நிகழ்காலத்தில் வாழ்க!

ramana stamp

ஜென் காட்டும் வாழ்க்கை நெறி:-
நிகழ்காலத்தில் வாழ்க!
By ச.நாகராஜன்

Post No 1211; Dated 3rd August 2014.

ஜென் நெறி – நிகழ்காலத்தில் வாழ்க!
அமைதியான வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஜென் காட்டும் வாழ்க்கை நெறிகளில் மிக முக்கியமான ஒன்று –“நிகழ்காலத்தில் வாழ்க” என்பது தான்!

ரமண மஹரிஷியிடம் ஒரு கேள்வி!
இதே நெறியைத் தான் இந்து மதமும் வலியுறுத்தி வருகிறது.பகவான் ரமண மஹரிஷியை தரிசிக்க அவரது அணுக்கத் தொண்டர்களுள் ஒருவரான கிரிதாரிலால் என்பவர் (18-3-1946 அன்று) வந்தார். இந்த யுகம் எப்போது முடியும் என்ற கேள்வியை அவர் பகவானிடம் கேட்டார்.

உடனே ரமண மஹரிஷி” நான் காலத்தை உண்மையெனக் கருதுவதில்லை இறந்த காலத்தைப் பற்றியும் முன்பிருந்த யுகங்களைப் பற்றியும் நமக்குத் தெரியாது. எதிர்காலத்தைப் பற்றியும் நமக்குத் தெரியாது ஆனால் நிகழ்காலம் இருக்கிறதென்பது தெரியும் அதை முதலில் தெரிந்து கொள்வோம். அப்போது எல்லா சந்தேகங்களும் தீரும். தூக்கத்தில் இந்த உலகமும் இறந்த காலம் அல்லது எதிர்காலம் ஆகிய ஒன்றுமே நமக்கு இருப்பதில்லை. ஆனால் “நாம்” இருக்கிறோம்! மாற்றமில்லாததும் சாஸ்வதமுமானதையும் முதலில் தெரிந்து கொள்வோம்” என்றார்.

கிரிதாரிலால் புராணங்களில் ஒவ்வொரு யுகத்திலும் இத்தனை வருடங்கள் எனத் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்று மேலும் வினவினார்.

அதற்கு பகவான், : அப்படிக் குறிப்பிடப்படுவதில் ஒரு அர்த்தம் இருக்கக் கூடும். அல்லது உலகத்தின் பிரமிப்பூட்டும் காலத்திற்கு முன்னர் மனிதனின் முழு ஆயுளான நூறு வருடங்கள் கூட எவ்வளவு அற்பமானது என்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு உத்தியாகவும் அது இருக்கக் கூடும்” என்று அருளினார்.

.பிரபஞ்ச வயதின் முன்னர் மனிதனின் வாழ்வு எவ்வளவு அற்பமானது! நான்கு யுகங்கள் கொண்ட சுற்று வரிசை எத்தனை வந்தனவோ! நிகழ்காலத்தில் வாழக் கற்றுக் கொண்டால், தூக்கத்தில் உள்ளதைப் போல காலம் என்பதே இல்லையென்றால் இந்தக் கேள்விகளால் நம்மை நாமே தொந்தரவு செய்து கொள்வதால் என்ன பயன்!

ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து அமைதியாக வாழக் கற்றுக் கொண்டால் நாளடைவில் அனைத்தும் புரிய ஆரம்பிக்கும் என்பதே ரமண மஹரிஷியின் அருளுரையின் சாராம்சம்.

EmptyBoat

காலிப் படகு மோதிய கதை

ஜென் பிரிவில் புத்த துறவிகளும் எல்லையற்ற கால வெள்ளத்தின் முன்னர் இறந்த காலத்தையோ எதிர் காலத்தையோ பற்றி எண்ணாமல் நிகழ் காலத்தில் வாழ்வதையே வாழ்க்கை நெறியாகக் கொண்டுள்ளனர்.

ஜென் பிரிவில் அடிக்கடி கூறப்படும் ஒரு போதனை காலியான படகு பற்றிய ஒரு சம்பவம். பெரிய ஜீவ நதியில் நீங்கள் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென காலியான படகு ஒன்று உங்கள் படகின் மீது மோதி விடுகிறது என வைத்துக் கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள். கோபப் பட மாட்டீர்கள். ஆனால் அதிலேயே படகோட்டி ஒருவன் இருந்தால் அவன் மீது எவ்வளவு கோபம் வரும்!

