகரத்தின் உண்மைப் பெயர் ‘காஞ்சன சிருங்கம்’; அதை அப்படியே ‘பொற்கோடு’ golden peak  என்று அழகுற மொழிபெயர்க்கிறார் புறநானூற்றுப்  புலவர் மிஸ்டர் நாகராஜன் (ராய= ராஜ என்பது இன்று ஆங்கிலத்திலும்  Royal ராயல் என்று இருப்பதை தமிழ் -சம்ஸ்கிருதம் தொடர்பு பற்றிய 150 கட்டுரைகளில் விளக்கியுள்ளேன்)

xxx

ரிக்.10-146-2

இரண்டாவது மந்திரத்துக்கு வருவோம். ரிக் வேதம் எவ்வளவு பழமையானது; அதற்குப் பொருள் காண்பது எவ்வளவு கடிது என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது

காட்டில் நடக்கும் Orchestra ஆர்கெஸ்ட்ரா பற்றிப் புலவர் பாடுகிறார். இது போன்ற அருமையான இயற்கை வருணனை மலைபடுகடாம் முதலிய சங்க இலக்கியப் பனுவல்களில் நிறைய உள .

கிரீச் என்று சப்திக்கும் விருஷாவரத்துக்கு சிச்சிகம் பதில் அளிக்கிறது. அங்கே பின்புறத்தில் யாரோ தாளம் போடுகிறார்கள். யாரோ சுருதி பாடுகின்றனர் . அவைகள் எல்லாம் அரண்யானி தேவியைக் குறித்து துதி பாடுகின்றன” –

இதன் பொருள் காட்டில் பல்வேறு ஒலிகள் கேட்கின்றன.அவற்றின் ஒலிகள் ‘பாடுவது’ போலவும் பின்னாலுள்ள வண்டுகளின் தொடர்ந்த ரீங்காரம் ‘சுருதி’ போலவும் உள்ளதாம். இதைப் புரிந்துகொள்ள இரண்டு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

ஒன்று, இந்துக்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில்  பாடகர் அல்லது வாத்தியம் வாசிப்போருக்கு தம்பூராவில் சுருதி மீட்டும் ஒரு பெண்மணி அமர்ந்து 3, 4 மணி நேரத்துக்கு சுருதி போட்டுக்கொண்டு இருப்பார் . 

இரண்டு , காடுகளுக்குச்  சென்ற அனுபவம் உடையோருக்கு அங்கு எப்போதும் இதே போல வண்டுகளின் ரீங்காரம் இசைப்பதை கேட்டிருப்பார்கள். கொடைக்கானல் போன்ற மலைகளில் ஏறும்போது காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தோருக்கு இது தெரிந்திருக்கும். இதே போல காடுகளில் தொடர்ந்து ஒலி . ஆனால் இப்படி ஆர்க்கெஸ்ட்ரா Orchestra வாசித்த பூச்சிகள் , பறவைகள் பற்றி உரைகாரர் இடையே கருத்தொற்றுமை இல்லை. ஏனெனில் வேதம் அவ்வளவு பழமையானது  அந்தப் பறவைகளை இன்று அடையாளம் காணமுடியவில்லை. சிச்சிக ,வ்ருஷாவர என்பதை வெட்டுக்கிளி, மீன் கொத்திப் பறவை என்பர் சிலர். எல்லாமே பூச்சி வகை, எல்லாமே பறவை வகை என்றும் உரைகாரர் செப்புவர் .

நமக்குத் புரிவது பறவைகளின் பாடல்; பின்னணியில் சிற்றோடை, நீர்வீழ்ச்சிகள் தாளம், வண்டுகளின் ரீங்காரம்  என்னும் சுருதி. இது தமிழ் இலக்கியத்திலும் உளது. ஆனால் அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புலவன் அதை சம்ஸ்கிருதத்தில் பாடியதும் அதை பிராமண சமூகம் வாய் மொழியாகவே பரப்பி வருவதும் உலக அதிசயம்!!!

xxx

10-146-1

முதல் மந்திரத்தைக் காண்போம் . அரண்யானி!  அரண்யானி! என்று இரு முறை அழைத்து புலவர் பாட்டைத் துவங்குகிறார் . இது போல பல பாடல்கள் சங்க இலக்கியத்திலும் உண்டு ‘பல் சான்றீரே , பல் சான்றீரே!!’ ‘கலம் செய் கோவே,  கலம் செய் கோவே !!’ என்றெல்லாம் இரு முறை அழைக்கும் பாடல்களை புற நானூற்றிலும் காணலாம்.

