கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம்! ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!! – 1 (Post.10,200)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,200

Date uploaded in London – 12 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம்! : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!! – 1

ச.நாகராஜன்

கள்ளக்குறிச்சி, ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம் என்ற அருமையான நூலை சமீபத்தில் 4-10-2021 அன்று வெளியிட்டுத் தமிழுக்கு அரும் சேவையைச் செய்துள்ளது.

171 அழகிய  அரும் தமிழ்ச் செய்யுள்கள் கொண்ட இந்தப் புராணத்தை இயற்றியவர் ஸ்ரீமத் வாமதேவ முருக பட்டாரகர் ஆவார். ‘பட்டாரக என்றால் நல்லொழுக்கமும் உயரிய ஞானமும் உடைய அந்தணர் என்று பொருள். இவர் திருக்கைலாய பரம்பரை சிதம்பரம் வாமதேவ மறைஞான சம்பந்த சைவாசாரிய மரபினர் ஆவார். முருக பட்டாரகரின் தந்தையார் பெயர் பொன்னு பட்டாரகர். முருகவேளின் அணுக்க பக்தரான முருக பட்டாரகர் ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணத்தை அனுபவித்துப் படித்து அதை அனைவருக்கும் கூறி மகிழ, அன்பர்கள் பலர் அவரை ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் பற்றி ஒரு நூலை இயற்றுமாறு வேண்டினர். அதன் பலனாக இந்த நூல் மலர்ந்தது. இதன் முதல் பதிப்பு 10-9-1917இல் வெளியானது. முதற் பதிப்பிற்கு முன்னுரை அளித்தவர் மாயவரம் தாலுக்கா ஸ்ரீ பொன்னுரங்கம் பிள்ளை ஆவார். அவர் தனது முன்னுரையில் இந்த நூலாசிரியரின் குமாரர் மாணிக்க பட்டாரகர் தனது தந்தையாரின் நூலிலிருந்து பல செய்யுள்களைக் கூறி மகிழ்விப்பது வழக்கம் என்று கூறி இருப்பதால் இவரது காலம் ஆயிர்த்து எண்ணூறுகளில் இருப்பது தெரிய வருகிறது.

முதல் பதிப்பில் செய்யுள்கள் மட்டுமே உள்ளது. 104 ஆண்டுகளுக்குப் பின்னர் அதை மறு பதிப்பு செய்ய கள்ளக்குறிச்சி, ஆதிசைவர்கள் நலவாழ்வு சங்கத்தின் நிறுவனர் தில்லை சிவஸ்ரீ எஸ்.கார்த்திகேய தத்புருஷ சிவம் பெரு முயற்சி எடுத்து இதை வெளியிட்டுள்ளார்.

திரு கார்த்திகேய சிவம் சைவாகமங்களிலும் வல்லவர்; சிவத்தொண்டில் சிறந்தவர். தமிழுக்குச் சேவை செய்யத் துடிப்பவர். ஆகவே பல அரிய நூல்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். நூலை அப்படியே செய்யுள் வடிவில் மட்டும் வெளியிடாமல் இதற்கு ஒரு அரிய உரையையும் சேர்த்து வெளியிட நிச்சயித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்த அழகிய நூலுக்கு சுருக்கமான ஆனால் அற்புதமான உரையை கல்யாண்புரி என்ற கூனம்பட்டி ஆதீனப் புலவர் ‘தத்புருஷ தேவநாம சைவ.இராம.மாணிக்கவாசகன் சிறப்புறச் செய்துள்ளார்.

கடவுள் வாழ்த்து, நூல் பெயர், அவையடக்கம், சிறப்புப் பாயிரம் ஆகிய நூலுக்குரிய அம்சங்களைப் பெற்றுள்ள இந்த நூல் உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தக்ஷ காண்டம் ஆகிய ஆறு காண்டங்களை ‘குற்றமில்லாத அருட்குரவராகிய கச்சியப்ப சிவாசாரியர் சகாத்தம் எழுநூற்றில் கச்சி குமரகோட்டத்தில் அரங்கேற்றிய விதத்தை மெய்சிலிர்க்கும் வண்ணம் விவரிக்கிறது.

செய்யுள் நயமும் சொல் நயமும் பொருள் நயமும் கற்பனை நயமும் முருக பட்டாரகர் ஒரு தேர்ந்த புலவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

கந்த புராணத்திற்கு அடியெடுத்து அருளியவர் சாக்ஷாத் முருகப்பிரானே ஆவார்.

