வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்!

valmiki2

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1491; தேதி 16 டிசம்பர், 2014.

சம்ஸ்கிருதத்தில் உவமைகள் இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி ராமயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக அந்த உவமைகளைத் தொகுத்தளித்த ஆராய்ச்சியாளர் எம்.எம்.பாடக் கூறுகிறார்.

அப்பய்ய தீக்ஷிதரின் உவமை பற்றிய ஸ்லோகத்தை பரிதிமாற்கலைஞர் என்ற பெயர்கொண்ட பேராசிரியர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி தமிழில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்:–

உவமை என்னும் வலருங் கூத்தி
பலவகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய அரங்கிற் கவின்பெறத் தோன்றி
யாப்பு அறி புலவர் இதயம்
நீப்பு அறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே.

பொருள்:–உவமை என்பவள் ஒப்பற்ற நாட்டிய மங்கை. அவள் பலவேறு கோலங்களைக் கொண்டு காவியம் என்னும் மேடையிலே அழகுபொலியத் தோன்றி, பாட்டின் சுவையை அறியும் ரசிகர் மனத்தில் நீங்காத இன்பம் மலர நடிக்கிறாள்
(காளிதாசன் உவமைகள் —- என்னும் நா.வரதஜுலு நாயுடு எழுதிய புத்தகத்தில் இருந்து எடுத்தது)

கம்பன் அவனது ராமாயணத்தில்

எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்
அப்பெண்தானே ஆயினபோது இங்கு அயல்வேறோர்
ஒப்பு எங்கே கொண்டு எவ்வகை நாடி உரை செய்வோம்

—என்பான். எல்லோரும் உவமைக்குப் பயன்படுத்துவது சீதை என்னும் பேரழகியை— குணத்தில் பெண்மைக்கெல்லாம் இலக்கணம் வகுத்தாளை – அப்படிப்பட்ட சீதையை நான் எதைக் கொண்டு உவமை சொல்ல முடியும் – என்று கம்பன் வியக்கிறான். சீதைக்கு உவமை சீதையே!
Valmiki's-Ramayana-

உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்திலேயே ‘’உபமா’’ என்ற சொல் இருப்பதாக (5-34-9; 1-31-15) வேதத்தை ஆராய்ந்தோர் (ஆர்.எஸ்.டே) கூறுவர். கி.மு. 800-க்கு முன் வாழ்ந்த யாஸ்கர் என்பவர் கார்க்யர் எழுதிய இலக்கணப் புத்தகத்தில் ‘’உபமா’’ என்பதன் இலக்கணம் வரையறுக்கப்பட்டதை மேற்கோள் காட்டுவார்.

மஹாபாரதத்தில் 232 பொருட்கள் அல்லது உபமானங்கள் மீண்டும் மீண்டும் ஒப்பிடப்படுவதால் 2299 ஸ்லோகங்களில் அவை திரும்பத் திரும்ப வருகின்றன என்று மஹாபாரத உவமைகள் பற்றிய ஆய்வுகள் (ராம் கரன் சர்மாவின் நூல்) காட்டுகின்றன. உவமைகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பவர் இந்திரன். 247 முறை ஒப்பிடப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்கள் வேத கால தெய்வங்களான இந்திரன், சூரியன், அக்னி, யமன் ஆகியோருக்கும் பின்னரே வருவதால் (எண்ணிக்கையின் படி), மஹாபாரதம் மிகவும் பழைய நூல் என்பது தெளிவாகும்.

புராணங்களில் சிவனையும், விஷ்ணுவையும் பெரிய தெய்வங்கள் எனக் கொண்டாடுவர். அதற்கும் முந்தியவை ராமாயண மஹாபாரதம் என்பது உவமை ஆராய்ச்சியில் தெளிவாகிறது.