ரிக் வேதத்தில் உள்ள நிறைய சொற்களை தமிழர்களாகிய நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம் ; இந்தக் கவியில் உள்ள ‘அரண்யானி’ என்பது ஆரண்யம், அரண்யம் = காடு என்பதாகும். இன்றும் கூட வேதாரண்யம் = திருமறைக்காடு என்பதெல்லாம் தமிழர் வாயில் சர்வ சாதாரணாமாகப் புழங்கும் சொற்கள் ஆகும் .

இப்படி காட்டு ராணியை அழைக்கும் புலவர் ஒரு வியப்பான கேள்வியைக் கேட்கிறார். “ஒய் அம்மணி! உனக்கு பயமே இல்லையா? மாலை நேரம் வந்துவிட்டால் தோன்றியும் தோன்றாமலும் மறைந்து போகிறாய். நீ ஏன் அருகிலுள்ள கிராமத்துக்கு வரக்கூடாது? உனக்கு பயம் என்பதே இல்லையா என்று வியக்கிறேன்”.

xxx

6000 ஆண்டுகளுக்கு முன்னர், இப்படிப் பாடிய கற்பனை மிகு கவிகள் ரிக் வேதத்தில் நிறைய உள்ளன. BIG BANG ‘பிக் பாங்’ என்று அழைக்கப்படும்  மாபெரும் பிரபஞ்சத் தோற்றம் CREATION பற்றிய கவிதையைக் கண்டு உலகமே வியக்கிறது அதர்வண வேதத்தில் உள்ள பூமி சூக்தத்தைக் கண்டு உலகமே ஆச்சர்யப்படுகிறது.

ரிக்வேதத்தின் கடைசி கவிதை வியாசரின் மஹா ஜீனியஸைக் காட்டுகிறது. ‘’உலகம் முழுதும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற உலக மஹா தேசீய கீதத்தை கடைசி பாடலாக வியாசர் வைத்திருப்பது இந்துக்களின் நல்லெண்ணத்துக்கு உதாரணம்ஆகத் திகழ்கிறது. ரிக் வேதத்தை எல்லோரும் படிக்க வேண்டும். அஸ்வினி தேவர்கள், விச்வே தேவர்கள் பற்றிய கவிதைகளை முதலில் படியுங்கள். அற்புதங்களும் வரலாறும் அதில் உள .

இதனால்தான் வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே என்று பாரதியும் பாடிவைத்தான்.

—SUBHAM—

tags- காடுகள் , ரிக் வேத,  கவிதை-3

காடுகள் பற்றி ரிக் வேத கவிதை – கொஞ்சம் என் சுய சரிதை (Post.10,268)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,268

Date uploaded in London – 28 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

என் பெயர் சந்தானம் சுவாமிநாதன்; இப்போது எழுதும் பெயர் லண்டன் சுவாமிநாதன் ; ஆரம்பமே கோளாறு ; அதிலும் கடவுள் நன் மை செய்தான் என்றே சொல்ல வேண்டும். அப்ளிகேஷன் Passport Application நிரப்பி பழக்கமில்லை. நாகப்பட்டிணம் அருகிலுள்ள  கீழ்வளூரில் கந்த சக்ஷ்டி அன்று பிறந்ததால் பக்கத்திலுள்ள அறுபடை வீடான சுவாமிமலை சுவாமிநாதனின் பெயரை அம்மாவும் அப்பாவும் வைத்தார்கள். ஆகவே என் பெயர் சுவாமிநாதன். முதலில் சுவாமிநாதன் என்று எழுதி பின்னர் குடும்பப் பெயரான சந்தானம் (என் தந்தையின் பெயர் ) என்று நிரப்பியிருக்க வேண்டும் .

பிபிசி BBC WORLD SERVICE என்னை 1987-ல் லண்டனுக்கு தமிழோசை ஒலிபரப்பாளராக அழைத்து வந்த பின்னர் எல்லோரும் என்னை சந்தானம் என்று அழைக்கத் துவங்கினர். எனக்கு சொல்லவும் முடியவில்லை, மெள்ளவும் முடியவில்லை. திருடனுக்குத் தேள் கொட்டிய கதை ஆயிற்று. என்னை ‘சுவாமி’ என்று அழையுங்கள்; உங்களுக்கு ஈஸி easy யாக இருக்கும் என்றேன். வெள்ளக்காரப் பயல்களுக்கு ரொம்ப சந்தோஷம் ; அவர்களுக்கு எளிதில் நுழையும் பெயர்கள் — குரு , யோகா , சுவாமி, கறி , தோஸா  முதலியன .

