காலம் பற்றிய ஐந்து அற்புதக் கதைகள்!-1

க்ரிஷ்ன ஈட்டி

Written by London swaminathan

Research Article No.1875; Dated 19 May 2015.

Uploaded in London at காலை 8-45

Already posted in English

காலம் என்பதை இந்துக்கள் தெரிந்துகொண்ட அளவுக்கு, புரிந்துகொண்ட அளவுக்கு,வேறு எந்த கலாசாரமும், நாகரீகமும் அறியவில்லை. இந்துக்களுக்கு ‘காலச்சக்கரம்’ என்ற சொல் நன்கு தெரிந்த சொல். அதாவது காலம் என்பது சுழன்றுகொண்டே இருக்கும்—காலம் என்பது வட்டப் பாதையில் செல்லும் என்பது அவர்கள் கணிப்பு. நான்கு யுகங்கள் முடிந்தவுடன் மீண்டும் கிருத யுகம் துவங்கி நான்கு யுகங்கள் வரும்—இவ்வாறு பல கோடி ஆண்டுகள் ஆனபின்னர் ஒரு பிரம்மாவின் ஆயுள் முடியும் என்பதெல்லாம் இந்துக்களுக்கு அத்துபடியான விஷயம். இந்த மாதிரி பெரிய எண்கள், சுழற்சி முதலியவை வேறு எங்கும் காணப்படா.

மேற்கத்தியர் கணக்குப்படி காலம் என்பது சக்கரம் போல சுழலாது—அது நீண்ட ஆறு ஓடுவது போல ஒரே திசையில் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் என்பர். அவர்கள் இப்பொழுது கருந்துளைகள் (Black holes) என்னும் விண்வெளி அதிசயம் பற்றி ஆராய, ஆராய புதுப்புது தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் முடிவில் இந்துக்கள் சொன்னதே சரி என்று உணர்வர்.

இந்துக்களின் கடவுளுக்குக் கூட காலத்தின் பெயர்கள் இடப்பட்டன. சிவனை ‘மஹா கால’ (Maha Kala) என்றும், ‘காலாக்னீ ருத்ராய’ (Kalagni Rudraya) என்றும் மந்திரங்கள் சொல்லுகின்றன. அதாவது மாபெரும் காலம், இறுதி நேரத்தில் எல்லோரையும் விழுங்குபவன், காலம் என்னும் தீயில் அனைத்தும் கருகி சாம்பல் ஆகும்—விபூதி ஆகி விடும் என்பதை இந்துக்கள் உணர்வர். அதே போல விஷ்ணுவையும் ‘பூத, பவ்ய, பவத் பிரபு’ (விஷ்ணு சஹஸ்ரநாமம்) என்று அழைப்பர். அதாவது அவனே “கடந்த, வரும், நிகழ் காலம்”. எல்லா கடவுளரையும் “குணத்ரயாதீத, காலத்ரயாதீத” என்றும் இந்துக்கள் போற்றுவர். அதாவது இறைவன் என்பவன் குணத்தையும் காலத்தையும் கடந்தவன். அவனை நமது காலம் கட்டுப்படுத்தாது. இதெல்லாம் மேல்நாட்டினருக்குப் புரியாத விஷயம்!

காலத்தின் தன்மையை விளக்க ஐந்து அருமையான கதைகள் உள. அவற்றை இரண்டு பகுதிகளில் தருவேன்.முதல் பகுதியில் மூன்று கதைகளைக் காண்போம்.

1.விஷ்ணு புராணக் கதை

விஷ்ணுவும் நாரதரும் ஒரு காட்டின் வழியே பயணம் செய்து கொண்டிருந்தனர். விஷ்ணுவுக்குத் திடீரென தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு கிராமம் தெரிந்தது. அங்கே சென்று கொஞ்சம் தண்ணீர் வாங்கி வருமாறு நாரதரிடம் விஷ்ணு கேட்டுக் கொண்டார். உடனே நாரதர் அந்த கிராமத்துக்குச் சென்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். அழகிய பெண் கதவைத் திறந்தாள். கண்டதும் காதல் மலர்ந்தது. அது கல்யாணத்தில் போய் முடிந்தது. நாரதர் மிகவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.

