காயத்ரி மந்திர மஹிமை என்ன?-2 (Post No.8689)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8689

Date uploaded in London – – –16 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

காயத்ரி மந்திர மஹிமை என்ன? காயத்ரி மந்திரத்தைப் பெண்களும் ஓதலாமா? – 2

ச.நாகராஜன்

இப்படி பிரத்யக்ஷ தெய்வமாக விளங்கும் காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் உண்டு.

தேவி பாகவதத்தின் பன்னிரெண்டாம் ஸ்கந்தம் முதல் அத்தியாயமே காயத்ரி ரஹஸியத்தை விளக்க ஆரம்பிக்கிறது. காயத்ரி ஹ்ருதயம் , காயத்ரி சஹஸ்ர நாமம் உள்ளிட்டவற்றைத் தருகிறது.

24 அக்ஷரங்களுக்கும் ஒவ்வொரு ரிஷி உண்டு. வாமதேவர், அத்திரி, வசிஷ்டர், சுக்ரர், கண்வர், பராசரர், விஸ்வாமித்திரர், கபிலர், ஸௌனகர், யாக்ஞவல்க்யர், பரத்வாஜர், ஜமதக்னி, கௌதமர், முத்கலர், வேதவியாசர், லோமசர், அகஸ்தியர், கௌசிகர், வத்ஸர், புலஸ்தியர், மாண்டுகர், துர்வாசர் நாரதர், கஸ்யபர் ஆகிய இந்த 24 மஹரிஷிகளும் ஒவ்வொரு அக்ஷரத்திற்குரிய ரிஷிகளாவர்.

24 சந்தஸுகள் 24 எழுத்துகளுக்கு உண்டு. காயத்ரி, உஷ்ணுக், அனுஷ்டுப், பங்தி, திரிஷ்டுப், ஜகத், அதிஜகதி, சக்வரீ, அதிசக்வரீ உள்ளிட்ட 24 சந்தஸுகள் இருப்பதாலேயே காயத்ரியை சந்தஸாம் மாதா என்று சிறப்பிக்கின்றனர்.

ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் ஒரு தேவதை உண்டு. ஒரு முத்திரை உண்டு. ஒரு மலர் உண்டு; ஒரு சக்தி உண்டு!

காயத்ரியை உச்சரிக்கும் போது இவர்கள் அனைவரின் அருளுக்கும் நாம் பாத்திரமாகிறோம்.

இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் வலிமை, ஆற்றல், கவர்ச்சி, யோசனை, இயக்கம், பயபக்தி, நல்லதுகெட்டதை அறியும் ஆற்றல், செயலூக்கம், தைரியம், நினைவாற்றல், உறுதி, அவா, அன்பு, தீயதில் வெறுப்பு, ஒற்றுமை, கெட்டதிலிருந்து விலகல், பகுப்பாயும் திறன், தொகுத்துணரும் திறன், கேட்டல், தொடுதல், பார்த்தல், சுவை, முகர்தல், நுண்ணறிவு ஆகிய 24 நற் பலன்கள் கிடைக்கும்!

காயத்ரி  மந்திரம் விஸ்வாமித்திர மஹரிஷி அருளியது. இது சூரியனை நோக்கித் துதிக்கப் படுவது. இதை அனைவரின் நலனுக்காகவும் உச்சரிக்கிறோம். இடம், காலம், நாடு, இனம், ஆண்,பெண் என்ற பாகுபாடு, அந்தஸ்து வேறுபாடு ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டது காயத்ரி மந்திரம். அது அறிவு பூர்வமானதும் கூட. ஆகவே தான் பிரபல விஞ்ஞானியான ஜே.பி. ஹால்டேன், “

“The Gayatri mantra should be

carved on the doors of every laboratory in the world.” –   காயத்ரி மந்திரத்தை உலகில் உள்ள ஒவ்வொரு லாபரட்டரியின் கதவுகளிலும் பொறிக்க வேண்டும் என்று கூறினார்.

சென்னையைச் சேர்ந்த பெரிய சட்டத்துறை நிபுணர் ஒருவரின் மகள் 7-1-1937ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள ரமணாசிரமத்திற்கு வந்து ரமணரை தரிசித்தார். அவரிடம், ‘எந்த ஜபம், நல்ல ஜபம்?’ என்று கேட்டார் அவர்..

பகவான் ரமணர், “எதுவாயினும் சரி தான், காயத்ரி போல.’ என்றார்.

அந்தப் பெண்மணி , ‘காயத்ரி போதுமா?’ என்றார். உடனே ரமணர், “அதை விஞ்சுவது வேறொன்று உண்டா? அதைச் செய்யாதவர்களே அடுத்ததை நாடுகிறார்கள். “It contains the whole range of Truth in it” – என்றார். whole range of Truth in it” என்பது பிரமிக்க வைக்கும் ஒரு உண்மை. ஸத்தியத்தின் தொடர் வரிசையை அது தன்னுள் உள்ளடக்கி உள்ளது என்கிறார் அவர். காயத்ரி மந்திரத்தின் மஹிமையைக் கூறும் ரமணரின் இந்த விளக்கமே மஹிமை வாய்ந்த ஒன்றாக இருக்கிறது!

