காயத்ரியை ஜபித்தால் நாம் பெறும் பேரானந்தம் (Post No.10,536)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,536
Date uploaded in London – – 7 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

காயத்ரியை ஜபித்தால் நாம் பெறும் பேரானந்தம் : டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கும் அருமையான நூல்!

ச.நாகராஜன்

சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா பார்வை ஆராய்ச்சி நிறுவனத்தில் கௌரவ பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் திரு சி.ராமகிருஷ்ணன் வழங்கும் நூல் : காயத்ரியை ஜபித்தால் நாம் பெறும் பேரானந்தம்!

32 பக்கங்கள் கொண்ட இந்தச் சிறிய நூலை சென்னை வாச்சா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
முதலில் விஸ்வாமித்ர மஹரிஷியின் பெருமையுடன் நூலைத் தொடங்குகிறார் நூலாசிரியர்.

காயத்ரி மஹா மந்திரத்தை உலகிற்கு- அதாவது விஸ்வத்திற்கு – அருளியிருப்பதால் அவர் பெயரே விஸ்வாமித்ரராக ஆகி விட்டது.

காயத்ரியைக் கண்டவர் விஸ்வாமித்ரரே என்று தைத்ரீய உபநிடதம் 4வது பிரஸ்னம் கூறுவதைச் சுட்டிக் காட்டும் ஆசிரியர் ‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி’ – தன்னைச் சொல்பவரைக் காப்பாற்றுவது காயத்ரி மந்திரம் என்ற விளக்கத்தைத் தருகிறார்.
காலையில் ஸ்ரீ காயத்ரியாகவும் நடுப்பகலில் ஸ்ரீ ஸாவித்ரியாகவும் மாலையில் ஸ்ரீ ஸரஸ்வதியாகவும் விளங்கும் தேவியின் தியான சுலோகங்கள் தமிழ் அர்த்தத்துடன் தரப்பட்டுள்ளன.

மொத்தம் 24 எழுத்துக்கள் கொண்ட காயத்ரி மந்திரம், மந்திர தேவதை ஸவிதா, வ்யாஹ்ருதிகள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் எளிய தமிழில் இனிதே விளக்கப்பட்டுள்ளன.
பூ;, புவ:, ஸுவ: ஆகிய மூன்று வ்யாஹ்ருதிகளுக்கு முன் ஜபிக்கப்படும் ஓம் என்னும் பிரணவம் குறித்து, வேத மேற்கோள்களுடன் விளக்கம் தரப்படுகிறது.
ஓம் என்ற சொல்லுக்கு வேதங்களின் ஜீவன் என்று பொருள். உயர்ந்த பிரம்மமே ஓம்.

இந்த மந்திரச் சொல்லின் அலைகள் ஆகாயத்தில் எப்போதும் இருப்பதை விஞ்ஞான விளக்கத்துடன் தருகிறார் நூலாசிரியர்.
ஓம் தன்னை அநுஸந்தானம் செய்பவரை பர ப்ரும்ம ஸ்வரூபமாகவே ஆக்கி விடும்.

எடுத்துக் காட்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், பகவான் ரமண மஹரிஷி, காஞ்சி மஹா பெரியவாள்!
அ, உ, ம என்ற ஓங்காரத்தில் அ என்பது உலக சிருஷ்டி உ காரம் உலகின் ஸ்திதி மகாரத்தால் உலகை ஒடுக்கும் பிரளயம் ஏற்படுகிறது போன்ற விளக்கங்கள் பல வேத ரகசியங்களைத் தருகின்றன.

காயத்ரியின் ஆவாஹண மந்திரம் ( ஆயாது வரதா தேவி), பின்னர் 24 எழுத்துக்கள் கொண்ட காயத்ரி மஹா மந்திரம் ஆகியவை அர்த்தத்துடன் விளக்கப்படுகிறது.
நஹ என்ற காயத்ரி மந்திரச் சொல் கூட்டுப் பிரார்த்தனையைக் குறிப்பிடுகிறது.

காயத்ரியை எப்படி ஜபிக்க வேண்டும்? காலையில் நின்று கொண்டு ஜபித்தல் வேண்டும். நடுப்பகலில் நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ ஜபித்தல் வேண்டும். மாலையில் நின்று கொண்டு ஜபித்தல் வேண்டும்.