எனக்கு சிறு வயது முதலே காடுகள், பறவைகள் என்றால் கொள்ளை ஆசை. இப்போது வயது 73. ஆயினும் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தபால்தலைகளை சேகரிக்கத் துவங்கிய நான் இன்றும் சேகரித்துக் கொண்டு இருக்கிறேன். 1961-ல் இந்திய காட்டிலாகா வெளியிட்ட நூற்றாண்டு விழா தபால் தலையையும் அதைத் தொடர்ந்து வெயிட்ட வனவிலங்கு  தபால் தலைகளையும், தூக்கம் வரும் வரை ரசித்து, ரசித்துப் பார்ப்பேன் .

ஆகையால் ரிக் வேதத்தில் வந்த அரண்யானி  (10-146) கவிதையையும் ரசித்து, ருசித்துப் படித்தேன். அதுவும் உலகிலேயே பழைய புஸ்தகமான, கவிதைத் தொகுப்பான ஒரு நூலில் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் தேவ முனி என்பவர் எழுதிய கவிதை என்றவுடன் மெய் சிலிர்த்தது.

ரிக் வேதம் கி.மு 4000 அல்லது அதற்கு முந்தியது என்பது ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் கண்ட உண்மை. முதலில் கி.மு 1200 என்று உளறிய மாக்ஸ்முல்லரை பேராசிரியர் வில்சன் போன்றோர் சொல்லால்  அடித்த அடியில், அவரும் “ஐயையோ , நான் அதற்குக் கீழாக யாரும் கொண்டுவரமுடியாது என்றுதான் சொன்னேன். ரிக் வேதம் கி.மு 1500 அல்லது அதற்கும் முன்னதாக இருக்க வேண்டும். யாராலும் காலத்தைக் கணிக்க முடியாது” என்று சொல்லி ‘ஜகா’ வாங்கினார்.

அப்பேற்பட்ட ரிக் வேதத்தில் வந்த கவிதை போல அந்தக் காலத்தில் எவரும் எழுதவில்லை. இயற்கை பற்றிய கவிதைகள் ரிக் வேதத்தில் ஏராளம். அதர்வ வேதத்தில் உள்ள பூமி சூக்தம் அதைவிடப் பிரமாதம்.

சுமார் 50 ஆண்டுகளாக ‘வேதத்தைப் பற்றி’ப் படித்து வந்தேன். அது சரி, ரிக் வேதத்தை, முடி முதல் அடி வரை, வேகமாகப் படித்து விடுவோம் என்று சொல்லி 28-4-2021ல் துவங்கினேன். தினமும் ஒரு மணி நேரம் படித்தேன் . ஆறு மாதத்தில் முடித்தேன் (24-10-21). ‘படித்தேன்’ என்றே சொல்ல வேண்டும். ‘கற்கக் கசடற’ என்று வள்ளுவன் சொன்ன வாசகம் பொருந்தாது. அப்படி “வெறுமனே படித்த பொழுது”  புஸ்தகம் முழுதும் பென்ஸிலால் என் கருத்துக்களைக் குறித்தேன். கட்டுரை எழுதுவதற்கான அதிசய விஷயங்களை பின் பக்கம் குறித்தேன்.

இது போல, இதற்கு முன் 40 ஆண்டுகளாக, கம்பராமாயணம், பன்னிரு திருமுறைகள், திவ்வியப் பிரபந்தம் , (திருமந்திரம், திருவாசகம் ) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சங்க இலக்கியத்தின் 18 மேல்கணக்கு நூல்கள் அனைத்தையும் படித்தேன் .அவ்வளவிலும் நான் படித்த தேதியும் பென்ஸில் கிறுக்கல்களும் இருக்கும் .

இப்படி ரிக் வேதத்தின் 10,552 மந்திரங்களையும் ஜம்புநாதனின் தமிழ் மொழி பெயர்ப்பில் தமிழிலும் அதற்கான ஆங்கில மூலமான கிரிப்பித்தின் (RALPH T H GRIFFITH ஆங்கில மொழி பெயர்ப்பையும் சேர்த்துப் ‘படித்தேன்’; நினைவிற் கொள்க ; ‘கற்கவில்லை’ ; ஏனெனில் வேதம் என்பது பசிபிக் சமுத்திரம். அதை யாரவது கற்றதாகச் சொன்னால் (TURN BACK AND LAUGH) அவருக்கு முதுகைக் காட்டிக்கொண்டு வாய்விட்டுச் சிரியுங்கள்.