உலகத்திலேயே காளிதாசன் போல உவமைகளைத் திறம்படப் பயன்படுத்திய கவிஞன் எவனும் இலன். இதனால் ‘’உபமா காளிதாசஸ்ய’’ — என்ற சொற்றொடர் வழங்குகிறது. உவமைக்கு காளிதாசன் என்பது இதன் பொருள். அவனுடைய ஏழு படைப்புகளில் ஆயிரத்துக்கும் மேலான உவமைகளைப் படுத்தியதால் இந்தப் பெயர் என்பதல்ல. தகுந்த இடத்தில் தகுந்த உவமைகளைக் கையாண்டதே அவன் சிறப்பு.

abhijnanasakuntalam

காளிதாசன் புள்ளிவிவரம்

உலகப் பெரும் கவிஞர்களின் பட்டியலில் இடம்பெறும் கவிஞர்களில் காளிதாசனும் ஒருவன். அவனுடைய உவமைகளை ஆராய்ந்தோர் தரும் பட்டியல் இதோ:
காளிதாசர் பயன்படுத்திய உவமைகள் –1250
ஏழு நூல்களில் பயன்படுத்திய சொற்கள் – 40,000 -க்கு மேல்!
அவருடைய ஏழு படைப்புகளில் மூன்றுக்கு மட்டும்
எழுதப்பட்ட உரைகள் – 93
ரகு வம்சத்தில் இவன் வரலாறு
சொல்லும் அரசர்களின் எண்ணிக்கை – 29

நாடகம், கவிதை, காவியம், சிறு நூல்கள் எனப் பல எழுதி ஷேக்ஸ்பியருக்கும் மேலான இடம் பிடித்த இந்தியன். ஈரான் முதல் இந்தோநேசியா வரை வருணித்தவன் காளிதாசன். அது மட்டுமல்ல மேக தூதம் என்னும் பயண நூல் மூலம் உலகின் முதல் ‘’டூரிஸ்ட் கைடு’’ என்னும் பெயரையும் பெற்றான். இவனுக்கு இணையான கவிஞன் இதுவரை இந்தியாவில் தோன்றியது. இனி தோன்றப் போவதும் இல்லை! இல்லை. பாரதியால் புகழப்பட்ட கவிஞன்!

வடமொழி அறிஞர்களும், நாணயங்கள் சிலைகளை ஆராய்ந்த டாக்டர் சிவராமமூர்த்தி போன்றோரும் இவன் கி. மு. முதல் நூற்றாண்டிலோ அதற்கு முன்னரோ வழ்ந்ததை உறுதிபடக் கூறுவர். காலத்தாலும் முந்திய கவிஞன்!

காளிதாசனின் ரகுவம்சத்தைப் பின்பற்றி இலங்கை வரலாற்று நூலுக்கு மஹாவம்சம் என்று பெயரிட்டனர். காளிதாசனின் உவமைகளை காதா சப்த சதி என்னும் பிராக்ருத நூலில் ஊர் பேர் தெரியாத கவிஞர்கள் அப்படியே கையாண்டனர் (களவாடினர்!)

சங்க இலக்கியத்தில் காளிதாசனின் 200-க்கும் மேலான உவமைகள் இருப்பதை நான் எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதி வருகிறேன். காளிதாசன், விக்ரமாதித்தன் என்ற புகழ் பெற்ற மன்னன் காலத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞன். கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த விக்ரமாதித்தன் கி.மு 56-ல் அவன் பெயரில் ஒரு சஹாப்தத்தையே துவங்கிய பெருமை உடையவன். சகரர், யவனர், ஹூணர்களை ஓட ஓட விரட்டியவன்.

மேற்கூறிய தகல்களை உவமைகள் பற்றிய மூன்று ஆங்கில ஆராய்ச்சி நூல்களில் இருந்து திரட்டினேன்.
dr nagaswami

தொல்காப்பியத்தில் உவம இயல்

உவமை என்பது சம்ஸ்கிருதத்தில் ‘’உபமா’’ எனப்படும். தொல்காப்பியரும் கூட இதைத் தமிழ்ப் படுத்தி உவமம் என்கிறார். உவம இயல் என்றே தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ஒரு பிரிவு இருக்கிறது. அதில் அவர் 38 உவம உருபுகளைப் பட்டியல் இட்டுள்ளார். அதில் நிறைய உருபுகளை சங்க இலக்கியத்தில் கூடக் காண முடியவில்லை. நமக்கு எல்லோருக்கும் தெரிந்த உவம உருபு ‘’போல’’ என்பதாகும். ரோஜா மலர் போல இதழ், ஆப்பிள் பழம் போலக் கன்னம் என்றெல்லாம் சினிமா வசனங்களில் கேட்கிறோம். ஆனால் தொல்காப்பியர் தரும் பட்டியலைப் பாருங்கள்:–