அதே போலத்தான் உங்கள் வாழ்வின் நிகழ்வுகளும்! உங்களை உங்கள் அண்டை அயலார் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். மற்ற தோழர்கள் உங்களைச் சீண்டி விளையாடி இருக்கலாம். நேற்று உங்களின் மீது அபாண்டமான பழியை உங்களின் அலுவலக சகா சுமத்தி இருக்கலாம்.! இவர்கள் அனைவரும் காலியான படகு தான்! அவர்கள் தங்களது செய்கைகளை ஏதோ ஒரு உந்துதல் பேரில் தான் செய்திருக்கிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாது!

கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியினால் காலியான படகு உங்கள் படகின் மீது மோதுவது போல தங்கள் வலியினாலும் காயத்தினாலும் உங்கள் மீது அவர்கள் மோதுகிறார்கள்.

இதை உணரும் வரை நாம் நமது துக்கம், இறந்த காலம் ஆகியவற்றின் கைதிகளாக இருப்போம். நிகழ் காலத்தின் சக்திகளுக்குக் கட்டுப்பட்டு எப்போதும் பாய்ந்து பெருகும் அன்பை உளத்தில் ஏற்றுக் கொண்டால் யார் மீதும் கோபம் கொள்ள மாட்டோம்.காலிப் படகுகளை ஒதுக்கி விடுவோம்.

26-parrot1

ஒவ்வொன்றாகச் செய் நண்பனே!
நிகழ் காலத்தில் வாழ்வது உடனடி பயனைத் தரும் ஒரு அற்புதமான நெறி. வில்லியம் ஆஸ்லர் என்பவரிடம் ஒரு நண்பர் சென்றார்.எப்போதும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும் தான் அதிக வேளைப் பளுவினாலும் ஏராளமான விஷயங்களைச் செய்ய வேண்டியிருப்பதால் மன இறுக்கம் கொண்டவராக இருப்பதாகவும் கூறி மனம் நொந்தார். அப்போது வில்லியம் ஆஸ்லர் வளர்த்து வந்த கிளி ஒன்று அந்த நண்பரை நோக்கி வணக்கம் கூறியது. இதனால் ஆச்சரியப்பட்ட நண்பர் அந்தக் கிளி பற்றி அவரிடம் விசாரித்தார்.

“இது ஒரு அற்புதமான கிளி..உங்கள் பிரச்சினைக்கு இந்தக் கிளி சுலபமான தீர்வைத் தரும்” என்று வில்லியம் ஆஸ்லர் சொல்லவே.அதன் விலை எவ்வளவு என்று கேட்டார் நண்பர்.

:இதன் விலை நூறு டாலர்” என்றார் வில்லியம் ஆஸ்லர். “இவ்வளவு விலையா?” எனத் திகைத்தார் நண்பர் ஆனால் தனது பிரச்சினையோ பெரிது என்பதால் நூறு டாலர் கொடுத்து அதை வாங்கி வீட்டுக்குச் சென்றார்.

வீட்டுக்குச் சென்றவுடன் கிளி அவரை நோக்கி “ஒன் அட் எ டைம். ஃப்ரண்ட் ஒன் அட் எ டைம்” (One at a time, friend! one at a time) -“ஒவ்வொன்றாகச் செய், நண்பனே ஒவ்வொன்றாகச் செய்” என்று கூறியது.

திருப்பித் திருப்பி அந்த வார்த்தைகளைக் கேட்ட நண்பர் தன் கையிலிருந்த முதல் காரியத்தை முடித்தார். ஆச்சரியமாக இருந்தது அவருக்கு. இப்படி விரைவாக ஒரு காரியத்தையும் அவர் முடித்ததே இல்லை. அடுத்தாற் போல அடுத்த விஷயத்தைத் தொடங்கினார். அதுவும் விரைவாக முடிந்தது. “ஒரு சமயத்தில் ஒரு வேலை” என்று நிகழ்காலத்தில் வாழப் பழகிக் கொள்ளும் பழக்கத்தால் ஒரே வாரத்திலேயே அவரது எல்லா வேலைகளும் முடிந்தன. தாமதமான காரியங்களும் இல்லை; தடைப்பட்ட காரியங்களும் இல்லை!வில்லியம் ஆஸ்லருடன் நேராக வந்த நண்பர், “கிளி கோடி டாலர் பெறும்” என்று உளமாரக் கூறினார்.

நிகழ்காலத்தில் வாழ்வது அதிசயமான மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் உருவாக்கும். வெற்றி மேல் வெற்றி வரும். உங்கள் மீது மோதுபவர்களை காலிப் படகாக எண்ணி சிரித்தவாறே முன்னேறுங்கள். அற்புதங்கள் மலரும்! இதுவே ஜென் காட்டும் வாழ்க்கை நெறி!

Article was written by my brother S Nagarajan of Bangalore for Muthal Osai tamil Daily. Contact swami_48@yahoo.com

**************