DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Compiled by ச. நாகராஜன்
Date: 30 September 2015
Post No: 2201
Time uploaded in London :– 6-06 (காலை)
(Thanks for the pictures)
MY BROTHER S NAGARAN IS A REGULAR CONTRIBUTOR TO BHAGYA MAGAZINE: swaminathan
‘அறிவியல் துளிகள்’ தொடர், பாக்யா வார இதழில் கடந்த நாலரை ஆண்டுகளுக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. அதில் 238வது அத்தியாயமாக 11-9-2015இல் வெளியான கட்டுரை இது!
பூமியைக் காப்பாற்றுங்கள் –ஒரு விண்வெளி வீரரின் உருக்கமான இறுதி உரை!
ச.நாகராஜன்
“நமது பூமி பெரும் ஆபத்தில் இருக்கிறது! என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள்?” – பூமியைக் காப்போம் என்ற இயக்கத்தின் ஸ்லோகன்களில் ஒன்று
நெதர்லாந்திலிருந்து முதலில் விண்வெளிக்குச் சென்ற பெருமையைப் பெற்றவர் இயற்பியல் வல்லுநரான உப்போ ஜோஹன்னஸ் ஓகெல்ஸ் (Wubbo Johannes Ochkels பிறப்பு 28, மார்ச்,1946 மறைவு 18, மே,2014).
யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி மூலம் 1985ஆம் ஆண்டு இவர் விண்வெளிக்குப் பயணமானார்.
இயற்பியல் வல்லுநரான இவரது சிந்தனைகள் புதியவை. மலைக்க வைப்பவை.
TED என்ற நிறுவனம் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைப்பு (Technology, Entertainment and Design) ஆகியவற்றை இணைத்து புதிய சிந்தனைகளைத் தரும் சொற்பொழிவுகளை 1984ஆம் ஆண்டிலிருந்து ஏற்பாடு செய்து வருகிறது. நிபுணர்கள் பேசும் இந்தப் பேச்சுக்கள் பிரபலமானவை. 18 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் பேச்சுக்கள் இவை.
இந்த டெட் சொற்பொழிவில் உப்போ ஓகெல்ஸின் ஆம்ஸ்டர்டாம் சொற்பொழிவு மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒன்றாக அமைகிறது.
இதில் காலம் பற்றிய ஒரு புதிய சிந்தனையை முன் வைத்தார் ஓகெல்ஸ். காலம் என்பதே மாயை என்பது இவரது வாதம்.
காலத்தை யாராலும் அளக்க முடியாது. ஏனெனில் அதில் பிரிக்கக் கூடிய சிறு பகுதி என்று ஒன்று இல்லை. ஒளியின் வேகம் நிலையானது. அந்த வேகத்தில் ஒளியோடு ஒருவர் பயணிக்க முடிந்தால் அவருக்கு காலமே கிடையாது.
இவரது 18 நிமிட டெட் பேச்சைக் கேட்டவர்கள் அசந்து போனார்கள். இதனால் காலத்தைப் பற்றிப் புதிய பார்வையில் ஆய்வு நடக்க ஆரம்பித்துள்ளது.
விண்வெளியில் பறந்த போது இவருக்குப் பெரும் ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது. ஒரு விரிந்த பார்வை இவருக்கு வந்தது.
இவர் தனது மறைவிற்கு முன்னர் நீட்டித்த ஆற்றல் தீர்வுகள் பற்றி ஒரு கடிதம் உலகத்தினருக்கு எழுதினார். அதில், “நாம் உணர்வற்று காலனிகளை அமைக்கும் தேனீக்கள் இல்லை. நாம், இணைந்து சேர்ந்து சிந்திக்க வல்ல திறமை இருப்பதை அறியாத நியூரான்களும் இல்லை. நாம் அறிவார்ந்தவர்கள். நமது சமூகத்தின் நடத்தையைப் பார்த்து கவனிக்கும் வல்லமை பெற்றவர்கள். மனித குலம் எங்கே செல்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். நாம் அனைவரும் இணைந்து செயலாற்றினால் மனித குலத்தை இன்னும் பிரமாதமான திசை நோக்கி நடத்திச் செல்லலாம். அனைவரையும் இணைக்கும் ஒரு புதிய மதத்தை மனித குலத்தின் மீது ஒரு புதிய நம்பிக்கை கொண்டு நாம் உருவாக்கலாம்.
