John Freeman, right, interviewing Carl Gustav
Written by S Nagarajan
Date: 25 November 2018
GMT Time uploaded in London –6- 30 am
Post No. 5698
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறி வருத்தம் அடைந்த கார்ல் ஜங்!
ச.நாகராஜன்
Jung’s regret over “I don’t need to believe, I know.”
வருடம் 1959. பி.பி.சி.யில் உள்ளோருக்கு ஒரே மகிழ்ச்சி. வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல உளவியலாளர் கார்ல் குஸ்டாவ் ஜங் ஒரு பேட்டி தர ஒத்துக் கொண்டார். ஸ்விட்ஸர்லாந்தில் ஜூரிச் நகரில் ஒரு ஏரிக்கரையின் அருகில் அமைந்திருந்த தனது வீட்டில் அமைதியாக அவர் அமர்ந்திருந்தார். பேட்டி எடுக்க வந்தவர் பிரபல பேட்டியாளர் ஜான் ஃப்ரீமேன்.
ஜான் ஃப்ரீமேன் (John Freeman) (பிறப்பு 19-2-1915; மறைவு 20-12-2014),
சாதாரண பேர்வழி இல்லை. அவர் ஒரு அரசியல்வாதி. ராஜதந்திரி. போர்வீரர். பேட்டி எடுப்பதில் நிபுணர். அவர் சர்ச்சிலை பேட்டி எடுத்த போது அவரைப் பாராட்டியவுடன் சர்ச்சில் கண்ணீர் விட்டுக் கலங்கினார். இந்தியாவின் ஹைகமிஷனராக ஜான் ஃப்ரீமேன் நியமிக்கப்பட்ட போது இந்தியா காமன்வெல்த்திலிருந்து விலகி விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்த போது அதை தனது சாதுரியத்தால் தவிர்க்க வைத்தவர். இங்கிலாந்தின் தூதுவராக அவர் வாஷிங்டனுக்கும் அனுப்பப்பட்டார்.
‘Face to Face’ என்ற அவரது நிகழ்ச்சி தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது. இன்றும் கூட அந்த நிகழ்ச்சிகளை இணையதளத்தில் பார்க்கலாம். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், எடித் சிட்வெல், சிசில் பீடன், ஈவிலின் வா, ஹென்றி மூர், மார்டின் லூதர் கிங் என ஏராளமான பிரபலங்களை அவர் நேருக்கு நேர் பேட்டி எடுத்துப் புகழ் பெற்றார்.
99 வயது வரை வாழ்ந்து அவர் 20-12-2014இல் மறைந்தார்.
ஆனால் ஜங்குடன் அவர் எடுத்த பேட்டி மட்டும் தனித் தன்மை வாய்ந்த ஒன்றாக இருந்தது. அருமையான அந்தப் பேட்டியில் காமராவிற்கு முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்த ஃப்ரீமேன், ஜங்கிடமிருந்து உண்மைகளைப் பெற, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகத்தை வைத்துக் கொண்டு என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்பதிலேயே குறியாக இருந்தார்.
1959இல் ஜங் இந்தப் பேட்டியைத் தந்த போது அவருக்கு வயது 84. இதற்குப் பின்னர் 18 மாதங்களில் அவர் மறைந்தார். (ஜங் பிறப்பு 26-7-1875 மறைவு 6-6-1961).
பேட்டியின் போது நான்கு முறை ஜங், “that is difficult to say” என்று கூறினார். அப்படி கேள்விகள் கூர்மையாக இருந்தன. ஆனால் அந்த வயதிலும் அவரது புத்தி கூர்மை வியக்கத் தக்கதாக இருந்தது.
பேட்டி மிக விரிவாகப் போய்க் கொண்டிருந்த போது திடீரென்று ஃப்ரீமேன், “கடவுளை நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.பேட்டி இப்படி அமைந்தது:
Freeman : And did you believe in God?
Jung: Oh! Yes.
Freeman : Do you now believe in God?
Jung : Now? (pause) Difficult to answer. I know. I don’t need to believe. I know.
பின்னர் பேட்டி தொடர்ந்தது.
நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட பின்னர் ஜங் பற்றி கடுமையான விமரிசனம் எழுந்தது. அவர் கிறிஸ்தவ இறையியல் கொள்கை பற்றிச் சற்று விமரிசித்தே வந்தவர். ஆகவே அவர் கடவுள் இல்லை என்று சொல்லி விட்டார் என்று அனைவருக்கும் கோபம்!
ஜங்கிற்கு ஒரே வருத்தம். தான் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்களே என்று!
ஒரே வரியில் சொன்னதால் அது புதிர் போன்ற ஒரு விடையாக ஆகி விட்டது!
பின்னால் அவர் எழுதினார் இப்படி: “நான் கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்ததை நான் நம்புகிறேன். ஆகவே தெரிந்த ஒன்றைப் பற்றிய நம்பிக்கை என்பது தேவையில்லாத ஒன்று. ஆகவே கடவுள் இருக்கிறார் என்பது நிச்சயமான போது அவர் இருக்கிறாரா என்பது பற்றிய நம்பிக்கை தேவை இல்லையே!”
இதைத் தான் அவர் சொல்லி இருந்தார்!
தனது பதிலை இப்படி விளக்கமாகக் கூறி இருந்தால் இப்படி ஒரு தவறான புரிதல் எழுந்திருக்காதே, விளக்கமாகப் பதிலைச் சொல்லாமல் ஒரே வரியில் சொன்னதால் அது புதிர் போல ஆகி விட்டதே என்று அவர் மிகவும் வருத்தப்பட்டார்.
கடவுள் பற்றிய உண்மை சிக்கலான ஒன்று.கடவுள் ஒரு மர்மம். கடவுளின் தன்மை மனித அறிவுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட ஒன்று என்று அவர் நம்பினார்.
ஜங் ஸ்விட்சர்லாந்தில் உள்ள குஸ்நாஸ்ட்டில் இருந்த (Kusnacht, Switzerland) தனது வீட்டின் வாசல் கதவில் இப்படி லத்தீன் வாசகங்களைப் பொறித்திருந்தார் : “VOCATUS ATQUE NON VOCATUS DEUS ADERIT.” இதன்பொருள், அழைத்தாலும் சரி, அழைக்கா விட்டாலும் சரி, கடவுள் இருக்கிறார்! (“Called or not called, the god will be there.)
கார்ல் ஜங் இந்தியாவிற்கு வந்ததைப் பற்றியெல்லாம் அறிவியல் துளிகள் தொடரில் விரிவாக எழுதி இருப்பதால் அதை இங்கு மீண்டும் தரவில்லை.
உலகம் கண்ட உன்னத உளவியலாளர்களில் ஒருவர் ஜங்!
TAGS–கடவுள் நம்பிக்கை, கார்ல் ஜங்
***
You must be logged in to post a comment.