அன்ன, அங்க, இறப்ப, உறழ, என்ன, எள்ள ஏய்ப்ப, ஒன்ற, ஒடுங்க, ஒப்ப, ஒட்ட,ஓட, கடுப்ப, கள்ள, காய்ப்ப, தகைய, நடுங்க, நந்த, நளிய, நாட, நிகர்ப்ப, நேர, நோக்க, புல்ல, புரைய, பொருவ, பொற்ப, போல, மதிப்ப, மருள, மறுப்ப, மான, மாற்ற, வியப்ப, விளைய, வீழ, வென்ற, வெல்ல. இதில் 14 உருபுகள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. என்றும் சங்க இலக்கியத்தில் 28 கூடுதல் உவம உருபுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் டாக்டர் ரா.சீனிவாசன் சங்க இலக்கியத்தில் உவமைகள் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

15FR-_TOLKAPPIYAM__1120361e

–சுபம்–

காளிதாசரின் நூதன உத்திகள்: தமிழிலும் உண்டு

 

Picture: சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள காளிதாசன் சிலை

 

மகா கவி காளிதாசன் 1250 உவமைகளையும் உருவகங்களையும் வேறு பல உத்திகளையும் கையாளுகிறான். இவைகளை சங்கத் தமிழ் புலவர்களும் பின்பற்றுவதால் அவர்களுக்கு முன் காளிதாசன் வாழ்ந்தான் என்பது என் துணிபு. குறிப்பாக மிகவும் கற்றறிந்த மக்களிடையே மட்டுமே பயன் படுத்தக்கூடிய சில உத்திகளைக் காளிதாசன் பயன்படுத்துவது போலவே தமிழ்ப் புலவர்களும் பயன்படுத்துகின்றனர்.

இலக்கணம் போன்ற விஷயங்களை உவமையாகவோ சொல் அணிகளாகவோ பயன்படுத்த வேண்டுமென்றால் அதைக் கேட்டு ரசிப்போரின் அறிவும் அதிகமாக இருக்கவேண்டும். இதைத் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் காணும் போது களிபேருவகை ஏற்படுகிறது. இந்திய மக்கள் மேதாவிலாசம், அதே கால ஏனைய நாகரீகங்களை விட மிகவும் அதிகம். வேறு எந்த பழங்கால இலக்கியத்திலும் சிலேடைகள், புதிர்கள், விடுகதைகள், பழமொழிகளை உவமைகளாகப் பயன்படுத்துவதில்லை! முன்னரே ஒரு கட்டுரையில் ‘கொம்பு சீவுதல்’ என்பதை காளிதாசன் எப்படிப் பயன்படுத்தினான் என்பதைக் கண்டோம்.

 

நான்கூறும் தமிழ் உதாரணங்கள் சங்க கால பிராமணப் புலவர்கள் கையாண்ட உத்திகள். அவர்கள் வடமொழியில் வல்லவர்கள். காளிதாசனைக் கரைத்துக் குடித்த மேதாவிகள். தமிழைக் கிண்டல் செய்த பிரமத்ததன் என்ற வட இந்திய மன்னனுக்கு கபிலர் என்ற பிராமணப் புலவர் (சம்ஸ்கிருதம் மூலம்) தமிழைக் கற்பித்து அவனைப் பாட்டும் எட்டுக்கட்டச் செய்து அதை சங்க இலக்கியத்திலும் சேர்த்து விட்டார்!

சொற்சிலம்பம் ஆடுவதில் வல்லவன் காளிதாசன். வண்டு என்பதற்கு ‘ப்ரமர’ என்று வடமொழியில் சொல்லுவார்கள். அதைக் கவிதையில் பயன் படுத்துகையில் 2 “ர” க்களை உடைய பூச்சி என்று விடுகதை போடுவான் (குமார.3-36).

