கம்போடியாவில் கந்தன், காமராஜ்! (Post No.5383)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 1 September 2018

 

Time uploaded in London – 9-09 am (British Summer Time)

 

Post No. 5383

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கந்தன், காமராஜ் பொன்ற பெயர்கள்  தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாகக் காணப்படும்  பெயர்கள்;  இந்தப் பெயர்கள்  ஸம்ஸ்ருதச் சொற்கள் என்றாலும் தமிழ்நாட்டில் நிறைய புழக்கத்தில் உள்ளது. இந்தப் பெயர்களும்  ஏனைய சில பெயர்களும் கம்போடியா நாட்டிலும் உள்ளன.  இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு நிலவிய தமிழர்களின்  செல்வாக்கைக் காட்டும்.

 

லண்டன் (SOAS) பல்கலைக்கழகத்தில் சீனியர் விரிவுரையாளராக வேலை செய்த ஜூடித் ஜாகப் (CAMBODIAN LINGUISTICS, LITERATURE AND HISTORY BY JUDITH JACOB AND EDITED BY DAVID A SMYTH) எழுதிய புஸ்தகத்தை நான் ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் இதோ:

 

ஒரு கல்வெட்டில் ‘மே கந்தன், தா கந்தன், கு கந்தன்’ என்று வருகிறது – இதன் பொருள் கந்தனின் தாய், கந்தனின் தந்தை, அவர்களுடைய மகன் கந்தன் என்பதாகும்.

 

(வா என்பது திரு, கு என்பது குமாரி அல்லது திருமதி)

 

கம்போடியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் நாட்டுப்புற கதைகளில் தனஞ்ஜயன் (அர்ஜுனனின் பெயர்) மிகவும் அடிபடும். கிட்டத்தட்ட தெனாலிராமன் கதைகள் போல பல நிகழ்ச்சிகள் இருக்கும்.

 

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் ‘தாக்கு அணங்கு’ கம்போடிய கதைகளிலும் உண்டு . காடு, மலை, மரம், ஏரி, குளம் ஆகியவற்றை ஆக்ரமிக்கும் பிரம்ம ராக்சஸ் போன்றவை அணங்கு என்னும் தேவதைகள்

 

ஒரு நாட்டுப்புற கதையிலும் கந்தன் வருகிறான்.

 

இதோ அந்தக் கதை:-

பிரம்ம தத்தன் என்ற அரசனின் மனைவி பெயர் காக்கி. (கார்கி என்பவள் உபநிஷத்தில் வரும் புகழ்பெற்ற பெண்மணி). கருடர்களின் அரசனுடன் ராஜா, சதுரங்கம் விளையாடுவான். அவன் காகியைக் காதலிக்கத் துவங்கினான். அரசனுக்குத் தெரியாமல் காதல் சமிக்ஞைகளைச் செய்வான். அவளும் காதல் வலையில் விழுந்தாள். ஒருநாள் கருட அரசன் ஒரு புயலை உருவாக்கி, எல்லோரும் பயந்துகொண்டு இருந்த சம்யத்தில் ராணியை அணுகி தன்னுடைய நாட்டுக்கு வரும்படி வலியுறுத்தினான். அரசனுக்கு நடந்தது தெரியாது. புயல் ஓய்ந்த பின்னர் கருட அரசன் வழக்கம்போல சதுரங்கமாட வந்தான். அரசனுக்கு அவன் மீது சந்தேகம் ஏற்படவே தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதி கந்தனை அழைத்து ஒரு பூச்சி ரூபத்தில் கருடனுன் போய், ரஹஸியத்தை அறிந்து வா என்று அனுப்பினான்

அங்கே கந்தனும் காக்கியைக் காதலித்தான்; பின்னர் திரும்பி வந்தான்; மறு நாளன்று வழக்கம்போல கருட ராஜா ‘செஸ்’ விளையாட வந்தபோது யாழ் வாத்தியத்தையும் வாசித்தனர். அப்போது காக்கியின் வேசித்தனத்தையும் ஏசினர் (கந்தனும் அவனுடைய ராஜா பிரம்மத்ததனும்).

 

கருட ராஜாவுக்குக் கோபம் வரவே அவளைத் திருப்பிக் கொண்டுவந்து விட்டான். பிரம்மதத்தனும் அவள் மீது கோபம் கொண்டு ஒரு படகில் வைத்து நதியில் அனுப்பிவிட்டான்.

 

இந்தக் கதையிலும் கந்தன் என்ற பெயர் தமிழ் வழக்குப்படி ‘கந்தன்’ என்றே வருகிறது; ‘ஸ்கந்த’ என்பது ஸம்ஸ்க்ருத மூலம்.

காமராஜ், அருண்ராஜ்

 

மற்றொரு கதையில் காமராஜ், அருண்ராஜ் என்ற பெயர்கள் வருகின்றன. இன்னொரு கதையில் கிருஷ்ணகுமார், சுவண்ண (ஸ்வர்ண) குமார் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

 

ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்றபோதிலும் அவை தமிழர் பயன்படுத்தும் வடிவத்தில் இருப்பது தமிழ் மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது.

