காலம் என்னும் மாபெரும் சக்தி! பாரதியார் கருத்து

பாரதி

Article No.2018

Written ச .நாகராஜன்

Swami_48@yahoo.com

Date : 25  July 2014

Time uploaded in London :8-49

 

 

முகலாய சாம்ராஜ்ய அழிவுக்கு மகாகவி பாரதி கூறும் காரணம்! – 2

.நாகராஜன்

 

(இக்கட்டுரையின் முதல் பகுதி ஜூலை 23 வெளியாகியது)

 

காலம் என்னும் மாபெரும் சக்தி!

பாரத ராஜ்யம் மொகலாயர் கையினின்றும் நழுவ வேண்டுமென்று கால சக்தி நிர்ணயம் செய்து விட்டது.”

என்று கட்டுரையின் முன் பகுதியில் கூறும் மகாகவிகாலசக்தியைப் பற்றி விரிவாகக் கூறுகிறார் இப்படி:-

ஓர் பெரிய ராஜ்யம் அழிவதென்றால் அது ஸாமான்யமான சம்பவமன்று. கடைசிப் பொழுதிலே தான் காலசக்தி ஓர் மனுஷ்யாவதாரமாகத் தோன்றி அதை முடித்து வேறு சகம் தொடங்கச் செய்து விட்டுப் போகிறதாயினும், அதற்கு முன்னிட்டே நெடுங்காலமாகக் காலசக்தி பதினாயிர வழிகளிலே மறைவாக அதனை அரித்துக் கொண்டு வருகின்றது. ஒரு ராஜ்யத்தின் மரணத்தை நினைக்கும்போது மிகப்  பரிதாபமுண்டாகிறது. நேற்று வரை கல்லைப் போலிருந்த அதன் சரீரத்திலே மறைவாகப் பதினாயிரம் புண்களுண்டாகின்றன. அந்தப் பதினாயிரம் புண்களின் வழியாகவும் யமன் உள்ளே நுழைகிறான். ஒவ்வொரு புண் இலேசாக வெளிக்குத் தென்படும். பார்ப்பவர்கள்! இவ்வளவு வலிமையுடைய சரீரத்தை இச்சிறிய புண் என்ன செய்து விடும்?” என்று யோசிப்பார்கள். முடிவில் திடீரென்று அந்தப் பெரியவுடல் மலை சரிவது போலச் சரிந்து விழும்போது உலகத்தாரெல்லாம் கண்டு வியப்படைவார்கள்

காலசக்தியைப் பற்றிய இந்த பாரா தனியாக தரப்பட்டிருக்கிறது. ம்காகவியின் அழகிய வாக்கியங்களில் பெரும் உண்மை புதைந்திருக்கிறது. ஒரு சாம்ராஜ்யத்தின் அழிவுக்கான வித்து சிறு சிறு புண்களாகபதினாயிரவழிகளிலே உண்டாகும் என்கிறார் அவர்.

பதினாயிரம் புண்களின் வழியாகவும் எமன் உள்ளே நுழைகிறான் என்ற அழகிய வாக்கியம் ஆழ்ந்த பொருளைத் தருகிறது. ஒரு வழியில் அல்லா, ஆயிரம் வழிகளை உண்டாக்கி அழிவைத் தருகிறான் யமன்!

இதையே மனதில் ஊன்றிப் படிப்பவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அழிவுக்கும்பதினாயிரவழிகளிலே புண்கள் ஏற்பட்டு விட்டன; அழிவு ஒன்று தான் பாக்கி என்று அவர் குறிப்பால் உணர்த்துகிறார் என்ற உணர்வு ஏற்படும்!

காலசக்தியைப் பற்றிய மகாகவி பாரதியாரின் தெளிவான சிந்தனை அவரது பாடல்களில் பல்வேறு இடங்களில் பளிச்சிடுவதைப் பார்க்கலாம்இதைத் தனியாக ஒரு கட்டுரையில் பின்னர் பார்ப்போம்.

 

 

பதினாயிரம் புண்கள்

பாரதியாரின் வார்த்தைகளில் கட்டுரையின் அடுத்த பகுதி இது:-

“மொகலாய ராஜ்யத்தின் சரீரத்திலே தோன்றிய கணக்கற்ற புண்களை இங்கே விஸ்தரித்து முடியாது. ஒன்றா? இரண்டா? ஆயினும், அவுரங்கஜீப்பைப் பற்றிக் கல்கத்தா மாதாந்தப் பத்திரிகையொன்றில் யதுநாத் ஸர்க்கார் என்னும் பண்டிதர் எழுதி வரும் சரித்திரக் குறிப்புகளை வாசிக்கும் போது ஒரு முக்கியமான பெரும் புண் தென்படுகிறது.ல்

“ஸம்சயாத்மா விநச்யதி” என்று பகவான் கீதையிலே சொல்லுகின்றார். ஒருவனுக்கு நாசம் வந்து விட்டதென்பதற்குத் தெளிவான அடையாளம் யாதெனில், அவன் உள்ளத்திலே சமுசயங்கள் வந்து குடிகொண்டு விடும். இது மிக நல்ல அடையாளம். அவுரங்கஜீப் ராஜாவின் நெஞ்சம் சமுசயங்களுக்கெல்லாம் ஓர் வாசஸ்தலமாக இருந்தது. ராஜா மனதில் எப்போது அசாதாரணமான சமுசயங்கள் உதிக்கின்றனவோ, அப்போது அவனுடைய ராஜ்யம் உதிரத் தொடங்கி விட்டதென்று பாவித்துக் கொள்ளலாம்.

அவுரங்கஜீப்பின் சமுசயங்களை வாசிக்கும்போது மனதிற்கு மிகுந்த சலனமுண்டாகிறது. இவ்வளவு வல்லமை கொண்ட அரசனுக்கு இவ்வளவு சமுசயங்கள் எப்படி உண்டாயினவென்று வியப்புண்டாகிறது.

என்ன செய்யலாம்?

காலசக்தியின் செயல்!

இப்படியாக மகாகவி பாரதியார் காலசக்தியின் செயலை மீண்டும் வற்புறுத்திக் கூறுகிறார் இங்கு!

அவுரங்கஜீப்பின் சமுசயங்கள் என்னென்ன? சுவாரசியமாகப் பட்டியலிடுகிறார் பாரதியார்!

அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!

****************