இதைத் தொடர்ந்து விவேகானந்தர் வேத கால முனிவரைத் தெய்வீகக் காட்சியாகக் கண்ட அனுபவமும் காஞ்சி மஹா பெரியவாளின் அருளுரையும் தரப்படுகிறது.

‘காயத்ரி மந்திரமாகிய இந்தத் தீப்பொறியை ஒரு நாளும் நம் பரம்பரையிலிருந்து அணைய விடக் கூடாது’ என்பது பரமாசார்யாளின் அறிவுரை; அன்புரை; அறவுரை.
அழகான அட்டைப் படத்தில் மனதைக் கவரும் காயத்ரி தேவியின் படங்களைக் கண்டு மகிழலாம்.

நேர்த்தியான தாளில் சிறப்பாக அச்சிடப்பட்டுள்ள இந்த நூலை ஒரு முறை படித்தால் காயத்ரி ஜபிப்பவர்கள் அர்த்தம் புரிந்து ஜபிப்பபவர்கள் ஆவர்.

இதுவரை இந்த மந்திரத்தை ஜபிக்காதவர்கள் இனிமேல் ஜபிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொள்வர்.
நூலாசிரியருக்கு நமது பாராட்டுகள்.
வெளியிட்ட வாச்சா பதிப்பகம், நல்ல ஒரு பணியைச் செய்து வருகிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.

நூலிற்கு விலை இல்லை என்பது ஒரு சிறப்பு அம்சம்.
ஆனால் மனமுவந்து நன்கொடையாக 20 ரூபாயை தாள் மற்றும் அச்சுச் செலவிற்காக வழங்கலாம்!

நூல் கிடைக்குமிடம் : Vacha Publication
B/2, Arihant Apartments, R.A.Road, Purasaiwalkamm Chennai – 600084
Email : brahmintoday@gmail.com ph 044 26411815 & 044 26432027

முதல் பதிப்பு : ஜனவரி 2017, இரண்டாம் பதிப்பு செப்டம்பர் 2019
நூல் பிரதிகள் இருக்கிறதா என்பதை மெய்ல்/போன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

tags-  காயத்ரி மந்திரம்


காயத்ரி மந்திரத்தின் பத்துப் பகுதிகள்! 24 எழுத்துக்களின் தேவதைகள்!(Post.9157)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9157

Date uploaded in London – –18 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காயத்ரி மந்திரத்தின் பத்துப் பகுதிகள்! 24 எழுத்துக்களின் தேவதைகள்!

ச.நாகராஜன்

மந்த்ர ராஜம் என்று அழைக்கப்படும் காயத்ரி மந்திரம் ஏராளமான சிறப்புக்களையும் ரகசியங்களையும் கொண்டது.

ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந:ப்ரசோதயாத் என்பது காயத்ரி மந்திரம்.

இதை மஹாகவி பாரதியார் அழகுற, “செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று தமிழில் தந்துள்ளார்.

அந்த மந்திரத்தைப் பத்துப் பகுதிகளாகப் பிரித்து அவற்றிற்குரிய தேவதைகள் நமது சாஸ்திரங்களில் தரப்பட்டுள்ளது.

அதை கீழே காணலாம்.

காயத்ரி பகுதி            தேவதை

தத்                     அனிருத்த

சவிது                   ப்ரத்யும்ன

வரேண்யம்              சங்கர்ஷண

பர்கோ                  வாசுதேவ

தேவஸ்ய               விஷ்ணு

தீமஹி                  தைஜஸ்

தியோ                   துரீய

யோ                    ப்ராஞா

ந:                      புருஷோத்தம

ப்ரசோதயாத்             நாராயண

வேதமாதா காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு தேவதை உண்டு.

