அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்! (Post No.5270)

Written by S NAGARAJAN

 

Date: 30 JULY 2018

 

Time uploaded in London –   68-49 am (British Summer Time)

 

Post No. 5270

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சென்னை வானொலி நிலையம் ஏ அலை வரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலை 6.55 மணிக்கு சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய ஒலிபரப்பில் இடம் பெற்ற மூன்றாவது கட்டுரை!

அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்!

நவீன் தொழில்நுட்பம் வளர்ந்து உலகமே சுருங்கி விட்ட நிலையில் மனிதகுலத்தின் வளர்ச்சியை மட்டுமே மனிதர்கள் எண்ணாமல் உலகளாவிய பல்லுயிர் சமுதாயத்தில் தாங்களும் ஒரு அங்கமே என்று எண்ணி செயல்பட வேண்டும்.

 

பூமியில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களில் மனித இனமும் ஒன்று என்ற எண்ணத்துடன் மிருக இனங்கள், பறவை இனங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றைக் காத்து அவற்றுடன் இணக்கமாக வாழ்ந்து சுற்றுப்புறச் சூழலை சிறப்பாகப் பேணிக் காக்க வேண்டியது மனிதனின் கடமை.

 

ஆனால் இன்றைய நிலையில் தேனிக்கள் மற்றும் சிட்டுக்குருவியிலிருந்து பல உயிரினங்கள் வேகமாக அழிந்து பட்டு வருகின்றன. பல்வேறு உயிர்களும் ஒன்றுடன் ஒன்று இணக்கமாக வாழ்ந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும்.

 

சீதோஷ்ண நிலை மாறுதல், கடல் மட்டம் உயர்தல், விண்கற்கள் மோதுதல், மனித ஜனத்தொகை வெகு வேகமாக அதிகரித்து வருதல், சுற்றுப்புறச் சூழ்நிலை கேடு, உலகம் வெப்பமயமாதல், அரிய உயிரினங்களை வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பல மிருக, பறவையினங்கள் அருகி வருகின்றன.

 

இயற்கை சீற்றங்களினாலும் இப்படிப்பட்ட உயிரினங்கள் சில சமயம் அழிந்து பட்டாலும் மனிதனின் செயல்பாடுகளே இவை பெருமளவு அழியக் காரணம் என்பது வெளிப்படையான உண்மை.

 

பழைய காலத்தை விட நூறு மடங்கு அதிகமாக இவை அழிகின்றன என்பது வருத்தமூட்டும் ஒரு உண்மை. இது இன்னும் பத்து மடங்கு அதிகமாகும் என்பது நிபுணர்களின் கருத்து.

 

இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் வாழும் பெங்குயின்கள் வேகமாக அழிந்து வருகின்றன. உலகம் வெப்பமயமாதலும், நீரின் உஷ்ணநிலை நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும் உணவுக்கு வழியின்றி இவை தவிக்கின்றன

 

அடுத்து இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் வாழும் டுனா (BigeyeTuna) வகை மீன்கள் அருகி வருகின்றன. இவை வணிக ரீதியில் விற்கப்படுபவை. இவற்றைத் தொடர்ந்து வேட்டையாடிப் பிடிப்பதால் இவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. கடலின் சுற்றுப்புறச் சூழலுக்கு இன்றியமையாத இந்த மீன்கள் அருகி வருவது சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் கேட்டை விளைவிக்கும்.

 

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இந்தியாவின் வட பகுதியிலும் நேப்பாளத்திலும் காணப்படும் அரிய வகை மிருகம். இவற்றை வேட்டையாடுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவை வசிக்கும் பகுதிகளில் சுற்றுப்புறச்சூழல் சமச்சீருடன் இருக்க இவையே காரணமாகும். இவை மறைந்தால் பல உயிரினங்களும் சேர்ந்து மறையும்.

 

கலபாகாஸ் தீவில் காணப்படும் பெரிய ஆமை, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான்,சிலி ஆகிய நாடுகளின் கடற்புரங்களில் வாழும் பெரிய வெள்ளைச் சுறா உள்ளிட்டவை அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் மிகவும் அருகி வருகின்றன.

 

ஆர்க்டிக் பகுதிகளில் வாழும் துருவக் கரடிகள் உலகம் வெப்பமயமாகும் அபாயத்தால் அழிந்து வருகின்றன. இவற்றைத் தொடர்ந்து வேட்டையாடுவது தடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் இவற்றைப் பார்ப்பது இயலாது. ஆப்பிரிக்காவிற்கே பெருமை தேடித் தரும் ஆப்பிரிக்க யானைகள் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனிதர்கள் காட்டுப் பகுதியை குடியிருப்பாக ஆக்குவதாலும், வேட்டையாடுவதாலும் இவற்றின் எண்ணிக்கை வேகமாக  குறைந்து வருகிறது.

 

இந்த அரிய உயிரினங்களை மனித இனம் பாதுகாத்தால் மட்டுமே அவை அழியாமல் இருக்கும்; அத்துடன் சுற்றுப்புறச் சூழல் சிறப்பானதாகவும் அமையும்.

***