Written by London Swaminathan
Date: 4 August 2017
Time uploaded in London- 12-14
Post No. 4128
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
அதீனா என்னும் தேவதை (Goddess Athena) இந்துமதக் கடவுளரான துர்கா சரஸ்வதி, லெட்சுமி ஆகிய மூவரின் பிம்பம் என்று சொல்லலாம். நாம் எப்படி ஒரே சக்தியை மூன்று துறைகள் கொடுத்து மூன்று தேவிகளாக வழிபடுகிறோமோ அதே போல கிரேக்கர்களும் கல்வி, வீரம், வெற்றி ஆகியவற்றுக்கு அதிதேவதையாக அதீனாவைத் தேந்தெடுத்தனர். இந்துமதத்துக்கும் கிரேக்க கலாசாரத்துக்கும் உள்ள தொடர்புகளை ஏற்கனவே சில கட்டுரைகளில் விளக்கியுள்ளேன். அதீனாவின் சின்னம் ஆந்தை. பறவைகளில் மிகவும் புத்திசாலி ஆந்தை என்பதால் இந்த தெரிவு. இந்துக் கடவுளான லெட்சுமிக்கும் உலூக என்றால் வடமொழியில் ஆந்தை. தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அந்த பெயர்களுடன் புலவர்களும் அறிஞர்களும் உண்டு (ஓதலாந்தை, பிசிர் ஆந்தை)
அதீனா பற்றிய குறிப்புகள் கி.மு.800 முதல் கிடைக்கின்றன. அதாவது வேத காலக் கடவுளருக்கு மிகவும் பின் வந்தவள். வேத காலக் கடவுளரான த்யவ் (Dyaus Pitr) பிதர் என்பவரை கிரேக்கர்கள் ஸூஸ் (Zeus) என்பர். அவருடைய தலையிலிருந்து அதீனா தோன்றியதாக ஒரு கதை உண்டு. அவளுடைய தாயார் மேதிஸ் METIS (ஞானம்). இதுவும் மதி (மூளை, அறிவு) என்ற சம்ஸ்கிருதச் சொல்லுடன் தொடர்புடையதே. வேதகால தேவதையான அதிதி போலவும் இவரை சிறப்பிப்பர். அதாவது எல்லா நல்ல குணங்களுக்கும் அதி தேவதை.
ஏதென்ஸ் நகரத்துக்கு யாரை தேவதையாக நியமிப்பது என்று கருத்து வாக்கெடுப்பு நடந்தது. பொசைடான் (Poseidon) என்னும் கடல் தேவதைக்கும் அதீனாவுக்கும் நடந்த போட்டியில் பொசைடான் உப்பு நீர்க்கடலைக் காட்டினார். ஆகையால் மக்கள் அவரை ஒதுக்கிவிட்டனர். அதீனா புனித மரமான ஆலிவ் (Olive Tree) (ஒலிவ) மரக் கிளையைக் காட்டியதால் அவளையே மக்கள் தேர்ந்தெடுத்தனர். அந்த மரக் கிளையே சமாதானத்தின் சின்னம் ஆகும்.
இந்த தருணத்தில் இன்னொரு விஷயத்தை நினைவு கூறுதல் பொருத்தமாகும். உலகில் முதலில் சமாதானம் வேண்டிப் பாடிய பாடல் ரிக் வேதத்தின் கடைசி பாடலாகும்.
சூஸ் என்னும் கடவுளுக்கு நிகரான அறிவுடைய ஒரு தேவதை தோன்றப் போகிறாள் என்று ஆரூடம்(prophesy) சொல்லப்பட்டது. அப்படித் தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சூஸ் தனது மனைவியான மேதிஸ் (மதி= அறிவு) என்பவரை விழுங்கி விடுகிறார். ஆனால் சூஸுக்கு ஒரு நாள் பொறுக்கமுடியாத தலைவலி ஏற்பட்டது. உடனே தச்சர்களுக்கு அதிதேவதையான (Hephaistos) ஹெபஸ்டோசை அழைத்து தலையைப் பிளக்கச் சொன்னார். அவர் கோடாரியைக் கொண்டு பிளக்கவே அதீனா உதயமானாள்.
இது ஒரு அடையாள பூர்வ கதை. இதுபோல வேதத்திலும் குறிப்பாக பிராமண நூல்களிலும் நிறைய சங்கேத மொழிக் கதைகள் உண்டு. இதற்கு அர்த்தம் புரியாத மேலை நாட்டினர் தத்துப் பித்து என்று உளறியுள்ளனர்.
எங்களுக்குச் சுற்றுலா கைடு (guide) ஆக அந்த பெண்மணி இந்தக் கதையைச் சொல்லி முடித்த பின்னர் இதை சிவன் தலையில் கங்கை புகுந்த கதையுடன் ஒப்பிட்டாள். ஆகாயத்திலிருந்து பாய்ந்த கங்கா தேவியின் வேகத்தைக் கட்டுப்படுத்த சிவன் அவளைத் தன் தலையில் தாங்கி பின்னே வெளியே விட்டார் என்பது புராணக் கதை. இதற்கு இரண்டு விதப் பொருள் உள்ளது.
ஒன்று கங்கா நதி சிவ பெருமான் உறையும் கயிலை மலைப் பகுதியிலிருந்து தோன்றுவதைக் குறிப்பது.
இரண்டாவது அறிவு/ ஞானம் என்பதைக் கட்டுக்குள் வைக்கவேண்டும். அதன் பிரவாஹம் ஒருவரை அகந்தையிலோ, தவறான வழியிலோ செலுத்தி விடக்கூடாது.
இந்தக் கருத்துகளை விளக்குவதே அதீனா/ கங்கா தேவி பிறந்த கதை.
கிரேக்க நாட்டு வரலாறு எல்லாம் மிக மிக உருச் சிதவுற்ற வேதகாலக் கதைகள் ஆகும். Hermes ஹெர்மிஸ்= சரமா, த்யௌ பிதர்= சூஸ் , Nereids நெரைட்ஸ் = நீர்த் தேவதைகள் போன்ற நூற்றுக் கணக்கான ஒற்றுமைகள் இருந்தாலும் கதையின் போக்கு முழுவதையும் காண்கையில் நம்முடன் ஒப்பிட இயலாது. அதாவது வேத கால இந்துக்கள் — பாமர மக்கள் — அங்கு குடியேறி இருக்கலாம். அவர்கள் நம் கதையைத் திரித்திருக்கலாம். இப்போதும்கூட தமிழ்நாட்டின் கிரா மப்புறக் கதைகளிலும், தல புராணக் கதைகளிலும் இந்துமதக் கதைகள் எவ்வளவு திரிபு அடைந்துள்ளன என்பதை ஆரய்வோருக்கு இது தெள்ளிதின் புலப்படும்
–subham–