 

 

 

 

அடிமைகளின் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்

 

அங்கோர் ஆட்சிக்கு முந்தைய கம்போடியாவில் (Pre-Angkhor) படித்த மக்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களையே பயன்படுத்தினர். அப்படிப்பட்ட பெயர்கள் அடிமைகளாக இருந்தவர்களிடமும் காணப்படுகின்றன. ‘வசந்த மல்லிகா’ என்பது ஒரு அடிமைப் பெண்ணின் பெயர்.

 

அடிமைகள், நாம் பயன்படுத்தும் பலசரக்கு சாமான்களைப் போல,

நடத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் எப்படி அடிமை ஆயினர் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.

 

கோவிலுக்கு தானம் செய்யும் போது இத்தனை அரிசி மூட்டை அல்லது நிலம், இத்தனை அடிமை என்று எழுதப்பட்டது.

 

 

இந்தியாவில் காணப்படும் கல்வெட்டுகளைப் போலவே, கம்போடியக் கல்வெட்டுகளில் பின்வரும் தகவல்கள் இருக்கின்றன:

 

1.ஆளும் அரசனின் பெயர் அல்லது ஆண்டு;

2.தானம் செய்வோரின் பெயர்கள், பதவி;

3.எந்தக் கடவுளுக்கு தான்ம்

4.யார் யார் கொடுத்ததை அறக்கொடைக்கு எழுதுகின்றனர்.

5.அறக்கொடைக்காக அப்படி நிலத்தை விட்டுக் கொடுத்தோருக்கு என்ன நஷ்ட ஈடு அளிக்கப்பட்டது;

6.தானம் செய்யப்பட்ட நிலங்களின் பரப்பு

7.நிலத்துடன் தானம் செய்யப்பட அடிமைகளின் பெயர், அவர்கள்

செய்யப் போகும் வேலை;

8.குருமார்களுக்கான ஊதியம்

9.அறக்கொடை நிறுவனங்களுக்கு இத்தோடு கூடுதலாகத் தரப்படும் நந்தவனம், கடை முதலியன.

10.கொடுக்கப்படும் வேறு விலையுயர்ந்த பொருட்கள்

11.வருவாயை என்ன செய்வது, எப்படிச் செலவிடுவது;

12.எவரேனும் இந்த தானத்துக்குப் பாதகம் செய்தால் அவருக்குக் கிடைக்கும் தண்டனை.

இந்தக் கல்வெட்டு அமைப்பும் இந்தியாவின் செல்வாக்கைக் காட்டுகிறது. தமிழ்க் கல்வெட்டுகளும் இதே வரிசையில் விஷயங்களைத் தருகின்றன.

 

–சுபம்–

அன்றும் இன்றும் – கொள்ளையோ கொள்ளை!

kamaraj 2

Compiled by S NAGARAJAN

Article No.1926

Date :12th June 2015

Time uploaded in London: 8-22 am

By ச.நாகராஜன்

‘பறந்து போன பக்கங்கள்’ என்ற நூலை கோமல் சுவாமிநாதன் என்ற நாடகாசிரியர் (தோற்றம் 27-1-1935 மறைவு 1995) எழுதியுள்ளார்.1997இல் நூலாக அவரது கட்டுரைகள் வந்த போது அவர் அமரராகி விட்டார்.

தனது வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்களை அருமையான நடையில் எழுதியுள்ளார். தமிழக நாடகக் கலையின் வரலாறை இதன் மூலம் அறிய முடியும்.

காங்கிரஸ் பேச்சாளராக அவர் இருந்த இளம் வயதில் காமராஜரைப் பற்றி அறியும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது.

விருதுநகரில் ஒரு உபதேர்தல். பொதுப்பணித்துறை பங்களாவில் தங்கியிருந்தார். அப்போது கோமல் சுவாமிநாதன் உள்ளிட்ட சிலர் காமராஜரின் தாயாரைப் பார்க்கச் சென்றனர். “என் வீடு இருக்கும் போது அங்ஙனே போய் ஏன் தங்குறான்?” என்று அந்த மூதாட்டி கேட்டபோது தான் காமராஜர் அவரைப் பார்க்க வரவே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. அவனை ஒரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சொல்லுங்கப்பா” – தாய்க்கே உரித்தான ஆதங்கத்துடன் அவர் இருபது வயது கூட நிரம்பாத ஒரு ‘பையனிடம்’ சொல்ல, அந்தப் பையனான கோமல் சுவாமிநாதன் அதை காமராஜரிடம் சொன்ன போது,”கிறுக்கச்சி! அது ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் காமராஜர்.

ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி கூறிய ஒரு விஷயம் இது. அவர் காமராஜருக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதி அனுப்பும் பொறுப்பில் இருந்த போது நிகழ்ந்தது இது.

காமராஜரின் தாயாரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதில்,”நீ மாசம் அனுப்பற ஐம்பது ரூபாய் பத்தலை. விலைவாசி ஏறிக் கிடக்கு. கூட பத்து ரூபா அனுப்பு” என்று அவர் எழுதியிருந்தார்.

