Post No. 10,162
Date uploaded in London – 2 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினம். அண்ணலைப் போற்றுவோம்!
எளிமை, பிரஸ்னம், சேவை : கீதை காட்டும் வழி பற்றி காந்திஜி!
ச.நாகராஜன்
மஹாத்மாவைப் பற்றி ஆயிரக்கணக்கில் துணுக்குச் செய்திகள், குட்டிச் சம்பவங்கள் உண்டு. எதை எடுத்துப் பார்த்தாலும் அதில் ஒரு பொருள் புதைந்து இருக்கும்.மஹான்களை அவர்கள் அருகில் இருப்போர்கள், சிறு சம்பவங்களினாலும் அவர்கள் கூறும் சொற்கள் அவை ஒன்றிரண்டாக இருந்தாலும் சரி- அந்தச் சொற்கள் மூலமாகவும், அவர்களை மஹாத்மா என்று இனம் கண்டு கொள்ளலாம்.
ராம்நாராயண் சௌத்ரி என்ற காந்திஜியின் அணுக்கத் தொண்டர் தனது அனுபவங்களை BAPU, AS I SAW HIM என்ற நூலில் தொகுத்துத் தந்துள்ளார்.
அவற்றில் சில இதோ:
உழையுங்கள் – நீரையும், உணவையும் பெறுங்கள்!
காந்திஜியின் ஆசிரமத்திற்குச் சில பேர் வருகை புரிந்திருந்தனர். நேரம் நண்பகல். அவர்களுக்கு ஒரே தாகம். ராம்நாராயண் சௌத்ரி அங்கிருந்தார். அவரிடம் அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டனர். உடனே கிணற்றிலிருந்து ஒரு பக்கெட் நீரை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார் ராம்நாராயண். உடனே அங்கிருந்த அவரது ஆசிரம சகாக்கள் அப்படிக் கொடுக்கக் கூடாது என்றும அது ஆசிரம விதிகளுக்கு முரணானது என்றும் கூறினர். ராம் நாராயணனுக்கோ அப்படி தாகம் கொண்டவர்களுக்கு நீர் வழங்குவது ஒரு சேவையாகவே தோன்றியது. இதில் என்ன முரண்பாடு?!- என்று அவருக்குத் தோன்றியது. மதியம் காந்திஜை வழக்கம் போல நடைப் பயிற்சிக்காக வெளியே சென்ற சமயம் அவருடன் ராம்நாராயணனும் கூடவே சென்றார்.
அப்போது இப்படி நீர் வழங்கக் கூடாது என்ற சட்டம் ஏன் என்றும் கேட்டார். உடனே மஹாத்மா பதில் கூறினார்: “ நாம் நம்மால் முடிந்த அளவு நம் உடலினால் ஆன சேவையை நோயுற்றவர்களுக்கும் ஒரு வேலையைச் செய்ய முடியாதபடி இருக்கும் செயலிழந்தவர்களுக்கும் தான் செய்ய வேண்டும். ஆனால் நல்ல உடல் வலிமை கொண்டவர்களுக்கு அப்படி இலவ்சமாக உணவையும் நீரையும் கொடுப்பது என்பது அவர்களிடம் சோம்பேறித்தனத்தை வளர்க்கும், பிச்சை எடுப்பதைத் தோற்றுவிக்கும், மனித கௌரவத்தைக் குறைப்பதாகவும் ஆகும். ஒவ்வொரு மனிதனையும் சுய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியவராக ஆக்க வேண்டும். ஆகவே தான் கிணற்றின் அருகே ஒரு பக்கட்டையும் கயிறையும் வைத்துள்ளேன். தேவையானோர், அதிலிருந்து நீரை எடுத்துத் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம். உணவும் இங்கு அப்படித்தான். ஏதேனும் வேலை செய்தவருக்கே இங்கு உணவு – அவர் செய்த வேலைக்காக!
இன்று தமிழக அரசு இலவசமாக அள்ளிக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்குவதையும் காந்திஜி மிகவும் வலியுறுத்திய மது விலக்கை அமல் படுத்தாமல் குடிகார நாடாக தமிழ்நாட்டை ஆக்கியதையும் நினைத்துப் பார்த்தால் வேதனையாக இருக்கிறதல்லவா!
*
ராம்நாராயண் ஆன்மீக சம்பந்தமான ஒரு கேள்வியை காந்திஜியிடம் கேட்டார். அதற்கு விரிவாக அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு வரியை முடித்தவுடனும் ‘ஜி’, ஜி என்று ராம்நாராயண் தான் கேட்பதை உறுதிப்படுத்தி மரியாதையாக சொல்லிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் ஆனது. காந்திஜி சொல்லிக் கொண்டிருந்ததை சிறிது கவனிக்கத் தவறி விட்டார் ராம்நாராயண் அல்லது காந்திஜி சொல்லியது அவருக்குப் புரியவில்லை. அவர் ஜி என்று சொல்லவில்லை. காந்திஜியும் பேச்சை நிறுத்தி விட்டார். “என்ன ஆச்சு?” என்று கேட்டார் அவர்.
“ஒரு சந்தேகம் உங்கள் மனதில் எழுந்தது என்றால் அல்லது நான் சொன்னதை உங்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் பேசாமல் இருக்கக் கூடாது. என்னைக் கேட்க வேண்டும். அறிவை அடைய கீதை மூன்று படிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. எளிமை, பிரஸ்னம் அதாவது கேள்விகள் கேட்பது, சேவை.
கேள்விகளைக் கேட்க ஒருவர் தயங்கவே கூடாது. விடையில் திருப்தி கொள்ளாத வரை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மௌனமாக இருப்பது கூட ஒருவகையில் பொய் தான். கவனமாக ஒருவர் கேட்க வேண்டும். இல்லையெனில் அது இங்கிதம் இல்லாமல் இருப்பதைக் காட்டுகிறது.”
பாபுஜி மிக்க பொறுமையுடன் ஒருவருக்கு அறிவைப் புகட்டுவார். அதே சமயம் கேட்கும் ஒருவர் கவனத்துடன் இருபப்தையும் வலியுறுத்துவார்.
நைமிசாரண்யத்தில் முனிவர்கள் சுகரை அணுகி கேள்விகளைக் கேட்கும் போது நடக்கும் சம்வாதத்தை மேற்படி சம்பவம் நினைவு படுத்துகிறது. கீதையும் பரிப்ரஸ்னம் என்பதை வலியுறுத்துகிறது – அதாவது மீண்டும் மீண்டும் கேட்டுத் தெளிவு பெறுதல்!
அடடா! மஹாத்மாவின் வாழ்க்கை தான் எத்துணை எளிமையானது, அதில் தான் எத்தனை பேர் கேள்வி கேட்டுப் பதிலைப் பெற்று அறிவை அடைந்தனர். அவர் தான் எப்படிப்பட்ட சேவையை உலகினருக்கு அளித்தார்!
கீதை காட்டிய வழியை அவர் எப்படி அழகுற போதித்தார்.
அவரை வணங்குவோம்; போற்றுவோமாக!
***
You must be logged in to post a comment.