அவற்றைக் கீழே காணலாம்:

த                 கேசவ

த்ஸ              நாராயண

வி                மாதவ

து:                கோவிந்த

வ                விஷ்ணு

ரே                மதுசூதன

ணி               த்ரிவிக்ரம

யம்               வாமன

ப                 ஸ்ரீதர

ர்கோ              ஹ்ருஷீகேச

தே               பத்மநாப

வ                தாமோதர

ஸ்ய              சங்கர்ஷண

தீ                 வாசுதேவ

ம                ப்ரத்யும்ன

ஹி               அனிருத்த

தி                புருஷோத்தம

யோ              அதோக்ஷஜ

யோ              நரசிம்ஹ

ந:                அச்யுத

ப்ர                ஜனார்தன

சோ               உபேந்த்ர

த                 ஹரி

யாத்              ஸ்ரீக்ருஷ்ண

ஸ்ரீமத்வரின் தந்த்ர ஸாரத்தில் காயத்ரியில் 24 எழுத்துக்கள் உள்ளது என்றும் இவை வர்ணங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த 24 வர்ணங்களுக்கு உரித்தான தேவதைகள் மேலே கூறியவாறு தரப்படுள்ளன. ஆகவே இவை வர்ண தேவதா என்று அழைக்கப்படுகிறது.

சாதகர்கள் இதை நன்கு அறிந்து காயத்ரி ஜபத்தை மேற்கொள்ள வேண்டும்.

***

tags- தேவதைகள், காயத்ரி மந்திரம், 24 எழுத்துக்கள்

காயத்ரி தேவியின் அருள் பெற்ற கோபால்தாஸர்! (Post No.9115)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9115

Date uploaded in London – –7 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காயத்ரி தேவியின் அருள் பெற்ற கோபால்தாஸர்!

ச.நாகராஜன்

ஸ்ரீ விஜயதாஸரின் சீடராக இருந்து கோபால்தாஸர் என்று புகழ் பெற்ற  ஜோதிடரின் இயற் பெயர் பாகாண்ட். (Bhagannd).

கர்நாடகாவில் ராய்சூர் மாவட்டத்தில் உத்தனூர் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார் பாகாண்ட். அங்கேயே அவர் கி.பி. 1740 முதல் 1780 முடிய வாழ்ந்தார்.

அவருக்கு மூன்று சகோதரர்கள். அவரது இளம் வயதிலேயே அவர் தந்தை இறந்து விட்டார். தாயின்  வளர்ப்பிலும் வழிகாட்டுதலிலும் அவர் வளர்ந்து வந்தார். அவரது உறவினர்கள் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். அதனால் மிகுந்த ஏழ்மை நிலையில் அவர் கஷ்டப்பட்டார்.

என்றாலும் கூட அவரது எட்டாம் வயதில் அவருக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டது. காயத்ரி மந்திர உபதேசம் அதன் மூலம் தரப்பட்டது.

தன்னை எல்லோரும் அலட்சியப்படுத்தியதையோ அல்லது வெறுத்ததையோ பற்றி பாகாண்ட் வருத்தப்படவில்லை.

கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் இருந்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தார். நாள் செல்லச் செல்ல ஜபம் அதிகரித்தது; தீவிரமானது.

ஒரு ஆறு வருடங்கள் ஓடின.அவருக்கு தெய்வீக அருள் கிட்டியது. அதன் பயனாக பிரம்மஞானத்தையும் ஜோதிட அறிவையும் பெற்றார்.

அவரது பிரகாசமான முகத்தைக் கண்ட அனைவரும் அவரை மதிக்க ஆரம்பித்தனர்.

அனைவருக்கும் அவர் ஜோதிடத்தைச் சொல்ல ஆரம்பித்தார். யார் ஜோதிடம் கேட்க வந்தாலும் அவரது கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என முக்காலத்தையும் துல்லியமாகக் கூற ஆரம்பித்தார். அவர் புகழ் பரவ ஆரம்பித்தது

யார் வந்தாலும் அவரது முந்தைய மூன்று பிறப்புகளைப் பற்றி அவரால் அறிந்து கொள்ள முடிந்தது. எதிர்காலத்தில் அவருக்கு என்ன நடக்கும் என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.

எல்லோரும் பிரமிப்புடன் அவரை மதித்து காணிக்கையும் செலுத்த ஆரம்பித்தனர். அவரது ஏழ்மையும் அகன்றது. குடும்பத்தின் நிலை சீரானதோடு வளமாகவும் ஆனது.

சில வருடங்கள் கழிந்தன. பிருகு முனிவரின் அவதாரமாகக் கருதப்பட்ட விஜயதாஸர் அப்போது பிரபலமாக இருந்தார். அவரிடம் அடைக்கலம் புகுந்த பாகாண்ட் அவரது சீடரானார். அவரது உபதேசப்படி நடக்கவே, விஷ்ணுவின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது.

