எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!

pyramid

Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.

எகிப்திய நாகரீகம் குறித்து 2012 ஆம் ஆண்டில் சுமார் பத்து கட்டுரைகளில் பல விஷயங்களை எழுதி இருந்தேன். ‘’நெய்த்’’ என்னும் எகிப்திய தெய்வம் நெய்தல் (துணி நெய்தல்) என்பதுடன் தொடர்புடைய தெய்வம், ‘’க’’ என்றால் கடவுள் (பிரம்மா) முதலிய பல சொல் ஆராய்ச்சி விஷயங்க ளையும் வீடு முதலிய சொற்கள் செமிட்டிக் மொழியில் இருப்பது பற்றியும் எழுதி இருந்தேன். அண்மையில் ‘’பழங்கால எகிப்தில் யார், எவர்’’ — என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாசித்து முடித்ததில் மேலும் பல தமிழ், சம்ஸ்கிருதச் சொற்கள் அங்கே இருப்பதை அறிந்து வியந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஆய் என்ற மன்னன் எகிப்திலும் உண்டு. சேர நாட்டு மன்னர்களுக்குப் பின் எப்படி ஆதன், குட்டுவன், பொறையன் என்று பெயர் இருக்கிறதோ அது போல எகிப்திலும் உள்ளது.

இமயவரம்பன் நெடுஞ்சேரல் ஆதன், சேரன் செங் குட்டுவன், மாந்த்ரஞ் சேரல் இரும் பொறை எனப் பல பெயர்களை நாம் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். பொறையன் என்பது எகிப்தில் பாரோ (மன்னன்) என்ற பெயரில் உள்ளது. கேட் என்று முடியும் பல எகிப்திய மன்னர்களின் பெயர்களை (அமன்கேட், ஹருகேட்) குட்டுவன் என்பதோடு ஒப்பிடலாம். ஆதன் என்ற பெயர் சூரியன் என்னும் கடவுளின் பெயராக எகிப்தில் புழங்குகிறது (ஒரு மன்னன் பெயர் அகனாதன்). அதே பொருளில் — (ஆதவன்=சூரியன் என்ற பொருளில்) —- சேரன் பெயர்களில் இருப்பதை அறிவோம்.

நான் பட்டியலில் கொடுக்கும் பெயர்கள் எல்லாம் கி.மு.1900 முதல் கி.மு 1300 வரைக்குட்பட்டது. தனித்தனியே மன்னனின் ஆட்சி ஆண்டு வேண்டுவோர் எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க.
இது தவிர முட ‘’மோசி’’ என்ற பெயர்களும் ஆய் என்ற பெயரும் வியப்பை உண்டாக்கும்.
ஆய் என்பவன் எகிப்தில் சாதாரண நிலையில் இருந்து மன்னன் ஆனவன். தனது மகளை ஒரு எகிப்திய மன்னனுக்கு மணம் செய்து கொடுத்ததால் அவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

Egyptian-Sunpower

மிட்டன்னிய (தற்போதைய சிரியா/ துருக்கி பிரதேசம்) இந்து மன்னன் தசரதன் தன்னுடைய இரண்டு புதல்விகளான புது கீபா, தது கீபா — (புத்த சிவா, தத்த சிவா என்ற பெயர்களோ!!) —- ஆகியோரை எகிப்திய மன்னனுக்கு மணம் புரிவித்து தங்கத்தினால் ஆன கடவுள் சிலை ஒன்றையும் அனுப்பிவைத்தான். இந்தக் கடவுள் சிலை துர்க்கை என்று நாம் வணங்கும் கடவுளுக்குச் சமமான மேற்காசிய தெய்வம் ஆகும். இவர்கள் எகிப்திய அரசவைக்குள் நுழைந்தபின்னர் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் அங்கே புழக்கத்தில் வந்தன. ராம்செஸ் என்ற பெயரில் மட்டும் 13 பேர் எகிப்தை ஆண்டனர் (இது குறித்து காஞ்சி மஹா ஸ்வாமிகள் 1932 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் ஆற்றிய உரை விஷயங்களை முன்னரே எழுதிவிட்டேன்).

முடமோசி என்ற சங்க காலப் பெண் புலவர் பற்றித் தமிழர்கள் நீண்ட காலமாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தப் பெயர் எகிப்து நாட்டில் மிகவும் அதிகம். தத் மோசி என்ற பெயரில் மட்டும் நால்வர் இருந்தனர். இதுதவிர ஆமோசி, ஹரமோசி, காமோசி, மீனமோசி என்ற பெயர்களும் மன்னர்கள் பட்டியலில் உண்டு.

மோசி என்றால் மகன் என்று பெயர். தமிழில் மூசு என்பதை முதலில் விளையும் இளம் பலாக் காய்க்குப் பயன் படுத்துவோம். பலா மூசு கூட்டு, கறி முதலியவற்றைச் சாப்பிடுகிறோம். இதே பொருளில் மோசி என்றால் தலைப் பிள்ளை என்ற அர்த்தம் ஸ்வாகிலி (கிழக்கு ஆப்பிரிக்கா) மொழியிலும், எகிப்திலும் இன்றும் இருக்கிறது. மோசஸ் என்ற குழந்தையை நைல் நதியில் கண்டு எடுத்த மன்னன் மகள் அவனுக்கு ஹீப்ரூ (எபிரேய) மொழியில் மோசி (மோசஸ்) என்று பெயரிட்டாள். பின்னர் அவர் யூதர்களை வழி நடத்திச் சென்ற கதைகளை நாம் அறிவோம்.

trademap

தமிழில் முட மோசி என்ற பெயர், அவர் வீட்டுக்குத் தலைப் பிள்ளையாக (புதல்வியாக) பிறந்ததால் வந்திருக்கலாம். பிறக்கும் போதே இளம் பிள்ளை வாதம் (போலியோ) போன்ற குறைகளுடன் பிறந்ததால் முடமோஸி என்ற பெயரும் பெற்றிருக்கக்கூடும்.