ரிக் வேதத்தை மொழி பெயர்த்த 30 வெள்ளைக்காரப் பயல்களும் திரு திரு வென திருடன் முழி முழிக்கிறார்கள்; ‘எங்களுக்குப் புரியவில்லை’ என்று ALTERNATE PAGE ஒரு பக்கம் விட்டு, ஒரு பக்கத்தில் எழுதியும் விட்டார்கள்; புரிந்தது போல நடித்த மார்க்சீய வா (ந்)திகள் மட்டும் “தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என்று எழுதியுள்ளன ( ‘ன’ = அஃறிணைக் குறிப்பு)

அரண்யானி என்ற வன தேவதை, பற்றி தெரிந்து ரசிக்க கானகம் பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். எங்கள் வீட்டில் எல்லோரும் புஸ்தகப் பைத்தியங்கள். என் தந்தை வெ சந்தானம் எங்களுக்கு வீடு, வாசல், நில, புலன்,சொத்து, பாங்கு பாலன்ஸ் BANK BALANCE எதையும் வைக்கவில்லை ; கடனும் வைக்கவில்லை. 6000 புஸ்தகங்களை காத்ரேஜ் Godrej பீரோவில் வைத்துச் சென்றார். வீட்டிற்கு வருவோர் ‘என்ன ஸார் , இது காத்ரேஜ் பீரோவில் எல்லோரும் பணம் நகை, நட்டு வைப்பார்கள்; நீங்கள்……………. “ இதற்கெல்லாம் என் அப்பாவின் புன்னகைதான் பதில் ; சொற்கள் எதுவும் வராது .

அவற்றில் நாங்கள் ரசித்துப் படித்த புஸ்தககங்கள் வங்காளி  மொழியில் விபூதி பூஷண வந்த்யோபாத்யாய எழுதிய ‘ஆரண்யக்’ என்ற புஸ்தகம் (தமிழில் த.நா. சேனாபதியின் அற்புதமான மொழி பெயர்ப்பில் வனவாசி என்று பெயர்), எம்.பி. சுப்ரமண்யம் எழுதிய ‘தேக்கடி ராஜா’, கென்னத் ஆண்டர்சன் எழுதிய ‘சிவனப்பள்ளியின் கருஞ் சிறுத்தை’ .

இவைகளைப்   பற்றி அண்ணன் தம்பிகள் மணிக்கணக்கில் விவாதிப்போம். இறுதியாக எங்கள் அம்மா சாப்பாட்டுக் கடைக்கு இறுதி மணி அடித்து எச்சரிக்கும் வரை பேசிக்கொண்டே இருப்போம்.

இதில் எங்களுக்கு EXTRA INTEREST ‘எக்ஸ்டரா’ ஆர்வம் ஊட்டியவர் ஜியாவுதீன் என்னும் தமிழ் எழுத்தாளர் ஆவார். அவர் தேக்கடி- பெரியாறு அணைப்பகுதியில் காட்டிலாகா அதிகாரி; மாதத்துக்கு ஒரு முறையாவது என் தந்தையைக் கண்டு தினமணி சுடர் வார இதழில் பிரசுரிக்க கதையோ கவிதையோ தருவார். அப்போது மணிக்கணக்கில் பல கானக விஷயங்களை சொல்லுவார் . அவரை யானை விரட்டிய கதை, ஒரு ஊழியரை மலைப்பாம்பு சுற்றி வளைத்தவுடன் இவர்கள் கானக மக்களைக் கொண்டு அவரை விடுவித்த கதை, உடம்பு முழுதும் அட்டை Leehes ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உரிஞ்சும் கதை எல்லாம் சொல்லுவார். என் அப்பாவுக்கு புலித்தோல், மான் தோல் கொண்டு வந்ததாவும் நினைவு. அதை வைத்துக்கொண்டு அவர் ஜபம் செய்ததைப் பார்த்து இருக்கிறேன். என் அப்பாவுக்கு பசி வந்தால் பத்தும் பறந்து போகும். கோபத்தில் சீறுவார் .யாரோ ஒருவர் சொன்னார் ; புலித் தோலில் அமர்ந்து ஜபம் செய்தால் கோபம் அதிகமாகும் என்று ! பின்னர் மான் தோலை பயன்படுத்தி ஜபம் செய்வார். பிராமண பிரம்மச்சாரி பூணுலில் மான் தோல் இருக்கும்.

