வித்தியாசமான விஞ்ஞானி யுங்! Carl Jung -Part 1

Carl-Gustav-Jung

Post No.1049 ; Dated 18th May 2014.

எனது சகோதரர் ச. நாகராஜன் எழுதிய ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரையில் இது முதல் பகுதி

((குறிப்பு: ஆங்கிலத்தில் ஜங் என்று எழுதியபோதிலும் சரியான உச்சரிப்பு யுங்)).

வித்தியாசமான விஞ்ஞானி யுங்! Carl Jung -1
By ச.நாகராஜன்

விஞ்ஞான உலகில் ஏராளமானோர் விதவிதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.இன்றும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த விஞ்ஞான உலகில் சற்று வித்தியாசமான விஞ்ஞானியாக கார்ல் யுங் Carl Jung (பிறப்பு:1875 மறைவு:1961) திகழ்கிறார்.

ஒரு நவீன விஞ்ஞானி முகத்தைச் சுளிக்கும் விஷயங்களை எல்லாம் அலாதி ஈடுபாட்டுடன் ஆராய்ந்து அதில் தன் முத்திரையைப் பதித்தவர் இவர்! ஜோதிடத்தில் இவருக்கு அபார ஈடுபாடு உண்டு. ஆன்மீக இயலில் இவரது கண்டுபிடிப்புகள் ஏராளம்! டெலிபதி, டெலிகைனஸிஸ், மீடியம், புலன் கடந்த அதீத உளவியல், இரகசிய ஆற்றல்கள்,கனவுகள் என விலாவாரியாக அறிவியல் பூர்வமாக இவர் ஆராயாத வித்தியாசமான துறைகளே இல்லை.மற்ற விஞ்ஞானிகளை யெல்லாம் பற்றி இவர் துளிக்கூடக் கவலைப் படவில்லை. தனது ஆராய்ச்சியில் முழு ஈடுபாட்டுடன் இறுதி வரை இருந்தார் மாபெரும் மேதை யுங்!

இவர் புதிதாகத் தோற்றுவித்த அறிவியல் துறைகள் இரண்டு!
ஒன்று சிங்க்ரானிசிடி எனப்படும் ‘அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைகள்’! இரண்டாவது ‘கலெக்டிவ் அன்கான்ஸியஸ்’ எனப்படும் கூட்டு நனவிலி நிலை அதாவது மக்கள் கூட்டம் மொத்தமாகக் கொண்டிருக்கும் ஒரு நனவிலி நிலை ஆகும்.

யுங்கின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏராளமான சம்பவங்கள் அவரை அதி தீவிரமாக பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆராய உத்வேகப்படுத்தின.

Time jung-carl-

எடுத்துக்காட்டாக சிங்க்ரானிசிடி எனப்படும் “அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமை” பற்றிய ஒரு முக்கிய சம்பவத்தைக் குறிப்பிடலாம். ஒரு நாள் ஜங்கிடம் சிகிச்சை பெற வந்த ஒரு பெண்மணி தான் கண்ட கனவை உணர்ச்சி பொங்க விவரித்துக் கொண்டிருந்தார். அந்தக் கனவில் அவருக்கு மிகவும் விலை மதிப்புள்ள ஒரு நகை தரப்பட்டிருந்தது. அந்த நகை வண்டு போல செய்யப்பட்ட ஒரு அணிகின்ற கல்! இதை அந்தப் பெண்மணி விவரித்துக் கொண்டிருந்த சமயம் யுங்கின் ஜன்னலை யாரோ தட்டிக் கொண்டே இருப்பது போன்ற ஒலி எழுந்தது. இந்த ஒலியால் ஈர்க்கப்பட்ட ஜங் ஜன்னலை நோக்கி விரைந்தார். ஜன்னலைத் திறந்தார். ஜன்னலின் வெளியிலிருந்து பறந்து வந்த ஒரு பொன் வண்டு அவர் கையில் வந்து உட்கார்ந்தது. அதைக் கையில் பிடித்துக் கொண்ட ஜங் தன் கனவை விவரித்துக் கொண்டிருந்த பெண்மணியிடம் அதைக் காட்டி,”இதோ இருக்கிறது உங்களின் பொன்வண்டு” என்று கூறி விட்டு வண்டை அவர் கையில் கொடுத்தார். இதனால் அசந்து போன அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. மிகுந்த புத்திசாலி அவர். நன்கு படித்தவரும் கூட. தன் உணர்ச்சிகளை அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

இந்த வண்டு சம்பவத்திற்குப் பின்னர் அந்தப் பெண்மணி மிக வேகமாகக் குணமடைந்தார்.