ஆகவே, சுருக்கமாகச் சொல்லப் போனால், காயத்ரி மந்திரத்தின் மஹிமை எல்லையற்றது; சொல்லுக்கு அப்பாற்பட்டது. மந்திர ராஜமான இது  ‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி’ – உச்சரிப்போரைக் காப்பாற்றுவது’ என்று ஒரே வரியில் கூறி முடித்து விடலாம்

*

காயத்ரி மந்திர மஹிமை என்ன? காயத்ரி மந்திரத்தைப் பெண்களும் ஓதலாமா? – 3

ச.நாகராஜன்

அடுத்து இன்னொரு கேள்வி:

காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் ஓதலாமா?

கூடாது என்று ஆசார வைதிகர்கள் சிலர் கூறுவர். இல்லை, அனைவரும் கூறலாம் என வேறு சிலர் கூறுவர்.

இதற்கு முடிவு தான் என்ன?

ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் குமாரி கல்யாணி என்னும் இளம் பெண் வேத மந்திரங்கள் உள்ளிட்ட பாடத் திட்டத்தைக் கொண்டுள்ள ஒரு படிப்பில் சேர விரும்பி விண்ணப்பித்தார். உடனடியாக அனுமதி மறுக்கப்பட்டு விட்டது – அவர் ஒரு பெண் என்ற காரணத்தால்! இது ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது. பல்வேறு கட்டுரைகள் இது பற்றி பத்திரிகைகளில் வெளியாக ஆரம்பித்தது. ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்தோர் பல்கலைக்கழக நிர்வாகத்தை அணுகி இதைப் பரிசீலிக்குமாறு கூறினர். பண்டிட் மதன்மோகன் மாளவியா தலைமையில் ஏராளமான வேத பண்டிதர்கள், நிபுணர்கள் கொண்ட ஒரு கமிட்டி நிறுவப்பட்டது – இந்த விஷயத்தை ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்க.

கமிட்டி சாஸ்திரங்கள் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு முடிவு எடுத்தது. அதை மாளவியா அவர்கள் 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி  அறிவித்தார். பெண் என்ற காரணத்தால் வேதம் படிப்பதை மறுக்கக் கூடாது என்பதே கமிட்டியின் முடிவு. பெண்கள் காயத்ரி மந்திரத்தை ஓதலாம் என்ற இந்த அடிப்படை முடிவு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.

ரிக்வேதத்தில் மட்டும் கோஷா, கோதா, லோபாமுத்ரா, சரமா, இந்த்ராணி யமி, சூர்யா உள்ளிட்ட ஏராளமான பெண் ரிஷிகள் அதாவது ரிஷிகாக்கள் உள்ளனர். யாக்ஞவல்க்ய மஹரிஷியின் மனைவி மைத்ரேயி பிரம்மவாதினி என்று அழைக்கப்படுகிறார். ஆதி சங்கரர் பாரதி தேவியுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ததும் குறிப்பிடத்தகுந்தது.

ஸ்வாமி விவேகானந்தர் பெண்களும் சந்தியா புரிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். Complete Works of Swami Vivekananda -மூன்றாம் தொகுதியில்  454 முதல் 461 பக்கங்கள் வரை உள்ள கட்டுரையில் இதை விளக்கமாகக் காணலாம்.

காயத்ரி ப்ரிவார் அமைப்பை நிறுவிய ஸ்ரீராம் சர்மா ஆசார்யா பெண்கள் காயத்ரி ஓதுவதற்கு தடை ஏதுமில்லை என்று கூறியதோடு உலகெங்கிலுமுள்ள லக்ஷக்கணக்கான பெண்களுக்கு உத்வேகமூட்டி காயத்ரி மந்திரத்தை ஓதும்படி செய்தார்.

இறுதியாக பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா கூறியுள்ளது மிக முக்கியமான ஒரு அருள்வாக்காகும். பெண்கள் காயத்ரி மந்திரத்தை ஓதலாம் என்று அருளிய அவர் தெளிவாக இப்படிக் கூறுகிறார் :”காயத்ரி வேதங்களின் தாய். பெண்கள் அந்த மந்திரத்தை ஜபிப்பதை யாராவது தடை செய்தால் அது அவர்களது குறுகிய மனப்பான்மையையே காட்டுகிறது.”

ஆக பண்டிதர்களாலும், விவேகானந்தர் போன்ற பெரும் மகான்களாலும் சத்ய சாயிபாபா போன்ற அவதாரபுருஷர்களாலும் பெண்கள் காயத்ரி மந்திரம் ஓதலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட விஷயமாகி விட்டது.

இந்த வாய்ப்பினை நல்கிய ஞானமயம் குழுவினருக்கும், கேட்டுக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி இன்னுமொரு கேள்விக்கான பதிலுடன் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.

tags– காயத்ரி மந்திர மஹிமை-2

***