பல மதங்கள் உள்ளன. மக்களை இணைக்கின்றன. ஆனால் அனைத்து மக்களையும் அவை இணைக்கவில்லை. மக்கள் நம்பும் வெவ்வேறு கடவுள்கள் மனித குலத்தைப் பிரிக்கின்றனர். இந்தப் பிரிவினைகள் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கின்றன. பூமியுடன் இந்த மதங்கள் மனித குலத்தை ஒன்றாக இணைக்கவில்லை. அவை நீடித்திருப்பவை அல்ல.
ஆனால் முழு மனித குலத்தின் மீதும் நாம் நம்பிக்கை கொண்டிருப்போமானால் ஒரு பிரச்சினையும் இருக்காது. ஏனெனில் நம்மிடம் தான் பிரிவினை இருக்காதே, ஒன்றுபட்டு அல்லவா இருப்போம்! மனித குலத்தின் கடவுள் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். நம்மை விட்டு வெளியே கடவுள் இல்லை. நாம் இந்தக் கடவுளிடமிருந்து ஒளிந்து கொண்டிருக்க முடியாது. ஏனெனில் நாமே கடவுள்”
சமாதானத்துடன் ஒரே மனதைக் கொண்ட, சண்டை இல்லாத மனித குல எழுச்சிக்காக அறைகூவுகிறார் ஓகெல்ஸ்.
விண்வெளியிலிருந்து பூமிப் பந்தைப் பார்த்த போது அவருக்கு உயரிய ஆன்மீக அனுபவம் ஏற்பட்டு நல்ல புதிய சிந்தனைகள் மலர்ந்தன.
அருமையான மனைவி, குழந்தைகள், பேரப் பிள்ளைகள் என நல்ல வாழ்வு வாழ்ந்த அவருக்கு 2005ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. ஒருவழியாக மீண்டார். ஆனால் 2013, மே மாதம் அவருக்கு சிறுநீரகத்தில் புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு இரண்டு வருடம் என்று “நாள் குறித்து” விட்டனர்.
2014, மே மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த அவர் இறப்பதற்கு முதல் நாள் மருத்துவ மனையில் படுத்திருந்தபடியே தொலைக்காட்சி ஒன்றிற்குத் தனது கடைசி பேட்டியை அளித்தார். உணர்ச்சி ததும்ப மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு அனைத்து சக்தியையும் ஒருங்கிணைத்து, சக்தி வாய்ந்த தனது பேச்சில் அவர் உலகினரிடம் இந்த பூமி மிகவும் மதிப்பு வாய்ந்தது என்றும் அதை எப்படியேனும் காக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டிக் கொண்டார். “இது ஒன்றே தான் நமக்கான வசிப்பிடம். இரண்டாவது பூமி இல்லை” என்றார் அவர்.
தனக்கு வந்தது போல பூமிக்கும் கான்ஸர் வந்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர்,” நம்முடைய பூமி கான்ஸரினால் பீடிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு கான்ஸர் உள்ளது. மக்களில் ஏராளமானோர் கான்ஸரினால் இறக்கின்றனர். எல்லோரும் இறக்கத் தான் வேண்டும். ஆனால் மனித குலம் எப்போதும் நீடித்து இருக்க போதுமான அளவு மனிதர்கள் உள்ளனர்.
நாம் நமக்கே சொந்தமான நமது பூமியைக் காக்க வேண்டும். ஒரு விண்வெளி வீரரின் உற்சாகமும் ஆர்வமும் உள்ளொளியும் அணுகுமுறையும் இருக்கும் போது மற்றவர்கள் நேசிக்க முடியாத அளவிற்கு பூமியை நீங்கள் நேசிக்க ஆரம்பிப்பீர்கள். ஒன்றை உளமார நேசிக்க ஆரம்பித்து விட்டால் அதை விட உங்களுக்கு மனமே வராது.
என் மனைவியைப் பாருங்கள். அவளுக்கு என்னை இழக்க விரும்பவில்லை. என்னவெல்லாமோ முடியுமோ அதையெல்லாம் செய்து என்னை வாழ வைக்க அவள் விரும்புகிறாள். அந்த அன்பும் அணுகுமுறையுமே மனித குலம் பூமியை வாழ வைக்கத் தேவையானவை!”
அவரது தொலைக்காட்சி பேட்டியைக் கண்டோர் நெகிழ்ந்து உருகியதில் அதிசயமே இல்லை.
7 நாட்கள் 44 நிமிடங்கள் விண்வெளியில் பறந்த வீரர் மண்ணில் வாழும் மாந்தருக்குக் கூறிய அறிவுரைகளும் புதிய சிந்தனைக் கருத்துக்களும் வளமானவை; வரவேற்கப்பட வேண்டியவை; வாழ்ந்து காட்டப்பட வேண்டியவை!
–சுபம்–
You must be logged in to post a comment.