அவருக்கும் நாளடைவில் சீடர்கள் உருவாயினர். அவர் கோபால்தாஸ் என அனைவராலும் அறியப்பட்டார். அவரது முக்கிய சீடர்களுள் புகழ் பெற்றவரே ஜகந்நாத தாஸர்.

ஸ்தல யாத்திரை செய்ய ஆரம்பித்த கோபால்தாஸர் அனைவருக்கும் அன்னதானம் செய்ய ஆரம்பித்தார். தேவையானோருக்கு இதர பொருள்களையும் கொடுத்து உதவ ஆரம்பித்தார்.

இறைவன் புகழைச் சொல்லும் ஏராளமான கீதங்களைப் புனைய ஆரம்பித்த அவர் விட்டலைப் போற்றி நிறைய கீதங்களைப் படைத்தார். அவை பெரும் புகழ் பெற்றன. இன்றும் பாடப்படுகின்றன.

காயத்ரி மந்திரத்தால் அரும் பெரும் சக்தி பெற்ற ஒருவராக அவரை உலகம் அறிந்தது.

காயத்ரி மந்திரத்தின் சக்திக்கு ஒரு அளவே இல்லை என்பது உண்மையே.

***

tags– கோபால்தாஸ், காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திர மஹிமை என்ன? (Post No.8684)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8684

Date uploaded in London – – 15 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.14-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் காயத்ரி மந்திரம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

காயத்ரி மந்திர மஹிமை என்ன? காயத்ரி மந்திரத்தைப் பெண்களும் ஓதலாமா? – 1

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம் முன் இருக்கும் கேள்வி : காயத்ரி மந்திரத்தின் மஹிமை என்ன? காயத்ரி மந்திரத்தைப் பெண்களும் ஓதலாமா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளைப் பார்ப்போம்.

காயத்ரி மந்திரத்தின் மஹிமை சொல்லுக்கு அப்பாற்பட்டது.

மந்த்ர ராஜம் என்று அழைக்கப்படுவது காயத்ரி. வேத மாதா என்று அழைக்கப்படுவது காயத்ரி.

குடிமக்களின் அதிபதியாக எப்படி ஒரு ராஜா கருதப்படுகிறாரோ அதேபோல மந்திரங்களின் உச்சத் தலைமையிடத்தைப் பெறுவது மந்த்ர ராஜம் காயத்ரி.

காயத்ரி மந்திரம் என்ன தரும்?

‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி.’

தன்னை ஓதுபவரைக் காப்பது காயத்ரி.

ஓம் பூர்புவஸ் ஸுவ:

தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோன: ப்ரசோதயாத் |

இது தான் காயத்ரி மந்திரம்.

இதன் அர்த்தத்தைப் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளனர். இப்படி நூற்றுக்கும் மேலான மொழி பெயர்ப்புகள் உண்டு.

இப்போது தமிழில் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அளித்துள்ளதைப் பார்ப்போம்.

ஓம்

பூர், புவ, ஸுவ: – உடல், ஆன்மீக, தெய்வீக வாழ்வுக்குரிய

ஸவிதுர் – உலகங்களுக்கு மூலாதாரமாக உள்ள

வரேண்யம், தேவஸ்ய – போற்றுதலுக்குரிய , யாவரிலும் மேலான, தெய்வீக மெய்ம்மையின்   

பர்கோ –  தெய்வீகப் பேரொளி மீது

தீ மஹி – நாம் தியானிக்கின்றோம்

தத் – நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம்

நஹ – நம்

தியோ – அறிவுக்கு

ப்ரசோதயாத் – ஒளி ஊட்டட்டும்

அறிவைத் தரும் ஆற்றலினைத் தருகிறது காயத்ரி. அத்தோடு காயத்ரி மந்திரம் சர்வ ரோக நிவாரணி. எல்லா நோய்களையும் போக்க வல்லது. சர்வ துக்க பரிவாரிணி காயத்ரி! அது அனைத்து துன்பங்களையும் கவலைகளையும் போக்குகிறது. சர்வ வாஞ்சா பலஸ்ரீ காயத்ரி. அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவது காயத்ரி.

