கம்பன் வேய்ந்த காவிய விசித்திரம் (Post No.4373)

Written by S.NAGARAJAN

 

 

Date: 7 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-12 am

 

 

Post No. 4373

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 7)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299; 30-10-17- 4349 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

கம்பன் வேய்ந்த காவிய விசித்திரம் தேர்ந்து கொள்ளுவர் சீரியோர்!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

பாடல் 27

வேறு

காதை யுள்ளமை காதைக

ளோதும் வாறெவர் ஓதினார்

மோது வார்புனற் கங்கைசார்

போது லாம் அதி போயபோல்?

 

பாடல் 28

இராம கதையெ னாவியல்

அராம மேலிடு வார்க்கிவை

சிராமம் * தீர்த்திடச் சிந்துபூம்

பராகப் பித்திகைப் பத்தியே

*சிரமம் என்னும் சொல் நீண்டு நின்றது

 

பாடல் 29

படிகம் போல்தெளி பனுவலும்

அடிக ளோடும் ராகமும்

துடிகள் தூக்கும் நோக்கமும்

வடிகொ ளும்பொருள் வண்மையும்

 

பாடல் 30

போந்த காதையின் போக்கொடு

ஆய்ந்து நோக்கியம் மாகவி

வேய்ந்த காவிய விசித்திரம்

தேர்ந்து கொள்ளுவர் சீரியோர்

 

 

பாடல் 31

செந்தொ டையொடு செம்பொருள்

வந்து லாவு கிளைக்கதை

முந்து சந்த முதற்கதைக்

குந்து  மந்தமில் லந்தமே

 

பாடல் 32

ஆன்ற ஓவியச் சீரையார்ந்

தேன்றி லங்குறு சித்திரம்

தோன்ற லான எழிற்சுடர்

ஞான்ற பின்னொடு நாறுமே

 

பாடல் 33

இசைக் கிசைதரு பின்னிலை*

இசைய தாகி யிணைந்தபோல்

வசையில் மாக்கதை மாணுற

அசைப்ப ராலநு காதையே

  • பின்னிலை :- Background – சித்திரக் கலைகளில் எழும் உருவங்களின் எழிலை மிகுக்க அவற்றின் பின்னமைக்கப்படுமரங்கத்தினையே இங்குப் பின்னிலை என்று சுட்டினேன்.

 

 

பாடல் 34

வேறு

காவின வேந்தனும் காவினைத் துறந்தனன் கமலப்

பூவின் வேந்தனும் படைப்பினிற் பொலிவழிந் தொழிந்தான்

சாவின் வேந்தனும் தண்ணளி காட்டிடச் சமைந்தான்

பாவின் வேந்தனாம் கம்பன்பா பம்புபன் னலத்தான்

 

பாடல் 35

கள்ளுண் மாந்தரும் கள்ளினைக் கைப்பெனக் கனன்றார் புள்ளுண் வேடரும் புனிதநன் னெறிவந்து புகுந்தார்

உள்ளுண் யோகியர் உறுபதம் சிறிதென ஒறுத்தார்

தெள்ளு தீந்தமிழ்க் கம்பன்செய் தென்கவி யின்பால்

 

பாடல் 36

ஆடல் வேண்டலர் ஆடின அரங்கிள மகளிர்

பாடல் வேண்டலர் பண்ணிசைக் கண்ணுளர், வெறிதார்

சூடல் வேண்டலர் தோகையர் கம்பன் சொல் லமிர்தம்

நாடல் வேண்டினர் நண்ணுறா மகிழ்ந்துய்க்க நயந்தே

 

பாடல் 37

எந்தச் சாதியர் எத்தொழி லாளரைப் பாலார்

சிந்த னைதெளி முதியரோ டிளைஞரா தியபேர்

அந்த மில்லராம் வேற்றுமை யாளரிக் கவியிற்

றந்த மக்குள தத்துவம் கண்டுளம் தழைவார்

 