 

இதோ மற்ற இடங்களும் தமிழ் ஒப்பீடுகளும்:

1.வண்டு அல்லது தேனீயை அறுகாலி (6 கால்) என்று அழைப்பது (குமார.5-9) தமிழிலும் உண்டு:- புறம் 70 ,கோவூர் கிழார்:

2. ரத அங்க நாம்னா: ரகு.3-24, 13-31: (சக்ரவாகம்): தேரின் ஒரு உறுப்பு (அங்கம்) சக்கரம். அதைப் பெயரில் உடைய பறவை ‘சக்ரவாகம்’. இதைத் தமிழில் அன்றில் பறவை என்பர்.

3. தமிழில் மதுரை. வரி 87, 88 (நெல்லின் பெயரை உடைய ஊர்=சாலியூர்): மதுரைக்காஞ்சி எழுதிய மாங்குடி மருதன் இந்த ‘ரத அங்க நாம்னா’ உத்தியைப் பின்பற்றி சாலியூர் என்பதை நெல்லின் பெயரை உடைய ஊர் என்கிறார்.

ஏன் இப்படிச் சுற்றிவளைத்துப் பேசவேண்டும்? நேராக சாலியூர் என்று சொல்லிவிடலாமே என்று வாசகர்கள் நினைக்கலாம். சில நேரங்களில் கவிதையின் எதுகை மோனைக்காகவும் ,சில நேரங்களில் தன் புலமையைக் காட்டவும் கவிஞர்கள் இந்த உத்தியைக் கடைப் பிடிப்பர். இது போல பல இடங்களில் செய்வதும் இப்படி சுற்றி வளைத்து ஒரு விஷயத்தைச் சொல்லும்போது கவிதையின் அழகு கெடாமல் காப்பதும் கவிஞனின் திறமையைக் காட்டுகிறது.

4. பெரும்பாணாற்றுப்படை வரிகள் 297-310 (இராச அன்னம்): சங்க கால பிராமணப் புலவர்களில் ஒருவர் பெயர் ருத்ராக்ஷன். இதைத் தமிழில் உருத்திரங்கண்ணன் என்று சொல்லுவர். இவர் பிராமணர் வீடுகளில் என்ன என்ன ‘வெஜிடேரியன்’ உணவு கிடைக்கும் என்பதை மிக அழகாகச் சொல்லுகிறார். கோழியும் நாயும் அசுத்தம் செய்யாத இடம் அக்ரஹாரம் என்றும் புகழ்கிறார். அப்படிச் சொல்லும்போது, விறலியரே, பாணர்களே, புலவர்களே, அதோ அந்த ஐயர் வீட்டுக்குச் சாப்பிடப் போங்கள். அந்த வீட்டு அம்மாமி, அருந்ததி போன்று கற்புடையவள். உங்களுக்கு வெண்ணெயும், மாதுளைப் பொறியலும், மிளகுபொடியோடு “ பறவைப் பெயர்  கொண்ட சோற்றையும்” பரிமாறுவாள். இதுதான் காளிதாசன் ‘டெக்னிக்’. இராச அன்னம் என்னும் அரிசி வகை= பறவைப் பெயர்  கொண்ட சோறு.

 

5.நெடு. நக்கீரர் பாடியது, வரிகள் 82, 114 (உத்தரம், கர்பக் கிரகம்):- நக்கீரர் பாடிய நெடுநல்வாடையில், ‘‘நாளொடு பெயரிய விழுமரத்து கோள் அமை நெடு நிலை’’ என்பது உத்தர நட்சத்திரத்தைக் குறிக்கும். ஆனால் புலவர் சொல்ல வருவது வீட்டின் பகுதியான உத்தரம். இன்னொரு இடத்தில் கர்ப்பக்கிரஹம் என்பதை ‘’கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல்’ என்றும் கூறுவர்.

6. கலி.25:1 வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்=திருதராஷ்டிரன்: ஆதித்த/சூரிய மண்டலத்துக்கு மற்றொரு பெயர் பகன்.அவனுக்குக் கண் கிடையாது. மகாபாரத திருதராஷ்டிரனுக்கும் கண் தெரியாது. ஆக திருதராஷ்டிரன் என்று சொல்வதற்காக பாலைக் கலி பாடிய பெருங் கடுங்கோ இப்படி’ வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்’ என்கிறார். தமிழ்ப் புலவர்கள் சங்க காலத்தில் எந்த அளவுக்குப் புராண இதிஹாசங்களையும், வடமொழியையும் கரைத்துக் குடித்திருந்தனர் என்பதற்கு கலித்தொகையில் நூற்றுக் கணக்காண சான்றுகள் உள.