மஹாகவி பாரதியார் இதை ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம், அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’ என அற்புதமாக பாஞ்சாலி சபதத்தில் முதல் சருக்கமான துரியோதனன் சூழ்ச்சிச் சருக்க முடிவில் தமிழில் தருகிறார்.

காயத்ரி பரிவார் என்ற அமைப்பை நிறுவிய ஸ்ரீராம் சர்மா ஆசார்ய காயத்ரி பற்றி ஏராளமான சுவையான சம்ப்வங்களையும் விளக்கங்களையும் அளித்துள்ளார். சுமார் 3000 புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். 1911ஆம் ஆண்டு பிறந்த அவர் 1990ஆம் ஆண்டு காயத்ரி ஜயந்தி தினத்தன்று தாமாகவே தன் உடலை உகுத்தார். அவரது 108 புத்தகங்கள் – ஒவ்வொன்றும் A -4 அளவிலான 500 பக்கங்கள் கொண்டது காயத்ரி பற்றிய அபூர்வமான ஆற்றல்களைத் தருகிறது. ஹிந்தியில் உள்ள இந்தப் புத்தகங்கள் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அன்பர்கள் இதை இணையதளத்திலிருந்து டவுன்லோட் – தரவிறக்கம் – செய்து கொள்ளலாம்.

காயத்ரி மந்திரத்தின் மஹிமையை விளக்கும் சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. வரலாற்று ஏட்டிலிருந்து ஒரு முக்கிய சம்பவத்தை எடுத்து இங்கு பார்ப்போம்.

நாதிர்ஷாவிற்கு டெல்லியின் மீது ஒரு கண். பேராசை கொண்ட அவன் பெரும்படையை ரகசியமாகத் திரட்டினான்.  எதற்காக இப்படிப்பட்ட பெரும்படை திரட்டப்பட்டது என்பதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. திட்டமிட்ட நாளில் திடீர் தாக்குதலை அவன் டெல்லி மீது நடத்தினான். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தன் படை திடீர் தாக்குதலை மேற்கொண்டிருப்பதால் ஒரு சில மணி நேரங்களிலேயே டெல்லி வீழ்ந்து விடும் என்பது அவனது கணிப்பு. ஆனால் என்ன ஆச்சரியம். அப்போது டெல்லியை ஆண்ட முகம்மது ஷா நாதிர்ஷாவின் படையை எதிர் கொண்டதோடு அந்தப் படையை ஓட ஓட விரட்டினான். தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவன் படை வீரர்கள் புறமுதுகு காட்டி ஓடினர். ஏமாற்றம் அடைந்த நாதிர் ஷா ஈரானுக்குத் திரும்பி விட்டான். எப்படி இப்படி முகம்மது ஷா தனது திடீர் படையெடுப்பைச் சமாளிக்க முடிந்தது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது; புரியாத புதிராக இருந்தது.

முகம்மது ஷா நாதிர்ஷாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினான். அதில் நீங்கள் படை எடுத்து வருவீர்கள் என்பதை ஆறு மாதத்திற்கு முன்னாலேயே எங்கள் நாட்டில் உள்ள முனிவரான குரு சரணதாஸர் எனக்குக் கடிதம் மூலம் விளக்கி எழுதியதோடு தகுந்த முன்னேற்பாடுடன் இருக்குமாறு அறிவுரை கூறினார். அவரது கூற்றுப்படி நானும் முன்னெச்சரிக்கையுடன் இருந்து வெற்றி பெற்றேன். என்று எழுதியதோடு சரணதாஸர் தனக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்து அனுப்பினான்.