ஆக மோசி என்பது எகிப்து வரை உள்ளது. சேர நாட்டில் இருந்து கடலை நோக்கி உட்கார்ந்தால் அது எகிப்து இருக்கும் திசையை நோக்கி இருக்கும். பழங்காலத்தில் அரபிக் கடல் முழுதும் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தினர். கடல் கொள்ளையர்களை செங்குட்டுவன் ஒடுக்கி அவர்களுடைய காவல் மரமான கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தினான்.

நெடுஞ் சேரலாதனோவெனில், அங்கு அட்டூழியம் புரிந்த யவனர்களைப் பிடித்து தலையை மொட்டை அடித்து, கைகளைப் பின்புறம் கட்டி, தலையில் எண்ணையை ஊற்றி அவமானப் படுத்தியதைப் பதிற்றுப்பத்தில் படித்தோம். இந்துக் கடவுளரின் கடற்படைத் தாக்குதல்கள் என்ற எனது பழைய கட்டுரையில் கிருஷ்ன பரமாத்மா, துவாரகை துறைமுகத்தில் இருந்து கடற்படையுடன் சென்று மேற்காசியாவில் நடத்திய தாக்குதல்களை விவரித்துள்ளேன்.

இப்படி நமது ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தகாலதில், 2000 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு இந்தியன் உளறிவிட்டான். எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவில் ஒரு கிரேக்க நாட்டானிடம் பருவக் கற்று மூலம் நாம் எப்படி எகிப்து முதலிய நாடுகளுக்குச் செலவே இல்லாமல் செல்கிறோமென்று உளறிவிட்டான். அது முதல் மேலை நாட்டோர் நம் மீது படை எடுத்து நம்மை அடிமைப் படுத்தத் துவங்கிவிட்டனர். அந்த கிரேக்க நாட்டான் பெயர் ஹிப்பலஸ் — அவன் பெயரில் தென் மேற்குப் பருவக்காற்று ரகசியம் மேலை உலகம் முழுதும் பரவியது. (தமிழ் இலக்கியத்தில் அதிசயங்கள் — என்ற எனது பழைய– 2003 ஆம் ஆண்டு வெளியான புத்தகத்தில்– மேல் விவரம் காண்க)

egypt 2

ஆக சேர நாட்டில் இருந்து தமிழ் பெயர்கள் அங்கு சென்றதில் வியப்பில்லை. எபிரேய மொழியில் பல தமிழ் சொற்கள் உண்டு அவற்றை தனிக் கட்டுரையில் தருவேன்.. யூதர்கள், பார்ஸிக்கள் முதலியோர் மேலைக் கடற்கரை மாநிலங்களில் குடியேறியதும் பருவக் காற்று ரகசியம் வெளியேறியதால்தான் என்று சொல்லலாம்.

எகிப்தில் பல பெயர்கள் தேவ (டேப்) என்று முடியும். இவை அந்த நாட்டுக் கடவுளான ஹோதெப் (ஹே தேவ!) என்று அவர்கள் புத்தகத்தில் எழுதுவர். ஆயினும் கடவுள் என்ற பெயரில் தேவ இருப்பதில் வியப்பில்லை. நாம் சிவனை மஹா தேவ என்று சொல்கிறோம்.

இப்படிப் பெயர்களில் மேம் போக்காகக் காணப்படும் ஒற்றுமைகளை வைத்து மட்டும் நாம் எகிப்திய-இந்திய உறவை எடை போடுவது அறிவுடைமை ஆகா. வேறு பல விஷயங்களிலும் காணப்படும் ஒற்றுமைகளை வைத்தே முடிவுக்கு வருகிறோம். ஈசாப் என்னும் கிரேக்க அடிமை, எகிப்து நாட்டில் அடிமை வேலை செய்த காலையில் கேட்ட கதைகளை எழுதி உலகப் புகழ் பெற்றான். அவன் நாட்டில் இல்லாத மயில் போன்ற இந்தியப் பறவைகளை அவன் கதைகளில் காண்பது நம்முடைய கலாசார தாக்கத்தை வெள்ளிடை மலையென விளக்கும்.

egypt india

Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)
Did Indians build Egyptian Pyramids? ( 27 August 2012)
Vishnu in Egyptian Pyramids ( 5 September 2012)
Vedas and Egyptian Pyramid Texts ( 20 August 2012)
Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda (26-9-2012)
Hindu Gods in Egyptian Pyramids ( 16-9-2012)
Flags: Indus Valley- Egypt Similarities (15-10-2012)
எகிப்தில் திருமூலர் கருத்துக்கள் (21-11-2013)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி-எகிப்து அதிசய ஒற்றுமை (14-10-2012)
Hindu Symbolism in France ( 24 August 2014)
More Tamil and Sanskrit Names in Egypt (15th November 2014)
aum
contact swami_48@yahoo.com