ஒருபுறம் காட்டின் வருணனை ‘வா வா’ என்று அழைத்தாலும் இரவு நேர கானக ஒலிகள், ‘சிரிக்கும் கழுதைப்புலி’ பற்றி அவர் கூறியது ஆகியன அசச்சுறுத்தும்;  இருந்த போதிலும் எங்களை காட்டுக்கு அழைத்தார். அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் நான் தேக்கடி சென்ற போதும் தொலைவில்தான்  யானைக் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. இது போல சென்னை அருகில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கும் சீஸன் இல்லாதபோது போனதால் கொஞ்சம் பறவைகளைத்தான் பார்க்க முடிந்தது. இந்த ஆர்வத்தை எல்லாம் பயன்படுததி பி. எஸ் சி தாவரவியல் B Sc BOTANY படித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டேன். வீட்டில் முருங்கைக் காய்  சாம்பார் வைத்தால் ‘மொரிங்கா ஆப்லங்கேட்டா’ போடு என்பேன். சாமிக்கு செம்பருத்தி வாங்கினால் ‘ஹைபிஸ்கஸ் ரோசா சைனன்சிஸ்’ என்பேன். வெண்டைக்காய் கறி என்றால் ‘ஹைபிஸ்கஸ் எஸ்குலாண்ட்ஸ்’ என்பேன்.

Xxx

அரண்யானி

ஒரு வழியாக சப்ஜெக்டுக்குSUBJECT வருகிறேன். ரிக் வேத பத்தாவது மண்டலத்தில் 146 ஆவது துதியாக உள்ள அரண்யானி கவிதையை ரசிக்க ஒரு முறையாவது காட்டுக்குப் போயிருக்க வேண்டும் நான் BOTANY பாட்டனி மாணவர் என்ற முறையில் பல காடுகளுக்குச் சென்றுள்ளேன். கல்லூரிப் பேராசிரியர்கள் எங்களை பஸ்ஸில் குற்றாலம், தேன் அருவிக் காடுகள், கர்நாடக ஆகும்பே காடுகள், ஏற்காடு முதலிய இடங்களுக்கு அழைத்துச் சென்று தாவரங்களை சேகரிக்க உதவினார்கள் இது தவிர நான் மதுரைக்கு மிக அருகிலுள்ள அழகர் கோவில் மலைகள் , கொடைக்கானல், கோவை அருகிலுள்ள உதக மண்டலம்  ஆகியவற்றுக்கு பலமுறை சென்றுள்ளேன்.

‘கானகம்’ பற்றி ஜம்புநாதன் மொழிபெயர்த்ததன் சுருக்கத்தை சொல்லுகிறேன். பின்னர் இதை ஆங்கிலத்தில் இயற்கையை பற்றி எழுதிய வோர்ட்ஸ் வொர்த் WILLIAM WORDWORTH  கவிதைகளுடன் ஒப்பிடுவோம்

XXXX

ரிஷி தேவ முனி – இரம்மத புதல்வன் அரண்யானியை நோக்கிக் கூறுவது :–

1.அரண்யானியே ! காட்சியிலிருந்து மறைபவள் போலத் தோன்றும் அரண்யானியே , நீ ஏன் கிராமத்தை நாடுவதில்லை ? உன்னை அச்சம் அணுகுவதில்லையா?

2. கிறீச்சென்று சப்திக்கும் விருஷாவரத்துக்கு சிச்சிகம் பதில் அளிக்கும்கால் தாளங்களைப் போல சுருதி தோன்றி அரண்யானி போற்றப்படுகிறாள்.

3. அங்கு பசுக்கள் மேயுங்கால் காடு , மனையைப் போலத் தோன்றுகிறது . மாலையிலே அரண் யானி, சகடங்களை இனி வேண்டாம் என்று நீக்கிவிட்டவள் போல் தோன்றுகிறாள்.

4.வனத்தின் தேவியே ! இங்கு ஒருவன் தன்  பசுவை அழைக்கிறான்; வேறு ஒருவன் மரத்தை வெட்டுகிறான். மாலையிலே வனத்தில் வசிப்பவன் , பறவைகளுடைய , மிருகங்களுடைய சப்தத்தைக் கேட்டு , ஏதோ திருடர்களுடைய  குரல் என்று நினைத்து பயந்து மனக் கலக்கம் அடைகிறான்

5. வனம் எவனையும் துன்புறுத்தாது . ஆனால் வேறு எதுவோ, எவனோ அவனை எதிர்க்கலாம் அங்கு வசிப்பவன் விருப்பம் போல் இனிய  பழத்தை  உண்டு அங்கே சுற்றுகிறான்.