நாதிர்ஷா பிரமித்தான். வியந்தான். ஆறு மாதத்திற்கு முன்னர் தனக்கே அந்த எண்ணம் எழவில்லையே என நினைத்தான் அவன். நேரடியாக சரணதாஸரை தரிசித்து வணங்கினான். அவரது ஆசியையும் பெற்றான்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆள்வார் மாவட்டத்தில் டெஹ்ரா என்ற கிராமத்தில் எளிய அந்தணர் குலத்தில் பிறந்தவர் சரணதாஸர். தாயார் குஞ்சு பாயும், தந்தை முரளீதரரும் அவரை தெய்வ வழிபாட்டில் ஈடுபடுத்தினர். காயத்ரியை உச்சரிக்க ஆரம்பித்தார் சரணதாஸர். ஒரு நாள் இரவு மஹரிஷி சுகர் அவரது கனவில் தோன்றி காயத்ரி உபாசனையை விளக்கினார். நர்மதை நதிக்கரையில் வெகு காலம் காயத்ரியை ஜெபித்த சரணதாஸர் அதில் சித்தி பெற்றார்; நேரடியாக முஸாபிர் நகரில் உள்ள சுக்ரதலம் என்ற கிராமத்திற்கு வந்தார். அங்கே பகவதி ரூபமாக காயத்ரி மாதா அவருக்கு தரிசனம் தந்தாள்.

சரணதாஸர் மனித குல நன்மைக்காக முகமது ஷாவை எச்சரிக்க, அதனால் மகிழ்ந்த முகம்மது ஷா பல கிராமங்களை அவருக்கு மானியமாக அளிக்க முன் வந்தான். ஆனால் அவரோ அதை ஏற்க மறுத்து பல கல்விச் சாலைகளை நிறுவுமாறு அறிவுரை கூறினார்.

இன்றும் கூட சுக்ரதலம் கிராமத்தில் வருடந்தோறும் அவர் நினைவாக காயத்ரி மஹோற்சவம் நடை பெற்று வருகிறது.

இன்னும் ஒரு சம்பவம். மஹா முனிவர் வித்யாரண்யர் வாழ்வில் நடந்தது இது. அவர் காயத்ரி தேவியை தரிசிக்க காயத்ரி மந்திரத்தை 24 மஹாபுரச்சரணம் உச்சரித்தார்.

ஒரு புரச்சரணம் என்பது ஒரு மந்திரத்தில் எத்தனை அக்ஷரங்கள் இருக்கிறதோ அத்தனை லக்ஷம் தடவை அதை ஜெபிப்பதாகும். காயத்ரி மந்திரத்தில் 24 அக்ஷரங்கள் இருப்பதால் அதை 24 லக்ஷம் முறை ஜெபிப்பது ஒரு புரச்சரணம் ஆகும். வித்யாரண்யர் 24 புரச்சரனம் உச்சரித்தார்.

தேவியின் தரிசனம் கிடைக்கவில்லை. அவர் சந்யாசியானார்.

திடீரென ஒரு நாள் காயத்ரி தேவி அவர் முன் பிரசன்னமானாள்.

ஹே, தேவியே, 24 மகாபுரச்சரணம் செய்து உன் தரிசனத்திற்காக ஏங்கிய போது தரிசனம் தராத நீ இன்று இப்படி தரிசனம் தந்தது எதனால் என்று வியப்புத் தாளாமல் அவர் கேட்டார்.

அதற்கு தேவி, “ முதலாவதாக 24 மஹாபுரச்சரணம் செய்து நீ 24 முன் ஜென்மங்களில் செய்த பாவம் அனைத்தையும் தீர்த்துக் கொண்டாய். ஆகவே என்னை தரிசிக்கும் தகுதியை நீ பெற்று விட்டாய். என்றாலும் என்னை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை  மட்டும் உனக்கு இருந்தது. அனைத்து ஆசைகளையும் துறந்தவனே என்னை தரிசிக்க முடியும். அதையும் துறந்து நீ சந்யாசி ஆனாய். உனக்கு இதோ தரிசனம் தந்து விட்டேன்” என்று தேவி கூறி அருளினாள். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று தேவி கேட்க “உன் தரிசனமே கிடைத்து விட்டது! எனக்கு வேறு வரம் என்ன வேண்டும்?” என்றார் அவர். ரிக், யஜூர், சாம வேதங்களுக்கான உரையை அவர் எழுதினார். இன்னும் பல நூல்களையும் எழுதி அருளினார். அவரை அணுகிய ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவருக்கு ஆசியை அளித்து பெரும் ஹிந்து சாம்ராஜ்யம் அமைய வழி கோலினார். விஜய நகர அரசை ஸ்தாபித்தார்.

please go to Facebook.com/gnanamayam

tags– காயத்ரி மந்திரம்,  மஹிமை

TO BE CONTINUED………………………………….