பாடல் 38

சமைய வாதியர் தருக்கஞ்செய் தொக்கெலாம் தவிர்ந்தே

அமைய நின்றொளிர் அலகிலா வருந்தளிப் பொருளை

உமையின் பாகனோ டிலக்குமி கேள்வனென் றுன்னா

தவனி நாதனென் பொதுமையிற் காப்பொன்றே பணிந்தான்

 

Greek Poet Homer

 

பாடல் 39

ஹோமர் மாகவி யுதித்தவூர் வூங்கல அலவீ

காமென் றேயெழு நகரங்கள டுத்துப்போர் தொடுத்த

பாம கள்பணி கம்பனை யப்பரி சுரைத்த

பூமியிற்பெரி யாரையார் தம்மொழும் புணர்ந்தார்

 

பாடல் 40

வீறெ டுத்தகா வியமெனுங் கரும்பின்கான் விரித்துக்

சாறெ டுத்துல கர்க்கொரு காப்பியம் சமைத்தான்

சேறெ டுத்தமண் டூகம்போற் றேறலுண் ணாதே

மாறெ டுத்ததம் மதமுரை நூலென்றும் மருண்டார்

 

 

*

அருமையான் இப்பாக்களில் கவிஞர் சிவராஜ பிள்ளை ஸ்படிகம் போலத் தெளிவு,ராகம்,நல் நோக்கம், பொருள் வண்மை கொண்ட பாக்கள் கம்பனது பாக்கள் என்கிறார்.

மாகவி வேய்ந்த இந்தக் காவிய விசித்திரம் படித்து அதன் பொருளைத் தேர்ந்து கொள்ளுவர் சீரியோர் என்பது அவரது முடிவு.

 

பாவின் வேந்தனின் பாக்களைக் கேட்ட சாவின் வேந்தன் தண்ணளிக் காட்டிடைச் சமைந்தானாம்.

கள்ளுண்போர் கள்ளை விட்டனர். பறவையை உண்ணும் வேடர் தம் தொழிலை விட்டுப் புனித நன்னெறி வந்தனர். யோகியரோ உறுபதம் மிகச் சிறிது என்று எண்ணி மனம் மாறிக் கம்பனைக் களிக்க வந்தனராம்.

 

 

டான்ஸ் ஆடும் மகளிர் நாட்டியத்தை விட்டனராம். இசைக் கலைஞர்கள் பாடல் வேண்டாம் என்றனராம். அழகிகளோ மலர் மாலைகளைச் சூடிக் கொள்ள வேண்டாம் என்றனராம்.ஏன்? அவர்கள் நாடியது கம்பனின் அருமையான பாடல்களைத் தான்.

 

 

அது இருந்தால் போதுமாம்!

எந்த ஜாதியின்ராக இருந்தாலும் சரி, முதியவர், இளைஞர் யாராக இருந்தாலும் சரி, தனக்குள்ள தத்துவத்தைக் கண்டு மகிழ்ந்தனராம்- கம்பன் பாவில்!

 

சமயத்தை வைத்துச் சண்டை போடுவோர்க்குப் பொதுநெறி காட்டினான் புனிதன் கம்பன்.

 

ஹோமரைச் சொந்தம் கொண்டாட ஏழு நகரங்கள் போர் தொடுத்ததை வரலாறு கூறும். பாமகள் பணி கம்பனிடமோ பெரியார் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

 

கம்பனின் இன்பப் பா என்னும் தேனை அருந்தாமல் தம் தம் மதத்தையே உரைக்கும் நூல் கம்பனது நூல் என்று சேறில் உள்ள தவளை போல சிலர் கூறி மருண்டார்.

அருமையான மேலே கண்ட பாக்களில் கம்பனின் புகழைப் பாடுகிறார் கவிஞர்.

 

மேலும் தொடர்வோம்.

                                -தொடரும்

***