எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு! இதோ பட்டியல்! (Post No.10,030)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,030

Date uploaded in London –  30 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு! இதோ பட்டியல்!

ச.நாகராஜன்

தமிழ் கண்ட புலவர்கள் ஆயிரமாயிரம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சிறப்பு!

தாம் மெய்யாக் கண்டவற்றுள் இவையே என உரைப்பது சில புலவர்களின் சிறப்பு!

அந்த வகையில் இன்ன புலவருக்கு இன்ன சிறப்பு என்று கூறும் பாடல்கள் நிறைய உண்டு.

அவற்றில் மூன்றை இங்கு பார்க்கலாம்.

  1. வாக்கிற் கருணகிரி வாதவூ ரர்கனிவில்

தாக்கிற் றிருஞான சம்பந்தர் – நோக்கிற்கு

நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்

சொற்குறுதிக் கப்பரெனச் சொல்

இந்தப் பாடல் ஆறு பெரும் மகான்களைப் பற்றிப் பட்டியலிடுகிறது. இவர்கள் தேவார திருவாசகம் பாடியவர் நால்வர். சங்கப் புலவர் நக்கீரர் ஒருவர். திருப்புகழ் பாடியவர் அருணகிரி நாதர்.

வாக்கிற்கு – அருணகிரி

கனிவிற்கு – மாணிக்கவாசகர்

தாக்கிற்கு – திருஞானசம்பந்தர்

நோக்கிற்கு – நக்கீர தேவர்

நயத்துக்குச் – வன் தொண்டர் எனப்படும் சுந்தரனார்

சொல் உறுதிக்கு – அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர்

  • அடுத்த பாடல் இது

காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி

ஆசுக்குக் காளமுகி லாவனே – தேசுபெறும்

ஊழுக்குக் கூத்த னுவக்கப் புகழேந்தி

கூழுக்கிங் கௌவையெனக் கூறு

காசுக்கு – கவிச் சக்கரவர்த்தி கம்பன்

கருணைக்கு – அருணகிரிநாதர்

தேசுள்ள ஊழுக்கு – ஒட்டக்கூத்தர்

உவக்கப் பாடுபவர் – புகழேந்தி

கூழுக்கோ – ஔவையார்

  • மூன்றாம் பாடல் இது:-

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்

      செயங்கொண்டான் விருத்தமென்னும்

ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா

   வந்தாதிக் கொட்டக் கூத்தன்

கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்

   வசைபாடக் காளமேகம்

பண்பாக வுயர் சந்தம் படிக்காசு

   லாதொருவர் பகரொ ணாதே

 வெண்பா பாடுவதில் வல்லவர் – புகழேந்தி. நள வெண்பா பாடி வெண்பா வேந்தர் என்ற பெயரைப் பெற்றார் அவர்

பரணி பாடுவதில் வல்லவர் – ஜெயங்கொண்டான். அற்புதமான கலிங்கத்துப் பரணியை அழகுறப் பாடியுள்ளார்.

விருத்தமென்னும் ஒண்பா பாட வல்லவர் – கம்பர். நூறு வண்ணங்களைக் கொண்டுள்ள பத்தாயிரம் பாடல்களில் ராமாயணைத்தை இயற்றி உலகை வியக்க வைத்து கவிச்சக்கரவர்த்தி என்று பெரும் புகழ் பெற்று கவிச் சிகரத்தில் ஏறியவர் கம்பர்.

கோவை, உலா, அந்தாதி போன்ற பிரபந்தங்கள் பாட வல்லவர் – ஒட்டக்கூத்தர்

கண்பாய கலம்பம் பாட வல்லவர் – இரட்டையர்கள்

வசை பாடக் காளமேகம் – உடனடியாக வசை பாடுவதில் வல்லவர் காளமேகப் புலவர்

பண்பாக உயர் சந்தம் பாட வல்லவர் – படிக்காசுப் புலவர்.

இந்தக் கண்ணோட்டத்தில் இவர்களின் பாடல்களை ஒரு நோக்கு நோக்கினால் புலவர்களின் இந்தப் பார்வையை நாமும் ஆமோதிப்போம்!

ஆதாரம் : பெருந்தொகை பாடல்கள் 1802, 1803, 1804

***

INDEX

அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அப்பர், நக்கீரர், சுந்தரர், கம்பன், காளமேகப் புலவர், ஒட்டக்கூத்தன், புகழேந்தி, ஔவையார். ஜெயங்கொண்டான்,இரட்டையர்கள், படிக்காசுப் புலவர்

Tags – அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், சம்பந்தர், கம்பன், காளமேகப் புலவர்