WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,400
Date uploaded in London – – 2 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாகவி காளிதாஸ்! – 3
காளிதாஸரைப் பற்றி ஏராளமான நூல்கள் வெளி வந்துள்ளன. அவர் எத்தனை சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்?
கணினி யுகத்தில் இன்று வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயமே! என்றாலும் கூட http://www.tamilandvedas.comஇல் திரு லண்டன் சுவாமிநாதன் எழுதியுள்ள ஒரு ஆய்வுக்கட்டுரை இது பற்றிய சில விவரங்களைத் தருகிறது. Amazing Statistics on Kalidasa என்ற அந்தக் கட்டுரை காளிதாஸன் சுமார் 2,11,429 சொற்களைப் பயன்படுத்தி இருக்கக் கூடும் என்று தெரிவிக்கிறது. 37 படைப்புகள் அவருடையவை. அவரது 3 நூல்களுக்கு மட்டும் 93 விளக்கவுரைகள் – பாஷ்யங்கள் உள்ளன. 1250 உவமைகளை அவர் கையாண்டுள்ளார். ரகுவம்சத்தில் 29 அரசர்களை அவர் குறிப்பிடுகிறார். இப்படி பல விவரங்களைத் தரும் கட்டுரையை நீங்கள் www.tamilandvedas.com கட்டுரையில் படிக்கலாம். விக்கிரமாதித்தன் அரசவையில் இடம் பெற்றிருந்த மேதைகளில் மஹாகவி காளிதாஸரின் கவித் திறன் பாரதமெங்கும் பரவி இருந்ததை வரலாறு வியப்புடன் பொன்னேட்டில் பொறிக்கிறது! மஹரிஷி அரவிந்தரோ, “வால்மீகி, வியாஸர், காளிதாஸர் ஆகியோர் புராதன இந்தியாவின் சாரம்” என்று வியந்து கூறுகிறார். அறநெறி, அறிவுத்திறன், உலகியல் பொருள் ஆகிய மூன்றிலும் ஆர்யர்கள் எவ்வளவு மேம்பட்டிருந்தனர் என்பதை அவர்கள் தங்கள் நூல்களில் சித்தரிக்கின்றனர் என்று மேலும் கூறும் அவர் மனித ஆன்மாவின் மேம்பாட்டை அவர்களது கவிதைகள் சித்தரிக்கும் பாங்கைப் புகழ்கிறார். எது எப்படியானாலும் காளிதாஸர் பல் துறை மேதை. சொற்களையும் அதன் ஆழத்தையும் சொல்லும் பாங்கையும் மனித குலத்திற்குச் சொல்ல வேண்டியதையும் அறிந்த விற்பன்னர் அவர். அவரது காவியங்களின் வர்ணனைகள் தென் பாரதத்தையும் வட பாரதத்தையும் அற்புதமாக வர்ணிப்பதால் அவர் நாடு முழுவதும் சுற்றி வந்த பயணி என்பதும் அவர் ருதுக்களை வர்ணிப்பதை வைத்து அவர் இயற்கையை நேசிக்கும் இயற்கை ஆர்வலர் என்பதும் தெரிய வரும். ரகுவம்சம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், அபிஞான சாகுந்தலம், விக்ரமோர்வசீயம், ருதுசம்ஹாரம் ஆகிய அற்புத கவிதை காவியங்களில் ஜோதிடக் குறிப்புகளையும் தேவ ரகசியங்களையும் காளிதாஸர் ஆங்காங்கே குறிப்பிட்டுக் கொண்டே செல்வது அவர் அருள்சக்தி படைத்த மாமேதை என்பதோடு பல்கலை வித்தகர் என்பதைத் தெளிவாக விளக்குகிறது.
காளிதாஸரின் ரகு வம்சமும் குமார சம்பவமும் இதிஹாஸமாகும். மேக தூதம் கண்டகாவியமாகும். அபிக்ஞான சாகுந்தலம், விக்ரமோர்வசீயம், மாளவிகாக்னி மித்ரம் நாடகங்களாகும். சிருங்கார ரஸத்தைச் சுவைபடச் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே தான்! சப்தாலங்காரம், அர்த்தாலங்காரம் என்ற இரு வகை அலங்காரங்களைக் கையாளுவதிலும் அவர் நிபுணர்!
காளிதாஸரைப் பற்றி நூற்றுக்கும் மேலான சுவையான சம்பவங்கள் உள்ளன.இவரது முழு வாழ்க்கையை அறிவதோடு இவரது நூல்களைப் படிப்பது இந்திய கலாசாரத்தை அறிய விரும்பும் ஒவ்வொருவரின் கடமையாகும்.