ஒரு நாள் பெரிய வெள்ளம் வந்தது. அந்த கிராமமே வெளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நாரதர் குடும்பமும் வெள்ளத்தில் சென்றது. நாரதர் செய்த புண்ணியம் அவர் காட்டில் போய் ஒதுங்கினார். எந்த இடத்தில் விஷ்ணுவிடம் விடை பெற்றாரோ அதே இடத்தில் கரை ஒதுங்கினார். விஷ்ணு, “என்ன நாரதரே! தண்ணீர் கிடைத்ததா?” என்று கேட்டார். நாரதருக்கு ஒரே வியப்பு. இது என்ன, நான் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி குழந்தைகளையும் பெற்று வயசும் ஆகிவிட்டதே, இவர் ஏதோ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தண்ணீர் கொண்டுவரச் சொன்னது போலப் பேசுகிறாரே என்று எண்ணி விஷ்ணுவிடமே போய் விளக்கம் கேட்டார். அப்போது விஷ்ணு சொன்னார், நாரதரே உமது பூவுலக நேரம் வேறு, எமது தேவலோக நேரம் வேறு என்று.

இது போன்ற கதைகள் இந்து மதத்தில் ஏராளம் உண்டு. அர்ஜுனனை மாதலி என்பவன் இந்திர லோகத்துக்கு அழைத்துச் சென்று ஐந்து ஆண்டு விருந்தினராக வைத்திருந்த போது நடந்தவையும், ரேவதி நட்சத்திரக் கதையும் இது போன்றவையே. சம்பந்தரும் சுந்தரரும் காலப் பயணம் செய்து எப்போதோ இறந்த இருவரை உயிர்ப்பித்தனர் என்று முன்னரே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இந்த அளவுக்கு வேறு கலாசாரங்களில் கதைகளும் இல்லை. கதைகள் இருந்தாலும் அதை விளக்க எந்த கொள்கைகளும் இல்லை.

அவர்களுக்கு சிறிய எண்கள் மட்டுமே தெரிந்திருந்தன. இதே காலத்தில் வேத மந்திரங்களோ பிரம்மாண்டமான எண்களைப் பயன்படுத்தின.

IMG_3526

கதை 2: இன்னும் ஒரு கதையைக் காண்போம்

லீலாசுகரின் “பால கோபால ஸ்துதி”யில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. கிருஷ்ணன் குழந்தையாக இருந்தகாலையில், யசோதா அவனைத் தொட்டிலில் போட்டு ஆட்டி தூங்கச் செய்கிறாள். அப்பொழுது தாலாட்டுப் பாட்டில் ராமாயணக் கதையைப் பாட்டாகப் பாடிக் கொண்டிருந்தார். மாரீசன், மாய மான் வேடத்தில் வந்து, அதை ராமன் துரத்திச் செல்லும் கட்டத்தை யசோதா பாடிக் கொண்டிருந்தாள். திடீரெனக் குழந்தைக்கு –அதாவது குழந்தைக் கிருஷ்ணனுக்கு — தூக்கிவாரிப் போட்டது. லட்சுமணா! என் வில் எங்கே? என்று கிருஷ்ணன் (குழந்தை) உரத்தகுரலில் கத்தினான். அதாவது பூர்வ ஜன்ம நினைப்பு வந்தது. இதில் அவர் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்தது தெரிகிறது.

கதை 3: இந்திரனும் எறும்பு வரிசையும்

பிரம்ம வைவர்த்த புராணத்தில் இந்திரனின் மமதை, அஹங்காரம் அடக்கப்பட்ட ஒரு கதை வருகிறது. இந்திரன் கம்பீரமாக அவனது சபையில் அமர்ந்திருந்த போது,  திடீரென எறும்புகள் ஒரு நீண்ட வரிசையில் சபைக்குள் நுழைந்தன. எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். ஒருவர் மட்டும் குபீரெனச் சிரித்துவிட்டார். “ஐயா, இதில் சிரிக்க என்ன இருக்கிறது?” என்று இந்திரன் கேட்டார். “இந்த ஒவ்வொரு எறும்பும் முந்தைய ஜன்மத்தில் ஒரு இந்திரனாக இருந்தது” என்று அவர் பதில் சொன்னார். இதில் காலச் சுழற்சி என்னும் கருத்து இருக்கிறது.

ants

மேலும் இரண்டு சுவையான கதைகளை நாளை காண்போம்