இதே வரிக்கு வேறு உரைகளும் உள. வயக்குறு மண்டிலம் என்பது கண்ணாடி என்றும் அது பிறர் முகத்தைக் காட்டுமேயன்றி அதனால் காணமுடியாது என்றும் ஆகவே இது தர்ப்பண (கண்ணாடி) ஆனனன் (முகத்துடையோன்) என்பதே என்பர்.

7.வாடா வஞ்சி (மாறோக்கத்து நப்பசலையார், புறம்.39): இவரும் பிராமணப் பெண் புலவர். வாடா வஞ்சி என்பது வாடிப்போகாத வஞ்சி, அதாவது, கருவூர்.

 

8.கலி. 99-1,2 -அறவினை இன்புறூஉம் அந்தணர் இருவர் (சுக்ரன், பிருஹஸ்பதி) : தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இரண்டு பிராமணர்கள் குருவாக இருந்தனர். அதை சுக்ரன், பிருகஸ்பதி என்று பெயர் சொல்லாமல் அந்தணர் இருவர் என்கிறார் ஒரு தமிழ்ப் புலவர்.

9. பரி.3-31 கூந்தல் என்னும் பெயர் உடைய அசுரன்= கேசாசுரன். தலைமயிர்/ கூந்தல் பெயரை உடைய அசுரன் கேசாசுரன். கேசம் என்ற வட மொழிச் சொல்லுக்கு தலை முடி என்று பொருள்.

10.திருமுறுகு.18 (நக்கீரர்): “நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர் இழை (ஜம்பூத்வீபம்) சேன் இகழ்ந்து விளங்கும் செயிர் தீர் மேனி” இந்தியாவின் பழம்பெரும் பெயர் நாவலந்தீவு. நாவல்பழ மரங்கள் நிறைந்த பூமி. எந்த வகை மரம் செடி கொடிகள் ஓரிடத்தில் செழிப்பாக இருகிறதோ அதை வைத்து அந்த நாட்டுக்குப் பெயர் சூட்டுவது புராண மரபு. இதையே பின்பற்றி தமிழர்களும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று நிலப் பாகுபாடு செய்தனர். நக்கீரர் என்ற பிராமணப் புலவர் இதே உத்தியை தங்கத்தைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். பலவகை தங்கங்களில் ஒன்று சம்பூநதம் (ஜம்பூத்வீப தங்கம்)= நாவலொடு பெயரிய பொலம்புனை.

 

காளிதாசன் உலகம் புகழும் மகா கவி. அவனுடைய ரகுவம்சம் உவமைக் கருவூலம்! ரத்தினக் களஞ்சியம்! அவனுடைய உவமைகளில் முக்கால்வாசியை அதில் கொட்டிவிட்டான். எடுத்தஎடுப்பிலேயே

‘வாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் ப்ரதிபத்தயே

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ’

என்று துவங்குகிறான். பொருள்: பார்வதியும் பரமசிவனும் உலகத்துகே தாய் தந்தையர். அவர்கள் சொல்லும் பொருளும் சேர்ந்திருப்பது போல இணைந்து இருப்பவர்கள். அவர்களை வணங்குகிறேன். இந்த உவமைக்கு ஈடு இணை இல்லை. இந்திய மக்களின் மொழி அறிவுக்குச் சான்று பகரும் மாபெரும் உவமை இது!

இன்னும் தொடரும்………………… (காளிதாசன்– சங்க காலத்துக்கு முன் வாழ்ந்தவன் என்பதைக் காட்ட அவ்வரிசையில் வரும் ஏழாவது கட்டுரை இது. பழைய கட்டுரைகளையும் படித்துப் பயன்பெறுக.)

Old Posts: 1.Indra Festival in the Vedas and Tamil Epics2. Sea in Kalidasa and Tamil Literature 3. Ganges in Kalidasa and Sangam Tamil Works 4.Gem Stones in Kalidasa and Tamil Literature 5. Bird Migration in Kalidasa and Tamil Literature 6. Kalidasa’s Age: Tamil Works confirm 1st Century BC + Same Articles in Tamil

For further information contact author at   swami_48@yahoo.com