பிரபஞ்சத்தில் உள்ள ஏதோ ஒரு சக்தி அர்த்தமுள்ள ஒரு தற்செயல் சம்பவத்தின் மூலம் அவரைப் பூரண குணம் அடைய வைத்தது.
தன் கனவை அந்தப் பெண்மணி சொல்லிக்கொண்டிருந்த போது ஜன்னலில் ஏன் வண்டு வந்து மோதி ஒலியை எழுப்பி ஜங்கின் கவனத்தை ஈர்க்க வேண்டும்? அந்த வண்டும் சாதாரணமாகக் காணப்படக்கூடிய வண்டு அல்ல. வண்டு இனத்திலேயே அபூர்வமாகக் காணப்படும் வண்டு அது!

jung

அந்தப் பெண்மணியின் மனம் போராட்டத்தின் உச்சியில் எழுப்பிய கூக்குரல் பிரபஞ்ச மனத்தை உலுக்கி அந்த வண்டை அந்த நொடியில் ஜங்கின் ஜன்னலுக்கு வரவழைத்ததா? இந்த சிறிய அற்புதச் செயலின் மூலமாக அந்தப்பெண்மணி பூரண குணம் அடைய வேண்டும் என்று இருந்ததா? அவரது கூக்குரலுக்கு பிரபஞ்சத்தின் விடையா அது?யுங் ஆராய ஆரம்பித்தார்.

இந்த வண்டு விஷயம் இத்தோடு நிற்கவில்லை.

பிலிப் கஸினோ என்ற ஒரு எழுத்தாளர் இப்படிப்பட்ட அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைச் சம்பவங்களைத் தொகுத்து தன்னிடம் நட்பு கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு அனுப்பினார். அவர் யோகாவைக் கற்பிப்பவர். ‘அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமையை’ இந்த பொன்வண்டு சம்பவம் விளக்குகிறதா என்று குழம்பியவாறே யோசித்தவண்ணம் இருந்தார் அவர். தனது வாழ்க்கையில் இப்படி சம்பவம் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என அவர் நினைவுபடுத்திப் பார்த்தார்.

அன்று முற்பகலில் தனக்கு ஏதேனும் கடிதங்கள் வந்துள்ளனவா என்று பார்க்க வாசலில் இருந்த தோட்டப்பகுதியை நோக்கி நடந்தார். என்ன ஆச்சரியம்! அங்குள்ள செடிகளின் மீதும் அதன் சுற்றுப்புறத்திலும் நூற்றுக்கணக்கான நீல நிற வண்டுகள் ஹூங்காரமிட்டுப் பறந்து கொண்டிருந்தன! அவற்றின் நீல வண்ணம் சூரிய ஒளியில் பட்டு பிரகாசமாக புது வண்ணமாக மின்னிக் கொண்டிருந்தது! ‘என்ன நான் கனவு காண்கிறேனா’ என்று வியந்த அவரால் தான் கண்ட காட்சியை நம்பவே முடியவில்லை! 36 மணிநேரம் அங்கேயே பறந்து கொண்டிருந்த வண்டுகள் திடீரென இடத்தை விட்டுப் பறந்து மாயமாயின!

உடனே அவர் பிலிப் கஸினோவுக்கு இதைப் பற்றி எழுதி,”ஒருவேளை அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமை தொடர்ந்து நீரோட்டம் போன்ற ஒரு தொடர் ஓட்டத்தையும் விளைவித்துக் கொண்டு இருக்குமோ “ என்று வியந்தார்! ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் இப்படி அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை யாரும் கூர்ந்து கவனிப்பதுமில்லை. அது சொல்லும் செய்திகளை அறிந்து கொள்வதும் இல்லை என்பது தான் உண்மை!

Carl-Jung-Emma-Jung-e1345143082354

Carl Jung with his wife Emma Jung

பகுப்பாய்வு உளவியலைக் கண்ட மேதையான கார்ல் யுங் சிக்மண்ட் ப்ராய்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,உல்ப்கேங் பாலி,வில்லியம் ஜேம்ஸ் போன்ற பிரபல விஞ்ஞானிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானியான ஜங்கின் வாழ்க்கையில் நடந்த சில அபூர்வமான சம்பவங்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சின்ன உண்மை!
2011ஆம் ஆண்டு வெளியான ‘எ டேஞ்சரஸ் மெதேட்’ (A Dangerous Method) என்ற ஹாலிவுட் திரைப்படம் யுங்கிற்கும் சிக்மண்ட் ஃப்ராய்டுக்கும் இடையே உள்ள தொடர்பைச் சித்தரிக்கிறது. ஜங்கிடம் சிகிச்சை பெற வந்து அவரை ஈர்த்த கவர்ச்சிப் பெண்மணியான சபீனா ஸ்பீல்ரெய்னுடன் அவர் கொண்டிருந்த உறவையும் இப்படம் விவரிக்கிறது!

131.பாக்யா வார இதழில் 30-8-2013 இதழில் தொடங்கி ஐந்து இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட யுங் பற்றிய கட்டுரைகளுள் முதலாவது கட்டுரை இது.

contact swami_ 48@yahoo .com