6.நான் கஸ்தூரி மணமுள்ளவளும் , சுகந்தமாயிருப்பவளும் , பல பழம் முதலியவை ஏந்துபவளும் பயிரிடப்படாதவளும் , மிருகங்களின் தாயுமான அரண்யானியைப் போற்றுகிறேன் .

xxx

இது பழைய கால செய்யுள் நடை; விளக்கினால்தான் மஹிமை புரியும்; அடுத்த கட்டுரையில் விளக்குகிறேன்

இதோ சம்ஸ்க்ருதத்தில் அந்தக் கவிதை

10.146.01   (Mandala. Sukta. Rik)

अर॑ण्या॒न्यर॑ण्यान्य॒सौ या प्रेव॒ नश्य॑सि ।

क॒था ग्रामं॒ न पृ॑च्छसि॒ न त्वा॒ भीरि॑व विंदती३ँ ॥

araṇyāni ǀ araṇyāni ǀ asau ǀ yā ǀ pra-iva ǀ naśyasi ǀ

kathā ǀ grāmam ǀ na ǀ pṛcchasi ǀ na ǀ tvā ǀ bhīḥ-iva ǀ vindatīm̐ ǁ

10.146.02   (Mandala. Sukta. Rik)

वृ॒षा॒र॒वाय॒ वद॑ते॒ यदु॒पाव॑ति चिच्चि॒कः ।

आ॒घा॒टिभि॑रिव धा॒वय॑न्नरण्या॒निर्म॑हीयते ॥

vṛṣa-ravāya ǀ vadate ǀ yat ǀ upa-avati ǀ ciccikaḥ ǀ

āghāṭibhiḥ-iva ǀ dhāvayan ǀ araṇyāniḥ ǀ mahīyate ǁ

10.146.03   (Mandala. Sukta. Rik)

उ॒त गाव॑ इवादंत्यु॒त वेश्मे॑व दृश्यते ।

उ॒तो अ॑रण्या॒निः सा॒यं श॑क॒टीरि॑व सर्जति ॥

uta ǀ gāvaḥ-iva ǀ adanti ǀ uta ǀ veśma-iva ǀ dṛśyate ǀ

uto iti ǀ araṇyāniḥ ǀ sāyam ǀ śakaṭīḥ-iva ǀ sarjati ǁ

10.146.04   (Mandala. Sukta. Rik)

गामं॒गैष आ ह्व॑यति॒ दार्वं॒गैषो अपा॑वधीत् ।

वस॑न्नरण्या॒न्यां सा॒यमक्रु॑क्ष॒दिति॑ मन्यते ॥

gām ǀ aṅga ǀ eṣaḥ ǀ ā ǀ hvayati ǀ dāru ǀ aṅga ǀ eṣaḥ ǀ apa ǀ avadhīt ǀ

vasan ǀ araṇyānyām ǀ sāyam ǀ akrukṣat ǀ iti ǀ manyate ǁ

10.146.05   (Mandala. Sukta. Rik)

न वा अ॑रण्या॒निर्हं॑त्य॒न्यश्चेन्नाभि॒गच्छ॑ति ।

स्वा॒दोः फल॑स्य ज॒ग्ध्वाय॑ यथा॒कामं॒ नि प॑द्यते ॥

na ǀ vai ǀ araṇyāniḥ ǀ hanti ǀ anyaḥ ǀ ca ǀ it ǀ na ǀ abhi-gacchati ǀ

svādoḥ ǀ phalasya ǀ jagdhvāya ǀ yathā-kāmam ǀ ni ǀ padyate ǁ

10.146.06   (Mandala. Sukta. Rik)

आंज॑नगंधिं सुर॒भिं ब॑ह्व॒न्नामकृ॑षीवलां ।

प्राहं मृ॒गाणां॑ मा॒तर॑मरण्या॒निम॑शंसिषं ॥

āñjana-gandhim ǀ surabhim ǀ bahu-annām ǀ akṛṣi-valām ǀ

pra ǀ aham ǀ mṛgāṇām ǀ mātaram ǀ araṇyānim ǀ aśaṃsiṣam ǁ

தொடரும்……………………………….

tags-வனவாசி, தேக்கடி ராஜா, அரண்யானி , காடுகள், கானகம், வனம்