‘திகடச் சக்கர செம்முக மைந்துளான்என்ற முருகப் பிரானின் அடியை கச்சியப்பர் சபையில் அரங்கேற்றத்தின் போது சொல்லி ஆரம்பிக்க ஒரு புலவர் எழுந்தார்.

“சுவாமிகாள்! தாங்கள் கூறிய முதல் அடியில் திகழ் தசம் என்பதை திகடசம் என்று கூறி இருக்கிறீர்! இப்படி அமைவதற்கு தொல்காப்பியத்தில் விதி இல்லையே! என்று கூற அதிர்ந்து போன கச்சியப்பர், ‘இப்படி எனக்கு அடி எடுத்துக் கொடுத்தவர் முருகனே தான் என பதில் கூறுகிறார்.

‘அப்படி எனில் அதை முருகனே சொல்லட்டும் அல்லது அதற்குரிய இலக்கண விதியைக் காண்பியும் என அப்புலவர் கூற ‘நாளை இதற்கு பதில் கூறுகிறேன் என்று பதில் சொல்கிறார் கச்சியப்பர். அன்று மனம் வாடி வருந்திய அவர் கனவில் தோன்றிய முருகப் பிரான். “வருந்தற்க! நாளை அவையில் சோழ நாட்டுப் புலவர் இதற்கான இலக்கண விதியை காட்டுவார் என்று கூறி அருள்கிறார். மறு நாள் அவை கூடியது. சோழநாட்டுப் புலவர் வீர சோழியம் நூலைக் காண்பித்து அதில் சந்திப்படலம் 18ஆம் செய்யுளை எடுத்துக் காட்டுகிறார். அதில் சரியான விதி இருக்கிறது. அனைவரும் அதிசயித்து அதை ஏற்றுக் கொள்கின்றனர். அப்படிக் கூறிய புலவர், “அவ்விடை மறைந்து போனார்!

வந்தவர் முருகப் பிரானே என்பதை உணர்ந்த அவையினர் சிரம் தாழ்த்தி கச்சியப்பரை வணங்கினர். தினமும் தனது நூலின் செய்யுள்களை விளக்கி ஒரு வருடத்தில் புராணத்தை முடித்தார் கச்சியப்பர்.

“மருவிய நாடொறும் வாசித்துப்

பொருளுரை செய்த புராணமதைக்

கருவறு தேசிகர் கச்சியப்பர்

ஒரு வருடத்தி னுற முடித்தார்

 10346 பாக்கள் அடங்கிய நூலை முறைப்படி அர்ச்சனை செய்து கச்சியப்பர் அரங்கேற்றம் செய்ய, தொண்டை நாட்டின் இருபத்தி நான்கு கோட்டத்தில் வாழும் வேளாளர்கள் பெரிதும் மகிழ்ந்து அவரைப் போற்றினர்; கச்சியப்பரை சிவிகையில் ஏற்றி காஞ்சி மா நகரை வலம் வந்தனர்.

இவ்வளவு விஷயங்களையும் தெள்ளு தமிழில் செய்யுள் இலக்கணம் வழுவாது அழகுறச் சொல்கிறது இந்த நூல்

இது முருக பக்தர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏன் தமிழ் மக்கள் அனைவருக்குமே படித்து மகிழ உகந்த ஒரு நூல். நூல் அழகுற வாசித்துப் பொருளைப் புரிந்து கொள்வதற்கு எளிதாக அச்சிடப்பட்டுள்ளது.

நூலின் மொத்தப் பக்கங்கள் 96. அச்சுப் பதிப்பு சிறப்புற அமைந்துள்ளது. வடிவமைப்பு சிறப்புற இருக்க நூல் தரம் வாய்ந்த தாள்களில் அச்சிடப்பட்டுள்ளது. நூலின் விலை ரூபாய் நூறு மட்டுமே.

இந்த நூலின் சில சிறப்புகளை அடுத்துக் காண்போம்              **         

அடுத்த கட்டுரையுடன் முடிவுறும்

tags — கச்சியப்ப சிவாச்சாரியார்,  புராணம்,  ஆதிசைவர்கள்,  நலவாழ்வு மையம், கார்த்திகேய சிவம்