அதற்கு காமராஜரின் பதில் ;”உனக்கு பத்து ரூபாய் அதிகம் அனுப்ப வேண்டுமென்றால் பாலமந்திர் ஏழைக் குழந்தைகளுக்கு நான் அனுப்பும் பணத்திலிருந்து பத்து ரூபாய் குறைத்து அதை உனக்கு அனுப்ப வேண்டும். அந்த பிள்ளைகளுக்கு குறைத்து அனுப்பக் கூடாது. அதனால் இந்தப் பணத்திலேயே சமாளித்துக் கொள்”

எப்படிப்பட்ட தலைவர்கள் சமீப காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்! அவரைப் பற்றி அந்தக் காலத்தில், தீய சக்திகள் அடுக்கு மொழியில், கொள்ளை அடித்து சுவிட்சர்லாந்தில் கோடி கோடியாக பணம் சேர்த்து வைத்திருக்கிறார் அவர் என்று மேடை தோறும் முழங்கும். அதை நம்பி ஏமாந்த அப்பாவிகள் ஏராளம்.

இன்று எத்தனை சைபர்கள் அந்த எண்ணுக்கு என்றே தெரியாதபடி கோடி கோடியாக கொள்ளை. கொள்ளை அடித்தவர் பெரிய ஹீரோவாக மொபைல் போனுடன் காரில் வலம் வருவதை வேறு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்புகிறார்கள். அவ்வளவு தைரியம்!

இடம் ரேஷம் கார்டு விநியோகிக்கும் மையம். இட மாற்றத்திற்கான விண்ணப்பத்தை நீட்ட, அதை வாங்கிய இளம் பெண்மணி முன்னும் பின்னுமாக ஐந்து நிமிடம் திருப்புகிறார். கொடுத்தவருக்கு தன் ‘இங்கிலீஷில்’ சந்தேகம் வந்து விட்டது. “ஏதேனும் தப்பா இருக்கா!”

“பேப்பர் சரியில்லை. கீழே போய் எழுதி வாங்கிட்டு வாங்க!”

kamarajar_stamp.

அரை மணி நேரம் மண்டையைப் பிய்த்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைகிறார் அவர். கீழே இருந்த ஒருவர் மாடியிலிருந்து வரும் அவரைக் கூப்பிட்டு விஷயத்தை விசாரிக்கிறார்.

தன்னிடமுள்ள பேப்பரை எடுத்து பழைய கால ரெஜிஸ்ட்ரார் அலுவலக தமிழில் தமிழ் கூட்டெழுத்தில் மனு ஒன்றை எழுதி, ஒரு பேப்பரைக் கொடுத்து, “இதை கொடுங்க” என்கிறார்.

ஐந்து ரூபாய் கட்டணம்.

மேலே போய் பேப்பரைக் கொடுத்தவுடன் அந்த எழுத்தைப் பார்த்தவுடன் இளம் பெண்மணி புன்முறுவல் பூக்க இடமாற்றத்துடன் ரேஷன் கார்டை அடுத்த வாரம் வாங்கிக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டுகிறார்.

சிறுதொகையில் கூட கேவலமான லஞ்சப் பங்கு. இதே நிலை தான் – (பழைய கால பிறப்பிதழில் பெயர் இருக்காது. அதை எழுத) கார்பரேஷனிலும் லஞ்சத் தொகை.

ஆர்டிஓ ஆபீஸிலும் இதே நிலை தான். சார்பதிவாளர் அலுவலகத்திலோ கேட்கவே வேண்டாம்.

எங்கும் லஞ்சம்; எதிலும் லஞ்சம். ஸயின்டிபிக்காக ஊழல் முறைப்படுத்தப் பட்டுள்ளது.

ஆங்காங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் ஏஜெண்டுகள். அவரை மீறிச் சென்றால் ஆயிரம் நொள்ளைகள் சொல்லி திருப்பி அனுப்பி விடுவார்கள்.

காமராஜர் போல ஊழலின்றி தியாகம் செய்த தலைவர் எங்கே! ஊழலை முறைப்படுத்தி ஒன்றரைத் தலைமுறையை அழித்து விட்டவர்கள் எங்கே!

தமிழகம் இறைவனின் சாபத்தை வாங்கி விட்டதோ!

அவன் அருளின்றி சாப விமோசனம் கிடைக்காது.

சாப விமோசனத்திற்கு பிரார்த்திப்பது ஒன்றே நமது வழி.

ஆனால் அப்போதும் தீய சக்திகளின் ஒலி

“சீரங்கநாதரையும் தில்லை நடராஜரையும்;…..”

என்று ஓங்கி ஒலிக்கத் தான் செய்யும்.

ஒரு மனதாக அனைவரின் நலத்திற்காகவும் செய்யப்படும் பிரார்த்தனையில் தீயினில் தூசாகும் மாசுகள்; லஞ்சம் ஒழியும்.தர்மம் வெல்லும்.

*******