காளிதாஸர் நூற்றுக்கணக்கான நட்சத்திர ரகசியங்களை தன் நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுக் கொண்டே செல்கிறார். மாதிரிக்கு, ஸோமதாரையை ஸ்வர்க்க பத்ததி என்றும் (ரகுவம்சம் 9-87) அஸ்வினி நட்சத்திரத்தை குதிரை தலை போல இருக்கிறது (தன்வி கோடகமுகாக்ருதௌ த்ரிபே) என்றும் அவர் கூறுவதைக் குறிப்பிடலாம்! நவீன வானவியல் நிபுணர்கள் நட்சத்திர தொகுதிகளைப் பற்றி இன்று என்ன கூறுகிறார்களோ அதையே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விளக்கமாக அவர் குறிப்பிட்டிருப்பது வியக்க வைக்கும் விஷயம்!
உத்தரகாலாம்ருதம் என்ற ஜோதிட நூல் காளிதாஸரால் இயற்றப்பட்டதாகக் காலம் காலமாகக் குறிப்பிடப்பட்டு வருகிறது. ஒரு இலக்கிய மேதையே இதை எழுதி இருக்கக் கூடும் என்பதால் மஹாகவி காளிதாஸரே நிச்சயமாக இதை இயற்றினார் என்று ஒரு சாரார் கூறுவர்.ஆனால் இதை எழுதியவர் இன்னொரு காளிதாஸர் என்றும் (பிற்காலத்தில் புழக்கத்தில் வந்த சரஸ சல்லாபம், உத்யோகம் போன்ற வார்த்தைகளையும் ஆந்திர மற்றும் பாரசீக பாஷைகளைப் பற்றிய அவரது குறிப்புகளினாலும்) அவர் 16 அல்லது 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த நூலின் சுவடிகள் சென்னையில் உள்ள கவர்ன்மெண்ட் ஓரியண்டல் மானஸ்க்ரிப்ட் லைப்ரரி உள்ளிட்ட பல நூலகங்களில் உள்ளன.வேத ஜோதிடத்தை உத்தர காலாம்ருதம் போல வேறு எந்த நூலும் விளக்கவில்லை என்ற புகழ் இந்த நூலுக்கு உண்டு.பல்வேறு அறிஞர்களின் விளக்க உரையுடன் எல்லா கடைகளிலும் இது கிடைக்கிறது.
12 பாவங்களின் முக்கியத்துவம். கிரஹங்களின் முக்கியத்துவம், குளிகை, மாந்தியை நிர்ணயிக்கும் விதம், ஒரு மனிதனின் ஆயுளை நிர்ணயிக்கும் முறை,கேந்திர திரிகோணங்களின் முக்கியத்துவம், ராஜயோகம், விபரீத ராஜ யோகம், புதாதித்ய யோகம் உள்ளிட்ட ஏராளமான யோகங்கள் பற்றிய அபூர்வமான விளக்கங்கள், தசா காலமும் அதன் பலன்களும் என்று இப்படி ஜோதிட களஞ்சியமாக அனைத்து விஷயங்களையும் இந்த நூல் விளக்குகிறது.இதை ஒரு ஜோதிட பொக்கிஷம் என்றும் ஜோதிட புதையல் என்றும் ஜோதிடர்களும் ஜோதிட ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர். காளிதாஸர் இந்தியாவின் சாரம் என்றால் உத்தரகாலாம்ருதம் ஜோதிடத்தின் சாரம் என்று ஒரே வரியில் கூறி விடலாம்!
காதலின் மென்மையையும் மேன்மையையும் உணர வேண்டுமா? தேவ ரகசியங்களை அறிய வேண்டுமா? மனித மனத்தின் உன்னதமான அகல நீள ஆழங்களை தரிசிக்க வேண்டுமா?பாரதம் போற்றும் ஆன்மீக சிகரத்தில் ஏற வேண்டுமா? ஜோதிடக் கடலை ஒரே மடக்காகக் குடிக்க வேண்டுமா? இவை அனைத்துக்கும் ஒரே வரியில் பதில் உண்டு: காளிதாஸரைப் படியுங்கள்! காளிதாஸரை மட்டும் படியுங்கள், போதும்!! “PORTABLE INDIA” “எடுத்துச் செல்லப்படக்கூடிய பாரதம்” என்று சுருக்கமாக அறிஞர்களால் அவர் வர்ணிக்கப்படுகிறார். காலத்தை வென்ற கவிஞர்களுள் சம்ஸ்கிருத மொழியில் மட்டுமல்ல, உலக மொழிகளிலேயே முதல் இடத்தைப் பிடிப்பவர் காளிதாஸரே என்பதில் ஐயமில்லை. வாழ்க காளிதாஸர் புகழ்! நன்றி, வணக்கம்!
*** முற்றும்
TAGS — காளிதாஸ், KALIDASA, காளிதாசர்